Monday, September 28, 2020

     பிரம்மஹத்தி  --    J K  SIVAN 


கோப மூட்டினால்  அதிக பக்ஷமாக  அப்பா அடிக்கடி  உபயோகிக்கும் ஒரு வசவு . ( திட்டு)   " ப்ரம்மஹத்தி'' .  நான்  பலமுறைகள் ப்ரம்மஹத்
தியாக  வாழ்த்தப்பட நேர்ந்தது   அவர்  1978ல்  மறையும் வரை.   என்னை மட்டும் அல்ல.  பாரபக்ஷம் இல்லாமல்  எங்கள் குடும்பத்தில்  எல்லோரையும் ஆண்  பெண் பால் வித்தியாசமின்றி அவ்வாறு  திட்டியது தெரியும். 

ப்ரம்மஹத்திக்கு அப்போது எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ப்ராமணனைக் கொன்றால் உண்டாகும் தோஷம் தான் ப்ரம்ம ஹத்தி.  ராமர்  ராவணனைக் கொன்று ராமேஸ்வரத்தில்  பரிகாரம் தேடியது உங்களுக்கு தெரியும்.   சிவனுக்கும் அதே போல்  பிரமன் தலையை கொய்த  ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செயய  ஹரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு  திருவையாறு பக்கத்தில் திருக்கண்டியூர் சென்று தவமிருந்து  விமோசனம் ஆயிற்று. அந்த கோவில் சென்று அதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

ப்ரம்ம ஹத்தி பற்றி  ஒரு குட்டி கதை சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா?

7வது நூற்றாண்டில்  மதுரையை ஆண்ட  பாண்டிய  ராஜா  வரகுண பாண்டியன்  ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட சென்றான்.  வேட்டையாடி  பல மிருகங்களைக் கொன்றுவிட்டு  களைத்து குதிரை மேல் திரும்பி வந்து கொண்டிருந்தான். குதிரைக்கு  அவனைவிட களைப்பு அதிகம். பாவம்  அது தானே அவனையும் தூக்கிக்கொண்டு காட்டுக்குள்  அங்கும் இங்கும் ஓடி மிருக வேட்டைக்கு உதவியது.  இருள் சூழ்ந்து விட்டது.  வேகமாக  பசியோடு அரண்மனைக்கு திரும்பிக்கொண்டிருந்த  குதிரை  வழியில் இருட்டில்  மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு  கிழ பிராமணன்  கழுத்தின் மேல் காலை வைத்து மிதித்து கொன்றுவிட்டது. நிரபராதியான ஒரு  ப்ராமணனைக்  கொன்ற  ப்ரம்ம ஹத்தி தோஷம் பாண்டியனைப் பிடித்துக் கொண்டது. 

வரகுண பாண்டியன் சிவ பக்தன்.   நேராக மதுரை சுந்தரேஸ்வரர் முன் சென்று முறையிட்டான். 

 ''பரமேஸ்வரா, நான்  வேண்டுமென்றோ,  தண்டனையாகவோ ,காரணமில்லாமலோ,  அந்த பிராமணனைக் கொன்றதால்   ப்ரம்ம ஹத்தி தோஷம்  பிடித்துக் கொண்டது.  யாகமெல்லாம் செய்தேன். தான தர்மம்  புரிந்தேன். என் குதிரை செய்த தவறு என்னுடையது என்று ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு எப்படியாவது இந்த தோஷத்தி லிருந்து விமோசனம்  தரவேண்டும்'' என்று வேண்டினான்.

''என்னுடைய  ஆலயம் இருக்கும் திருவிடைமருதூருக்குப்  போ. அங்கே  என்னை வழிபடு '' என்று கனவில் மதுரை சொக்கநாதர் சொல்லிவிட்டார் 

பாண்டியனுக்கு ஒரு சங்கடம்.  

''சுந்தரேஸ்வரா,  திருவிடை மருதூர்  சோழ தேசத்தில் இருக்கிறதே. பாண்டியன் நான் எப்படி அங்கே செல்வது. உறவு இருவருக்கும் சரியில்லையே.  பகைவர்களாகி விட்டோமே.  என்னை அங்கே போகச்சொல்கிறாயே, எப்படி?''

''வரகுணா , கலங்காதே, இன்னும் சிறு நாளில் சோழன் உன் மேல் படையெடுத்து தோற்று, சோழ தேசம் உன் வசமாகும் நீ திருவிடைமருதூர் செல்வாய்''

பாண்டியனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷத்தோடு  அதிர்ஷ்டமும் அவன் பக்கம் இருந்தது. சில நாளில் சோழன் படையெடுத்து திடீரென்று    பாண்டிய நாட்டை தாக்கினான்.  கடும்போர்  பாண்டியன் படைக்கும் சோழ படைக்கும் நடந்து பாண்டியன் போரில் வென்றான்.  சோழனை வென்று திருவிடை மருதூர் அவன் கைவசம் வந்தது. அங்கே  மஹாலிங்க சுவாமி கோவில் கிழக்கு வாசல் வழியாக  உள்ளே சென்றான். வேண்டிக் கொண்டான். 

அவனை நிழல் போல் தொடர்ந்து வந்த ப்ரம்ம ஹத்தி  சிவாலயம் உள்ளே செல்ல முடியாமல் வாசலிலேயே  பாண்டியன் திரும்பி வெளியே வந்தால் மீண்டும் பிடித்துக்கொள்ள  காத்திருந்தது

விஷயம் தெரியாத  வரகுணன் திரும்பி  வந்த வழியே  கிழக்கு வாசலில் வெளியே திரும்ப யத்தனித்தபோது ஒரு அசரீரி அவனுக்குள் கேட்டது.

''வரகுணா , வந்த கிழக்கு வாசல் வழியே  வெளியே செல்லாதே. அடுத்த  வாசல் வழியாக செல். இனி ப்ரம்மஹத்தி உன்னை  தொடராது. உன் தோஷம் இங்கு வந்ததால் நீங்கியது''   என்கிறார் மகாலிங்கேஸ்வரர்.

அன்று முதல் யாருக்கெல்லாம்  ப்ரஹ்மத்தை மற்றும் தோஷங்கள் உண்டோ, அவர்கள் திருவிடைமருதூர் மகாலிங்கத்தை வேண்டி வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கை.

தோரண வாயிலில்  தெற்கு சுவற்றில் இரு  கைகளால் முழங்கால்களை கட்டிக் கொண்டு  முழங்கால்களுக்கு இடையே  கோரமான முகத்தை புதைத்துக் கொண்டு ப்ரம்மஹத்தி உட்கார்ந்திருப்பதைப் போல் ஒரு சிலை வடித்திருக்கிறது.  திருவிடைமருதூர் சென்ற போதும் அதைப் பார்க்காதவர்கள்  அடுத்த முறை செல்லும்போது பார்க்கலாம். 

வீட்த்தில் யாராவது  முழங்காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்தால் போதும் என் அத்தை படு பயங்கரமாக கத்துவாள்       ''எடு கையை, சரியாக உட்காரு. ப்ரம்மஹத்தி மாதிரி உட்காராதே''  

முகத்தை வேறு  முழங்காலில் புதைத்துக் கொண்டு  இருப்பதை பார்த்தால்   ஒருவேளை அங்கேயே நம்மைக்  கொன்றுவிட்டு அவளுக்கு ப்ரம்ம ஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டு  கஷ்டப்பட  சந்தர்ப்பத்தை 
 நானும் மற்றவர்களும் அவளுக்கு கொடுக்கவில்லை. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...