Friday, March 20, 2020

theerththa narayanar




தீர்த்த  நாராயணர்     J K  SIVAN 

                                           
 3    ஆச்சர்யங்கள், விநோதங்கள் தொடர்கிறது      

சென்ற கட்டுரையில்  கோவிந்தன் இறந்த தனது ஆடு உயிர் பெற்று   தீர்த்தநாராயணர் பின்  புஷ்டியோடு தொடர்ந்து செல்வதைப்  பார்த்துவிட்டு  ''இந்த ஆடு சாமியாருக்கு எதற்கு?  என்று  பேராசையில்  அந்த ஆட்டின் பின் ஓடி அதன் பின்னங்கால்களை பிடித்திழுக்க,  அது பலமாக அவனை உதைக்க கீழே விழுகிறான்.  அவன் வசித்த கைக்களர் தெருவு க்கு ஓடி  கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு அந்த ஆட்டை திரும்ப பெற முயற்சிக்கிறான்  என நிறுத்தினேன்.

கைக்களர் தெருவில் சில துஷ்ட வாலிபர்கள் ஏவல் பில்லி சூனிய  மந்திரங்களை கற்று  மற்றவர்களுக்கு கெடுதல் செய்து பிழைப்பை நடத்தி வந்தனர் .  கோவிந்தன் தலை தெறிக்க ஓடிவருவதை பார்த்தனர் .
''உனக்கு என்ன ஆயிற்று? ஏன்? என்ன பயம், ஏன் பதறி ஓடி வருகிறாய்?''
 ''என்  செத்துப்போன  ஆட்டை ஒரு சாமியார் உயிர்ப்பித்து, என்  கையில்  மண்ணை கொடுத்தார். அது காசாயிட்டுது.   என் ஆடு உயிர் பெற்று  அவர் பின்னாலே போவுது. அதை பிடிக்கணும்.''

''  நீ கவலைப்படாதே, உன் ஆடு இன்னிக்கு  சாயந்திரத்துக்குள்ளே இங்கே   வரும்.எங்க மந்திரத்தால் அந்த சாமியாரை கட்டிப்போட்டு உக்கார வச்சிடுறோம்' 
அந்த கைக்கள துஷ்டர்கள் அவர்களில் ஒருவனை  இறந்தவன் போல் ஒரு பாடையில் படுக்க வைத்து துணியால் மூடி, நெருப்பு சட்டியுடன்  தூக்கிக்கொண்டு தீர்த்தநாராயணரை தேடி சென்றார்கள்.  குடமுருட்டி ஆற்றங்கரையில் அப்பர்சுவாமி கோவிலுக்கு கிழக்கே சத்குரு  ஆடு பின் தொடர சென்று  கொண்டிருந்தார்.  

துஷ்டர்கள்  அவரைக் கண்டதும் பாடையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு  குய்யோ முறையோ என்று  வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவது போல் நடித்தார்கள். அவர்களில் ஒருவன் மகானிடம் 
''சாமி,   நீங்கள் செத்த ஆட்டை பிழைக்க வைத்தீங்களாம். ஊர்லே பேசிக்கிறாங்க. இந்த பாடையில்  இருக்கிறவன் தாய்க்கு ஒரே புள்ள. அவனை நீங்கள் பிழைக்க வைக்கணும்''
அவர்களைப் பார்த்தவுடனே நாராயண தீர்த்தருக்கு அவர்கள் கபட நாடகம் புரிந்துவிட்டது. 
''இவன் இறந்தவன் இறந்தவன் தான். பிழைப்பதாக இருந்தால் மீண்டும் ஒரு தாயின் கர்ப்பவாசத்தில் தான் நிகழுமே  தவிர இவன் இந்த பிறவியில்  உயிர் பெற வேறு வழியில்லை.  நீங்கள் ஏதோ அல்ப தேவதைகளின் சக்தியை நம்பி மக்களுக்கு தீங்குகள் செயகிறீர்கள் என்று தெரிகிறது.  அந்த தேவதைகள்  இனி உங்களுக்கு  உதவாது.''     
தீர்த்தநாராயணர்  அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் குடமுருட்டி  ஆற்றின் கரையில் இருந்த  ஒரு பெரிய  மாமரத்தின் அடியில் சென்று அமர்ந்தார் .
துஷ்ட  வாலிபர்கள் கேலியாக சிரித்துக்கொண்டே ''இந்த  போலி சாமியார்  உயிரோடு இருக்கிறவனையே   பிழைக்க வைச்சுட்டார்டா.   பாவம் அவர்  ஏமாந்து போனது தெரியாது.  டேய்   நீ  சாகவே இல்லைன்னு என்று  இந்த  போலி சாமியாரு  புரிஞ்சிக்கட்டும் . எழுந்திரிடா ''  என அந்த இறந்தவன் போல் நடித்து பாடையில் படுத்த பையனை எழுப்பினார்கள்.   பையன் எழவில்லை. அவனை அசைத்து  தூக்கி  என்னென்னவோ பண்ணியும்  ஒன்றும் பயனில்லை. அவன் இறந்து போயிருந்தான். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.  தாங்கள் யாரோ ஒரு சக்திவாய்ந்த மஹானோடு விளையாடி விட்டோம் என்று  புரிந்து நடுங்கினர். விஷயம் அந்த இறந்துபோன பையன் பெற்றோர்  ஒரு நல்ல முதலியார் தம்பதிகள்.  அவர்கள்  அலறி அடித்துக்கொண்டு   ஓடி   வந்தார்கள். மரத்தடியில்  ஆடு மட்டும் இருந்தது. ஸத்  குருவைக் காணோம்.   மறுநாள்  வரை காத்திருந்து  இறந்தவனை தகனம் செய்தார்கள்.  இறந்தவனின் தாய்  தினமும் மாமரத்தடியில் வந்து  ஸத் குருவுக்காக காத்திருந்தாள். ஆடு தான் இருந்தது.  அவர் இல்லை.   உண்மையில் தீர்த்தநாராயணர் அங்கேயே தான் அமர்ந்திருந்தார். ஆனால் எவர் கண்ணுக்கும் புலப்படவில்லை.  பல நாட்கள் ஓடின. 
தினமும்  திருவையாற்றிலிருந்து  தனக்கு  வெண்பொங்கல் கொண்டு வரும்  பஞ்சநத சாஸ்திரியிடம்   தீர்த்தநாராயணர்  '' இன்றிலிருந்து  257வது நாள்  திருப்பூந்துருத்தி வா''   என்று சொன்னதை   அந்த சாஸ்திரிகள்  மறந்து போய்விட்டார்.  அந்த நாள்  என்று வருகிறது என்று  குறித்து வைத்திருந்தார். 
திருப்பூந்துருத்தியில்  இறந்த ஒரு ஆடு உயிர் பிழைத்தது,  உயிருள்ளவன்   செத்தவன் மாதிரிநடித்து  நிஜமாகவே இறந்தது போன்ற சேதிகள் பஞ்சநத சாஸ்திரி காதுக்கு எட்டியது.  ஸ்வாமிகள் சொன்ன நாளும் நெருங்கியது நினைவுக்கு வந்தது.   
திருவையாற்றில் இருந்து வெண்பொங்கல் தயாரித்துக்கொண்டு  ஸ்வாமிகளை சந்தித்தார்.  ஒரு கவளம் மட்டும் எடுத்துக் கொண்டு ''நீ சாப்பிடு'' என்று  ஸத் குரு   மீதியை திருப்பி கொடுத்துவிட்டார்  திருப்பூந்துருத்தியில்  ஸ்வாமிகள்  பஞ்சநத சாஸ்திரிகள் கண்ணுக்கு  காட்சி அளித்தார்.  
பாவம்,  தினமும் மனதில் பக்தியோடு குடமுருட்டி ஆற்றில் குளித்து மாமரத்தடியில் வந்து காத்திருந்த  இறந்து போன வாலிபன்  தாய்க்கும்  ஒருநாள் தீர்த்த நாராயணர் தரிசனம் கிடைத்தது.   அவர் காலடியில் விழுந்து கதறி தீர்த்தாள்.
''என் ஒரே பிள்ளை, எவ்வளவோ சொல்லியும், துஷ்டர்கள் சகவாசத்தில் அவர்களுடைய துர்புத்தியால் உயிரை இழந்து விட்டான். அது அவன் கெடுமதியால் விளைந்தது. எங்களுக்கு வேறு பிள்ளை இல்லை.  எங்கள் வம்ச விருத்திக்கு நீங்கள் அருள் புரியவேண்டும் ''
''ஏனம்மா  கவலைப்படுகிறாய்?  நடந்தது நடந்துவிட்டது.   இந்த மூன்று மஞ்சள் துண்டுகளையும்  தேய்த்து தினமும் ஸ்னானம் செய்து கொண்டு வா . மூன்று பிள்ளைகள் உனக்கு பிறக்கும்.  முதல் பிள்ளை  தலையில்  சடையோடு பிறப்பான்.  பிறந்தவுடன் அவனை  என்னிடம் கொண்டு வா . அப்புறம் பிறக்கும் ரெண்டு பிள்ளைகள் மூலம் உன் வம்சம் அமோகமாக வ்ருத்தி அடையும்''  சந்தோஷமாக மஞ்சள்  கிழங்குகளோடு  அவள் வீடு  சேர்ந்து  கணவனிடம்  சொல்ல, அவன் சந்தோஷமாக  மாமரத்தடிக்கு ஓடினான். சாஷ்டாங்கமாக அவர் காலடியில் நன்றிக்  கண்ணீரோடு விழுந்தான்.  மாதங்கள் ஓடின.  முதலியார் தம்பதிகளுக்கு முதல் குழந்தை  தலையில் சடைகளோடு பிறந்தான்.  அவனைப் பிரிய மனமில்லாமல் வளர்த்தனர்.  உள்ளூர  ஸ்வாமிகள் சொன்னபடி செய்யவில்லையே  என்ற  பயம் இருந்தது. 
எப்போதாவது  தீர்த்தநாராயணர்  கிராமத்தில் தெருக்களுக்கு வருவார். ஆடும் பின் தொடர்ந்து வரும்.  ஒருநாள் முதலியார் தம்பதிகள் இருந்த தெருவுக்குள் நுழைந்தார்.  ஒரு வீட்டின் வாசலை நெருங்கும் போது  ஆட்டுக்கு  உடல்    சிலிர்த்து  குலுங்கி ''மே''   என்று உரத்த குரலில் கத்திக்கொண்டு  அவருக்கு முன்னால் வந்து நின்றது. ஆட்டின் சத்தம் கேட்டு வெளியே வந்த முதலியார் தம்பதிகள் வாசலில் தீர்த்தநாராயணரைக் கண்டதும் பயந்து நடுங்கிக்கொண்டு அவர் காலில் விழுந்து  ''அபச்சாரம். குழந்தை மேல் கொண்ட பாசத்தால் உங்களிடம் சமர்ப்பிக்க வில்லை. மன்னிக்கவேண்டும். நாளை காலை  எங்கள் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறோம்'' என்றனர். 
ஒன்றும்  சொல்லாமல் அவர்களை  கையமர்த்தி விட்டு  ஸ்வாமிகள் நடந்தார். மறுநாள் காலை குழந்தையை குளிப்பாட்டி மஞ்சள் வஸ்திரம் உடுத்தி  ஸ்வாமியை வலம் வந்து குழந்தை யை அவர் காலடியில் சமர்ப்பித்தார்கள்.   சில காலம் சென்று  மேலும் இரு குழந்தைகள் பிறந்து குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்தது.
நாட்கள் ஓடின.  ஒருநாள்  தீர்த்தநாராயணர் பஞ்சநத சாஸ்த்ரியிடம்   '' நாளையிலிருந்து எனக்கு வெண் பொங்கல் கொண்டு வர வேண்டாம்.  நீயும்  இங்கேயே இருந்துவிடு '' என்கிறார். அன்று புதன் கிழமை. அடுத்தநாள்  குருவாரம்.  வியாழன் . 
திருப்பூந்துருத்தியில் வாழ்ந்த ஒரு  பிராமண ஸ்த்ரீ  சிவபக்தை. தினமும் புஷ்பவனேஸ்வரை தரிசித்து  அவர் சந்நிதி எதிரே  அமர்ந்து தியானம் செய்பவள், தீர்த்த நாராயணரை அன்று   மாமரத்தடியில் சென்று தரிசிக்க விருப்பம் கொண்டாள் . ஞானிகளை வெறும் கையுடன் தரிசிக்க கூடாதே என்று சமையல் செய்து எடுத்துக் கொண்டு போகலாம் என்றால்  ரொம்ப நேரம் ஆகிவிட்டதே.  வீட்டுக்கு ஓடுகிறாள். 
என்ன ஆச்சர்யம்,  அன்று தான் என்ன உணவு தயாரிக்க எண்ணம் கொண்டிருந்தாளோ , அதெல்லாம் பாத்திரங்களில்  நிறைந்திருந்
தது. பிரமித்துப் போன அந்த பெண்மணி இது  ''புஷ்பவனேஸ்வரர்  கருணை'' என்று  மனம் நெகிழ்ந்து. நன்றியோடு  அவற்றை எடுத்துக் கொண்டு   தீர்த்த நாராயணர் இருக்கும் இடத்துக்கு செல்கிறாள். அவள்  சென்ற  நேரம்  வழக்கமாக பஞ்சநதத்தை  வெண்பொங்கல் கொண்டுவரும் நேரம். 
மடியோடு  அவள்  ஸ்வாமிகள் முன்னே  பிரசாதத்தை சமர்ப்பித்து  ஸ்வாமிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்''  என கைகூப்பி  வேண்டுகிறாள். ''ஓஹோ இதை  புஷ்பவனேஸ்வரனே  சமைத்தானா ?'''' ஆமாம் சுவாமி '''நீ எடுத்துக் கொள் '' என்று  ஒரே ஒரு கவளம் மட்டும் எடுத்துக்கொண்டு பஞ்சநதத்திடம் அதை அளிக்கிறார். 
தொடர்ந்து அந்த  பெண்மணி  தினமும் அவருக்கு பிரசாத கைங்கர்யம் செய்து வருகிறாள். ஒரு கவளம் மட்டும் உண்டு விட்டு அவர் மீதியை  பஞ்சநத சாஸ்திரிகளுக்கும் அவரிடம் வளரும்   சடைச்சாமிக்கும் அளிக்கிறார்.
சடைச்சாமியை பற்றி  அடுத்து சொல்கிறேன்...









  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...