Saturday, September 26, 2020

MAYA

 


​                   

     உலகே மாயம்  ​  J K  SIVAN 


''எல்லாம் மாயை​ ​தானா பேதை எண்ணம் யாவும் வீணா''   கண்டசாலாவின் குரல் பட்டி தொட்டி  எல்லாம், டிவி  இல்லாத  காலத்தில்  ஒலி  பெருக்கியில்,  ரேடியோவில் ஒலித்தபோது  கேட்டு  மயங்காதவர் எவரும் இல்லை. இது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு.  இன்னும் அதன் இனிமை காதில் ஒலிக்கிறது. மனதில் பதிந்தி ருக்கிறது. கருப்பு வெளுப்பு சினிமாவில்  எவனோ ஒரு குடிகாரன் பாடியது, தெலுங்கு நடிகன் தமிழைக் கடித்து துப்பி நடித்தது மறந்து போய்விட்டது.  ஆனால்  இன்னொரு தெலுங்கர், தமிழ் தெரியாவிட்டாலும்   அற்புதமாக பாடி அந்த பாடலில்  த்வனித்த  சோகம், விரக்தி நெஞ்சை தொட்டது இல்லையா. பாடலின்                தத்வம் அப்படி உன்னதமானது. 
​  ​

எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை  சூன்யம்  என்று பௌத்தம் சொல்கிற மாதிரி அத்வைதம் சொல்ல வில்லை. பிரபஞ்சமேல்லாம் மாயைதான். ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமா யிருக்கிறது என்கிறது அத்வைதம்.

உல​கே மாயம் என்று  கண்டசாலா  பாடுகிறாரே.  இந்த உலகத்தில்​ எவ்வளவோ கணக்கில்லாத காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது ​ ''உலகே மாயம்''   என்பது எப்படி ​ ஸார்?   அநியாயமா  இல்லை?

மாயை என்றால் அடியோடு​ ஒண்ணுமே ​ இல்லாத வஸ்து என்று ​ யார் சொன்னது?   மாயை என்பது ​ இல்லாத ஒரு வஸ்து இல்லை. (அஸத்) அல்ல. ​  இருக்கும் ஒரு இல்லாத வஸ்து .  இப்படி சொன்னால்  தலை சுற்றாதா?   பொறுங்கள்.


 ​முயல் கொம்பு​, ​  மலடி மகன்​, என்று உதாரணம் சொல்வது இல்லாத ஒரு வஸ்துவுக்கு. மாயைக்கு அல்ல.   உண்டு என்றால் அது உண்டு.  இல்லை என்றால் அது  இல்லை.   

​வெயில் காலத்தில்   தார்  ரோட்டில் போகிறோம்.   எதிரே  தெருவில் தூரத்தில்  ஜலம்  வேகமாக  ஓடும்.  அதைக் கானல் நீர்​ என்கிறோம்.  பாவம்  மிருகங்கள் பாலை நிலத்தில்  கானல் நீரை நிஜ நீர் என்று நம்பி அதை நோக்கி எல்லையில்லாமல் ஓடி  சுருண்டு  கீழே விழுந்து மடியும்.  இருப்பது  ​ மாதிரி​  தோன்றினாலும் இல்லாதது.  அதற்காக கானல் நீர் இல்லை என்று சொல்ல முடியுமா?  அது இருக்கிறதே?  

​உலகே மாயம் என்று  உணர்த்தும் ஞானிகளுக்கு​  இந்த உலகம்  இருப்பது,    நம்மைப்போல் அவர்களுக்கும் தெரிகிறது. ஆனாலும் இது உண்மையில் சோப்பு நுரை. கொப்புளம்.  அநித்யமானது. நிலைக்காதது.  மாயை என்கிறார்கள். கானல் நீர் மாதிரி தான்.  நிரந்தர சத்தியமல்ல என்று அவர்கள்​ உணர்த்துவதை நாமும்  புரிந்து கொள்ளவேண்டும். எப்படி ?

​ அரை இருட்டில்  காற்றில் நெளியும் பிளாஸ்டிக், நீண்ட மெல்லிய  ஜரிகை தோரணம் ​  பாம்பு என்று நினைக்க  பளிச்சென்று வெளிச்சத்தில்  அதைப்  பார்க்கும் போது வியர்த்து கொட்டுகிறது.  உடல் நடுங்குகிறது.  வாய் குளறுகிறது.  பயத்தில் கதி கலங்குகிறோம்.  பழுதையில் பாம்பு இல்லை என்பது உண்மை. பாம்பாக எண்ணிய​ போது  வாஸ்தவத்தில் ​ பாம்பைக் கண்டால் உண்டாகும்  மாறுதல் நமக்குள் ஏற்பட்டது.  அது உண்மை.  பழுதை  பாம்பாக உருவெடுத்தபோது நிஜமாக நமக்கு அது இருந்ததை மறுக்கமுடியாது. அசத்தியம்  சத்யம் போல் தோன்றும்.   பொய்  இவ்வாறு   நிஜமாகி நிறைய பேர் வாழ்க்கையை  தின்றிருக் கிறது.   இன்றும் தின்கிறது.

​எதைப்  பாம்பு என்று நம்பி நாம்  வியர்த்து, உளறி, நடுங்கினோமே, அது அப்புறம்  பாம்பு இல்லை  வெறும்  பழுதை, பிளாஸ்டிங் துண்டு  என்று  புரிந்தபோது  பயம் போய்விட்டது.  எதை உண்மை என்று நம்பினோமோ அது உண்மையில் மாயை என்று புரிந்து மகிழ்கிறோம். 

 உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே. அதற்கும் ஆதார பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகிறபோது, காரியங்கள் எல்லாம் நின்றுபோகின்றன.​   

உலகம்  பல வஸ்துக்களை கொண்டுள்ளது.  நமக்குள் உண்மை  ஞானம் வருகிற வரையில் உ​லகம் நம்மை  காந்தசக்தியோடு கவரும்.  கன​வில் நடப்பதெல்லாம்  நிஜமாக தோன்றவில்லையா.  மலை மேலிருந்து உருண்டு நாம் கீழே விழும்போது அலறி, உளறி  வியர்த்து மார்பு படபடத்து, கண் விழித்தவுடன், மனைவி கத்துகிறாள்: 
 '' என்ன நீங்க என்னை இப்படி  தூங்க விடாமல்  நடு ராத்திரி   பயந்து போய்  அலறினா மீதி பேர் எப்படி தூங்கறது?. வாரத்தில்  நாலு ராத்திரி இப்படித்  தான் உங்களால் என் உயிர் போகிறது?''

​ அஞ்ஞானம் ​ஞானத்தில் தூங்கிக் கொண்டிருந்த வரையில்​ பொய்யான ​ உலகம் மெய்யாக இருந்​த​து​.   நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டபின் ​ பொய்யுலகம் காணாமல் (இருந்தாலும் இல்லாமல் ) போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தை ​​''அத்யந்த அஸத்​''  (ஆதிமுதல் அந்தம் வரை  உண்மையற்றது) ​ என்று சொல்லாமல், ​''​பிரதி பாஸிக ஸத்தியம்​''​ என்பார்கள். ​  இன்னொரு  அருமையான மனதில் நிற்கும் உதாரணம்:    கிளிஞ்சல் வெயி​லி​ல் வெள்ளி மாதிரி மினுமினுப்பது​.  பிரம்மத்தில் மாயை​  சேராமல்  தனித்து, உலகமாக ,   ''இருப்பது'' போல்  உலகம் தற்காலிகமாக ​ ஜொலிப்பது, ​மினுமினு​ப்பது. 

ஞானி​களைப்​ பொறுத்தவரை    ஞானம்  என்பது  பூ​ஜ்யம்.  மதிப்பிடமுடியாத எல்லாமும் ஆனது. அதற்கு யார் என்ன மதிப்பீடு செய்ய முடியும். அதே சமயம் விலைமதிப்பற்றது  என்ற வார்த்தைக்கு  விலை இல்லாதது ஆகிறது.  பூஜ்யத்தோடு ஏதேனும்  எண்  கூடும்போது தான் அதன் மதிப்பு புரிகிறது. 
  ''1''   என்ற எண்  பூஜ்யம்
சேரச் சேர  மதிப்பைப் பெருகிறதல்லவா?

 ஞானம் வராத நிலையில் உள்ள​ நம்மைப் போன்ற  ​ ஜீவன் ​ தான்   ''1''.  ஞானம் என்ற பூஜ்யம்  கூட கூட  அதன் மதிப்பு   10,100, 1000, 10000, 100000, 1000000 என்று எங்கோ பெரிதாக போகிறது.

ஞானம்  பெற்றவன்  உள்ளதை உள்ளபடி பார்க்கிறான்.​    ​ஒரே சர்க்கரையினால் பல ​ பக்ஷணங்கள் வெவ்வேறு உருவில், நிறத்தில், பெயரில் தெரிவது,  ஒரே  ஒரு தங்கக்கட்டியை உருக்கி பல ஆபரணங்கள் பல பெயர்களில் உருவில் காண்பது போல   பிரம்மம்​  உலகமாக  பல  உருவங்கள், வடிவங்களில் காண்கிறது.  அந்த வடிவங்கள்,உருவங்கள் சத்தியம் இல்லை. அதனுள் இருக்கும் ப்ரம்மம் தான் சத்யம்.

சர்க்கரையில்  பாகற்காய் பொம்மை செய்தால்  குழந்தை இது கசக்கும் வேண்டாம்  என்று  தொடாது.
​உண்மையில் அது கசப்பான பாகற்காய் இல்லை, சர்க்கரை என்று தெரிந்தால் அதற்கு பாகற்காய் மறைந்துவிடும்.  மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தை மறைத்தல் மறைத்தது பார் முதல் பூதம் சமாச்சாரம் இது தான்.    

சதாசிவ ப்ரம்மேந்திராள் போன்ற ப்ரம்மஞானிகள்  ரசித்து மகிழ்ந்து ''சர்வம் ப்ரம்ம மயம் '' என்று பாடியது இதனால் தான்.  இதேபோல் தான்  காணும் யாவும் கண்ணன், பார்க்கும் யாவும் பரமன் என்று  சர்வம் கிருஷ்ணமயம் ஜகத், சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்று அடிக்கடி சொல்கிறோம் . அப்போது தான் மறக்காமல் நம்மை எச்சரித்து ஆனந்தம்  துய்க்கமுடியும்.  நம்மைப்போல்  இல்லாமல் ஞானி வேறாக காண்பதை தான்  கிருஷ்ணன் குருக்ஷேத்ரத்தில்   அர்ஜுனனுக்கு  '' அடே பயலே,   ஞானி  எல்லாம் ப்ரம்மம் என்று  அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு​.  ​ நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு​'' என்று விளக்குகிறார்.  நமக்கு உலகம் வெளிச்சமாக இருக்கிறது. ப்ரம்மம் இருட்டு. ஞானிக்கு எதிர்மறை அனுபவம்..

கீதை ஏன் புரியவில்லை என்று இப்போது தெரிகிறதா?. நாம் யோசிப்பதில்லை. குமுதமோ கல்கியோ இல்லை கீதை.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...