திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்
J K SIVAN
49. இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே
ஸ்ரீ ராமன் இலங்கை செல்ல ஆயத்தமாகிறான். அவன் இருப்பது பாரத தேசத்தின் தென் பகுதி ஓரம் கிழக்கு கடற்கரையில் ராமேஸ்வரம் சேது அருகே. கடலின் அடுத்த கரை இலங்கையை தொடுகிறது. அங்கே ராவணனின் அரண்மனையில் கோபாவேசமாக ராவணன். சிரஞ்சீவிகளில் என்றும் ஒருவனான நல்லவன் விபீஷணன் எடுத்துச் சொல்கிறான்
''அண்ணா தவறு செய்கிறாய். இப்போதாவது ராமனை சரணடை ந்து சீதா தேவியை அவரிடம் ஒப்படைத்து விட்டு தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள். இல்லையேல் அழிவு நிச்சயம்''
''விநாச காலே விபரீத புத்தி ''
கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே'' அல்லவா? விபீஷணனைக் கொல்லாத குறையாக அவமதிக்கிறான் ராவணன். விபீஷணன் ராமனைச் சரணடைய ககன மார்க்கமாக பறந்து ராமன் இருக்குமிடம் மறு கரைக்கு வருகிறான்.
ஒரு கரையிலிருந்து, ஒரு ஆற்றின், குளத்தின், கடலின், ஏரியின், மறு கரை தான் எதிர்க் கரை. அதை அக்கரை என்போம். அக்கரை என்று சொல்லாமல் ஏன் ''இக்கரை'' என்றே இந்த வாசகத்தில் வருகிறது? நாம் தலை சொறிவதைப் பார்த்த பெரியாழ்வார் பதில் சொல்கிறார்.
அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய்
சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்
அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய்
சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்
சம்சார சாகரத்தை கடப்பதை அக்கரை என்றும் அதைக் கடக்க உதவுவது ஸ்ரீமந் நாராயணனின் தாமரைத் திருவடிகளே ''இக்கரை'' என்கிறார். நமக்கு மிகவும் நம்பகமாக உதவுவது, ''அக்கறை'' யோடு நாம் தேடுவது அனுகூலமான அவன் திருவடி ஒன்றே. இது ஒன்றே எனக்கு, என்னுடையது , என தீர்மானிக்கப் பட்டது.
விபீஷணன் ஞானி. சிறந்த வைஷ்ணவன். ராமனும் அவன் திருவடியும் தான் ''இக்கரை'' என புரிந்தவன். தன்னைக் கரை சேர்க்கும் உபாயம் அதற்கு தான் உண்டு என்று தெரிந்தவன்.
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் ஸ்ரீ ராமானுஜர்.
' ஹே திருக்கோளூர் பெண்ணே, எல்லோரும் துடித்துக்கொண்டு இந்த திருக்கோளூரில் ஒரு முறையாவது மண்ணை மிதிக்க , வசிக்க வேண்டும் என்று இந்த புண்யம் தேடும் போது , இங்கிருந்து நீ எதற்காக அம்மா வெளியேறுகிறாய், ஆச்சர்யமாக இருக்கிறதே உன் செய்கை?''
அந்த பெண் அற்புதமானவள். விஷய ஞானி. அவள் ஒரு கேள்விக்கு 81 உதாரணங்கள் கொடுத்து அந்த உதாரண புருஷர்கள்/ஸ்த்ரீகள் போலவா நான்,? எந்த வகையி லாவது நான் விஷ்ணு சம்பந்த கைங்கர்யம் சிறிதாவது செய்ததுண்டா? எந்த விதத்தில் இந்த க்ஷேத்ரத்தில் நான் இருப்பது ஞாயம்? என்கிறாள். வைத்த மாநிதி பெருமாளை தரிசிக்க வந்த ராமானுஜர் சிலையாகி நிற்கிறார். விபீஷணனை 49வது உதாரணமாக காட்டுகிறாள்.
''சுவாமி, நான் விபீஷணனைப் போல ராமனைச் சரணடைய வேண்டும் என்ற ஞாயமான எண்ணத்தை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்காமல், வேறு வழியின்றி தான் சரணடைந்து, சரணாகதி தத்துவத்திற்கு ஒரு விளக்கமாக என்றும் நிலைத் திருப்பவளா? நான் என்ன கைங்கர்யம் செய்தவள்? நான் இந்த திருக்கோளூர் புனித மண்ணில் இருக்க எந்த விதத்தில் அருகதை உள்ளவள்? ஆகவே கிளம்பு கிறேன் '' என்கிறாள்.
No comments:
Post a Comment