சென்னையில் செவ்வாய் கிரஹ ஆலயம்
J K SIVAN
இந்த வருஷம் எனது சிவராத்திரி சிவ தரிசனத்தில் ஒரு ஆலயம் பூந்தமல்லி வைத்தீஸ்வர சுவாமி ஆலயம். அங்காரக, செவ்வாய் நவகிரஹ க்ஷேத்ரம்.
பூந்தமல்லி சிவாலயத்தில் மூலவர் வைத்தியநாத சுவாமி., வைத்தீஸ்வரர். அம்பிகை தையல் நாயகி . நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது. தெற்கே எப்படி வைத்தீஸ்வரன் கோவிலோ அப்படியே . அதனால் தான் வட வைத்தீஸ்வரர் கோயில் என்று ஒரு பெயர்.
கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் அங்காரகன் பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமுமாகும். இந்த ஸ்தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன. தேவார பாடல் பெற்ற ஸ்தலம். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுள் .
செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.
வாகன நெரிசலும், ஜன நெருக்கமும் கொண்ட மிக முக்கியமான பகுதியில் இப்படி ஒரு அமைதியான பழங்கால ஆலயம் அமைந்துள்ளது நாம் செய்த பாக்யம். மறக்காமல் இதுவரை செல்லாதவர்கள் ஒரு முறை சென்று தரிசிக்கவும். இப்போது நிறைய போக்குவரத்து வசதிகள் மலிந்து கிடக்கிறதே. அக்காலத்தில் ஆதி சங்கரர் வழி விசாரித்துக்கொண்டு காட்டிலும் மேட்டிலும் பல காத தூரங்கள் நடந்து வந்து இந்த ஆலயத்தை தரிசித்திருக்கிறாரே.
No comments:
Post a Comment