Friday, March 6, 2020

FATE



                                  விதியும்  விதுரனும்   J K SIVAN

சாட்சி என்பது காசு கொடுத்தால் கிடைக்கும் வஸ்து .  உங்கள் வீட்டு மனை வேறு ஏதாவது பத்திரம்  பதிவு செய்யப்படவேண்டுமா,  ரெஜிஸ்திரார் ஆபிசில்  சாட்சி கையெழுத்து போடுவதற்கு  ஆள்  உண்டு. காசு கொடுத்தால் சாட்சியம் அளிப்பார்கள். கோர்ட்டில் கேட்கவே வேண்டாம், எந்த வேத புஸ்தகம் வேண்டுமானாலும், ஏன் கடவுளையே கூட  தலையில் அடித்து பொய் சாட்சி சொல்ல ஆள் உண்டு.

இந்த லக்ஷணத்தில்  யார் மனச்சாட்சி பற்றி  கவலைப்பட போகிறார்கள்.  அது இருந்தும் இல்லாமல்,  காணாமல் போய்விட்டது.  அக்கிரமம், அதர்மம் தலை விரித்தாடுகிறது. சத்யம் எங்கே போனது ?   உச்சாணிக்  கிளையில் ஒரு கம்பத்தின் மேலே மூன்று சிங்கங்கள் ''சத்யம் ஜெயிக்குமாமே'' எங்கே என்று   பாவம்  இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன. பொய்மை வாய்மையையே வென்றுகொண்டிருக்கிறதே.  இது நாம் நமது எதிர்காலத்தை ஒரு பெரிய  கேள்விக்குறியாக  பார்க்க பயப்பட வைக்கிறது.  நல்லவர்கள் இல்லையா?  இருக்கிறார்கள். அவர்கள்  சொல்லை யார் கேட்கிறார்கள்?

இது முன்பும் ஒரு காலத்தில் மஹா பாரதத்தில் நிகழ்ந்தது தான்.  இதோ பாருங்கள்.

விதுரன் படித்து படித்து சொன்னான். திருதராஷ்டிரனுக்கு கண் தான் தெரியவில்லை  என்றால் காதுமா கேட்காமல் போனது?.

ஆமாம். பாண்டவர்களின் அருமை, பெருமை அவனுக்கும் அவன் மக்களுக்கும் உள்ளூர பொறாமையையும் அச்சத்தையும் வளர்த்தது.இதனால் விளையும் தீமையை விதுரனை விட வேறு யாரும் எடுத்துச் சொல்ல முடியாது. சொல்லி என்ன பயன்?  விதுரன் என்ன சாமான்யனா  தர்ம தேவதையின் அவதாரம். அவன் சொல்லே காற்றில் பறந்தது. அவன் அவமதிக்கப்பட்டான். ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே.  இப்போது கேட்கவேண்டுமா?

நல்லவர்களையும் அவர்கள்  செயலையும் வெறுத்து,  தூஷணை தான் செய்ய தூண்டும் இந்த பொறாமை.

''நாம் தான் உள்ளபடியே, தகுதியானவர்கள் நல்லவர்கள்,  மற்றவர்கள் அக்கிரமக்காரர்கள், ஆனால் இது  இந்த பாழாய்ப்போன உலகத்துக்கு தெரியவில்லையே'' என்ற தவறான எண்ணத்தை வளர்க்கும்.
ஏன்?
நமக்கு நம்மையே தெரியவில்லையே!  எப்படி மற்றவர்களை புரிந்து கொள்ள இயலும்?  ஆத்ம விசாரம், மனச்சாட்சி  என்று   ஏதாவது இருந்தால் தான் இது புரியும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால். துர்போதனைக்கு என்றே சிலர் முளைப்பார்கள்.  நாம் நமது நாட்டின் சீரழிவு நிலையில் தான் நாள் தோறும்  நிறைய பார்க்கிறோமே.  காசு வாங்கிக்கொண்டு எப்படியெல்லாம் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.   வாட்ஸாப்ப் பில் வருவதை படிக்காமல் அழித்தே கைவிரல் கரைந்து சுருங்கிவிட்டது.  நம்மை சுற்றி நடக்கும் மனச்சாட்சி அற்ற நிகழ்ச்சிகள் மன நெகிழ்ச்சியை அளிக்கிறதா மகிழ்ச்சியை தருகிறதா?ஒரு கணம் சிந்தியுங்கள் பார்க்கலாம்.

கைகேயி நல்லவள். ராமனை வளர்த்தவள். பெற்ற  அம்மாவை விட கைகேயி மேல் தான் ராமனுக்கு பாசம் அதிகம். அவளும் அவனை கண்ணை இமை போல் வளர்த்தாள் . ஒரு குடம் பாலில் ஒரு துளி மோர். கூனி எனும் மந்தரை போதாதா.  வெள்ளைத்துணி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் ஒரு சொம்பு சாயத்தண்ணீர் போதும் அதன் நிறத்தை மாற்ற. அடையாளத்தை அழிக்க.

துஷ்ட சகவாசம் அதனால் தான் கூடாது. சத்சங்கம் மிக அவசியம் என்று புரிந்து கொள்ளவேண்டும். தொற்று நோய் கிருமிகள் உடனே பிடித்துக் கொள்ளும். நல்ல குணம் லேசில் பெற முடியாது. நாட்பட நாட்பட  தான் தன்னிச்சை படும்.

நல்லோர் நட்பு, நல்ல எண்ணங்கள், சாத்வீக உணவு, இதெல்லாம்  சத்ய வழியில் செல்ல, சத்வ குணம் பெற உதவும்.  ஆன்மீக தாகத்தை தீர்க்கும் நீராகும்.

''விதுரா, நீ இப்போது சொல், எந்த ஒரு நடத்தையால், வாழ்வில் பெற வேண்டிய நல்லவிஷயங்கள் நம்மை விட்டு விலகும்  என்கிறாய்?  என்றான் திருதராஷ்டிரன்.

''அகம்பாவம், கர்வம் இருந்தால் மற்ற நல்ல குணங்கள் எல்லாமே நம்மை விட்டு போய்விடும். அது தான் உன்னையும் உன் மக்களையும் கெட்டியாக பிடித்துக்கொ ண்டிருக்கிறது. ஆதியில் செய்த காரியங்களால்  தான் அந்திம காலத்தில் இந்த நெருக்கடி''  என்கிறான் விதுரன்.

சத்யம், நேர்மை ஒருவனிடம் இருந்தால் அவனை அது ரட்சிக்கும். ஒரு நேர்மையான, சத்தியமான, உண்மை யான விஷயத்தை எடுத்துச் சொல்வதால் மற்றவன் மனது புண்படும் என்றால் அதை சொல்லாமல் மௌனமாக இருத்தல் நன்று என்கிறான் விதுரன். அதை  கூடுமானவரை சம்பந்தப்பட்ட அந்த மனிதனை எந்த விதத்திலும் புண் படாமல் வலியுறுத்த முடிந்தால் அதைவிட சிறந்த சேவை வேறு எதுவுமில்லை.  எதை சொன்னாலும் கேட்பவன் மனது புண்படக்கூடாது'' என்கிறான் விதுரன்.

திருதராஷ்டிரன் நொந்து போகிறான். தனிமையில் மனச்சாட்சி அவனை வாட்டுகிறது. விதுரனை கூப்பிட்ட னுப்புகிறான்.  எனக்கு நிம்மதியே இல்லை என வருந்துகிறான்.

''எதற்கு அண்ணா வருந்துகிறாய்.  அதனால்  நடந்ததை, கடந்ததை மீட்க முடியுமா உன்னால்?.  நீ இப்போது உணர்வதால் உன் கஷ்டங்கள் காற்றிலே ஆவியாக போய்விடுமா சொல்?

மற்றவர்கள் எல்லோரும் புகழ்கிறார்கள் என்று  எவனையும் தலையில் வைத்து கொண்டாடாதே. புகழாதே. ஹீரோ ஒர்ஷிப் வேண்டாம். ஒரே ஒரு ஹீரோ தான் உண்டு. அவனே ராமன், கிருஷ்ணன், சிவன் எனும் பலபேர் கொண்ட ஒருவன். அவனால் மட்டுமே   zeero க்கள்  எல்லாம் hero க்களாக,  அல்லது hero க்கள் zero க்களாகவோ  மாறுவார்கள்.      அவன் செயலை , முடிவை, நாம்  விதி என்று சொல்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...