பழைய நினைவுகள் J K SIVAN
சங்கீத ஜாம்பவான்கள்
சுமார் முன்னூறு வருஷங்களுக்கு முன் அற்புதமான சில கர்நாடக சங்கீத வித்துவான்கள் வாழ்ந் தார்கள். என் தாய் வழி முப்பாட்டனார் ரெட்டை பல்லவி தோடி சீதாராம சாஸ்திரிகளும் அதில் ஒருவர்.
அந்த கால கட்டத்தில் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். அனைவரைப் பற்றியும் தகவல் சேகரிக்க முடியவில்லை. வயதுமில்லை, நேரமும் இல்லை. எல்லோருக்கும் தெரிந்த பிரபலமானவர்கள் சிலரை குறிப்பிடுகிறேன்.
சங்கீத மும்மூர்த்திகள் சியாமா சாஸ்திரிகள் (1762-1827), தியாகராஜ ஸ்வாமிகள்,(1767-1847) முத்துஸ்வாமி தீக்ஷிதர்.(1776-1835) சம காலத்தவர்கள்.
கர்நாடக சங்கீதத்தில் நாம் அனுபவிக்கும் கீர்த்தனைகளில் பெரும்பங்கு இவர்களுடையது தான். மூவரில் தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் அதிகம். 25000 கீர்த்தனைகள் போல் இயற்றினாலும் நமக்கு மிஞ்சியது 700 போல் இருக்கிறது. தெலுங்கர். அவர் கீர்த்தனைகள் எல்லாமே தெலுங்கில் தான். ஆழ்ந்த பக்தி கொண்ட சிறந்த ராம பக்தர்.
சியாமா சாஸ்திரிகள் கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகள் எழுதியவர். அபூர்வ ராகங்களில் இவர் கீர்த்தனை களை இயற்றியவர். எல்லாமே தெலுங்கில் தான். நன்றாக பாடும் திறமை படைத்தவர். அப்போதெல் லாம் எல்லாரும் தமிழ் தெலுங்கு பேசுவார்கள். தமிழகம் ஆந்திராவாக பிரிவோம் என்று நினைக் காத காலம்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் குருகுஹ என்ற முத்திரை பதித்த கீர்த்தனைகளின் சொந்தக்காரர். திருவாரூரில் பிறந்தவர். தியாகய்யர் கீர்த்தனைகளுக்கும் இவர் கீர்த்தனைகளுக்கும் பேதம் உண்டு. ஈஸ்வரன் பெயர் ராகத்தின் பெயர், மந்த்ர ரஹஸ்யம் ஆகியவை அவரது செளக ஜாதி
கீர்த்தனைகளில் அடங்கி இருக்கும். வடமொழி புலமை உண்டு. வட இந்திய சங்கீத பத்ததி, சம்பிரதாயத்தை கர்நாடக சங்கீதத்தில் இணைத்தவர் . அறிமுகப்படுத்தியவர். இவரது கீர்த்தனைகள் சமஸ்க்ரிதத்தில் அதிகம். நோட்டு ஸ்வர சாஹித்யம் இவரால் பிரபலமானது. கிழக்கும் மேற்கும் இணையும் மேற்கத்திய சங்கீதம் அதில் த்வனிக்கும் .
தஞ்சாவூர் மராத்திய ராஜாக்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது மேற்படி சங்கீத மும்மூர்த்திகளும் மற்ற வித்வான்களும் வாழ்ந்தது நமது அதிருஷ்டம். ஏனென்றால் மராத்தி ராஜாக்கள் சங்கீதத்தை ஆதரித்தார்கள். சிறந்த வித்வான்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை போற்றி பாதுகாத்து நமக்கு அவர்களின் அற்புத கீர்த்தனைகள் கிடைக்க வழி உண்டாகியது.
மேலே சொன்ன மூன்று சங்கீத மும்மூர்த்திகளும் நண்பர்கள் என்றாலும் தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் நெருங்கிய நண்பர்கள். சியாமா சாஸ்திரிகளுக்கு தியாக பிரம்மத்தின் மீது மிகுந்த மதிப்பு மரியாதை உண்டு.
சியாமா சாஸ்திரிகளின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். விஸ்வநாதய்யர், வெங்கலக்ஷ்மி தம்பதியர் பெற்றோர். தமிழ் பேசும் ஸ்மார்த்த வடம குடும்பம். முன்னோர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி கோவில் அர்ச்சகர்கள். ரெண்டு பாரா தள்ளி ஒரு சரித்திர விஷயம் சொல்கிறேன்.
சியாமா சாஸ்திரிகளும் பங்காரு காமாக்ஷி ஆலய அர்ச்சகர் தான். ஆகவே தான் அவரது கீர்த்தனைகள் காமாக்ஷி அம்பாளின் மேல் அதிகம். தன்னை மறந்து அம்பாள் சந்நிதியில் அவர் முயற்சி எதுவுமின்றி பிரவாகமாக காமாக்ஷி அம்மன் மேல் கீர்த்தனைகளை இயற்றியவர்.
சங்கீத சுவாமி என்கிற துறவி தஞ்சாவூர் வந்தபோது சியாமா சாஸ்திரிகளுக்கு நடனம், ராக, தாள சங்கீதம் எல்லாம் கற்பித்தார். சியாமா சாஸ்திரிகள் அக்காலத்தில் இருந்த பிரபல வித்துவான் பச்சிமிரியம் ஆதியப்பையாவின் ரசிகர். ஆதியப்பையா பைரவியில் புலி. அவரது அட தாள வர்ணம், விரிபோணி பாணியை பின்பற்றி சியாமா சாஸ்திரிகள் தனது ஸ்வராஜாதி காமாக்ஷி கீர்த்தனையை பைரவியில் இயற்றினார். பைரவி, யதுகுல காம்போதி, தோடி எனும் மூன்று ராகங்களை வைத்து ரத்னத்ரயம் என்று அற்புதமாக கற்பனா ஸ்வரங்களை சங்கீத ஞானத்தோடு அள்ளி தெளித்த அவரது பாணியே தனி. அவரது அபிமான ராகங்கள் சாவேரி ஆனந்தபைரவி ஆகியவை. இந்த ராகங்களில் கிருதிகள் அதிகம். மிஸ்ரசாபு தாளம் அதிகம் கொண்ட கிருதிகள் இயற்றியவர். பொப்பிலி ராஜ்ய சங்கீத வித்துவான் கேசவய்யாவை தஞ்சாவூர் அரண்மனை போட்டியில் வென்றவர். மிகச்சிறந்த சங்கீத சாம்ராட் ஆன கேசவையாவுடன் போட்டிக்கு முதல் நாள் பங்காரு காமாக்ஷி முன் ''அம்மா என்னை காப்பாற்ற இதுதான் சமயம் ''என்று பொருள் பதிந்த மிக பிரபலமான ''தேவி ப்ரோவ சமயமித்தே'' என்ற க்ரிதியை இயற்றியவர் . கேசவய்யாவை அம்பாள் அருளால் போட்டியில் வென்றவர்.
நாகப்பட்டினத்தில் அப்புக்குட்டி நட்டுவனார் எனும் வித்வானை தோற்கடித்தவர். தோற்ற நட்டுவனார் அதற்குப் பிறகு தம்புரா, தாளங்களை தொடவேயில்லை.
ஒரு சரித்திர விஷயம். காஞ்சிபுரத்தில் முகமதியர்கள் பலம், அதிகாரம் பரவிய சமயம் காஞ்சிபுரத்திலிருந்து காமாட்சி விக்ரஹத்தை அர்ச்சகர்கள் தஞ்சாவூருக்கு கொண்டு சென்று சரபோஜி ராஜாவின் ஆதரவில் மேல வீதியில், அம்பாள் பங்காரு காமாட்சியாக பிரதிஷ்டை செய்தார்கள். காஞ்சியை சேர்ந்த ஒரு 10 அர்ச்சகர்கள் குடும்பம் தொடர்ந்து இன்றும் காமாக்ஷியம்மனுக்கு அர்ச்சனை திருப்பணி ஆற்றுகிறார்கள்.
அந்த கால கட்டத்தில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி. சியாமா சாஸ்திரிகளின் சிஷ்யர்களில் ஒருவர் காஞ்சி ஜில்லா, வந்தவாசி தாலுக்கா, பழுவூரில் பிறந்த எங்கள் அஷ்டஸஹஸ்ரம் வகுப்பை சேர்ந்த காமகோடி சாஸ்திரிகள். இவர் சேஷாத்திரி ஸ்வாமிகளின் பாட்டனார். சங்கீதம் சமஸ்க்ரிதம் இரண்டிலும் வல்லவர். அவர் மகள் மரகதம் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். மரகதம்மாளின் புத்ரன் தான் திருவண்ணாமலை சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமணா மகரிஷியை உலகத்துக்கு அளித்தவர். தாத்தா காமகோடி சாஸ்திரிகளிடம் சேஷாத்திரி பால்யத்தில் சமஸ்க்ரித வேத சாஸ்திரம் சங்கீதம் பயின்றவர்.
என் தாய் வழி முப்பாட்டனார் தோடி சீதாராமய்யர் தியாகராஜ ஸ்வாமிகளின் நல்ல நண்பர். ஆரம்பத்தில் தியாகப்ரம்மத்தின் தெலுங்கு பாடல்களில் நாட்டமில்லை. பின்னர் அவரது பக்தி பாவத்தால், தெய்வீக க்ரிதிகளின் சக்தியில் கவரப்பட்டு அவரது கீர்த்தனைகளை பாட ஆரம்பித்தார். அதையே பல்லவியாக பாடுவார். வயது 38. அப்போது தஞ்சையை ஆண்ட சிவாஜி மஹாராஜா காலமானார். அதன் பின் சங்கீத சபை தொடரவில்லை. வித்வான்கள் தஞ்சையை விட்டு திருவனந்தபுரம், புதுக்கோட்டை சமஸ்தானங்களை நாடி சென்றார்கள். தோடி சீதாராமய்யருக்கு தஞ்சையை விட்டு அகல விருப்பமில்லை. ஸ்ரீ ராமன் வழிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.
சிவாஜி ராஜாவின் மாப்பிள்ளை சகாராம சாஹிப் கொஞ்சம் ராஜமுறைகளை பின்பற்றி சிறிது ஆதரவு தந்தார். அக்கால மற்ற வித்வான்களில் ஓரிரு முக்கியமான பெயர்கள் சொல்கிறேன்:
1. நாகப்பட்டினம் அருகே ராதாமங்கலத்தை சேர்ந்த வாத்திம ப்ராமண சமூகத்தை சேர்ந்த பெரிய வைத்யநாதய்யர்.
2. பெரிய வைத்ய நாதய்யரின் சகோதரர்,(சிறிய தாயார் மகன்) சின்ன வைத்யநாதய்யர். சிவகங்கை ஜமீன் ராணி காத்தமனாச்சி அவர்களின் ஆதரவில் ஜீவித்து வந்தனர். ஜமீன் ராணியும் சில காலத்தில் மறைய மற்ற ஜமீன்களை நாடி சென்று பாடிப்
பரிசு பெற்று, சின்ன வைத்யநாதய்யர் கடைசியில் சித்த சுவாதீனம் இன்றி மறைந்ததாக தெரிகிறது.
வையச்சேரி ப்ரஹசரண வகுப்பை சேர்ந்த மஹா வைத்யநாதய்யர். பத்துவயதில், அண்ணனுடன் (15) -தோடி சீதாராமய்யரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். இன்னொரு சிஷ்யர் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய பாடகர் வைத்யநாதய்யர் கு மாரன் எங்கள் அஷ்டஸஹஸ்ரம் வகுப்பை சேர்ந்த சுப்ரமணிய அய்யர். இவர் தான் பிற்காலத்தில் பட்டணம் சுப்ரமணிய அய்யர் என்று பல கீர்த்தனைகளை இயற்றி பல சங்கீத வித்வான்கள் இன்றும் பாடி வருகிறார்கள்.
தோடி சீதாராமய்யர் சங்கீதம் சொல்லித்தருவதைத் தவிர பங்காரு காமாக்ஷி சந்நிதியில் அருணாசல கவிராயர் ராம நாடக கீர்த்தனைகளை பிரசங்கம் செய்வார். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கேட்டு அனுபவித்திருக்கிறார்கள். ஒருவருஷம் பிரவசனம் நடந்து பிறகு வடக்கு வீதி வையாபுரி மேஸ்திரி வீட்டு திண்ணையில் ஒரு வருஷம் பிரவசனம் தொடர்ந்தது. வெங்கடேச பெருமாள் சந்நிதியில் விஸ்வநாத டாகர் என்ற குஜராத்தியர் ஆதரவில் ஒரு வருஷம் நடந்தது.
அடுத்த பதிவில் மேற்கொண்டு சொல்கிறேன்.
No comments:
Post a Comment