Monday, March 23, 2020

KALABAIRAVASHTAKAM



காலபைரவாஷ்டகம்   4      J K   SIVAN
ஆதி சங்கரர் 


                                                               
                              புக்தி முக்தி தாயகா....

மயிலிறகால்  தடவிக்கொடுப்பது  போல்   மென்மையாக  நெஞ்சத்தை  வருடும்  சில  பக்தி பாடல்கள் தமிழிலும்   நிறைய  உண்டே.     இத்தகைய  சில பாடல்கள்  பல பேருக்குத்  தெரிந்திருந்தபோதிலும் அவற்றை மீண்டும் படித்து மகிழ்வதால்  ஆனந்தம் பெருகுமே தவிர அலுப்பு  இருக்கப்போவதில்லை  என்பது  நிச்சயம்.     இதோ இது ஔவைகிழவியின் ஒரு  அருள்  வாக்கு .

''சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும் ''

''அடே சிவனே''  என்று அவனை நெஞ்சில்  இருத்திக்கொண்டு  சிவனே  என்று  இருப்பவனுக்கு  எந்த அபாயமும்  பத்து கிலோ மீட்டர்  தூரத்துக்கு  நெருங்காது.  அவ்வளவு தூரம் கொரோனாவால் வரமுடியாது. இது  ஒரு  சிறந்த   உத்தரவாதமுள்ள  உபாயம்.   இது  தான்   சரியான அறிவுரை.  இதைவிட்டு  நெஞ்சில் வேறு எதையோ  சுமந்து  அலைந்து திரிந்து  வாடுபவனுக்கு  அவனை  எதிர் நோக்கி  இருக்கும்  விதியே சிந்தனையை  ஆக்ரமித்து  அவனைத்   தின்று விடும்.    திருவள்ளுவர் சொன்ன   ''கனி  இருப்ப   காய் கவர்ந்த'' சமாசாரம்  ஆகிவிடும்.

''நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் ;  பாழே
மடக்கொடி இல்லா மனை.

என்ன ஒரு அற்புதமான  மண்டையில்   சுத்தியலால்   அடித்த  மாதிரி    சில  பொருத்தமான   உதாரணங்கள்   யாருக்காவது  இது  புரியாமல்  இருக்குமா?  

மோட்டு நெற்றியில் வெற்றிடம் எதற்கு?  எங்கே  திரு நீறு  குழைத்து பூசு. உன்னை   கண்ணாடியில்  பார். அட தெரிவது  நீயா வேறு யாரோவா?  இவ்வளவு  தேஜஸ்  உனக்கு  எங்கிருந்து வந்தது?     எனவே  திருநீரற்ற நெற்றி ஒரு  பாழடைந்த  ஒரு  வெற்றிடம். -- பெண்கள், அதுவும்  மணமான பெண்கள்,  அழித்த  ஸ்லேட் போல் மோட்டு  நெற்றியோடு போவதை பார்க்கும்போது மனம் உடைகிறது. . இப்படி ஒரு வெற்று  நெற்றிக்கு  தோதாக  விரித்த சடை வேறு.... போகட்டும் கண்ணனுக்கே  என்று விட்டுவிடுவோம். -- உதாரணம். 1

 ஒளவைக் கிழவி  பலே ஆள்.   என்ன   ரசிகத்தன்மை பாருங்கள்.   ஒரு  விருந்து.  எல்லோரும்  இலைக்கு  எதிரே ஆவலாக  உணவுக்கு  காத்திருக் கிறார்கள்.  நிறைய  காய் கறி வகை வகையாக  சமைத்து  பரிமாறி யாயிற்று.  சுடச்சுட  அன்னம்  இட்டு அதன் மேல்    பருப்பு,   சாம்பார்  எல்லாம்   பரிமாறுகிறார்கள்.  இருந்தாலும்  அவற்றின்  சுவை   ஒரு  சிறு ஸ்பூன் நெய்யால் தான்  தூக்கலாக  இருக்கிறது.    இதைத்தான்   உணர்ந்து  நெய்யில்லா  உண்டி பாழ் என்கிறாள்.  -  உதாரணம் 2

என்னதான்  வசதி   இருந்தபோதிலும்  ஒரு  ஊர்  என்றால்  அதில்  ஒரு  ஆறு இருக்கவேண்டுமே?  அதல்லவோ அந்த  உண்மையான  அழகு  ஒரு  ஊருக்கு.  இதை  உணர்ட்ந்து தான்  ஆறில்லா  ஊருக்கு  அழகு

பாழ் என்கிறாள்.  ஆறு  ஏரி எல்லாம்  துர்க்கப்பட்டு  மண்ணால் மூடப்பட்டு பல மாடி கட்டிடமானால்  அதற்கு அவள் என்ன செய்வாள்?  உதாரணம் 3

கூடப்  பிறந்தது யாருமில்லை  என்கிற   ஓரிக்கு உடம்பே  பாழ்.  இதை  தான்   தானாடாவிட்டாலும்  தன்  சதையாடும்   என்பார்கள் முன்னோர்கள்.  சகோதர  சகோதரியில்லாதவன்  கொடுத்து வைக்காதவன். -  உதாரணம்   4

இதெல்லாம்   எதற்கு  கூறுகிறாள்  கிழவி  என்றால்   எவ்வளவு தான்  வசந்த மாளிகையாயிருந்தாலும்  அதில் விளக்கேற்ற  ஒரு  பெண்,  மனைவி   இல்லையென்றால் வீடே  பாழ் மனை   என்கிறாள்.   ரசிப்பது  ஒருபுறம் இருக்க,    இதில்  நமக்கு  தேவையானது  நீரில்லா   நெற்றி  பாழ்.   சிவனை நினைந்து அவன்  பஸ்மம் இட்டுக்கொள்வது  ஒன்றே சிறந்த கவசம்..

வில்வ மரம்  விசேஷத்தை இப்படியும்  சொல்வதுண்டு.   மரம்  தான்  நமது முதுகெலும்பு  தண்டுவடம்.  அதில் மூன்று தள  வில்வ  இலை தான்   இட,  பிங்கல, சுழுமுனா   நாடிகள்.   மூன்று  தளம்  முக்கண்ணனை   அறிவுறுத்துபவை.  இங்கே  மரத்தில் ஏறுவது தான்  தண்டுவடம்  வழியே மேலெழும்பும்  குண்டலினி சக்தி. சுருண்ட  நாகமான  மூலாதாரத்திலிருந்து   ஸஹஸ்ராரம்  வரை செல்வது.   இது போன்று  மனம்  எத்தனையோ  கற்பனைகளை உற்பத்தி செய்து  புரிய வைக்கும்.

சாந்தம் , அமைதி  இது ஒன்றே  சிவன்.  அது  தான்  மங்களம்.  நித்யம்.  சாஸ்வதம். காலபைரவேஸ்வரா  என  அவனைச்   சரணடைந்தால்  நம்  வினை எல்லாம்  தீரும்.  இது நம் முன்னோர்கள்  நமக்கு  காட்டிய வழி.

கால பைரவர்  காசிக்கு  அதிபதி.  ஆதி சங்கரர்   அழகான  இந்த  சந்தம்  கூடிய  அஷ்டக  ஸ்லோகத்தை  --   எப்படி  நமது அருணகிரியார்   திருப்புகழை  சந்தப்பாடல்களாக இயற்றியுள்ளாரோ  அது போல.--   நாவினிக்க செவி  யினிக்க   அமைத்திருக்கிறார். ஒவ்வொரு   அஷ்டகத்தின் கடைசி  வரி   ''காசிகாபுராதி  நாத  கால பைரவம் பஜே''   என்று   அழகாக முடிகிறது.  கால பைரவர்   சிவனின்  கோபாக்னி அம்சம்.  நாய்  வாகனம்.   அவரை   வீரபத்ரனாகவும்  கருதுகிறார்கள்.  சிவனின்  அம்சமாக  வெளிப்பட்டு  தக்ஷனை கொன்றவராகவும்,   சிவனை  ஏளனம் செய்த  பிரம்மாவின்  ஐந்தாவது தலையை கொய்தவராகவும்  வழிபடுகிறோம். ஆதி சங்கரரின் காலபைரவாஷ்டகத்தில் 4வது ஸ்லோகம்: 

 भुक्तिमुक्तिदायकं प्रशस्तचारुविग्रहं
भक्तवत्सलं स्थितं समस्तलोकविग्रहम् ।
विनिक्वणन्मनोज्ञहेमकिङ्किणीलसत्कटिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥४॥

புக்தி முக்தி தாயகம் ப்ரஶஸ்தசாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம் |
னிக்வணன்-மனோஜ்ஞ ஹேம கிம்கிணீ லஸத்கடிம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே || 


இந்த  ஸ்லோகத்தில்  பரமசிவா,  கைலாச நாதா,   உன்னை எவ்வளவு கற்பனை வளத்தோடு  வர்ணிக்கிறார்  ஆதிசங்கரர். 

''ஹே காலபைரவா,   காசி  நகர  அதிபதியே,  உன்னை  வணங்கி  வேண்டுவோர்க்கு கேட்டதெல்லாம் அருள்வோனே,  ஈசா,  இக பர சுகமாக   உலக  வாழ்வில் வாழ வசதிகளும்,  பக்தி இன்பமும் பரலோகத்தில்   மோக்ஷ சித்தியும் அருள்பவனே. கண் கவரும் காந்த மேனியனே, பக்தர்களுக்கு  பரமானந்தம்  தருபவனே, என்றும்  நிரந்தரா, ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் அதிபதியே,  பல்வேறு ரூபங்களாக  பரிமளிப்பவனே,  பொன்மணி ஒளியும், ஒலியும்  இடையில் ஆபரணமாக,  வீசம்   உன்  அலகிலா விளையாட்டுக்கு  நடனத்திற்கு மெருகூட்ட,    --   நான் அசைந்தால் அசையும் அகில உலகமும்....என  திகழ்பவனே   உனக்கு நமஸ்காரம்.

காலபைரவாஷ்டகம் தொடரும்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...