பேசும் தெய்வம் பாகம் 3 J K SIVAN
மஹா பெரியவாளைபற்றி நாளுக்கு நாள் அதிகமாக சமாச்சாரங்கள் வெளி வருகிறது. யார் யாரோ எங்கிருந்தோ பிடித்து விஷயங்கள் அனுப்புகிறார்கள். அவை அத்தனையும் பெரியவா சம்பந்தப் பட்டிருப்பதால் நம்மால் அபிப்ராயம் சொல்வதற்கில்லை. ஆனால் ஏதோ ஒரு ருசிகரமான , விறுவிறுப்பான செய்தி பரவப்பவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பியவர்கள் தயவு செய்து தெய்வத்தோடு விளாயாடாதீர்கள். நாம் எழுதியதை பிறர் படிக்கவேண்டும், பரப்பவேண்டும் என்பது எண்ணமானால் அதில் பக்தியின் பங்கு ரொம்ப அளவில் குறைந்துவிடும் அல்லவா. சிறிய விஷயமாக இருந்தால் கூட பூசி முழுகாமல், அப்படியே உள்ளதை உள்ளபடி சொல்லி பக்தியோடு படிக்கும் பக்தர்களிடம் விஷயத்தை விட்டுவிடவேண்டும். சில பக்தர்கள் அணு அளவு கூட பிசகாமல் பெரியவாளை புரிந்து கொண்ட வர்கள். அவர்கள் மனம் புண்பட்டால் அந்த பாபத்திற்கு பரிகாரமே இல்லை.
இது நான் பல நாட்களுக்கு முன்பு படித்த விஷயத்தின் சாராம்சம். நிச்சயம் வரகூரான் தட்டச்சாக தான் இருந்திருக்கும்.
மஹா பெரியவா ஆந்த்ர ப்ரதேசத்தில் கேம்ப். கார்வேட் நகர் என்று சித்தூரில் இருக்கிறதே அங்கேயா? சபேசன் என்பவர் குடும்பத் தோடு காரில் சென்னையிலிருந்து வந்து தரிசித்து திரும்புகிற நேரம். பெரியவாளை நமஸ்கரித்து ஆசிபெற முயற்சி. பக்தர்கள் கூட்டம். நடுவே ஒரு வில்வமரத்தடியில் தெய்வம் தரிசனம் தந்துகொண்டிருந்தது. காத்திருந் தார்கள்.பிரசாதம் பெற்றுக்கொண்டு காரை நோக்கி திரும்பும்போது. ''டொக்'' என்று கை சொடுக்கல்.
''அட , பெரியவாளா நம்மை மதிச்சு கூப்பிடறா?' என்ன ஆச்சர்யம்''
சபேசன் ஓடிவந்தார் பெரியவா அருகில் சற்று தள்ளி பவ்யமாக நின்றார். எதிரே ஒரு ஓரமாக ஒரு இடத்தில் கொஞ்சம் கருங்கல் ஜல்லி கொட்டியிருந்தது.
''இங்கே வா. அதோ அதிலே கொஞ்சம் சாக்கிலே (கோணியில்) கட்டி வீட்டுக்கு எடுத்துண்டு போ''
என்ன இது? . சென்னையிலிருந்து காரில் கார்வேட் நகர் வந்து திரும்புகிறவர் எதற்கு கார்வேட் நகரிலிருந்து கொஞ்சம் யாருடைய கருங்கல் ஜெல்லியை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போகவேண்டும்?'
பெரியவா சொல்லிய வார்த்தையை தட்ட முடியுமா? அவரிடம் போய் ''எதற்கு எனக்கு இந்த ஜல்லி?'' ஏன் எடுத்துக் கொண்டு போகவேண்டும்?'' என்று கேட்கமுடியுமா?
மடத்தில் ஒரு கோணிப்பையை வாங்கி பெரியவா உத்தரவுப் படி அதில் கொஞ்சம் கருங்கல் ஜெல்லியை மூட்டை கட்டி கார் டிக்கியில் போட்டுக்கொண்டு பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு குடும்பத்தோடு காரில் கிளம்பினார் சபேசன்.
இருள் நேரம். புத்தூர் நோக்கி கார் பறந்தது. சுற்றிலும் மலைப்பாறைகள் தென்பட்டன.
கார் வெளிச்சத்தில் எதிரே நான்கு ஐந்து ஆட்கள் . காரை நிறுத்த முயற்சித்தார்கள். மறித்தார்கள் எனலாம். கார் நின்றது. கொள்ளைக்காரர்கள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறார் சபேசன்.
''இறங்கு எல்லோரும்''
இறங்கினார்கள். உள்ளே காரில் டார்ச் அடித்து பார்த்தார்கள். பெட்டி பை ஒன்றும் இல்லை. ரெண்டுபேர் டிக்கியை திறந்து பார்த்தார்கள். இருட்டில் ஒரு பெரிய மூட்டை தெரிந்தது. அதை உருட்டி கீழே தள்ளினார்கள்.பின்னால் சில வண்டிகள் வரும் வெளிச்சம் தெரிந்தது. ஒருவன் அவர்களுள் ''சீக்கிரம்'' என்றான்.
''இந்த மூட்டை போதும் அனுப்பு''
போகச் சொன்னார்கள் நல்லவேளை ஏனோ
எவனும் நகைகளை , கையில் இருந்த பர்ஸ் எல்லாம் கேட்கவில்லை.
வேகமாக காரில் ஏறி சபேசன் பறந்தார்.
"பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லப்போகிறாங்களே என்று பயமாக இருந்தது. நடுங்கிப்போயிட்டேன்- சபேசன் மனைவி.
"அப்பா, நம்ப எல்லாரையும் மரத்துலே கட்டி போட்டுடுவான்னு பயந்துட்டேன் எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!" என்றான் பையன்.
"அப்பா, அப்பா, நம்ப காரை கண்ணாடி எல்லாம் உடைச்சு நாசம் பண்ணுவான்னு தோணித்து'' - மகள் .
சபேசன் காரில் வேகமாக சென்றபடியே கார்வேட் நகர் இருந்த திசையை நோக்கி நமஸ்காரம் பண்ணினார்.
''பகவானே, நீங்கள் எடுத்துக்கொண்டு போ என்று சொன்ன மூட்டையில் ஏதோ சாமான்கள், விலையுயர்ந்தது, பணம் எல்லாம் இருக்கும் என்று தப்பு கணக்கு போட வைத்தீர்கள். எங்களை அதனால் விட்டுவிட்டார்கள்''
அடுத்த ரெண்டு மூன்று நாளுக்கு பிறகு சபேசன் மட்டும் கார்வேட் நகர் வந்தார். பெரியவாளை சந்திக்க நேரம் கிடைத்தது. கடகடவென்று நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்பித்தார்.
"ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்" - மஹா பெரியவா ஆசிர்வதித்து சொன்ன வாக்கியம் இது.
''எந்த ஸ்வாமி?" என்று சபேசனுக்குமட்டும் அல்ல, இதை சொல்லும் எனக்கும், படிக்கும் உங்களுக் கும் கூட ரொம்ப ரொம்ப நன்றாக புரிந்திருக் கும்.
சபேசன் இனிமேல் எங்காவது கருங்கல் ஜல்லியை பார்த்தால் அல்லது ''ஜல்லி காசு பெறாது'' என்று சொல்லமாட்டார். அல்லது எங்காவது 'ஒரு சல்லிக் காசு பெறாது' என்று யாரவது சொன்னால் கார்வேட் நகரை ''காமாக்ஷி'' தரிசனத்தை நினைக்க தவற மாட்டார் இல்லையா?
No comments:
Post a Comment