Sunday, March 1, 2020

KOVOOR NAVAGRAHA STHALAM



யாத்ரா விபரம் 
சிவராத்திரி ஓட்டம்      J K   SIVAN                                                                                                                   
   திருடர்கள்  ஜாக்கிரதை 

அண்ணாநகர் நண்பர்  சந்திரசேகரன் தம்பதியரோடு சிவராத்திரி அன்று காலை சென்னை யைச்  சார்ந்த தொண்டைமண்டல நவகிரஹ  ஆலயங்களை தரிசிக்க கிளம்பிய நாங்கள்  முதலில் பொழிச்சலூர் வழியாக சனீஸ்வர பகவான்  பரிஹார ஸ்தலம் தரிசித்து பின்னர் குன்றத்தூர் சென்றோம்.  அங்கே  ராகு பரிஹாரஸ்தலம். நாகநாதேஸ்வரர் ஆலயம் சென்றது பற்றி பிறகு எழுதுகிறேன். அங்கிருந்து அருகாமையில் உள்ள கோவூர் சென்றோம்.  
சென்னையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரம், போரூர் - குன்றத்தூர் செல்லும் வழியில் உள்ளது. பிரதான சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர்  தொலைவில் உள்ளது. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, குலோத்துங்க சோழனால் சிவனுக்காக எழுப்பப்பட்ட பிரமாண்டமான கோவிலாகும். இங்கு குடிகொண்டு இருக்கும்,  பரமேஸ்வரன் பெயர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் (திருமேனீஸ்வரர்) மற்றும் தாயாரின் பெயர் ஸ்ரீ சௌந்தராம்பிகை (திருவுடை நாயகி.)  இந்த ஆலயம்  புதன் கிரஹ  தோஷங்களுக்கு பரிஹார ஸ்தலம். அருமை
யான கோவில் இதன் ராஜகோபுர நிலைகளில் நமது பால்கனிகள் போல் தூண்களோடு அற்புதமாக காண்கிறதால், பல திரைப்படங்களில் இந்த ஆலய கோபுரம் நடித்திருக்கிறது. 

இந்த கோவிலுக்கு செல்பவர்களை  முதலில் கவர்வது இந்த  கோபுர நிலை அடுக்கு பால்கனிகள் என்று சொன்னால் தப்பில்லை.  கோபுரத்தைத்தான். கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள்.  இந்த கோபுர தரிசனம் பாபத்தை போக்குவது  தவிர கண்ணுக்கு விருந்து லாபத்தையும் அளிக்கிறது. 
இந்த கோபுர சுதை சிற்பங்களில் முக்கியமானது  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான விசேஷ ராம பக்தர் தியாகப்ரம்மத்தை பல்லக்கில் சுமந்து போவது போல் ஒரு உருவம் இருப்பது தான். அதைப்பற்றி ஒருபி கதை சொல்லாவிட்டால் அதன் முக்யத்வம் புரியாது.

கோவூரில் செல்வந்தர் ஒருவர் சுந்தரேச முதலியார். அவர் தியாக பிரம்மத்தைப்பற்றி  அறிந்தவர். அவர் மீது பக்தியும் மரியாதையும் கொண்டவர். அவர் ஸ்வாமிகளை சென்னை வரவழைத்து கோவூரில் அவருடன் தங்கி சுந்தரேஸ்வரர் மீது பாடல்கள்  பாடவேண்டும் என்று வேண்டினார்.  தியாகராஜரை  கோவூர் அழைத்துவர செய்கிறார். கோவூரில் சுந்தரேஸ் வரரை தரிசித்து  தியாகப்ரம்மம்  ஐந்து அற்புத கீர்த்தனைகளை இயற்றினார். அவை  கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனைகள் என்று புகழ் பெற்றவை.  கோவூர் ஆலய சுவற்றில் அந்த ஐந்து கீர்த்தனைகளை கல்லில் பொறித்து வைத்திருக்கிறார்கள். 

ஒருநாள் கோவூரை  விட்டு  தியாகப்ரம்மம்  திருப்பதிக்கு  கிளம்புகிறார்.  போகும்போது அவருக்கு சுந்தரேச முதலியார்  இராம கைங்கர்யத்திற்கு ஆயிரம் பொற்காசு பரிசாக  பணமுடிப்பை அளித்தார். 

தியாகராஜ ஸ்வாமிகள் பணத்தை தொட மாட்டாரே. ராஜா கொடுத்தபோதே வேண்டா மென்று ''நிதி சால  சுகமா?'' பாடியவராயிற்றே.  வேண்டாம் என்று நிராகரித்தார்.  முதலியார் விடுவதாக இல்லை. ஸ்வாமிகளுக்கு தெரியாமல் பல்லக்கில் அந்த பண மூட்டையை ஒளித்து வைத்தார்.   அவர் பல்லக்கில் பணமூட்டை வைத்ததை ஸ்வாமிகளின் சிஷியகர்கள் இருவரிடம் மட்டும் தெரிவித்திருந்தார்.  ஸ்வாமிகள் பயணம் துவங்கினார். 

அக்காலத்தில்  காட்டுப்பகுதி அதிகம். கள்ளர் கொள்ளைக்கார்கள் வழிமறித்து  வழிப்போக் கர்களை கொள்ளையடிப்பது சகஜம்.  

ஸ்வாமிகளின் பல்லக்கு காட்டுப்பாதையில் சென்றபோது, முன்னிரவு.  கள்வர்கள் சிலர் கற்களை வீசி பல்லக்கு சுமந்தவர்களை விரட்டினார்கள்.  சீடர்கள்  பயந்தனர். ஆனால் ஸ்வாமிகளோ, ''எதற்கு பயம்? நம்மிடம் என்ன இருக்கிறது  யாராவது திருடிச்செல்ல?'' என்றார்.  அப்போது தான்  சீடர்கள் சுந்தரேச முதலியார் ஆயிரம் பொற்காசுகளை  பல்லக்கில் வைத்ததை கூறுகிறார்கள். 

 ' ஓ  அப்படியானால்  அது இராமனின் பணம். அவன் அதைக் காப்பாற்றிக் கொள்வான். நமக்கெதற்கு அச்சம்'' என்று கூறிவிட்டார்.

திருடர்களை  பல்லக்கின் பின்னால்  காவல் காத்துவந்த  இரு வில் வீரர்கள் சரமாரியாக அம்புகளை  கள்வர்கள் மீது செலுத்த, உயிர்தப்ப  திருடர்களை விரட்டியடித்தனர்.  ஸ்வாமிகள் பல்லக்கை நெருங்கிய  திருடர்கள்  தம்மைக் காப்பாற்ற அவர் காலில் விழுந்து  வீரர்களின் தாக்குதலை நிறுத்த சொல்லி கெஞ்சினார்கள். 
''வில் வீரர்களா? என்னோடு அப்படி யாரும் பிரயாணம் செய்யவில்லையே''  என்கிறார் ஸ்வாமிகள்.

திருடர்கள்  அந்த இரு வில்லாளிகளின்  காம்பீர்யத்தை, அழகை, வர்ணிக்க, ஸ்வாமிகளுக்கு அந்த இருவரும்  ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் என்பது புரிகிறது. 

''நண்பர்களே,  ஆஹா  என்ன பாக்கியசாலிகள் நீங்கள்?  எனது இராம லட்சுமணர்களைக் காணும் பாக்கியம் பெற்ற நீங்கள் முற்பிறவியில் எவ்வள வோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆகையால் இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்'' என்று மகிழ்ந்து  இந்த  பண மூட்டையை  நீங்களே எடுத்துச் செல்லுங்கள்'' என்கிறார். திருடர்களோ அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மனம் திருந்தி அவருடைய சீடர்களாகி பல்லக்கை சுமந்து வந்தனர்.

கோவூரில்  தியாகராஜ ஸ்வாமிகள்  மூன்று நாட்கள் தங்கியிருந்து நான்கு மாட வீதிகளிலும் உஞ்சவிருத்தி பஜனை செய்துள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தில் இப்பொழுது தபால் அலுவலகம் உள்ளது. அவர் தம் வரலாற்று நூலில் காசியைவிட பெருமை வாய்ந்தவர் இங்கும் உறையும் ஈசன் என்று குறிப்பிட்டுள்ளதாக ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

அதனால் கர்நாடக இசைக் கலைஞர்கள் எப்படி திருவையாற்றில் அவரது பஞ்சரத்தினக் கீர்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகி றார்களோ, அது போல் இங்கேயும் கோவூர் பஞ்சரத்ன கீர்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி செய்தால் இந்த ஊரும் திருவையாறு போல பிரபலமாகும்.  ஏன் ஐயா பாகவதர்கள்  உங்களுக்கு இது தோன்ற வில்லை.  செவி இன்பம் துய்க்க நாமெல்லாம் ரெடியாக இருக்கிறோமே, பாகவதர்கள் எங்கே போனார்கள் ?

கோவூரில் தான் சேக்கிழார் ''உலகெல்லாம் உணர்ந்தோதற்கரியவன்''  என்று ஆரம்பிக்கும் பாடலுடன் பெரிய புராணத்தை இயற்றினார். அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் கோவூர் கிழார் வசித்ததும் இந்த ஊர்தான்.

காமாக்ஷி அம்மன் பஞ்சாக்னி எனும் நெருப்பின் மேல் நின்று மாங்காட்டில் சிவனை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தார். அவளின்  கடும் தவத்தால், சுற்றியுள்ள இடம் மிகுந்த வெப்பத் துக்கு ஆளானது. அதிகப்படியான வெப்பத்தால் சுற்றியுள்ள அனைத்து உயிர்களும் வேதனை அடைந்தது. அப்போது,   பரமேஸ்வரன் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது முனிவர்களும், தேவர்களும் மகாவிஷ்ணுவை வணங்கி இந்த உலகத்தை தாய் காமாட்சியின்  தவத்தால் ஏற்பட்ட வெப்பத்திலிருந்து காக்க வேண்டினர். மகாலக்ஷ்மியை இந்த பிரச்னை யிலிருந்து காக்க, விஷ்ணு பணித்தார்.

விஷ்ணுவின் ஆணைக்கிணங்க மகாலக்ஷ்மி, இந்த கோவூரில் வைகுந்தத்திலிருந்து, இந்த உலகைக் காக்கும் பொருட்டு, சிவனின் கண்களைத் திறக்கச் செய்ய பசு வடிவில்  கீழிறங்கி வந்து வழிபட்டார். இந்த செயலுக்கு மனமிறங்கிய சிவனார், தமது கண்களைத் திறந்து காணச் செய்தார். அதன் பிறகு இந்த பகுதி குளிர்ந்தது. மகாலக்ஷ்மி, பசுவின் வடிவில் வணங்கி வழிபட்ட இந்த ஸ்தலம், கோ பூரி என வழங்கலானது. அதாவது தமிழில், கோ என்றால் பசு எனப்படும். பின்னர் அதுவே மறுவி கோவூர் ஆனது.  அப்படிப்பட்ட இந்த கோவிலை தான் குலோத்துங்க சோழன் அழகுற நிர்மாணித்தான். இந்த கோவிலானது, 7 நிலைகளைக் கொண்டும் தெற்கு திசை பார்த்ததுமான ராஜ  கோபுரத்தைக் கொண்டுள்ளது. சன்னதி தெரு முழுக்க இன்றும் அழகுற மரங்களாலும் பழமை மாறாத வீடுகளாலும் உள்




ளது நமது கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டுகிறது. 

சுந்தரேஸ்வரரும், சௌந்தராம்பிகை தாயாரும் இங்கு மிக அழகுற இருப்பதாலேயே அப்பெயர்களை பெற்றவர்கள்.  வீரபத்திரர், ஸ்ரீ வள்ளி தேவானை  சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரகங்களும் இங்குக் காண முடிகிறது. மேலும் 63 நாயன்மார்களும்  இருக்கிறார்கள். 

தியாகராஜ ஸ்வாமிகளின் கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனைகள்:

  ''ஏ, வஸுதா'' -  சஹானா ராகம்,   ''கோரி சேவிம்ப'' -  கரகரப்ரியா ராகம்,  '' சம்போ மஹாதேவ'' -  பந்து வராளி ராகம்,  '' ''நம்மி வச்சின'' - கல்யாணி ராகம், மற்றும்  ''சுந்தரேஸ்வருனி''  -் சங்கராபரண ராகம் .
 27 தளம் உள்ள மகா வில்வ மரம் இந்த ஸ்தலத்தின் ஸ்தல விருக்ஷமாகும். இந்த மகா வில்வத்திற்கு, பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இங்குள்ள தீர்த்தம், சிவகங்கை தீர்த்தமாகும். அழகு நிறைந்த வேலைப்பாடுள்ள திருத்தேர் இங்கு உள்ளது. பல நூற்றாண்டு களைக் கடந்து நெடிந்துயர்ந்த கோவிலின் பட்டியலில் இதுவும் ஒன்றாகும்.

புதன் அஸ்தங்கம் அடைந்துள்ள ஜாதகர்களும், புதன் நீச்சம் போன்று வலிமை குன்றிய வர்களும் இந்த கோயிலுக்கு வருவதால் சாமர்த்தியம் கிடைக்கப்பெற்று திறமை பளிச்சிடும்படி வாழ்வர். மேலும், நரம்புத் தளர்ச்சி போன்ற எந்த வியாதி இருப்பினும் இந்த ஸ்தலத்து சிவனையும் அம்பாளையும் வழிபடுபவர்கள், புது தெம்பு அடைவதுடன், அழகுறச் சுந்தரமாக காட்சி அவர்களது கடைசி வரை காணப்படுவர். ஒருவரின் ஜாதகத்தில், புதன் அஸ்தங்கம் அடைந்திருப்பின், அதாவது சூரியனிலிருந்து 12 பாகைக்குள் வக்கிர நிலை பெறும்போதும், நேர் பாதையில் செல்லும் போது 14 பாகைக்குள் இருப்பின் அஸ்தங்கம் அடைந்ததாகக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட அமைப்புள்ள ஜாதகர்கள், தமது அறிவுத் திறன், தவறான / வெற்று கர்வத்தால் தடுமாற்றம் கொள்வர். அல்லது அவர்களின் அதிக தன்னம்பிக்கையால், அவர்களின் காரியங்கள் செயலிழந்து போகச்செய்யும்.  

இப்படிப்பட்ட ஜாதகர்கள், இந்த கோவிலை, புதன் தோறும் வணங்கி வழிபட புத்திசாலி தனம் வளரவும், நரம்புத் தளர்ச்சி நோய் அகலவும் செய்யும். . தினமும், படிக்கும் மாணவர்கள், பசுமையான செடி, மரங்களுக்கு நீர் ஊற்றி வருவதும் தங்கு தடையற்ற கல்வியை அளிக்கும். புதன் பச்சை நிறத்துக்குக் காரகன் அதனால் அன்று பச்சை நிற ஆடை ஏதேனும் ஒன்றை அணிவதும் சால சிறந்ததாகும். 

 நாம்  இப்போது போக்குவரத்து வசதிகள் பெற்றிருக்கிறோம்.  பெரும் நவகிரஹ (புதன்) க்ஷேத்ரமான கோவூர்  நமக்கு   கை  தட்டி கூப்பிடும் தூரம் எனும்படியாக  ஒரு மணி நேரத்தில் சென்று தரிசிக்க முடிகிறதே. பார்க்காதவர்கள் உடனே சென்று பார்க்கவேண்டாமா?



 சீதையை தேடி வந்த ராமன், கோவூரில்  48 நாள் விரதம் இருந்து  சுந்தரேஸ்வரரை வழிபட்ட பிறகே ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல புராணம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...