Monday, September 28, 2020

SVK AGRAHARAM

 சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை -7   J K  SIVAN     

                                                                




                       ஹரிஹர குஹ  பஜனை மடம்

 
பழைய  காலத்தில் ஒவ்வொரு ஊரிலும்  ஒரு  பொது இடத்தில்  ஊர்  கூடி  அங்கே  தினமும்  பஜனை,  காலக்ஷேபம், கச்சேரி, உபன்யாசம் எல்லாம் நடக்கும்.   அது விசாலமான கோவிலோ, சத்திரமோ,   மடமோ , மண்டபமோ  ஏதோ ஒன்றாக இருக்கும்.  அன்றாடம் தவறாமல்  ஏதேனும்  நிகழ்ச்சிகள் அங்கே நடக்கும்.

 சாம்பவர் வடகரை அக்ரஹார வடக்குத்தெருவில்  இன்றும்  இருக்கும்  ஒரு புராதன  சின்னம் ஹரிஹர குஹ  பஜனை மடம்.  ஒரு பழைய வீடு. 

 அநேக மஹான்கள், வருஷா வருஷம் அதில்  அகண்ட நாம பஜனை நடத்தி இருக்கிறார்கள். உள்ளூர் வாசிகள் ஆனந்தமாக பங்கு கொண்டு சிறப்பாக  அதை  இன்னும் முடிந்தவரை நன்றாக நடத்தி  வருகிறார்கள்   என்பது மனதிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது.  

அந்த வீட்டை  ஒரு காலத்தில் யாரோ  ஒரு அக்ரஹார வாசி  பஜனை மடத்திற்காக  என்று  அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.  மிகப் பழைய  கட்டிடம் நூறு வயது கண்டது போல்  இருப்க்கிறது.  சில இடங்களை இடித்து புதுப்பிக்க வேண்டிய  நிலை. 

 வாராவாரம் ஏதாவது ஒரு  பஜனை, பாராயணம், நாம சங்கீர்த்தனம்  நிகழ்ச்சி இந்த ஸ்தலத்தில்  அடிக்கடி நடந்தது என்கிறார்கள்.   இப்போது ''முடிந்தபோது''   என்று குறுகி விட்டது . சிதிலமாகி நிற்கும் இந்த ஹரிஹர குஹ பஜனை மடம்  எத்தனையோ மகான்களை  பார்த்திருக்கிறது  என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. 

இந்த  பஜனை மட கட்டட நிதிக்காக   பழைய கால  பிரபல சினிமா,  நாடக,  நடிகர், சங்கீத வித்வான்  ஸ்ரீமான் எஸ் வி சுப்பையா பாகவதர் தலைமையில் மூன்று நாட்கள் நாடகங்கள் நடத்தப்பட்டன. அந்தக் காலத்து நாடகங்கள் தெருக் கூத்து மாதிரி இருக்கும்.  புதுக்கோட்டை ப்ரம்ம ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர் அவர்கள்   நேரிலே இங்கே குழுவோடு வந்து  இவ்வைபவங்களில் 
 முன்னின்று  நடத்த  ஸீதா கல்யாணம், ராதா கல்யாணம், கிருண்ணாவதாரம் முதலியவற்றை   இந்த அக்ரஹார வாசிகள்,  இந்த பஜனை மடத்தில் விமரிசையாக  கொண்டாடி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில்   கணேச வாத்தியார்  என்பவர்  தலைமையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்  ஸ்லோக வகுப்புகள்  நடக்கும். இப்போதிருக்கும் முதியவர்கள் பலருக்கும்  விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடமாக தெரிந்து இருப்பதற்கு கணேச வாத்யார் முக்கிய காரணம் என்கிறார்கள்.. கிராமத்தில் அடுத்த  தலைமுறை  இதெல்லாம்  தெரிந்து கொள்ள,  கற்க,  வேண்டாமா?  இது மாதிரி பொது இடங்கள்  இருத்தால்  ஆன்மீக நிகழ்ச்சிகள்  அவசியம் ஒவ்வொரு கிராமத்திலும்  நடந்து கொண்டே இருக்கவேண்டும்.

 நான் பார்த்தபோது  இந்த மண்டபத்தின் சுவர்கள் சுண்ணாம்பு பெயர்ந்து  காரை  வெளியே  தெரிந்தது . மேலே  மர  உத்தரத்தின் வலிமை போதாது. பழுது பார்க்கப்பட வேண்டும். சில இடங்களை  சுத்தமாக  இடித்து  புதிதாக பெரிதாக கட்டப்பட வேண்டும். . அதை புதுப்பித்து வசதியான பெரிய  பஜனை கூடம் தயாராகி   அகண்ட  ராம நாம பாராயணம்  தொடர்ந்து ஒலிக்க வேண்டும். மண்டப பின் பகுதி  வாகன மண்டபமாக மாற்றப்பட்டு  கருட  வாஹனம் அங்கே நிலை பெற வேண்டும். சிதிலமடைந்தவற்றை  புணருத்தாரணம், ஜீர்ணோத்தாரணம் செய்ய முயற்சிகள் நடக்கிறது  என்று ஸ்ரீ  S .R . கிருஷ்ணன்  சொல்லியதிலிருந்து ஓஹோ  அக்ராஹார வாசிகள் கவனம்  அதில் இருப்பதால்  துரிதமாக  செயல்படுகிறார்கள்  என  அறிந்தேன். அவர்கள்  முயற்சி வெற்றிபெற   சாம்பவர் வடகரை ஊர்க்காரர்கள் ஒன்று சேரவேண்டும்.   தேவையான  நிதியுதவி தர கிராமத்தவர்களும், மற்ற புரவாளர்களும் முன் வர இறைவன் அருளை  வேண்டும் .  இந்த கிராம அபிவிருத்திக்கென  ஒரு டிரஸ்ட் ஏற்கனவே இருக்கிறது. 

ஜாம்பவர்  வடகரை அக்ரஹார மக்கள் ''ஜாம்பவான்கள்'' இல்லையா?. அவர்களால் முடியாதது  ஒன்றுமில்லை. அவர்கள் இதை புதுப்பித்து  அந்த கட்டிடத்தில்   கலை  ஆன்மீக  பஜனை நாட்டிய  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து  பஜனை பகவன்  நாம  பாராயண ஒலி ஊரெங்கும்  மண்டபத்திலிருந்து ஊரெல்லாம்  கேட்கவேண்டும். செயல்பட  சம்பவர் வடகரை அக்ரஹாரம் டிரஸ்ட்  குழுவினர்  தயாராக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.  இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்  அவர்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.   சிறு துளி பெருவெள்ளம்.  இது  விஷயமாக   ஸ்ரீ   S .R  கிருஷ்ணன் 9380196674  அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
 
அக்ரஹார ஆலயங்களில் நாள் கிழமை தவறாமல் விசேஷ காலங்களில் பூஜை, அர்ச்சனை, திருவிழாக்கள் ஊர்வலம் தொடரவேண்டும், என்ற  எண்ணங்களை, நிஜமாக்க இந்த SV கரை டிரஸ்ட் நிறுவனம் முயல்கிறது. செயல்பட்டும் வருகிறது.

இந்த ஹரிஹர குஹ  பஜனை  மண்டபத்தில்  ஒரு சில அற்புதமான  பழைய கால படங்களை பார்த்தேன்.  அக்கால பிரபல நாடக, திரை உலக நடிகர், சங்கீத வித்துவான், இந்த ஊரில் பிறந்த  சாம்பவர் வடகரை  சுப்பையா பாகவதர் பெயர்  அறியாதோர் உண்டா? ( SV  SUBBAIAH  BAGAVATHAR) . அவர் ஒரு அருமையான ராமர் படத்தை பஜனை மடத்திற்கு அளித்து அதை அங்கே பூஜை செய்யப்பட்டு காட்சிப்  பொருளாக வைத்துள்ளார்கள்.

பித்துகுளி ஸ்ரீ முருகதாஸ் என்ற பாகவதோத்தமர்   இந்த ஊரில் வந்து  தங்கி பஜனை, முருக நாமம், காவடி உற்சவம்  முதலிய வைபவங்கள் நடத்தி யுள்ளார்.   இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கி  இருந்திருக் கிறார்.  பஜனை பாடல்கள் இனிய குரலில் பாடி இருக்கிறார் அவர் பிரம்மசாரி.  அவருக்கு ஒரு கண் பார்வையற்றதாய் இருந்தது.  பிள்ளைகளை ஆற்று மணலுக்கு கூட்டிப்போய் பல யோகாசனங்கள் செய்து காட்டி பயிற்சியும் அளிப்பார்.   அபூர்வமாக  பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இளம் வயது கறுப்புக் கண்ணாடி இல்லாத, தலையில் துணியில்லாத படத்தை பார்த்தேன்.  இந்த புத்தகத்தில் அந்த படமும் இடம் பெற்றிருக்கிறது.  நான்  பித்துக்குளி முருகதாஸ் பஜனை சின்னவயதிலிருந்தே  கேட்டு அனுபவித்தவன்.  நங்கநல்லூரில் எங்கள் வீட்டுக்கு ஒரு முறை 1970களில்  வந்தார். 

சாம்பவர்  வடகரை  ஹரிஹர குஹ  பஜனை மண்டபத்தில் 2015ல்  அகண்ட ராம நாம உச்சாடனம், சீதா கல்யாண மஹோத்சவம் இந்த நிறுவனத்தால் நிறைவேறியது. அதற்கு முக்கிய காரணம் இந்த சாம்பவர் வடகரை  அக்ரஹார  மக்கள் அளித்த   நன்கொடையும் சரீர, சம்பத்து, ஆதரவும் தான்.   ஹரிஹர குஹ  பஜனை மடம்  விரைவில்  முன்பு போல்  மீண்டும்    அகண்ட நாம பஜனையோடு  செயல்பட பிரார்த்திக்கிறேன்.

இன்னும் இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...