தீர்த்த நாராயணர் J K SIVAN
4. துளஜா மகாராஜாவின் கைங்கர்யம்
தீர்த்தநாராயணரைபற்றி தெரியாமலே அதிக வருஷங்கள் வாழ்க்கையில் எனக்கு வீணாகி விட்டதாக ஒரு குற்ற உணர்ச்சி எனக்கு.
வெகுகாலம் நாராயண தீர்த்தர் தான் தெரியும். அவரே இவர் என்று நினைத்திருப்பவர்களும் உண்டே. அவர்களுக்காக தான் இந்த சிறந்த சிவபக்தர், அஷ்ட சித்திகள் அடைந்த மஹான் பற்றி சொல்கிறேன்.
எனக்கு தீர்த்தநாராயனரை அறிமுகப்படுத்திய
வர் சிவன் சார் என்கிற சாச்சு சாஸ்திரிகள்,
என்கிற சதாசிவ சாஸ்திரிகள். இன்னும் புரியவில்லை என்றால் காஞ்சி மஹா பெரியவா ளின் உடன் பிறந்த சகோதரர். அண்மையில் சித்தியடைந்த மஹான்.
சிவன் ஸார் எழுதிய ''ஏணிப்படிகளில் மாந்தர்கள்'' என்கிற புத்தகத்தை இந்த சிவனுக்கு , என் வீட்டருகே வோல்டாஸ்
காலனியில் வசிக்கும் ஸ்ரீ எஸ். ராமமூர்த்தி என்கிற ஒரு வக்கீல் அன்பர் பரிசளித்து அதில் அறிந்த விஷயங்கள் இவை.
சென்ற கட்டுரையில் அவருடன் இருந்த சடைச் சாமி என்ற குழந்தையை பற்றி குறிப்பிட்டேன். அந்த குழந்தையை பெற்றோர் தீர்த்த நாராயணரிடம் ஒப்படைத்தபோது அது வெயில் நிழல், காற்று, இருட்டு, குளிர், இரவு பகல் என்று ஒரு வித்த்யாசமும் இல்லாமல் அவரோடு வளர்ந்தது. பசியாக இருந்தால் வாய் திறக்கும். ஸ்வாமிகள் உயிர்ப்பித்த தெய்வீக ஆடு தானாகவே அந்த குழந்தையின் வாயில் பாலை சுரக்கும். சிதம்பரநாதன் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை எல்லோரும் சடைச்சாமி என்று தான் அறிந்தார்கள்.
அந்தக்காலத்தில் சோழராஜா மராத்திய வம்ச துளஜாபான்ஸ்லே மஹாராஜா (1738-1787) அவர் ராணிக்கு முதுகில் மூன்று வருஷமாக ஒரூ சரும ரோகம். ஸ்போடகம் என்ற அந்த நோயை எந்த வைத்தியனாலும் தீர்க்க முடியவில்லை. ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். அந்த நேரம் ஒரு திருவையாற்று பண்டிதர் காசி முதல் ராமேஸ்வரம் செய்து க்ஷேத்ராடனம் சென்று திரும்புகிறார். அவரைப் பற்றி கேள்விப்பட்டு துளஜா மஹாராஜா அவரை அழைக்கிறார்.
''பண்டிதரே , உங்கள் ஸ்தல யாத்ரையில் எங்காவது ஒரு சித்தி வாய்ந்த, நோய் தீர்க்கும் மஹான் யாரையாவதுபார்த்தீர்களா?
'' இல்லை மஹாராஜா. ஆனால் இங்கே பக்கத்திலேயே திருப்பூந்துருத்தியில் யாரோ ஒரு தெய்வீக மஹான் இருக்கிறாராம். அமானுஷ்யமான அதிசயங்களை புரிகிறார் என்று கேள்விப்பட்டேன்.''
'ஓஹோ அப்படியா, யார் அவர்?''
''தீர்த்தநாராயணர் என்று பெயர் கொண்ட சித்த புருஷர் ''
துளஜா மஹாராஹா, பரிவாரங்களை ஊருக்கு வெளியே நிறுத்தி விட்டு கால்நடையாக மந்திரியுடன் மட்டும் ஸத் குருவை தேடி சென்றான். மரத்தடியில் பார்க்கிறான். நமஸ்கரித்து கைகட்டி நிற்கிறான்.
''நீ யார்? இங்கே எதற்கு வந்தாய்?''
''சுவாமி நான் இந்த ராஜ்ய அரசன். உங்கள் அனுக்கிரஹம் பெற ஓடிவந்தேன். இத்தனை நாள் ஸ்வாமிகள் இங்கு இருப்பதை அறியவில்லை. என் அபசாரத்தை மன்னிக்கவேண்டும்'' எனக்கு.......''
''போதும் நிறுத்து. உன் விருத்தாந்தங்கள் எனக்கு தெரியும். போய் உன் மனைவியை அழைத்து வா ''
துளஜா மகாராஜாவின் ராணி நான்குபேர் உதவியுடன் கொண்டு வரப்பட்டாள் .
தீர்த்தநாராயணர் வலது ஹஸ்தத்தால் அனுகிரஹித்தார். ''போ'' என்கிறார். அடுத்த கணமே ரோகம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. முன்பிலும் அவள் தேஹ காந்தி பளபளத் தது. ஆரோக்கியத்தோடு எழுந்தாள் ஸ்வாமி களை பதினாறு தடவை ப்ரதக்ஷிணம் செய்து வணங்கினாள் . மஹாராஜா நன்றிப்பெருக்குடன் கண்ணீர் உகுத்தார்.
''ஸ்வாமி, இந்த சந்நிதானத்துக்கு என்னாலான ஏதாவது ஒரு கைங்கர்யம் செய்ய அனுக்ரஹிக்க வேண்டும்''
''இந்த உலகில் எதனாலும் எனக்கு ஆக வேண்டி யது ஒன்றும் இல்லை. உனது ராஜ்யத்தை எப்பொழுதும் போல நேர்மை நீதியோடு பரிபாலித்து வா''
''சுவாமி ஏதாவது ஒரு சின்ன கைங்கர்யம் செய்ய அனுமதிக்க வேண்டும் ''
''சரி இந்த ஆடு சுற்றி வரும் இடத்தை கொடு. போதும்''
சுவாமி ஆட்டை தட்டிக் கொடுக்க அது ஓடியது. நாலு வேலி பரப்புள்ள நிலத்தை ஒரே ஓட்டமாக சுற்றி வந்து நின்றது ஆடு. ராஜாவின் ஆட்கள் ஆட்டின் குளம்படி பட்ட இடத்தில் எல்லாம் முளை அடித்து அடையாளம் செய்ய,
''சுவாமி இந்த நிலம் நாலு வேலி அளவு உள்ளது. அதை யார் பேரில் பட்டா எழுதுவது?
ராஜா கேட்கும்போது சுவாமி அருகே பார்க்கி றார். எதிரே வெண்பொங்கல் கொண்டு தந்த பஞ்சநத சாஸ்திரிகள், சடைச்சாமி இருவர் தென்பட,
''இந்த ரெண்டு பேர் மேலே தலா ரெண்டு வேலி எழுது.''
அப்படியே பட்டா எழுதுகிறேன் சுவாமி. ஆனால் ...
''என்ன ஆனால் ?''
''ஸ்வாமிக்கு ஏதாவது கைங்கர்யம் பண்ண வேண்டும் ?'
''ஆஹா அதற்கென்ன, ஒன்று செய், நான் இந்த இடத்திலேயே சமாதி இருக்க எண்ணம். தக்கபடி ஒரு இடம் தயார் செய்''துளஜா மஹாராஜா காலத்தில் அங்கே ஒரு ஆலயம் உருவானது. கர்ப்ப கிரஹத்துக்கு வாயு திசையில் அபிஷேகம், புனித ஸ்னானத்துக்கு ஒரு கிணறு வெட்டினான். கைங்கர்யம் பூர்த்தியானது.
ராஜா வந்தபோது சடைச்சாமி, எனக்கு நிலம் வேண்டாம், இந்த ஆலய பூஜைக்கு புஷ்பம் பறித்துவர, சந்தனம் அரைக்க விளக்குகள் ஏற்ற, ஆலயம் சுத்தம் செய்ய எனக்கு ஆணையிட்டால் போதும்'' என்கிறார். சடைச்சாமிக்கு அளிக்கப் பட்ட நிலம் ஆலயத்தின் பெயரில் பட்டாவாகியது.
''பஞ்சநதம் நீ இந்த ஆலய அதிஷ்டான பூஜை யை விடாமல் விதிப்படி நடத்தி பக்தர்களை உபசரித்து அன்னமளி. சடைச்சாமிக்கு உதவியாக சேவை செய்''
துளஜா மஹாராஜா கைகட்டி நின்றார். ஸத்குரு அவர் பக்கம் திரும்பி
''ஹே ராஜா, வருகிற மாசி மாதம் சுக்ல பக்ஷம், அஷ்டமி திதி, கிருத்திகை நக்ஷத்ரம், குருவாரம், பகல் பதினைந்து நாழி, அபிஜித் முகூர்த்தத்தில் யோக சமாதியில் அமர உத்தேசித்திருக்கிறேன். அன்றைக்கு வந்து தரிசனம் பெறலாம் போய் வா''.
துளஜா ராஜாவும் குணமடைந்த ராணியும் சென்றார்கள்.
No comments:
Post a Comment