Tuesday, March 3, 2020

NARAYANEEYAM



ஸ்ரீ நாராயணீயம்    J K  SIVAN 
மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி 
                                                                               வா  கண்ணா  வா  

இன்று வெகுநாளாக மனதில் தேங்கி இருந்த ஒரு ஆசையை செயலாக்க  விரும்பினேன். ஆரம்பித்தேன்.  ஸ்ரீ நாராயணீயத்தை படித்து ரசிக்கவேண்டும்.

எது  அதிகமாக கிடைக்கிறதோ அதற்கு மதிப்பில்லை. எது மிகவும் அதிகமாக சுவைக்கிறதோ அது திகட்டுமோ ?  ஆழ்வார்கள், நாயன்மார்கள் இதர மஹான்கள் எண்ணற்றோர்   தோன்றியதால்  தான்  தமிழகத்தில் பக்தி மற்ற  மாநிலங்களைவிட குறைந்ததோ ?  இன்னொரு  விதத்தில்  அ தற்கு நாமே காரணமா?  பக்திவளர்க்கவேண்டியவர்களை பணம் வளர்ப்பவர்களாக மாற்றியது நாம்.  வளர்க்கப்பட்டவர்  பணம் தேடிக்கொள்ளட்டும் ஆனால்  நிரீஸ்வரவாதிகளாக வளர்ந்தது யாரால்?  வளர்த்துவிட்டது நாம்தானே.  கண்கெட்டபின் சூர்யா நமஸ்காரமா?  வருந்தி  என்ன பயன். இனியாவது திருந்துவோம். அடுத்த தலைமுறைகள் நமது முன்னோர்கள் வழியை பின்பற்றி  தொடரட்டும்.  எனக்கு தெரிந்து  இப்போதும் நடு ராத்திரி ஒரு தட்டு தட்டி எழுப்பி சொல்லு என்றால் 1000 நாராயணீய  ஸ்லோகங்களையும் பிழையின்றி சொல்லக்கூடிய ஆண்  பெண் பக்தர்கள் இருக்கிறார்கள்.

மலையாள தேசத்தில் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி என்ற  கிருஷ்ண பக்தர் நமக்கு   அருளிச் செய்த  அமர காவியம்  ஸ்ரீ நாராயணீயம். நூறு   தசகங்கள்  கொண்ட பாடல் திரட்டு.  ஒவ்வொரு தசகத்திலும்  பத்து  என்று  நூறு   தசகங்களில் 100 x 10  ஆயிரம்  ஸ்லோகங்கள் கொண்டது நாராயணீயம்.  
 குருவாயூர் அப்பன் ஸ்ரீ கிருஷ்ணனே  நேரில் கேட்டு அனுபவித் தவை.  

மலையாள  தேசத்து  நம்பூதிரிகள்  எனும் ஆச்சாரமான  பிராமண  குலத்தில்  1560ல் பிறந்த நாராயண பட்டத்திரி  கிட்டத்தட்ட  நூறு  வருஷங்கள் வாழ்ந்தார் என்று ஒரு குறிப்பு.  சமஸ்க்ரிதத்தில் நிபுணர். நாராயணீயம் சமஸ்க்ரித ஸ்தோத்ரங்களில்  இயற்றப்பட்டவை.   1036 சுலோகங்களில் ஸ்ரீமத் பாகவதத்தின்  18000 ஸ்லோகங்களை பிழிந்து  கிருஷ்ண பக்தி பழ ரசமாக அளிக்கப்பட்டது.
 
நாராயணீயத்தை  சுருக்கமாக எழுது முன்  அவன் தாள் வணங்கி  ஒரு  சாம்பிளாக  நாராயணீய நூறாவது தசகம் மட்டும் இப்போது தருகிறேன். குருவாயூரப்பனை  உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ணித்து பட்டாத்ரி எழுதியது.  ஓவியன் எதையாவது கண்ணால் ரசித்துப்  பார்த்து மனதில் நிரப்பிக் கொண்ட  பின் தானே  அவன் கண்ணால் கண்ட காட்சி காலத்தால் அழியாத ஓவியமாகிறது.  சிற்பி செதுக்கினால் சிலையாகிறது.  

குருவாயூரப்பனை பட்டத்திரி எப்படி  நேரில் தரிசித்தார்?. அதை நாம் மனம் குவித்து அவரது இணையற்ற  எழுத்தில் தரிசிப்போம்.

                                                                நூறாவது தசகம்  


अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं
पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् ।
तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै-
रावीतं नारदाद्यैर्विलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च ॥१॥

1. அக்ரே பச்யாமி தேஜோ
நிபிடதர கலாயாவலீ லோபனீயம்
பீயூஷாப்லா விதோஹம் ததனு
ததுதரே திவ்ய கைசோர வேஷம்
தாருண்யாரம்ப ரம்யம்
பரமஸுக ரஸாஸ்வாத ரோமயஸ்சிதாங்கை
ராவீதம் நாராதயைர்
விலஸ துபநிஸத் ஸுந்தரீ மண்டலைச்ச.

எதிரே குருவாயூரப்பன் கண்ணில் படும்படியாக சந்நிதிக்கு எதிரே  ஒரு பக்கமாக  வாத நோயின் துன்பத்தை பொருட்படுத்தாமல் நாராயண பட்டத்ரி  மடக்க முடியாத காலை மடக்கி வலி பொறுத்துக்கொண்டு, அமர்ந்து 100வது தசக ஸ்லோகம் பாடி முடித்தார். கண்ணைத் திறந்தார். 

''என்ன இது பளிச்சென்று. ஏதோ ஒரு தெய்வீக ஒளி என் முன்பு ? ஒளி சிரிக்குமா ? குழந்தை போல் நிற்குமா? நீலோத்பலம் போன்ற வண்ணம் அதற்கு உண்டா? அடாடா இந்த ஒளிப்பிழம்பு என்னை ஆனந்த மயமாக்கி எங்கோ தூக்கிக்கொண்டு போகிறதே. நான் அம்ருத கடலில்  எப்போது  இப்படி  திடீரென்று  குதித்து அமிழ்ந்து  குளித்தேன்?  ஆஹா  இது என்ன இந்த ஒளிப்பிழம்பு நடுவே  ஒரு சிறிய  பாலகன் முகம் !    என்ன அழகுடா, இந்த சின்ன  குழந்தைப்பையனின் உருவம். அட  அவனைச்சுற்றி அதோ தெரிகிறாரே  நாரதர். மற்ற ரிஷிகளை எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லையே.  மிகப்பெரிய  ரிஷிகள், ஞானிகள் என்று மட்டும் தெரிகிறது. அவனைப் பார்த்ததில் அவர்களுக்கும் கூடவா  என்னைப்போல் மயிர்க்கூச் செறிகிறது. அடேயப்பா  அவனை பார்த்ததில் ப்ரம்மானந்தத்தை அனுபவிக்கும் இன்பம் அல்லவா அனைவருக்குமே.  ஓஹோ!    இந்த  பெண்கள் கூட்டம் தான் பிருந்தாவன  கோபியர்களோ, அவர்களை  யார்  ஒன்றுமறியா இடையர்குல பெண்கள் என்றது?. அவர்கள் அத்தனைபேரும் உபநிஷதங்கள் மனித உருவம் என்பதில் என்ன சந்தேகம்.?

नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या
रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकै: पिञ्छजालै: ।
मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं
स्निग्धश्वेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम् ॥२

2. நீலாபம் குஞ்சி தாக்ரம் கனமமலதரம்
ஸம்யதம் சாருபங்க்யா
ரத்னோத்தம் ஸாபிராமம் வலயித
முதயச் சந்த்ரகை: பிஞ்சஜாலை:
மந்தார ஸ்ரங் நிவீதம் தவ
ப்ருதுபகரீ பாராமா லோகயேஹம்
ஸிநிக்த ச்வேதோர்த்வ புண்ட்ரா
மபி ஸுலலிதாம் பால பாலேந்துவீதீம்.

''கொழுக்கு மொழுக்கென்று  துடிப்பான, கருப்பு சுருட்டை தலைமுடி பையன், பளபளவென்று  ஒளிவீசி அல்லவோ நிற்கிறான்.  ஒரு கணம் அவன் சுருண்ட தலைமுடியைப்  பார்க்கிறேன். பார்வை அதைவிட்டு நகர மறுக்கிறது.  அழகாக அதை சீவி ஒன்று சேர்த்து  கும்பாச்சியாக அது அவிழாமல் நவரத்ன மணிகள் கோர்த்த மணிமாலையை இறுக்கமாக சுற்றி விட்டது யார் ? பாக்கியசாலி யசோதை அவன் தாயா?  அதெப்படி  அழகுக்கு அழகு சேர்த்தாற்போல பல வண்ணங்கள் கொண்ட அழகிய ஒன்றிரண்டு  மயில் இறகுகளை  அந்த மணிக்கயிற்றில் செருக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது?   லாகவமாக அது காற்றில் அவன் தலைசைக்கும்போது அற்புதமாக ஆடுகிறது. மந்தார மலர்கள் வேறு மாலைகளாக அவன் தோளில்  புரள்கிறதே.  கண் கூசுகிறது எனக்கு. உண்ணி கிருஷ்ணா, குட்டி கிருஷ்ணா, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல. உனக்கு மட்டும் எப்படியடா  இப்படி அளவெடுத் தாற்போல  முகத்திற்கேற்ற அழகான நெற்றி? கருநீலமான அதில் நட்ட நடுவில் புருவ மத்திக்கு சற்றே உயரத்திலிருந்து மேலே  இரு வளைவோடு அர்த்த  சந்திர சந்தன நாமம்  தீர்க்கமாக.  சந்திரனைப் பிடித்து நெற்றியில் அப்பியமாதிரி இருக்கிறதே. 

 हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै-
रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते ।
सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं
कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे ॥३॥

3. ஹ்ருத்யம் பூர்ணானு கம்பார்ணவ
ம்ருதுலஹரீ சஞ்சலப்ரூ விலாஸை
ராநீல ஸ்நிக்த பக்ஷ்மாவலி
பரிலஸிதம் நேத்ரயுக்மம் விபோதே
ஸாந்தரச்சாயம் விசாலாருண
கமல தலாகார மாமுக்த தாரம்
காருண்யாலோக லீலா சிசிரித
புவனம் க்ஷிப்யதாம் மய்யநாதே.

''கிருஷ்ணா, ஆஹா,   உன் கண்களிலிருந்து புறப்பட்டு ஏதோ ஒரு குளிர்ந்த ஒளி கருணை யால்  நிரம்பி  எங்கும் பரவுகிறதே.  உன்  குளிர்ந்த,  இதமான  பார்வையில் உலகமே இன்பமயமாக ஆகிறதே. ஒருவேளை உன் கண்களின் அழகு,  அதன் மேல் ஒரு ஆபரணமாக காண்கின்ற புருவங்களாலா?    வில்கள்  இரண்டை கவிழ்த்து போட்டமாதிரி ஒரே அளவாக அல்லவோ  பொருத்தமாக கண்கள் மேல் அவை காட்சி தருகிறது.  எங்கே இப்படி ஒரு அழகை பார்த்தேன்? ஆம்.  ஞாபகம் வருகிறது. பரந்து விரிந்த கடலுக்கு அதன் மேல் வெள்ளிய நுரை போல் பெரிதும் சிறிதுமாக ஓ வென்ற  கம்பீரமான ஓசையுடன் எப்போதும்  காண்பேனே அந்த அலைகள்  தானோ?  சரியான உதாரணம் தான்.  நீ கருணைக்கடல் தானே.  எங்கே யாருக்கு எப்படி எப்போது உதவலாம் என்று தேடும் அலைபாயும் கண்கள் அல்லவா உனது விழிகள் ?. அந்த விழிகளுக்கு மேல் இன்னொரு  அருமையான அழகு சாதனம் உன் விழியின் இமைகள். ஒரே அளவாக  மேலும் கீழும் தான் எவ்வளவு பொருத்தமாக ஒரு ஜோடி  வரிசை.  ஏதோ வரிசையாக பாத்தியில் செடி நட்ட மாதிரி.   செந் தாமரை மலர்களின்  சிவந்த மிருதுவான இதழ்களோ?   உண்ணி  கிருஷ்ணா, குட்டி பாப்பா,   உன் கண்களின் நடு நாயகமாக  விளங்கும் கருப்பு ''பாப்பா''க்கள் தான் உண்மையில் உலகை, அதில்  பக்தர்கள் நெஞ்சை,  இதயத்தை, கருணை மிகுதியால் குளிர்விப்பவையா?  நான் ஒரு சுயநலவாதியாகி விட்டேன். என் மேல் அந்த கருவிழிகள் படரவேண்டும். எனக்கு உன்னைவிட்டால் வேறு புகலிடம் ஏது ?

மீதி அடுத்த பகிர்வில்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...