சரித்திரம் படைத்த சாம்பவர் வடகரை - 5 J K SIVAN
ஸ்ரீ வேத நாராயண பெருமாள் ஆலயம்
சாம்பவர் வடகரை அக்ரஹாரம் ஹனுமான் நதியின் தென்மேற்கில் உள்ளது. மேலே சொன்ன வடக்கு தெரு தான் வேத நாராயண பெருமாள் கோயில் உள்ள தெரு.
வரசித்தி விநாயகர் எனும் பிள்ளையார் கோயில் உள்ள தெரு தான் தெற்கு வீதி.
அக்ரஹாரத்தின் சிறப்பு, அதன் சிகரம் ஸ்ரீ வேத நாராயண பெருமாள் ஆலயம் எனலாம். எல்லா கோவில்களையும் போல் இதுவும் தமிழக அரசு அற நிலைய பராமரிப்பில் உள்ளது. சத்திர சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு என்பார்களே அது மாதிரி தான். அற நிலைய நிர்வாக அதிகாரிகளின் ஒப்புதலுடன் தான் எந்த காரியமும் நடைபெறும் எனும் போது கும்பாபிஷேகமும் அப்படித்தானே.
சற்றும் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும். 2019 ல் சாம்பவர் வடகரை அக்ராஹாரத்தில் கருட சேவை புரட்டாசி 25 அன்று (அக்டோபர் 12ம் தேதி 2019) சிறப்பாக நடைபெற்றது. மரத்தில் செய்யப்பட்ட அழகான கருடன் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கவசத்தில் வேத நாராயண பெருமாள் உற்சவரை அழகாக தனது புஜங்களில் தாங்கி அக்ரஹார தெருக்களில் வலம் வந்த காட்சி மறக்க முடியாதது. அந்த அக்ரஹாரம் இப்போது அதிக வீடுகளை கொண்டதாக இல்லை. பழைய குடும்பங்கள் பல வெளியேறிய நிலையில் பொலிவிழந்ததாக காண்கிறது.
இந்த வருஷம் ஒரு புதிய விஷயம். சாம்பவர் வட கரை அக்ரஹார டிரஸ்ட் நிறுவனம் ஒரு நாலு சக்கர சப்பரத்தை அமைத்து கருடவாஹன வேதநாராயணரை மூன்று தெருக்களிலும் ஊர்வலம் வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த 4 சக்கர நவீன சப்பரத்தை தயாரிக்க பொருளுதவி செய்தவர்கள் ஸ்ரீ S .R . கிருஷ்ணமூர்த்தி , மற்று ம் ஸ்ரீ R .B .S மணி என்ற அக்ரஹாரத்தை பூர்விகமாக கொண்டு தற்போது எங்கோ வசிக்கும் S V K வாசிகள். எங்கிருந்தாலும் இந்த கிராம அபிவிருத்திக்கு, ஆலய விழாக்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்பவர்கள். இந்த அக்ரஹார பூர்வீக வாசிகள் சிலர் இந்த கிராமத்தை பொன்னே போல் போற்றி மேலும் இதன் சிறப்பு வளர எடுத்துக் கொள்ளும் பிரயாசையால் தான் அக்ரஹாரம் இன்னும் பழைய வாசனையோடு இருக்கிறது. சாம்பவர் வடகரை அக்ரஹாரம் ட்ரஸ்ட் நிறுவனம். 27.8 2014 அன்று பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்குகிறது.
ஒரு வைணவ பட்டாச்சாரியார், மற்ற அர்ச்சகர்கள், முக்யமாக ஸ்ரீ மூல சிவாச்சாரியார், மற்றும் உள்ளூர் பக்தர்களின் ஒத்துழைப்பு இன்றி கருடசேவை சிறப்பாக அமைவது சாத்தியமில்லை அது அவ்வளவு சிறப்பாக நடந்திருக்கவும் வழியில்லை. ஸ்தோத்திரங்கள், சூக்தங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம், பாராயணம் எல்லாம் வெளியூரிலிருந்து வந்தவர்களாலும் அங்கேயே வசிப்பவர்களாலும் கோஷிக்கப்பட்டு செவிக்கு இனிமையாக இருந்தது. நானும் சேர்ந்துகொண்டேன். காலையில் நானாவித புஷ்பார்ச்சனை, அபிஷேகங்கள், மந்த்ர கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. மாலை கருட வாகன வீதி வலம் ஏற்பாடு கோலாகலமாக நிகழ்த்தினார்கள்.
இரு சிறு அக்ரஹார குழந்தைகள் கிருஷ்ணன் பாடல்களுக்கு அபிநயம் பிடித்து அற்புதமாக ஆடினார்கள் . சிறுமிகள் ஷ்ரிஞ்சினி , தனிஷா சகோதரிகள் ராதையாக, கிருஷ்ணனாக வேஷமிட்டு அனைவரையும் மகிழ்வித்தனர். இத்தகைய நிகழ்ச்சிகளை வரவேற்று உற்சாகப்படுத்த SV கரை அக்ரஹார டிரஸ்ட் நிறுவனம் அக்குழந்தைகளுக்கு பரிசளித்து கைதட்டல் பெற்றது. ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் சார்பாக வெளியிடப்பட்ட எனது புத்தகங்களை அந்த குழந்தைகளுக்கு பரிசாக அளித்த பெருமை எனக்கு. எல்லோருக்கும் ஸ்ரீ வேத நாராயண பெருமாள் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த ஊர்க்காரர்கள் பலர் வேறு மாநிலத்திலிருந்தெல்லாம் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தது ரொம்ப பாராட்டுக்குரியது. இந்த வருஷ கரோனா விஜயம் கருட சேவையின் உற்சாகத்தை குறைத்து அடக்கி வாசிக்கச் செயது விட்டது என்று அறிந்தேன்.
மேலே சொல்கிறேன்.
No comments:
Post a Comment