Thursday, March 19, 2020

ORU ARPUDHA GNANAI



ஒரு அற்புத ஞானி   J K  SIVAN 
சேஷாத்திரி ஸ்வாமிகள் 


         ''எந்த வண்டி ஒட்டுகிறாய், குப்பை வண்டியா
          ரயில் வண்டியா?''


திருவண்ணாமலை ராஜமய்யருக்கு ஒருநாள் திடீர் போனஸ் கிடைத்தது.

சேஷாத்திரி ஸ்வாமிகளை தரிசிக்க அடிக்கடி அவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்து தேடிக் கொண்டு  போவார்.  ஸ்வாமிகளை பார்த்தாலும்  பாதி நாள் ஸ்வாமிகள் பேசவே மாட்டார். ஒரு தடவை ராஜமய்யரை பார்த்ததும்  அவரை அடிக்கக் கூட ஓடி வந்தார். 

போனஸ் கிடைத்தது பற்றி சொல்கிறேன். 

அன்று  சடைச்சி வீட்டு திண்ணையில் ஏதோ  ஒரு ஸ்லோகத்தை உரக்க சொல்லிக்கொண்டு உட்கார்ந்தி ருந்தார் ஸ்வாமிகள்.

ராஜமய்யர் ஒரு டம்ளரில் சூடான பாலை கொண்டு வந்து ஸ்வாமிகள் எதிரே பக்தியோடு நின்று  கொடுத்தார். அதை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு  மீண்டும் ஸ்லோகம்.   கை கட்டி நின்றார் அய்யர்.   

''உனக்கு இதுக்கு  அர்த்தம் தெரியுமோ?''

''இல்லையே சுவாமி. சொல்லுங்கோ?''

திருதராஷ்டிரனுக்கு  சனத் சுஜாதர் சொன்னது.    ''பிரம்மதம் வைம்ருத்யு மஹம் ப்ரவீமி''  --    ப்ரம்ம ஸ்வபாவத்திலிருந்து  நழுவுவது.   ஆத்மா என்று நமக்குள்ளே  இருக்கிறது என்றே அறியாமல் புரியாமல் இருப்பது  ம்ருத்யுவுக்கு  (மரணம்) சமானம்.  இதனாலே தான் ஜனனம் மரணம் எலாம்  பிரவாகமாக நடந்து கொண்டிருக்கிறது.  சம்சார சாகரம் பெரிதாகிக் கொண்டே வருகிறது.  

இப்போ சொல்லு,  ''யமனை ஜெயிக்காதவன் ஒரு மனுஷனா?  சொல்டா,   யமனை ஜெயிக்காதவன் ஒரு ம்னுஷ்யனா?''

 ராஜம் அய்யர் வாயைப் பிளந்தார். அவரால்  ஸ்வாமிகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?.

இப்படி ஸ்வாமிகள் உபதேசித்ததற்கு என்ன அர்த்தம்? மனுஷ்யனாகவே இருந்து,  ஆத்மா என்று ஒன்று உள்ளே பகவானாக உட் கார்ந்து கொண்டிருக்கிறான், என்று உணர்ந்து ஸ்வரூப நிலையிலிருந்து, ஸ்திதியிலிருந்து, வழுவாமல் நழுவாமல்  மனுஷ்ய கடமைகளை செயது கொண்டே  ஆத்ம சிந்தனையிலும் இருக்கவேண்டும்'' என்பதே. அது வேறு இது வேறு என்று இல்லை.

அடுத்து நான் சொல்லப்போவது கொஞ்சம் மனக்கசப்பு தரும் விஷயம்.

சிவராம சாஸ்திரியின் அப்பா சுந்தர சாஸ்திரிகள்.  அவருக்கு ஒரு நண்பர் .   பெரிய சமஸ்க்ரித வித்துவான். தான் ரொம்ப படித்தவன் என்ற நினைப்பு   மண்டை கனம்  எப்போதும் உண்டு.  நிறைய  வித்வான்களுக்கு  அது தானாகவே  வந்துவிடும்.  

சாஸ்திரிகள் திருவண்ணாமலை  சென்றார்கள். அருணாச்சலேஸ்வரர் தரிசனம் ஆனதும் புறப்பட்டு  அன்ன  சத்திரம் வழியே வந்தபோது அங்கே திண்ணையில் இருந்த ரெண்டு மூன்று தூண்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்தார்கள். சமஸ்க்ரித விதவானுக்கு கோபமும் வேடிக்கையாக இருந்தது.  சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்து  ''அபிதே  விஸ்ம்ருதி ?'' என்கிறார். (உனக்கு சித்தப்  பிரமையா,  பைத்தியமா  என்று அர்த்தம்). 

ஸ்வாமிகளின் பதில்:  ''அஸத்வ ஜகதோ விஸ்ம்ருதி; நது பிரமண:''  (இந்த பொய்யான மாய லோகத்தின் மறதியே  தவிர  பிரம்மத்தின் மறதி இல்லை ).

இதில் ஒரு விஷயம்.  ''விஸ்ம்ரிதி''  என்றால் புத்தி கெட்டவன், முட்டாள், பைத்தியம்  என்று ஒரு அர்த்தம்.   இன்னொரு அர்த்தம்  ''மறதி''.  சமஸ்க்ரித வித்துவான் கேட்டது முட்டாள் என்ற அர்த்தத்தில்.  சுவாமிகள் பதில்  ''மறதி''   என்ற அர்த்ததில்.   உயர்ந்த உபதேசம்.  ஸ்வாமிகள் உலகையே மறந்தவர்  ஆயிற்றே அதனால் அவரால் அதை உணர்ந்து சொல்ல முடிந்தது. வேறு யாராவது அதைச்  சொல்ல முடியுமா?. 

ஆறுமுக சாமி என்ற பக்தரைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  கம்பத்திளையனார் கோவிலிலே எப்போதும் இருப்பவர்.  ஸ்வாமிகளுக்கு என்று சில வார்த்தைகளுக்கு  தனி அர்த்தம் என்று  சொன்னது ஞாபகம் இருக்கிறதா?. 

அவர்  வார்த்தைகளில்,  ராக்ஷஸன் என்றால் கோபம். குப்பை வண்டி  ரயில் வண்டி என்றால்  ப்ரவ்ருத்தி  நிவ்ருத்தி மார்க்கங்கள். வண்டி ஓட்டுபவன் தூங்கக்கூடாது. விழிப்பு இருந்தாலும்  வண்டி ஓட்டும்போது கவனம் எங்கோ இருக்க கூடாது.   ஆபத்து.  மனம் வாக்கு காயம் மூன்று ஒரே கவனத்தில் இருப்பது அவசியம்.  இதை த்யானம் என உணர்கிறோம்.

ப்ரவ்ருத்தி மார்கத்தில் செல்லும் நாம் நமக்குரிய வர்ணாஸ்ரம, ஸ்வதர்ம காரியங்களில் ஈஸ்வர ப்ரீதியாக நிஷ் காமமாக , பற்றற்று,   செய்வது அவசியம். அப்படி செய்யாமல் வாழ்வது குப்பை வண்டி ஓட்டுதல். குப்பை வண்டி குப்பை மேட்டை நோக்கி தான் போகும். நமது தேஹம் எனும் வண்டி நரகம்  தான் செல்லும்.  

ரயில் வண்டி பெரிய ஸ்டேஷன்களில் நின்று தண்ணீர் குடித்துவிட்டு  ''ஜிக்  புக்''  என்று அடுத்த ஸ்டேஷனுக்கு குறிப்பிட்ட நேரம் செல்லும். கடைசியில் போகவேண்டிய ஸ்டேஷனுக்கு தவறாமல் போகும்.     நிற்கும்.  அது போல்  நித்ய அநித்ய விவேகம், வைராக்கியம், சம, தம, உபாதி, திதிக்ஷை,  ஸ்ரத்தை, சமாதானம், க்ஷாந்தி , அமானித்வம், முமுக்ஷுத்வம், அஹிம்சை, போன்ற பல சாதனங்களுடன்  ஸ்ரவண மனன நிதித்யாஸங்கள் புரிந்து  ஜாக்கிரதையாக  வாழ்ந்து வருபவன்  ப்ரம்ம லோகம்  கட்டாயம் அடைகிறான். இந்த  ரயில் வண்டி முடிவில் போக வேண்டிய ஸ்டேஷன் சென்று அடைகிறது.   

இந்த உபதேசத்தை தான் தனது வழியில் ஸ்வாமிகள் ஆறுமுக சாமிக்கு  ''ஏண்டா, நீ குப்பை வண்டி ஒட்டுகிறாயா, ரயில் வண்டியா?  தூங்குகிறாயே. விழிச்சுக்கோ. தியானத்திலிரு.  ராமனை தியானம் பண்ணு''  என்கிறார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...