சிவவாக்கியர் J K SIVAN
பளிச்சென பாடல்கள்
இதுவரை எத்தனை படித்திருக்கிறேன். நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் உள்ளே இருப்பவனை அறியவில்லையே, அவன் புரியவில்லையே. இதுதான் இறைவன். நாம் யோசிக்க முயல்வதில்லை. யோசிக்கலாமே என்ற எண்ணம் உள்ளே அடிவாரத்தில் தலை எடுத்தாலும் உடனேயே ''சரி அப்பறம் நிதானமாக யோசிப்போம்'' என்று அதை அப்படியே அமுக்கி கீழே தள்ளுகிற ஸ்வபாவம் நமக்கு உண்டு. .
எப்போதாவது தெரிந்துகொள்ள மெல்லிதாக ஆர்வம். மறுபடியும் கேட்பது, படிப்பது ரசிப்பது, மறப்பது. இது கடல் அலையைப் போல் பலர் வாழ்வில் தொடர்ந்து இது நடக்கும் சம்பவம்.
பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் -- அவரைப்பற்றி இன்னும் சரியாக தெரியக்கூட இல்லை. காலமோ, இயற்பெயரோ, ஊரோ தெரியாத ஒரு சித்தர் . அவரைப்பற்றி யார் யாரோ என்னன்னவோ சொல்கிறார்கள். நாத்திகர், சைவராக இருந்து வைணவரானவர் . அவர் தான் பின்னால் திருமழிசை ஆழ்வார் என்று எல்லாம் அறிகிறோம். நாம் அதற்குள்ளே எல்லாம் போகத் தேவையே இல்லை. ''ஆணியடித்தாற் போல '' . ''பொட்டுலெ அறைஞ்சாப் போல பளிச் சென்று '' என்று சொல்வோமே அப்படி இருக்கிறது அவர் சொற்கள் என்பது சிவ வாக்கியர் பாடல்களை படிக்கும்போது, கேட்கும்போது தெளிவாகத் தெரியும். இதை ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே அலசினால் தான் அதன் தத்வார்த்தம் புரிபடும்.
'' கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே''.
''அடே கோவிந்தசாமி, நீ கோயில் கோயிலாக போகிறாயே. இதுவரை எத்தனையோ குளங்களில் ஸ்நானம் செய்து புண்ணியம் தேடியிருக்கிறாய். எங்கெங்கோ சென்று திரிந்து அலைந்து சலித்து களைத்து கோவிலையும் குள த்தையும் நாடினாயே . அந்த கோவில்கள் குளங்கள் எல்லாம் உனக்குள்ளேயே இருப்பதை என்றாவது ஒரு நிமிஷம் உணர்ந்ததுண்டா? . பிறந்தான் இறந்தான் என்று ஒவ்வொரு வனைப்பற்றியும் பேசுகிறோமே, அதோ பார் நேற்று இருந்தது இன்று இல்லை என்று மாற்றங்களைப்பற்றி மணிக்கணக்கில் பேசுகிறோமே. அந்த மாற்றங்கள், பிறப்பு இறப்பு இவை யாவுமே மாயை. இருப்பது போல் தோன்றும் அது உண்மையிலேயே இல்லாதது.
''செய்ய தெங்கிலே இளநீர் சேர்த்த காரணங்கள் போல்
ஐயன்வந் து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே.''
உன் கண்ணெதிரே நிற்கிறதே உயரமான தென்னை மரம். குலை குலையாக பச்சையும் பழுப்புமாக எத்தனை எத்தனை பெரிய இளநீர்கள் தொங்குகின்றன என்பதை தலை ஒடித்து அண்ணாந்து பார்க்கிறாயே. ஒரு விஷயம் யோசித்தாயா? யாரப்பா அவ்வளவு உயரத்தில் ஒவ்வொரு தேங்காய் உள்ளேயும் இனிமையான சுவையான இளநீரை நிரப்பி மேலே கொண்டு போய் தொங்கவிட்டது? காரணம் ஏதாவது சொல்ல முடிகிறதா? இது தான் இங்கேயும். என் மனத்தில் நான் அறியாமலேயே நான் பிறந்தது முதல் என் இறைவன் என்னைக் கேட்காமலேயே எனக்குத் தெரியாமலேயே, என்னுள், என் மனத்தைக் கோயிலாகக் கொண்டு குடியிருக்கிறான். நான் ஏன் இன்னும் அதை புரிந்து கொள்ளவில்லை? அவனைத் தெரிந்து கொள்ளவில்லை? புரிந்து கொண்ட அடுத்த கணமே மௌனமாகி விடுவேன். ஏன் என்றல் என்னால் அதைச் சொல்ல முடியாது. விவரிக்க , சொல்ல, என்னிடம் மட்டும் அல்ல, எவரிடமும் வார்த்தை கிடையாது. அனுபவிக்கவே நேரம் போதாதே.
இன்னும் சொல்கிறேன்.
No comments:
Post a Comment