Thursday, March 12, 2020

ARUPATHTHU MOOVAR






அறுபத்து மூவர்   J K SIVAN  
நமி நந்தி அடிகள் 

           எண்ணெய்  இல்லாதொரு தீப மெரிந்தது ......

ஒரு சிவாலயத்தில்  இன்னொரு சிவாலயம்  பார்த்ததுண்டா?  திருவாரூரில்  தியாகராஜர்  ஆலயத்தில் அறநெறி அசலேஸ்வரர்  விசேஷமானவர்.  ஆரூர்  அறநெறி என்று இந்த இடத்துக்கு பெயர்.  சிவனுக்கு அறநெறியப்பர் என்று பெயர்.  அம்பாள்  வந்தார் குழலி.  275 பாடல் பெற்ற  காவிரி  தென் கரை  சிவ  ஸ்தலங்களில் ஒன்று. அசலேஸ்வரம் என்று பெயர் கொண்ட ஸ்தலம். ரெண்டாயிரம் வருஷ சோழன் கட்டிய கோவில்.  திருவாரூர்  தியாகராஜ  ஆலயத்தில்  தெற்கு பிரகாரத்தில்   தேரடியில் உள்ள க்ஷேத்ரம்.  இந்த கோவிலை நிர்மாணித்தவர்  10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழ மஹாராணி  செம்பியன் மாதேவி.  மேற்கு பார்த்த  வாசல். ராஜ ராஜன் கால செப்பேடுகள், கல்வெட்டுகள் உள்ளன 

பார்வதி தேவி  இமவான் மகளாக அவதரித்தவள்.  இமவான்  காசி முதலிய ஸ்தலங்கள் எல்லாம் சென்று கடைசியில் திருவாரூர் வந்தான். இங்கே  லிங்கப்ரதிஷ்டை பண்ணி சந்தான பாக்யம் பெற்று பார்வதி இமவான் மகளாக  பிறந்தாள் .  

சலனம், அசைவு,  இல்லாதது, அசலம் . மலை.  இமவானுக்கு அருள் புரிந்த ஈசன் அசலேஸ்வரர்  என்ற பெயர் பெற்றார். 

செந்நிறக் கற்களால் அமைந்த அரநெறிக் கருவறைச் சுவற்றில் அகத்தியர் பிரம்மன்  துர்கை  ப்ரம்மா, விஷ்ணு, லிங்கோத்பவர்,  தக்ஷிணா மூர்த்தி சிலா ரூபங்கள். ஆரூர் அரநெறி அசலேசுவர  சிவன்  சந்நிதி  தனிக்  கோவில் போல் உள்ளது. சிதம்பர நடராஜர்  ஆலயத்திற்கு பொன்  கூரை  வேய்ந்த  பராந்தக சோழரின் புதல்வரும்  ஒன்பதாம் திருமுறையில் பதிகங்களை அருளிச் செய்தவருமான  கண்டராதித்த சோழரின் தேவியான செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்ட அசலேசுவர  விமானத்தின் நிழல் கிழக்குத் திசை  தவிர வேறு  எங்கும்  விழுவதில்லை. இந்தத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாகவே அவருடைய பேரன்   ராஜ ராஜ சோழன்  வடநாட்டுப் பாணியில் உயர்ந்த கோபுரம் போல் கட்டிய தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் கருவறை விமானம் எங்குமே நிழல் விழாதவாறு அமைந்துள்ளது.  வடநாட்டுக் கோயில்களில் கருவறையின் கூரையே கோபுரம் போல் உயர்ந்து செல்லும். தனியே கோபுரம் கிடையாது. தென்னாட்டுக் கோயில்களில் கருவறைக் கூரையின் மேல் விமானம் அமைந்து இருக்கும்.

இது பரவை நாச்சியாரால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். பரம்பொருளால் ஆட்கொள்ளப்பட்டுப் பரமேசுவரனைத் தோழனாகப் பெற்ற  சுந்தர மூர்த்தி சுவாமிகளைப் பரவை நாச்சியார் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தவர்.  அசலேஸ்வரரைப்பற்றி இதுவாரபாய் சொன்னதற்கு  காரணம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான  நமி நந்தியைப் பற்றி சொல்வதற்காக.   

திருவாரூருக்கு  8 கி.மீ.  தூரத்தில் சின்னதாக  சப்தமின்றி  தூங்கும் ஒரு  கிராமம்  ஏமப்பேரூர்.  அதில் ஒரு பிராமண  சிவ பக்தர்  ராப்பகலாக  சிவனை பூஜித்து ஆத்ம திருப்தி அடைபவர்.  எல்லோரும் அவரை நமி நந்தி என்பார்கள்.  பொடி   நடையாக  தினமும் திருவாரூருக்கு  நடந்து   தியாகேசனை  தரிசிப்பவர். அச்சலேஸ்வரரை வழிபடுபவர்.
ஒரு நாள்  அப்படித்தான்   திருவாரூர் சென்று  அச்சலேஸ்வரனை  ஸ்தோத்திரங்கள் சொல்லி  வழிபட்டுக் கொண்டிருந்தார்.  கோவிலுக்கு சென்றால்  கோவிலுக்கு  உழவாரப்பணி, மற்றும்  ஆலய திருப்பணிகள் ஏதேனும் செய்து விட்டு தான் திரும்புவார்.  அன்று அவருக்கு  அச்சலேஸ்வரர்  சந்நிதி, பிரஹாரங்கள் இருட்டாக இருக்கிறதே.  விளக்கேற்றி வைத்தால்  பிரகாசமாக இருக்குமே என்று தோன்றியது. எண்ணத்தை செயல்படுத்த  கிளம்பினார்.  கையில் ஒரு பெரிய  சொம்பு.    அதில் எண்ணெய்  சம்பாதிக்கலாம் என்று வீடு வீடாக  திருவாரூர்  வீதிகளில் சென்றார்.

முதலாவதாக சென்ற  வீட்டிலேயே  அவருக்கு  அதிர்ச்சி.

''என்னய்யா  பெரிய சொம்பை  எடுத்துக்கொண்டு வந்து கோவிலுக்கு எண்ணெய்  கொடு  என்கிறாய்?
எண்ணெய்  என்ன  சும்மாவா  வருது?  உனக்கு  கோவிலில் விளக்கு எரிக்க வேண்டுமானால்  எண்ணெய்  வாங்கு. வசதி இல்லை என்றால்  கிணற்றில் தண்ணீரை செய்தி, உன் சொம்பில் நிரப்பி அதை வைத்து விளக்கேற்று போ போ. தொந்திரவு செய்யாதே  இங்கே''  என்று விரட்டப் பட்டார்.

மற்றவர்களும்  இதைக்கேட்டு சிரித்தனர். கேலி செய்தவர்கள்.  ஒருவரும் எண்ணெய்  கொடுக்கவில்லை.
மனம் வாடி நொந்து போய்  என்ன செய்வதென்றே புரியாமல் நமி நந்திகள்  ஒரு ஓரமாக  தெருவில் நின்றார்.  மனம் சிவனை நினைத்தது.  கண்களில் நீர்  பிரவாகம்.  கால்கள் தள்ளாட  மெதுவாக
கோவிலில் சென்று சிவனை வணங்கினார். நான் மஹா  பாவி  என்னால் ஒரு உபயோகமும் இல்லை உனக்கு''  என்று கதறினார்.

திடீரென்று அவர் காதுகளில் ஒரு அசரீரி  வானிலிருந்து ஒலித்தது .

''நமிநந்தி! எழுந்திரு.  எதற்கு உனக்கு கவலை?  உன் கண் முன்  தெரிகிறதே  கோவில் குளம். அதில் நீர் எடுத்து வந்து  விளக்கேற்று. போ ''

அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒருசேர அனுபவித்த  நமி நந்தி  ''அது தான்  தியாகராஜன் சித்தம்'' என்று  எடுத்துக்கொண்டார்.   குளத்திற்குச் சென்று   ஓம்  நமசிவாய  என்று  விடாமல் ஸ்தோத்ரம் செய்து கொண்டே  செம்பில்  குளத்து நீரை நிரப்பினார்.

 கோவிலில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நிறைய  நீர் ஊற்றி விளக்கேற்றினார். அது சுடர்விட்டு எரிந்தது.  கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன்  நமி நந்திகள் ஒரு அகல் விளக்கு  பாக்கி இல்லாமல் ஆலயத்தில் கண்ணில் பட்ட அனைத்து  அகல் விளக்குகளிலும்  நீர் வார்த்து திரி இட்டு  விளக்கேற்றினார். கோவில் பளிச்சென்று ஒளிவீசி திகழ்ந்தது.

இரவு முழுவதும்  விளக்குகள்  எரிந்தது.   கண்குளிர, ஒளிமயமாக  ஆலயத்தை  தரிசித்து விட்டு   ஊர் திரும்பினார்.  அன்று முதல் ஒவ்வொரு சாயங்காலமும்  வந்துவிடுவார்.    திருவாரூர் தியாகேசன் ஆலய அத்தனை விளக்குகளுக்கும்  நீர் ஊற்றி விளக்கேற்றி விட்டு,   ஏமப்பேரூர்   சென்று  சிவபூஜை முடித்து  இரவு  உணவு உண்டுவிட்டு  பிறகு  தூங்கச் செல்வார்.

 தண்ணீரில்  விளக்கு எரியும்  ஆச்சர்ய விஷயம்   சோழ  ராஜா காதுகளுக்கு எட்டியது.   பரம சந்தோஷம்  சோழனுக்கு.  சிவ பக்தன் அவன்.   நிறைய  தர்ம  காரியங்கள் கட்டளைகள்     சைவ ஆகம விதிப்படி நடக்க  ஏற்பாடு செய்தான்.   நமிநந்தி அடிகளை  அதற்கு தலைவராக்கினான்.

பங்குனி வந்தது.  நமிநந்தியடிகள் தினசரி பூஜைகள்  தவிர  பங்குனி  உத்தரம் சிறப்பாக நடக்க காரணமானார்.   உத்சவத்தில்  ஒருநாள்  தியாகராஜா தெருக்களில்  ஊர்வலம் வந்தார்.  ஊர்வலம்  மணலி என்ற ஊரை  அடைந்தது.    அங்கே  அக்கால முறைப்படி  தாழ்ந்த குடி மக்கள் அநேகர்   வாழ்ந்தனர்.  அவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.   நமி நந்தியடிகளும்  முக்கியமாக  ஊர்வலத்தில் பங்கேற்றார்.   ஊர்வலம் முடிந்து தியாகேசன் கோவில் திரும்ப  ரொம்ப  நேரமாகிவிட்டது.

நமிநந்தியடிகள் எல்லாம் முடிந்து  தமது ஊர்  ஏமப்பேரூர் செல்ல நள்ளிரவாகிவிட்டது.  ஆனால் வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே படுத்துவிட்டார்.

''எவ்வளவு  நேரமானாலும்  வீட்டில் சிவபூஜை செய்துவிட்டு  ஆகாரம் எடுத்துக்கொண்டு அப்புறம் தானே உறங்குவீர்கள். இன்றென்ன  விசேஷம்?''  என்றாள் மனைவி,

 ‘இன்றைக்கு   சுவாமி  ஊர்வலம்  மணலிக்கும் போனது.   நானும்  போனேன்.   அந்தக்  கூட்டத்தில்  ஊர் மக்கள்  எல்லோரும் ஒன்றாக  கூடி,  தேரிழுத்ததில் கலந்து  கொண்டதால் தீட்டு  ஏற்பட்டு விட்டது.  வீட்டுக்குள்  நீராடிய பின்னரே  வர வேண்டும்.  அசதியாக இருப்பதால்  வீட்டிற்குள் நுழைய வில்லை.  நான் குளிப்பதற்கு  தண்ணீர் கொண்டுவா!  என்றார்.

 அவள்  வெந்நீர் சுட வைக்க உள்ளே சென்றாள் .  அதற்குள் கண்கள் செருகி தூக்கம்.  திண்ணையில்  நமிநந்தி  தூங்கிப்போனார். கனவு வந்தது.  கனவில்  தியாகராஜன்.

 ‘நமிநந்தி,  திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய  சிவ கணங்கள். அதை நீ அறிந்து கொள் முதலில் !’ என்று கூறி மறைந்தார். கூட்டத்தில் இருந்தோர்  முகங்கள்  தெரிந்தது. அனைவர் கழுத்திலும் நீல நிறம். ஓஹோ  எல்லோரும்  சிவனின்  பிம்பங்களே''  என்று  அறிந்து அதிசயித்தார். .

உறக்கம்  கலைந்த   நமிநந்தி  ‘ சிவனடியார்களிடையே    எந்த  வித்யாஸம், வேறுபாடும்  கிடையாது. அப்படி இருப்பதாக நினைத்தது என் தவறு ''  என்று  புரிந்து கொண்டார்.  உள்ளே சென்றார்   சிவ பூஜையை முடித்து பிரசாதம் உண்டார்.   நடந்ததை மனைவியிடம் கூறினார்.

தினமும்  ஏமப்பேரூர்  கிராமத்திலிருந்து திருவாரூர் நடப்பது கஷ்டமாயிருந்ததால்  திருவாரூரிலியே குடியேறினார் கடைசி மூச்சு இருந்தவரை   சேவை செயது  முக்தி அடைந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...