Monday, March 23, 2020

TOLSTOY




ஒரு ரஷ்ய ரிஷி பற்றி . J K SIVAN  

லியோ  டால்ஸ்டாய் என்ற ரஷ்ய தாடிக்கார தாகூரை தெரியாதவர்கள் புஸ்தக விரோதிகள். 
 நான்  ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது வயது 6  ஆகி இருக்கவேண்டும்.  பிறப்பு சான்றிதழ் எல்லாம் கிடையாது.  அப்பா சொன்னது தான் ரிக்கார்ட். record.    5  வயது ஆனாலும் ஆறு என்று சொன்னால் பள்ளியில் எழுதிக் கொள்வார்கள். சந்தேகமாக இருந்தால்  வலது கையை தலைக்கு மேல் தூக்கி இடது காதை தொடவைப்பார்கள்.  தொட்டால்  ஆறு  என்று  நிச்சயம் ஆகும்.  ''கை  நீள ' பையன்கள் இந்த சோதனையில்  பாஸ்.
ஆங்கிலம் ஆறாவது வகுப்புக்கு மேலே தான்.   டால்ஸ்டாய்   கதைகளை தமிழில் தான் படித்தேன்.  பள்ளிக்கூட நூலகத்திலிருந்து கொடுத்து படிக்க வைப்பார் சுப்ரமணிய அய்யர்.  வீட்டில்  ஹரிக்கேன் லைட் வெளிச்சத்தில் டால்ஸ்டாய் மனதில் பதிந்தார். 
''சூரிய அஸ்தமனம் வரை எவ்வளவு  தூரம் செல்கிறாயோ அவ்வளவு நிலம் உனக்கே'' என்று சொன்னதால்  ஐவான் வெகுவேகம் ஓடுகிறான்.  மண்ணாசையால் தலை தெறிக்க ஓடி சூரிய அஸ்தமனத்தின்  போது நுரை தள்ளி ரத்தம் கக்கி செத்து  புதைப்பதற்கு ஆறு அடி மண் மட்டுமே சம்பாதிக்கிறான்.    கதை இன்னும் நினைவில் இருக்கிறது.

யுத்தமும் அமைதியும்  (war  and  peace ) புத்தகம் வெகுநாள் என்னிடம் இருந்து நாகராஜன் இதோ படித்துவிட்டு தருகிறேன் என்று கொண்டுபோய்  40 வருஷங்கள் ஆகிவிட்டது.  நாகராஜனோ புத்தகமோ இன்னும் கண்ணில் படவில்லை.

1850ல் கிரிமியா யுத்தத்தில்  செபோஸ்டோபோல் முற்றுகையின் போது  ராணுவ வீரனாக இருந்த டால்ஸ்டாய் சண்டைக்கோழியிலிருந்து சமாதானப் பிரியனாக மாறினார்.   வாழைக்காய் சீவுவது போல்  மனித தலைகள் பொதுமக்கள் கண்ணெதிரே  பட்டப் பகலில் கில்லடின் இயந்திரத்திலிருந்து  வெட்டப் பட்டு கீழே  தொப் தொப் என்று  ஒரு மரத்தொட்டியில் விழுவதை பாரிஸ் நகரத்தில் 1857ல் கண்ணால் பார்த்ததும் ஒரு காரணம். நீதியும் சட்டமும்  பணக்காரனுக்கும் அதிகாரத்திலிருப்பவனுக்கும் அல்லவா சாதகமாயுள்ளது.  எனவே இனி அரசாங்க உத்தியோகத்துக்கு ஒரு முழுக்கு என முடிவு எடுத்தார். அப்போது  ஸார்  czaar   வம்சம் ரஷ்யாவை ஆண்டு வந்தது. அதை விமர்சித்து எழுதியும்  அவர் மேல் குற்றம் பதியாததற்கு அவர் எழுத்து வன்மை பிரபலமும் ஒரு காரணம்.

தன்னிலிருந்து வேறு பட்ட  கீழ் மட்ட வாழ்க்கையை  வாழ்ந்தவர்களோடு உறவு இன்னொரு  புது அனுபவம். 19வது நூற்றாண்டில் சில வியக்கத்தக்க புரட்சிகர  மாறுதல்கள் . ரஷ்யாவில் 1861ல்  செர்ப் (SERF ) கள்  தோன்றி பிரபலமாகி விவசாயம் கணிசமான வரவேற்பையும் ஆதரவையும்  பெற்றது. விவசாயிகள் உடையை  தான் அணிந்தும் தனது பண்ணை வேலையாட்களோடு சேர்ந்து தானும் உழுது, பயிரிட்டு, வீடு கட்டி மராமத்து வேலைகளில் ஈடுபட்டு  அவர்கள் வாழ்க்கை முறையின் வினோதம் புரிந்து கொண்ட  டால்ஸ்டாய்  எழுத்து  வரவேற்பைப் பெற்றது.  கிராம வாழ்க்கை  அணைத்துக் கொண்டதால் நகர பெரிய  தனக்காரர்கள் நட்பும்   . பட்ட ண வாசமும்  குறைந்தது. 

ரூசோ, ப்ரோவ்தான்  போன்றோரின்  சுதந்திர, சமத்வ கொள்கைகளை விவசாயிகள் குழந்தைகள் மனதில் பதிய விட்டார்.  பிரபுக்களிடமிருந்து  விலகி  ஏழை விவசாயி மக்களின் வாழ்க்கையை வாழ்ந்தால்  தான் அவர்கள் வறுமையும் சமுதாயத்தின் அநீதியும் புரியும் என்றார்.   அவர்கள்  துயர்  களைய முயற்சிகள் மேற்கொண்டார்.  பஞ்சம் பற்றாக்குறை கண்ட இடங்களுக்கு சென்று நிவாரண உதவிகள் செய்தார்.  

அன்னா  கரேனினா என்ற புத்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்?. அந்த புத்தகம் கையில் இருந்தால்  அடிக்கடி கண்ணீரை துடைத்துக் கொள்ள பக்கத்தில் கட்டாயம் ஒரு  டவல் வைத்துக்கொள்ளுங்கள்.  அதை எழுதுவதையே  ஒரு வருஷம் தள்ளிப்  போட்டு 1873 வாக்கில் பஞ்ச நிவாரண சேவையில் ஈடுபட்டவர்.  ''ஏனய்யா தள்ளிப்போட்டீர்கள் எழுதுவதை?''  என  கேட்டவர்களுக்கு  ''கற்பனை மனிதர்களை விட உயிருள்ள மனிதர்கள் படும் கஷ்டம் அவசியமாக உடனடியாக கவனிக்கப் பட வேண்டாமா?'' என்றார். மகாத்மா காந்திக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்.  டால்ஸ்டாயை சந்தித்தார். 

வாழ்க்கை என்பது என்ன?. இதை டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவன் முதல்  எத்தனை யோ பேர் வியாக்யானம் செய்தாலும் டால்ஸ்டாய்க்கு  இதற்கு  பதில் கிடைக்காமல் வெறுத்து, மனம் உடைந்து தற்கொலை முயற்சி வரை சென்று விட்டார்.   ஜெர்மன் வேதாந்தி, ஷோபன்ஹார், புத்த மத விளக்கங்கள், பைபிள் எல்லாம் அலசி  ஆத்ம  விசாரத்தில் திளைத்தார்.   குடிப்பது, புகையிலை, சுருட்டு எல்லாம்  அகன்றது. காய் கனி வகைகள் உணவானது,  அன்பின் அடிப்படையில்  எளிமையான  ஆஸ்ரம வாழ்க்கை மேற்கொண்டார்.  1910ல்   டால்ஸ்டாய் பண்ணையைப் போல மஹாத்மா காந்தி  நிர்மாணித்தது தான்  வார்தா ஆஸ்ரம் . 
டால்ஸ்டாய் நிம்மதியாக வாழ்ந்தாரா?  இல்லை.  மனைவி, சொத்துகள், வாழ்க்கை நெறி, பணியாட்கள் எல்லாம்  அவரை பிடுங்கிக் கொண்டே இருந்தன.

ஒரு முறை  உலக எழுத்தாளர்கள் குழு ஒன்று அவரைச் சந்திதது .  வேலையாட்களோடு அவர் மரம் வெட்டிக் கொண்டோ,  தனது காலணியை  ரிப்பேர் செய்து கொண்டடோ  இருந்ததை பார்த்து,  ''அட  எவ்வளவு பெரிய   உலக முன்னணி எழுத்தாளர் இவ்வளவு எளிய வாழ்க்கை வாழ்கிறாரே ''  என்று  அதிசயித்தது. 

 உலகை யதார்த்தமாக  பார்த்து, அதன் போக்கில் தன்னை அனுசரித்து நடந்ததால்  டால்ஸ்டாய் நிறைய  க்கு எதிர்ப்புகளை  சந்தித்தார்.  நம் முன்னோர்கள்  வாயில் சர்க்கரை போடவேண் டும்.    ''யதார்த்த வாதி பஹு ஜன விரோதி'' என்று தெரியாமலா சொன்னார்கள்.  

டால்ஸ்டாயின்   மீண்டும் அவதாரம் (RESURRECTION ) என்ற ஒரு புத்தகம் என்னிடம் வெகுகாலம், பாதி  பூச்சிகள் தின்றது போக மீதியாய் இருந்தது. அதில் ஒரு இடத்தில், பெரும் பணக்காரர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், திருடர்கள், அனைவருமே  தாம் செய்வது ஒன்றே சரி என்ற கொள்கையை கொண்டவர்கள் என்று வரும். அதை  இப்போது  நிறைய  வாட்ஸாப்ப், டிவி, யூட்யூப் பேப்பர் எல்லாவற்றிலும் பார்க்கிறோம் கேட்கிறோம்.

ஒவ்வொருவன் குணாதிசயமும் அவன்  தனது மனதில் எதை  நம்புகிறானோ,, எதிர்பார்க் கிறானோ, அடைய விரும்புகிறானோ , அதை ஒட்டி தானே அமையும்.  டால்ஸ்டாய் கொள்கைகள் பிரமிக்க வைக்கின்றன.

டால்ஸ்டாயின் சில வார்த்தைகள்.  அவர் கடைப்பிடித்தது.  சொ
ல்வது முக்கியமல்ல. தானே அதை பின்பற்றுவது தான் அதிசயம். 

விடிகாலை சூர்ய உதயத்துக்கு முன்  எழுந்திரு.
இரவு ஒன்பது - பத்துக்குள் படுக்கையில் விழு.

கொஞ்சமாக சாப்பிடு. இனிப்பை ஒதுக்கு

உன் வேலைளை நீயே செய். தேவைகளை நீயே தேடி, பெற்று, திருப்திப்படு.  

வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள்  ஏற்படுத்திக் கொள்.  குறுகிய காலத்திற்கு ஒன்று  நீண்ட காலத்துக்கு ஒன்று  என்று  பட்டியல்  தயார் செய்.

ஒவ்வொரு வருஷம், மாதம், வாரம், நாள், மணி, நிமிஷம், அடுத்த வினாடி இதற்கெல்லாம் என்ன செய்யவேண்டும் என்று வரைமுறை  ஏற்படுத்திக் கொள்.  

ஆசையை விடு. செயலில்  ஈடுபட்டுக்கொண்டே இரு. அப்புறம்  ஆசைப்பட நேரமே இருக்காது.

 நல்லவனாக இரு. மற்றவனுக்காக அல்ல, இயற்கையாகவே. உனக்காகவே. 

சிக்கனம் சோறு போடும்.

பணம் கொட்டோ கொட்டு என்று சேர்ந்தாலும் உன் வழக்கமான சிக்கன வாழ்க்கையிலிருந்து  விடுபடாதே. மாறாதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...