Tuesday, March 24, 2020

GOUTAMA BUDHDHA



அமைதியின்  சின்னம்   J K  SIVAN 


என் எழுத்துக்கள் அச்சேறி இதுவரை  35 அழகிய வண்ணப்படங்கள் கொண்ட  சிறந்த புத்தகங்களாக உதவிய  பிரசுர கர்த்தர்  பெண்மணி  ஒருநாள்  அன்புள்ளம் கொண்டு   என்னைத்  தன்   வீட்டுக்கு  அழைத்தார் . சென்றேன்.   சென்னை  கோபாலபுரத்தில்  அந்த  அழகிய   அமைதியான வீட்டுக்குள்  காலடி எடுத்து வைத்த உடன் முதலில் என்னை வரவேற்றது   அழகும்  அமைதியும்  ஒரு சேரக்கொண்டு  தியானத்தில் அமர்ந்திருந்த  ஒரு அழகிய  புத்தர் சிலை.  எங்கே பிடித்தார்கள் இந்த புத்தரை.  எப்படி சுற்றிலும் பச்சை பசேல் என்று செடிகளாக அமைத்து அவரை  ஒரு வனத்தில் தியானம் செய்ய வைத்தார்கள்.   புத்தர் இருந்த அழகிய மண்டபம் ஒரு சிறிய கோவிலாகவே  காணப்பட்டது.  அவர் அருகே ஒரு சிறு தீபம்  எரிந்துகொண்டிருந்தது. ஞான தீபமா?   எத்தனை நேரம் அவரது அசையாத  தியானத்தில் கண்மூடிய  உருவத்தை வணங்கி நின்றேன்? மெல்லிதாக அசையாமல்   எரிந்துகொண்டிருந்த  தீப ஒளியில் 
 புத்தன் முகத்தின் தேஜஸ் அதிகமா கியது.  சில  நிமிஷங்கள் என்னை  கண்மூடி  அவரை  நினைக்க வைத்தது.   அன்றிரவு புத்தனைப்பற்றி மனதில் எழுத தோன்றியது இது: 

உலகம்  காணாத ஒரு அதிசயம் அந்த பிறவி.  பிறந்தது லும்பினியில் ஒரு  பௌர்ணமி அன்று
சால் மரத்தினடியில் அரண்மனை நந்தவனத்தில்,   பெரிய சாக்கிய வம்ச சாம்ராஜ்யத்தின் இளவரசனாக.    பிறக்கும்போதே ஒளியா?.   சகல ஸௌபாக்ய, சம்பத்துகளும்  அவனுக்காக  காத்திருந்தது.  அவனுக்கு வைத்த பெயர்  ''சித்தத்தில் நினைத்ததை பெறுபவன்''  சித்தார்த்தன். எதைப் பெற நினைத்தான்?

அவன்  பிறந்த ஏழாம் நாளே தாய்  மஹா மாயா தேவி மறைந்தாள்.   தாய்  யார்  என்று  தெரியாமலேயே
செவிலித்தாயிடம்  வளர்ந்தான். 

'அரசே  நமது நாட்டின் பிரதான, நமது ஆஸ்தான ஜோசியர் வந்திருக்கிறார். 
'' என்னிடம் அழைத்து வா''
''கௌதமன் பிறந்தவுடன்  மஹாராஜா சுத்தோதனன்  ராஜகுரு  அரசகுல   ஜோசியரை  வரவழைத்தான். 
''  இளவரசன்  கெளதமனின்  பிறந்த நாள்,  நேர குறிப்பு இது. இவன் ஜாதகம் கணித்து,  நன்றாக சோதித்து அவன் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள்'' என்று சொல்லி இருந்தான். ஜோசியன்  எதிர்காலம் பற்றி சொல்ல வந்திருக்கிறான்.
''சுத்துதோதன மஹாராஜா,  தங்கள் கட்டளைப்படி இளவரசனின் ஜாதகத்தை நன்றாக அலசி பார்த்து விட்டேன். அவன்....
''என்ன தயங்குகிறீர்கள் சொல்லுங்கள் ?''
''இந்த ஜாதகன் ஒரு அபூர்வன். யுகபுருஷன்.  அவன் ஒன்று மிகச்சிறந்த புகழ்வாய்ந்த மஹாராஜாவாக திகழலாம்.. அல்லது..
''என்ன தயக்கம். என்னிடம் எதையும் மறக்கவேண்டாம் சொல்லலாம்''
''அரசே  ஜாதகம் சொல்கிறது. நான் சொல்லவில்லை... அல்லது   இவன் உலகம் காணாத ஞானி, யோகி, துறவியாகலாம்...''

சுத்தோதனனுக்கு  ...''அல்லது''   பிடிக்கவில்லை... சித்தார்த்தனை   பெரிய மஹாராஜாவாக்கவே விரும்பினான். உலக வாதனைகள் கஷ்டங்கள் துன்பங்கள் எதுவும் அவன் கண்ணில் படாமல்  அரண்மனைக்குள்ள்ளேயே இருக்கும்படி பொத்தி பொத்தி  வளர்த்தான் உலகின் ஒரு  துக்கமும்  அவன் கண்ணில் படாமல் குழந்தையை வளர்த்தான்  ராஜாவான  அவன் தந்தை.

சித்தார்த்தனுக்கு  மற்றொரு நாட்டு இளவரசி யசோதராவோடு  மணமாகி   ராகுலன் பிறந்தான். சிறிது காலத்தில் தனக்குப் பின்  மாபெரும்  சக்கரவர்த்தி யாக வேண்டியவன், இவன் சந்யாசியாக  விடலாமா?

29ம் வயதில் தான் முதன் முதலாக  அரண்மனையை விட்டு வெளியே செல்லும்போது  முதன் முதலாக
வயதானவன் ஒருவனை பார்க்கிறான், மூப்பு  என்றால்  என்ன, அது  ஏன், எதற்காக?  என்று அதிர்ந்து போய் மனம்  கலங்கினான்.  அடிக்கடி  அரண்மனைக்கு வெளியே சென்று சுற்றிப்பார்க்க ஆரம்பித்தான்.

மற்றொரு அதிர்ச்சி, ஒருவனை காலில்லாத கட்டிலாக,  பாடையில் கிடத்தி எதற்கு  நான்குபேர்  தூக்கிக்கொண்டு எங்கே  செல்கிறார்கள். எதற்கு  மற்றவர் அழுகிறார்கள்?

அதோ ஒருவன் ஏன் தலையிலிருந்து கால் வரை வியாதியோடு அவஸ்தை படுகிறான்? கடவுளே கடவுளே என்று யாரை கூப்பிடுகிறான், ஏன்?

இவன் யார்,  தாடியும் மீசையுமாகி, காஷாயம் தரித்து, மற்றவன் ஒருவன் தலையை முண்டனம் செய்து
 ருத்ராக்ஷம் எல்லாம் அணிந்து காவியணிந்தவாறு, எங்கே யாரை  எதையெல்லாம் விட்டு விட்டு செல்கிறான்?  

இவை எல்லாமே நமக்கு தெரியும்.   ஒரு சாதாரண  மனிதனை  பாதிக்காதவை. ஆனால் சித்தார்த்தன் முற்றிலும் வேறு பட்ட பிறவி.   அவை பற்றி அவன் அறியாமல் தனித்து மறைத்து வைக்கப்பட்டவன். 

என் ராஜ போக வாழ்வில் இதெல்லாம்  காணவில்லையே, அரண்மனைக்கு வெளியே  இத்தனையா?.  நானும்   இதிலிருந்து தப்பமுடியாதா? ஏன் எல்லோரும் இதிலிருந்து தப்ப முடியாது?

இந்த காட்சிகள் அவன்  மனதில் கல்வெட்டாக அவனுள் பதிந்து  திரும்ப  திரும்ப  மனதில் தீராத  சஞ்சலத்தை விடை தேடும் தாகத்தை  கிளப்பியது.   தான் வாழ்வது நிரந்தரமில்லை, வெளியே மற்றவர்கள் இதெல்லாம் அனுபவிக்கிறார்கள் அது தான் தப்பமுடியாத வலை. அதிலிருந்து எப்படி தப்புவது, எது வழி?

அவனை  ஏன்  எதற்கு  என்ற  கேள்விகள் வாட்டி வதைக்க  ஒரு  இரவு  ராஜ்ஜியம் , குடும்பம், மனைவி, குழந்தை  அனைத்தையும் துறந்து  காட்டுக்குள்  எங்கோ  சென்றுவிட்டான்.  இரவும்  பகலும்  அன்ன  ஆகாரமின்றி ஏகாக்ரமான  சிந்தனை.  

எந்த  குருவையும்  அவன் தேடவில்லை.  ஆறு வருஷங்கள்  தானே  யோசித்து, வெறும் காய் கனி கிழங்குகளை உண்டு ஜீவித்து  உலக வாழ்க்கை துன்பங்களை எப்படி வெல்வது என்று தியானத்தில் அமர்ந்தார்.  யோக ஞானம் சித்தியாகியது.  ராஜபோக வாழ்க்கையோ, ஆண்டிபண்டார வாழ்க்கையோ இரண்டுமே தேவையில்லை என்று புரிந்தது.  எதுவும் சாஸ்வதமில்லை, நிரந்தரமில்லை,  காணும் யாவையும் அழியும் என்று புரிந்தது.
அவன்  தேடிய  விடை கிடைத்தது.  அவன் இனி ராஜகுமாரன் அல்ல.  புத்தனானான். 
நாடு  கண்டறியாத புது புத்த மதம் ஒன்று  தோன்றியது. உலகெங்கும்  அவர் பெயராலேயே  அது  இன்றும்  பலவாறாக  பின்பற்றப்பட்டு  வருகிறது.  துன்பத்திலிருந்து விடுதலை போதித்த அவர் உபதேசங்கள் எண்ணற்றோரை மதம் மாற்றியது.

மாபெரும் மனிதநேய பிதா மகனாரான புத்தரின்  சில  சொல்லோவியங்களை (தம்ம  பதத்தில்  சில)  காண்போமா:

''உலகம்  மாயையால் போர்த்தப்பட்டிருக்கிறது.  உலக வாழ்க்கை அநித்தியம்.  மனித வாழ்வே  துக்கத்தின்  அடிப்படையில்  எழுவது.  தியானத்திலும்  தியாகத்திலும் துக்கத்தை வெற்றி கொள்ளலாம்.  நீ உன்னை  அறிந்தால்  கடவுளைத்  தேடவேண்டிய  அவசியமில்லை...

உலகம்  மனிதனின் எண்ண  உருவகம்.  தெய்வீகம்  அல்ல. தனி மனிதன்  ஒவ்வொருவனும்  தனது  கட்டுப்பாட்டால் அடுத்து வரும்  பிறவிகளை இல்லாமல் செய்யமுடியும்.  ஆத்ம சோதனை ஒருவனை  உயர்விக்கும்,  உய்விக்கும்.  அவன்  இப்படி அடையும்  உயர்ந்த நிலை தான்   நிர்வாணம் எனப்படும்.  அகம்பாவம், ஆசை இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.   உலகைத் துறந்தவனுக்கு  பற்று  ஏது?   ஒவ்வொருவருமே ஒளி  விளக்காக  இருங்கள். உங்கள் விடுதலைக்கு  நீங்களே  உழையுங்கள். அந்த  விடுதலை  தான்  முக்தி  என்று பெயர் பெற்றது.

எண்பது வயது வாழ்ந்த கௌதமரின்  சிந்தனைகள் உலகெங்கும்  பிரதிபலித்தன.  குடும்பமே நாடே,  பௌத்தர்களாகியது. சீடர்கள் உலகெங்கும் சென்று பௌத்தத்தை  பிரச்சாரம் செய்ய காட்டுத்தீயாக ஒரு புது மதம் உருவாகியது. புத்தரின்  முதல் உபதேசம்  உ.பி.யில் சாரநாத் எனும் ஊரில்  ஒலித்தது.  புத்தர் ஞானோதயம் பெற்றது ஒரு போதி மரத்தின் அடியில், அதனால் தான் அவர் புத்தர் என பெயர் பெற்றார் என்றும் இல்லை, அது ஒரு அரசமரம் என்றும் சொல்கிறார்கள்.  மரம் முக்கியமில்லை. தவம் துறவறம் மேற்கொண்டு உடலை வருத்திக்கொள்ளவேண்டாம்,  அதற்காக ஒரு முயற்சி செய்யாமலும் இருக்கவேண்டாம்  என்று ஒரு  ''நடு'' வழி கண்டுபிடித்தார்.   

அவரது முக்ய  கொள்கைகள்  பஞ்ச சீலம்  என்று  பிரபலமானது:
1.   அஹிம்சை.   உயிர் கொல்லாமை.
2.  திருடாதே   -   மற்றவன் பொருள் மீது  எண்ணம்  போகவேண்டாம்.
3.  ஒழுக்கம்     -   அடக்கம்,  பிறரை மதித்தல்
4.   பொய்  சொல்லாமை -    அவசியமில்லாதது.
5.  மது அருந்தாமை.  - புத்தியை கூர்மையாக  வைத்துக்கொள்ளல்.

எவ்வுயிர்க்கும்   பிறவி,  மூப்பு,   மரணம்,  வியாதி ஆகியவை  தப்ப முடியாதவை.
துன்பத்தின்   காரணமே  அறியாமை, பேராசை.  துன்பம் அகலவேண்டுமானால்  இவை  அகல வேண்டும்.
எப்படி துன்பத்திலிருந்து  விடுதலை பெறுவது  என்பதற்கு  புத்தர்  கூறும்  எட்டு உபாயங்கள்:

 சரியான பார்வை, சரியான  நோக்கம், சரியான  பேச்சு,  சரியான  நடத்தை,  சரியான  வாழ்க்கை முறை,  சரியான முயற்சி, சீரான  மனம்,  சீரான  மனக் கட்டுப்பாடு.   இதெல்லாம்  என்ன கொடுக்கும்.    நிர்வாணம்  என்கிற  முக்தியை.

 இந்த கோட்பாடுகள் புத்திமதிகள்  பல பேரைக்  கவர்ந்தாலும்   இந்திய  மண்ணில் காலடி  ஊன்றாததன்  காரணம்  இந்து  சனாதன தர்மத்தில்  ஏற்கனவே  உள்ள  அடிப்படை  கொள்கைகள் தான்  இவை.   புத்தர்  அவற்றை  வலியுறுத்தி  மீண்டும்  தூக்கத்திலிருந்து  நம்மை   தட்டி எழுப்பினார்  என்று வேண்டுமானால்  எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு புது மதம் நமக்கு தேவைப்படவில்லை. இந்துசனாதனமுறை தெரியாதவர்களுக்கு இது பிடித்து பரவியது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...