தீர்த்த நாராயணர் J K SIVAN
2 . அற்புத யோகி
'குப்பு, அக்னீஸ்வரர் கிருபையால் உனது குறை நீங்கி விட்டது. இனி நீ குப்த சிவன் '' என்று ஆசிர்வதித்தார் என்றும் அவரை தனது குருவாக ஏற்று, மந்த்ர சித்தி பெற்று குப்பு இனி குப்த சிவனாக பெருமை பெற்று மேன்மையுற்றார் என்றும் கடைசியாக சொன்னேன் அல்லவா?
இதற்கிடையில் திருவையாரைச்சேர்ந்த பஞ்சநதம் கஞ்சனூர் வந்து குப்த சிவனை தரிசித்து பஞ்சாக்ஷர உபதேசம் பெற்று திருவையாறு திரும்புகிறார். திருமழபாடியில் ஒரு மஹான் நிஷ்டையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அந்த மஹானை தரிசிக்க செல்கிறார். அவர் முன் கைகட்டி நிற்கிறார். மகானின் நிஷ்டை கலைகிறது. எதிரே நின்ற பஞ்சநதத்தை பார்க்கிறார்.
''நீ தான் குப்த சிவன் அனுப்பினவனா?'' என்று கேட்டதும் அதிர்ந்து போகிறார்.
'' எப்படி நான் ஒன்றுமே சொல்லாமலே நடந்ததை அறிந்திருக்கிறார் இவர் ?
''ஆம் சுவாமி''
''எனக்கு இனிமேல் தினமும் ரெண்டு கவளம் வெண் பொங்கல் கொண்டு வருகிறாயா?''
''அப்படியே செய்கிறேன் சுவாமி''
மாலைவரை காத்திருந்து கொள்ளிடத்தை பரிசில் மூலம் கடந்து திருவையாறு சென்று மறுநாள் விடிகாலை தனது நித்ய கர்ம அனுஷ்டானங்களை முடித்து பஞ்சநதம் தானே வெண்பொங்கல் தயாரித்து கொள்ளிடத்துக்கு சென்று மகானிடம் அளிக்கிறார். ரெண்டே ரெண்டு கவளம் மட்டும் எடுத்துக்கொண்டு ''மிச்சம் நீயே சாப்பிடு'' என்று தருகிறார் மஹான்
.
பதினைந்து நாட்கள் இவ்வாறு தினமும் பஞ்சநதம் பக்தியோடு குருவிற்கு உபசாரம் செய்து திருவையாறு திரும்புகிறார்.
'' பஞ்சநதம் இன்றோடு என் இந்த க்ஷேத்ர வாசம் முடிகிறது இன்றிலிருந்து 257வது நாள் புஷ்ப வனத்தில் ( திருப் பூந்துருத்தி) என்னை வந்து பார்'' என்று சொல்லிவிட்டு அந்த மஹான் மறைகி றார். அவர் தீர்த்த நாராயணர் என்று பிறகு பஞ்சநதம் தெரிந்து கொள்கிறார்.
தீர்த்தநாராயணர் பற்றிய சில அதிசய செய்தி கள்:
ஒரு கிராமத்தில் ஒரு குஷ்டரோகி தனியாக எவரும் உதவ இல்லாமல் தவித்து தீர்த்த நாராயணரை சந்திக்கிறான் . யாரோ வைத்தியர் போல் இருக்கிறது என்று எண்ணி ''என் வியாதியை குணப்படுத்துங்கள்'. நீங்கள் கேட்கும் பணம் தருகிறேன் ' என்கிறான். ஒரு நிமிஷம் அவனை பார்த்துவிட்டு தரையில் இருந்து இரு கைகளாலும் மண்ணை அள்ளி எடுத்து அவன் மேல் வீசி விட்டு செல்கிறார். குஷ்டரோகி கோபத்தோடு அவர் மேல் பாய்ந்து தாக்க நினைத்தவனின் பார்வை தனது உடல் மேல் பட்டு ஆச்சர்யம் அடைகிறான். உடலில் குஷ்டரோகம் இருந்த அடையாளமே இல்லை. தீர்த்த நாராயணர் எங்கே மறைந்துவிட்டார்?
காட்டில் ஒரு விறகு வெட்டி தம்பதிகள். கணவனை ஒரு விஷநாகம் தீண்டி ஸ்தலத்தில் அவன் மரணமடைந்தான். குய்யோ முறையோ என்று மனைவி சோகத்தில் அழுகிறாள். அவன் பிணத்தை எடுத்துச் செல்லக்கூட எவரும் இல்லை. எதிரே தீர்த்தநாராயணர் வருகிறார். அவள் அவரை அடைந்து பேசுமுன்பே தூரத்தி லிருந்தே தனது கரங்களை உயர்த்தி அருளு கிறார். தூங்கி எழுந்தவன் போல் இறந்தவன் உயிர் பெற்று எழுந்து அவரை மனைவியோடு வணங்க தேடும்போது அவர் இல்லை.
வைத்யநாத சாஸ்திரி ஒரு நாட்டு மருந்து வைத்தியர். பக்கத்தில் ஒரு மலையிலிருந்து மூலிகை செடிகள் பறிக்க அவர் மகன் பாலன் சிஷ்யர்கள் நாலு பேரோடு மலைக்கு செல்கி றான். மலைப்பாதையில் காட்டிலிருந்து ஒரு புலி வருகிறது. மற்றவர்கள் ஓடி உயிர் தப்ப பாலனை புலி கொன்று தின்று விட்டது. பெற்றோர் கதற யாரோ இந்த காட்டில் ஒரு துறவி இருக்கிறார் அவரை அணுகி வேண்டிக் கொள்ளுங்கள் என சிலர் சொல்ல சாஸ்திரி ஓடுகிறார். தேடுகிறார்.
தீர்த்தநாராயணர் மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் படுத்திருந்தார். அவர் பாதத்தில் விழுந்து பிரார்த்தனை செயகிறார்கள்.
''தெற்கே ஒரு மைல் போய், உன் பையன் பெயர் சொல்லி மூன்று முறை கூப்பிடு. வருவான்'' என சொல்லிவிட்டு அங்கிருந்து மறைகிறார்.
அப்புறம் என்ன? ஒரு மைல் தூரம் தெற்கே ஓடி ''பாலா, பாலா, பாலா'' என்று கூப்பிட்டதும் ஏதோ தோட்டத்துக்கு சென்றவன் போல பாலன் பெற்றோரை நெருங்குகிறான். புலி வாயில் சென்றவனை எப்படி தீர்த்தநாராயணரால் மீட்க முடிந்தது?
திருப்பூந்துருத்தியில் தீர்த்தநாராயணர் புஷ்ப வனேஸ்வரர் ஆலயத்துக்கு மேற்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் நடக்கிறார். வழியே கோவிந்தன் எனும் ஒரு ஆட்டிடையன் ஒரு செத்த ஆட்டை போட்டுக்கொண்டு அழுகிறான். ஒரு கணம் நிற்கிறார். அவன் கதறுகிறான்.
''சாமி, நான் ஏழை. மூணு பணம் வட்டிக்கு கடன் வாங்கி இந்த பெண் ஆட்டை வாங்கினேன். குட்டி போடும் . அதை வளர்த்து என் ஜீவனத்தை நடத்தலாம் என்று ஆசைப்பட்டேன். ஆடு மோசம் செய்துவிட்டு செத்துவிட்டதே. என்ன பண்ணு வேன் ?''
''உன் செத்த ஆட்டுக்கு எவன் பணம் கொடுப்பான்?
''பணம் கிடைத்தால் தானே நான் இன்னொரு ஆடு வாங்குவேன் ''
''இந்தா''
ஒரு சிட்டிகை மண்ணை எடுத்து கோவிந்தன் கையில் கொடுத்து ''வீட்டில் போய் கையைத் திற . உன் தரித்திரம் இன்றோடு விலகும்'' .
கோவிந்தன் நடந்து போகிறான். பாதி வழியில் அவனுக்கு சந்தேகம். சாமியார் மந்திரவா தியோ.? வீட்டுக்கு போகுமுன்பே கையை திறந்து பார்க்கிறான். அவன் ஆடு வாங்க செலவழித்த மூணு ரூபாய் அதற்கான வட்டியோடு மட்டும் பணமாக இருந்தது. ஒருவேளை வீடு சென்று திறந்திருந்தால் வாழ்நாள் பூரா அவன் தரித்திரம் அவர் சொன்னபடி தீர்ந்திருக்குமோ?''
ஆச்சர்யத்தில் மூழ்கிய '' சாமி'' என்று அடி வயிற்றில் இருந்து நன்றிக்குரல் எழுப்பி திரும்பி பார்க்கிறான். சாமி எதிர்பக்கமாக தூரத்தில் நடந்து போகிறார். அட, இறந்த அவன் பெண் ஆடு இப்போது இன்னும் புஷ்டியாக தீர்த்த நாராயணர் பின்னாலே நடந்து போகிறதே! ''
இந்த ஆடு சாமியாருக்கு எதற்கு? என்று பேராசையில் அந்த ஆட்டின் பின் ஓடி அதன் பின்னங்கால்களை பிடிக்க, அது பலமாக அவனை உதைக்க கீழே விழுகிறான். அவன் வசித்த கைக்களர் தெருவுக்கு ஓடி கூட்டாளி களை சேர்த்துக்கொண்டு அந்த ஆட்டை திரும்ப பெற ஓடுகிறான்.
தீர்த்தரநாராயணரை பின் தொடர்வோம்.....
No comments:
Post a Comment