பேசும் தெய்வம் J K SIVAN
காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஒரு தடவை ஜெயேந்திரர் காஞ்சி மஹா பெரிய வருடன் புதுக்கோட்டை அருகே உள்ள இளையாத்தங்குடி கிராமத்துக்குச் சென்று சில நாட்கள் தங்க நேர்ந்தது.
மஹா பெரியவாளுக்கு உதவியாக எப்போதும் ஜெயேந்திரர் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் தானே புரிவது தான் வழக்கம். புது பெரியவாளுக்கு நியாய சாஸ்திரம் கற்பிக்க மஹா பெரியவா ஏற்பாடு செய்தனர். மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற தெலுங்கு பண்டிதர் ஆந்திர பிரதேசத்திலிருந்து நியமிக்கப்பட்டார். அவரை இளையாத்தங்குடிக்கு வரவழைத்தார்.
மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி ஏழை பிராமண பண்டிதர் அல்ல. சாஸ்திரங்கள் நன்றாக கற்றவர். அவரது குடும்ப பரம்பரை ரொம்ப வசதி படைத்த பணக்கார வம்சம். நேராக அந்த பண்டிதர் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து நகரத்தார்கள் ஊரான திருமயம் வரை ரயிலில் பிரயாணம். பிறகு வாகனம் மூலம் அங்கிருந்து பெரியவர்கள் தங்கி இருந்த இளையாத்தங்குடி செல்லவேண்டும்.
சாஸ்திரிகள் ப்ராண்ட் நியூ. brand new . தமிழ் பேசவும் எழுதவும் அவருக்கு தெரியாது. ரயில் பிரயாணத்தில் அதே பெட்டியில் அவரோடு வேறொரு ஆச்சார சீலராக ஒரு வைதிக பிராமணரும் பயணம் செய்வதை கவனித்தார்.
மெல்ல அவரிடம் சாஸ்திரிகள் சமஸ்க்ரிதத்தில் பேச்சு கொடுத்தார்.
''நீங்களும் இளையாத்தங்குடி செல்கிறீர்களா?''
'''எதற்கு கேட்கிறீர்கள்?''
'
'இல்லை, அங்கே காஞ்சி காமகோடி பெரியவர்கள் இருவரும் தங்கி இருப்பதாக அறிந்து அங்கே புது பெரியவாளுக்கு நியாய சாஸ்திரம் கற்பிக்க என்னை அழைத்திருக்கிறார்கள். அங்கே தான் செல்கிறேன். எனக்கு தமிழ்நாட்டில் பாஷை புரியாது. தமிழில் பேச தெரி யாது. ஆகவே நீங்கள் அங்கே செல்வதாக இருந்தால் வழித்துணைக்கு உதவியாக இருக்குமே என்று.....''
'' எனக்கு எதுவும் தெரியாது'' என்று பட்டென்று சம்பாஷணையை முடித்துக் கொண்டார் அந்த மனிதர். அவர் அதிகம் பேச விரும்பவில்லை என்று சாஸ்திரிகளுக்கு புரிந்தது. அலட்சியத்தோடு அவர் மேலே பேசாமல் எழுந்து போய் அதே ரயில் பெட்டியில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.
ரயில் ஓடியது. அ து நின்ற ஸ்டேஷன்களில் பெயர் பலகை இந்தியிலும் எழுதி இருந்ததால் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஹிந்தியில் ஊர் பெயரைப் படித்து ஒருவாறு சாஸ்திரிகள் திருமயம் வந்து சேர்ந்தார். எந்த உதவியும் இன்றி ஒருவழியாக திருமயம் வந்து ஒரு வண்டி பிடித்துக்கொண்டு மகா பெரியவா தங்கி இருந்த இடம் வந்து சேர்ந்தார் சாஸ்திரிகள்.
மடத்துக்கு வந்து சேர்ந்த சாஸ்திரிகள் வரவேற்கப்பட்டார். மடத்தில் ஒரு தெரிந்த முகம் கண்ணில் பட்டது. ''அடடே நம்மோடு ரயிலில் வந்த அதே ஆசாமி இங்கேயுமா?''
மடத்தில் அவரைப் பற்றி விசாரித்ததில் சாஸ்திரிகளுக்கு பெரிய ஷாக்.
''ஓ அவரைச் சொல்கிறீர்களா, அவர் இங்கே மடத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பவர்'' என்று சொன்னார்கள்.
மாண்டரீக வெங்கட்கேஸ சாஸ்திரிகளுக்கு ரொம்ப வருத்தம். வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவர் மன வேதனையை முகம் மறைக்காமல் காட்டிக்கொடுத்துவிட்டது.
''சே. எப்படி இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார் இவர்? நான் என்ன பணமா வேறு ஏதாவது பொருளுதவியா கேட்டேன்?.புது இடமாக இருக்கிறதே. மொழி தெரியாத ஊரில் பிரயாண உதவி, அதுவும் இங்கே வந்து சேரும் பக்ஷத்தில் கூடவே அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே, என்னை தூக்கிக் கொண்டா போகவேண்டும்?. நானே வண்டி சத்தம் கொடுத்து அவரை கூடவே அழைத்துக் கொண்டு வர தயாராக இருந்தேனே . இப்படி நடந்து கொண்டுவிட்டாரே''
அவரது ஏமாற்றம் ரயிலில் நடந்த விஷயம் மெதுவாக கசிந்து மஹா பெரியவா வரை போய்விட்டது.
மஹா பெரியவாவிடம் அவரை மடத்து சிப்பந்திகள் அழைத்து சென்றார்கள்.
மஹா பெரியவா அப்போது அங்கே அருகே இருந்த ஒரு குளத்தில் இறங்கி ஸ்நானம் செய்ய சென்று கொண்டிருந்தார். எப்போதும் அவர் கூடவே சிலர் இருப்பார்கள். பக்தர்கள் கூட்டமும் அவர் எங்கே இருந்தாலும் குழுமி இருக்குமே. மடத்து சிப்பந்திகளுடன் வந்த சாஸ்திரிகளை பார்த்த மகா பெரியவர் புன்னகைத்தார்.
'என்ன விஷயம் சொல்லுங்கோ ?'' என்பது போல் தலை அசைந்தது. ஒரு கனிவான பார்வை.
சாஸ்திரிகளுக்கு அவரிடம் தனது மனத் தாங்கலை உடனே கொட்டிவிட வேண்டும் என்று எண்ணம். எப்படி இத்தனைபேர் எதிரில் அதைச் சொல்வது? என்று ஒரு தயக்கம்.
மஹா பெரியவளுக்கு மற்றவர் மனதில் இருப்பது தான் கண்ணாடியில் பார்ப்பது போல் தெரிந்துவிடுமே . அதைத் தவிர ஏற்கனவே ரயிலில் நடந்த விஷயம் அவர் காதுக்கு எட்டி விட்டதே.
''என்ன விஷயம் சொல்லுங்கோ? என்று அருகில் இருந்தவர்களை கேட்டார். சாஸ்திரிகளை அழைத்து வந்தவர் ரயிலில் சாஸ்திரிகளுக்கு நடந்த அவமதிப்பை விவரித்தார். சாஸ்திரிகள் மெளனமாக இருந்தார்.
விஷயம் சொல்லி முடித்ததும் மகா பெரியவா அதிர்ச்சி அடையவில்லை. வழக்கம்போலவே புன்னகை, முகம் எப்போதும் போல் பிரகாசமாகவே இருந்தது. பேசினார்.
விஷயம் சொல்லி முடித்ததும் மகா பெரியவா அதிர்ச்சி அடையவில்லை. வழக்கம்போலவே புன்னகை, முகம் எப்போதும் போல் பிரகாசமாகவே இருந்தது. பேசினார்.
”நீங்கள் சொன்ன விஷயம் புரியறது. இவர் ஒரு ஞானஸ்தர். பண்டிதர். ஆந்திராவிலிருந்து நமது மடத்துக்கு நாம் வரவேற்று அழைத்ததால் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு உதவ நமது மடத்தில்முக்கிய பதவியில் உள்ள ஒருவரே மறுத்துட்டார் என்பதுதானே கம்பளைண்ட். இதில் என்ன வருத்தம்? இந்தச் சின்ன உதவியைக் கூட மொழி தெரியாத புதிதாக தமிழ் நாட்டுக்கு வந்த நமது விருந்தாளிக்கு செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இந்த மடத்தில் பொறுப்பை வகிக்கும் ஒருவர் இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் எல்லாம் எப்படி எண்ணுகிறீர்களோ, என்னைப் பொறுத்தவரை அவர் உதவி இருக்கிறார், அவரைப் போல நல்லவர் வேறு ஒருவர் இல்லை என்று தான் தோன்றுகிறது'' என்றார் மகா பெரியவா.
சாஸ்திரிகளுக்கு கூட வந்தவருக்கும் மஹா பெரியவா சொன்னது ஆச்சர்யத்தைத் தந்தது. என்ன சொல்கிறார் பெரியவா? மேற்கொண்டு பெரியவாளே விளக்கம் சொல்ல காத்திருந்தார்கள்.
''அந்த அதிகாரி நல்லது தான் செய்திருக்கிறார்.வழியில் நம்ம சாஸ்திரிகளை ஏதோ வேறு ஒரு ரயில் ஸ்டேஷனில் இது தான் திருமயம் இறங்கி போங்கோ'' என்று இறக்கி விட்டு கஷ்டப்பட செய்யாமல் ''எனக்கு தெரியாது '' என்று சொன்னதால் தானே சாஸ்திரிகள் ஜாக்கிரதையாக திருமயம் ஸ்டேஷனில் வந்து இறங்கினார். இது பெரிய உதவி இல்லையா?''
மஹா பெரியவா மனதில் எவரிடமும் குற்றம் குறை கண்டுபிடிக்க தோன்றவில்லையே . என்ன கருணா மூர்த்தி என்று வியந்து அருகில் இதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கண்ணீர் விட்டனர். அவர் காலடியில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
சாஸ்திரிகளும் ''மஹா பெரியவா, நாங்களும் இது மாதிரி உலகத்தைப் பார்க்கிற பக்குவம், மனப்பான்மை பெற அனுகிரஹம் பண்ண வேண்டும்'' வேண்டிக்கொண்டார். அதன் பிறகு அவர் மனம் லேசானது. உள்ளே இருந்த வேதனை நீங்கிவிட்டது. .
No comments:
Post a Comment