Wednesday, March 18, 2020

KALABARAVASHTAKAM



ஆதிசங்கரர்       ஜே கே   சிவன்  

கால பைரவாஷ்டகம். 3

                       ஒரு சிவராத்திரி அர்ச்சனை

ஹரி தான்  ஹரன். ஹரனே  ஹரி.  இதை  ஒரு சில   அருமையான எளிய  தீந்தமிழ் பாசுரங்களிலும் பாக்க ளிலும் காணலாம்.

தாழ் சடையும் நீள்முடியும்  ஒண்  மழுவும்  சக்கரமும்
சூழ் அரவும்  பொன் நாணும்  தோன்றுமால் -- சூழும்
திரண்டு அருவி  பாயும்  திரு மலை  மேல்  எந்தைக்கு
இரண்டு உருவும்  ஒன்றாய்  இசைந்து  

என்று  பேயாழ்வார் சிவனையும்  விஷ்ணுவையும்  ஒன்றாகவே  பார்த்தார் -- எங்கு?    திருமலையில்.  ஒரு சிவனடியாரும்  இளைத்தவரல்ல இதே கருத்தை  தான்  வலியுறுத்துகிறார்  கீழ காணும்   அருமையான பாவில்,

அர்த்தனாரிக்கு  பதியாக  அர்த்த   ஹரியாக ஹரனைப்  பாடுவதாக  இது அமைந்திருக்கிறது.  ஹரன்   ஸ்தாணுவாக அடி முடி  காணாமல் நின்றாதைப்போல்    விஸ்வரூபனான  த்ரிவிக்ரமனாக ஒரு  பாதம் தூக்கி எங்கே  வைக்கட்டும்  என்று கேட்கும்  திருமாலாகவும்  காண்கிறோம்.  நிச்சயம் இது சிவவாக்கியரோ அல்லது திருமூலரோ ஆக  இருக்கும். தேட  நேரமில்லை.

''இடதுகண் சந்திரன் வலதுகண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ.''

நவராத்திரி சமயம்   மலைமகள்,  அலைமகள், கலைமகள்  என  நாம் வணங்கும்  ,தேவியரை,  சக்தி ஸ்வரூபமாக கொண்டாடுகிறோம்.   தேவி  மகாத்மியம்  லலிதா சஹஸ்ரநாமம்  படித்து மகிழ்கிறோம். சிவராத்திரி பற்ற்யும்  இங்கு  சிந்திப்போம்.  

பங்குனி மாதம்  வருஷா வருஷம்  மஹா  சிவராத்திரி வரும். (Feb -March). அன்று எச்சில் கூட  விழுங்காமல்      நிர்ஜல உபவாசம்  இருப்பவர்களும் உண்டு.  இரவெல்லாம்   விழித்து   பூஜை,   பால், தயிர், சந்தன, இளநீர், விபூதி, பன்னீர்  அபிஷேகம்  எல்லாம்   நடக்கும். பக்தர்கள்  இடைவிடாது   சிவ மஹிமா, ராவண  சிவ தாண்டவ  ஸ்தோத்ரங்கள், தேவாரம், திருவாசகம்,  சிவ புராணம் பாராயணம்,  சிவ பஞ்சாக்ஷர மந்த்ரம்,  ஓம்  நமசிவாய  நாமாவளி, ருத்ரம்  சமகம்  எல்லாம்  சொல்வதுண்டு.  வில்வ தளத்தில் அர்ச்சனை   நடைபெறும்.  சிவராத்திரி  அன்று  பக்தியோடு  உபாசிப்பவனுக்கு  மறு பிறவியில்லை, பாபம் தொலையும்.  அன்று  எல்லா  சிவ ஸ்தலங்களிலும்,  ஆலயங்களிலும்  பக்தர்கள் கூட்டம்  நெரிசலாக  இருக்கும்.   

ஒரு  சிவராத்திரி கதை சொல்லட்டுமா?

மகாபாரதத்தில்   சாந்தி பர்வத்தில்  பீஷ்மர்  அம்பு படுக்கையிலிருந்தபடி  யுதிஷ்டரனுக்கு  சொன்னதாக  இது வரும்.

சித்ரபானு என்று  ஒரு ராஜா. இக்ஷ்வாகு வம்சம். சிவராத்திரி அன்று  ராணியோடு  பூஜை பண்ணிக் கொண்டி ருக்கும்போது  அஷ்டாவக்ரர்  வருகிறார்.

''ஹே  ராஜன்,   நீ சிவராத்திரி  பூஜை  இவ்வளவு   ஸ்ரத்தையாக   செய்கிறாயே  அதன்  காரணம் உனக்கு  தெரியுமா ?

''சொல்லுங்கள்  குருநாதா ''

உன்னுடைய  முற்பிறவியில்  நீ  காசியில் சுச்வரன்  என்ற  ஒரு  வேடன். பறவைகள், மிருகங்களை  வேட்டை யாடி  கொன்று  விற்பவன்.  ஒருநாள்   காட்டில்  அலைந்து திரிந்தும் வேட்டையாட  ஒன்றும்    கிடைக்க வில்லை.பசி  தாகம், இரவு  அந்தகாரம் சூழ்ந்து கொண்டது.    இரவு  வீடு  திரும்ப முடியாது.

''அட  கடவுளே,  என் வீட்டில்  மனைவி  மக்களும் ஆகரமின்றி  பட்டினி,  நானும்  பசி  காதடைக்க கண் விழித்திருக்கிறேன்.  ஒரு வழியும்  தெரியவில்லையே. '' 

 கவலையோடு  சுச்வரன் ஒரு மரத்தில் மேல்  ஏறி  ஒரு கிளையில்  அமர்ந்தான். அன்று இரவு  அது தான்  படுக்கை. ஒரு மான் தான்  கிடைத்தது. அதை  மரத்தடியில் கட்டி வைத்திருந்தான்.  கவலை மேற்கொள்ள தூக்கமின்றி  அவன் இருந்த மரத்தின்  இலைகளைக்  கிள்ளி  கீழே  போட்டுக்கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது.  மானை தூக்கிக்கொண்டு போய்  விற்றான்.   விற்ற பணத்தில்  ஆகாரம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது  யாரோ  பசியோடு  அவனை  உணவு கேட்டார்கள்.   கையில் இருந்த ஆகாரத்தை  அவர்களுக்கும்  கொஞ்சம் கொடுத்தான். பிறகு  வீடு திரும்பினான். சுச்வரன் இறந்தான்.  அப்போது  இரு  சிவகணங்கள் அவனை தக்க  மரியாதையோடு  கைலாசத்துக்கு அழைத்துச் சென்றனர்.

''நான்  ஒரு  கொடிய வேடன். எனக்கு இதற்கு இந்த  மாலை மரியாதை?  கைலாசவாசம் ''

''அப்பனே,   நீ  புண்யவான்.  மஹா சிவராத்ரி அன்று  உணவருந்தாமல், கண் விழித்து  வில்வ தளத்தால்  சிவலிங்க  பூஜை  செய்து மறுநாள்  ஒரு  அதிதிக்கு  உணவளித்ததன்  பலன்  இது.''

'' இல்லையே.  நான்  ஒரு  சிவ பூஜையும்  செய்யவில்லையே.''   யோசித்தபின்  புரிந்தது. அவன்  அமர்ந்திருந்தது வில்வ மரம்.  அவன் மரத்தின் மேலே  பசியோடு இருந்தது, உபவாசம்  ஆகிவிட்டது.  பறித்து கீழே போட்ட  வில்வ தளங்கள்  மரத்தின் கீழே  இருந்த  ஒரு  சிவலிங்கம் மேல்   விழுந்திருக்கிறது.  சிவார்ச்சனையாகி  எல்லாமே  அவனுக்கு தெரியாமலேயே  நடந்திருக்கிறது. இரவெல்லாம்  கண்விழித்து  பூஜை செய்த  பலன்  அவனை  தானாகவே  சேர்ந்திருந்தது.  மறுநாள் பசியோடு வீசு செல்லும்போது   யாரோ  ஒரு ஏழைக்கு  கொஞ்சம் உணவை அளித்தானே.  அது அதிதி  உபச்சாரமாகி விட்டது.   இதெல்லாம் தொடர்ந்து அவன்   நினைவுக்கு  வந்தது.  

 ''ஒ ராஜன்  அந்த  புண்யம்  உன்னை  ராஜாவாக்கி இருக்கிறது.  நீ  சிவராத்திரி  பூஜையும்  விடாமல் செய்து வருகிறாய். '' என்றார்  அஷ்டாவக்ரர்.

இந்த  கதையின்  உள்ளர்த்தம்  என்ன தெரியுமா?    வேட்டையாடிய  காட்டு மிருகங்கள்  தான்  பேராசை, கோபம், ஆசை,  பொறாமை  ஆகியவை.   நமது  ஆழ்மனம்,  புத்தி, ஆணவம், விழிப்புணர்ச்சி கொண்ட மனம்  ஆகியவை  தான்  காடு.   இந்த காட்டில்  தான்  மேற் சொன்ன  மிருகங்கள் உலவுகிறது. அவற்றை ஒடுக்க வேண்டும்.  யோகி  தான்  வேடன்.  அவன்  மேற்சொன்ன  விலங்குகளை தேடியவன்.    வேடன் பெயர்  ஞாபகம் இருக்கிறதா:  ஸுஸ்வரன்--   இனிய  ஸ்வரத்தை பிரயோகிப்பவன்.  யம நியமங்களை  விடாது பல  வருடங்கள் கடைப்  பிடிப்பவன்.  அதால்  இனிய  குரல்  அடைந்தவன். இது  ச்வேதாஸ்வதார  உபநிஷதத்தில் சொல்லப் படுகிறது.  அந்த  வேடன்  பிறந்த  இடம்  வாரணாசி.  காசி.    யோகிகள் நமக்குள்  இருக்கும்  சக்ரங்களில் ஆக்ஞா  சக்ரத்தை  வாரணாசி  என்பார்கள் .   ஆக்ஞா  சக்ர்ரத்தின்  இருப்பிடம்  எது தெரியுமா?  இரு புருவங்களுக்கும்  இடையே.   இட  பிங்கல  சுழும்னா  நாடிகள்  ஓடும்  இடம்.    இதில் மனத்தை  நிறுத்தும்  யோகிக்கு  தான்   ஆசை பாசம் ஆத்திரம், கோபம், மற்றும்  உலகின் அனைத்து  தீய சக்திகளையும்  சுலபமாக வெல்ல முடியும். உள்ளே   ஆத்மா ஒளி  காண முடியும்.
இதை  யெல்லாம்   யாரை  வேண்டினால்  கிடைக்கும்.   அதற்கு தான்   தேவை நீ   மகா  காலபைரவா .  ஆதி சங்கரர்  காலபைரவாஷ்டகம்  மூன்றாவது ஸ்லோகத்தில் சொல்வதை ரசிப்போம்: 

शूलटङ्कपाशदण्डपाणिमादिकारणं
श्यामकायमादिदेवमक्षरं निरामयम् ।
भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥३॥

சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம்
ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் |
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩||

பிரபஞ்ச காரணா . திருசூல நாதா. பாசமும்  கதையும்  கொண்டவனே. காலம்  இருட்டே தான்   அதில்  ஒளி  வீசுபவன்  நீயே என்று உணர்த்தும்  கரிய மேனியனே. வியாதிகள் அனைத்தும்  போக்கும் மஹா  வைத்தியநாதா, சர்வ சக்தி தாயகா , தாண்டவ மூர்த்தே,  அழிவையே  அழிக்கும்   சம்ஹார மூர்த்தியே,   காலபைரவா,  காசிகாபுராதி நாதா  உனக்கு  நமஸ்காரம். 

காலபைரவாஷ்டகம் தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...