16. முகம் மறந்ததே என் செய்வேன்? - J.K. SIVAN
நானும் ஒரு பெண்.....கிருஷ்ணா, கண்ணா, என் கருமை நிறக் கண்ணா, உன்னைக் காணவில்லையடா. மனதில் மட்டும் உன்னை முகமின்றி சிறைபிடித்து வைத்திருக்கிறேன். நாள் ஆக ஆக உன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் இழந்து வருகிறதே. மறந்தே போகிறேனே என்ன செய்வேன், யாரிடம் இந்த குறையைப் போய் சொல்வேன்? இதைத் தானே ஆங்கிலத்தில் out of sight out of mind என்கிறார்கள்?
நல்லவேளை, முகம் மறந்தாலும் உன் நட்பு, உன் சிநேகம், உன் உறவை, என் நெஞ்சத்தில் கெட்டியாக படிந்திருப்பதை , இன்னும் மறக்கவில்லை. இது ஒரு சமாதானமாகாது. முகத்தை மறந்து போவது எப்படியடா நெஞ்சில் உன் உறவை மட்டும் நிலைக்க வைக்க முடியும்? ஒருவரை நினைக்கும்போது அவர் முகம் அல்லவோ முதலில் மனதில் தோன்றும்?
என் கண்ணில் உன் தோற்றம் ஏதோ தோன்றுகிறது. ஆனால் அதை சத்தியமாக உன் முழு அம்ருதம் பொழியும் அன்பு முகம் என்று காண முடியவில்லையே . அது ஏதோ ஒரு முகம், அது உனதாகுமா? உன் காந்த சிரிப்பை அதில் காணவில்லையே? இரவோ பகலோ, பாராமல், கடலலை போல் ஓயாமல் கண்ணா உன் உறவை மனம் நாடிக்கொண்டே இருக்கிறதே. வாயும் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறது. நீ மாயாவி கண்ணா. எப்படி மயக்கி என்னை அடிமையாக்கி விட்டாய்?
என்ன தான் மனம் உன்னையே நினைத்தாலும் என் கண்கள் உன்னை விடாமல் எங்கும் தேடிக்கொண்டே இருக்கின்றதே. என் கண்கள் எப்போதோ என்னவோ பாவத்தை பண்ணியிருக்கிறது இல்லாவிட்டால் என் உயிர்க்குயிரான கண்ணா எப்படி உன் உருவத்தை மறந்து போனேன்? கண் பார்த்தால் தானே மனம் அதை உள்ளத்தில் இருத்தி, நிறுத்திக் கொள்ளமுடியும்?.
உலகத்தில் எங்கெங்கோ எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் என்னைப் போல எங்காவது ஒரு பரிதாபத்துக்குரிய உன் முகம் மறந்துபோன ஒரு பேதைப் பெண்ணை பார்த்ததுண்டா கண்ணா?
இதுவே ஒரு அதிசயம் என்பேன். ஏனென்றால், எந்த வண்டாவது பூவில் பருகும் தேனை மறந்து போகுமா ?
சூரியனின் ஒளியை மறந்து போன மலர் எங்காவது பார்த்திருக்கிறாயா?
மழையை மறந்து போன பயிர் எந்த வயலிலாவது இருக்கிறதா ஐயா ?
இந்த உலகம் முழுதும் தேடினாலும் இவற்றை காணமுடியுமோ?
ஒன்று நிச்சயமாக சொல்வேன். எப்போது என் ஆசைக் காதலன் கண்ணன் முகம் எனக்கு மறந்து போய்விட்டதோ அதை படம் பிடித்து மனதில் நிறுத்தாத இந்த கண்களே எனக்கு இனி வேண்டாம். என்ன பிரயோசனம் அதால் எனக்கு? சொல். அவன் உருவத்தை படம் பிடித்து வைக்க வழியில்லாமல் தவிக்கிறேனே. நான் எப்படி வாழ்வேன். யாராவது தெரிந்தால் நல்ல யோசனை சொல்லுங்களேன்!!.
உங்களுக்கு சி.சு. தெரியுமா. அது தான் சி. சுப்ரமணிய பாரதி. அவன் ஒரு தனிப்பிறவி. அபூர்வ மனம் படைத்த அதிசய மனிதன். தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வன். கிருஷ்ணனைக் காதலனாக பாவித்து பாடிய பாடல்களில், இது அவனைக் காணாமல் அவனது ''பெண் மனம்'' அல்லலுற்று தவிப்பதை வர்ணிக்கும் பாடல்.
இதை மகாராஜபுரம் சந்தானம் ராக மாலிகையாகப் பாடி எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். அப்போது நிஜமாகவே என் மனதில் கண்ணனை மறந்து போன ஒரு தாபம் உண்டாகியிருக்கிறது என்றால் ''உண்மையிலேயே'' நான் உங்களிடம் ''பொய்'' சொல்லவில்லை. அந்த பாடலை இனி படித்து அனுபவியுங்கள்
மகாராஜபுரம் சந்தானம் பாட்டையும் கேளுங்கள். CLICK THE LINK https://youtu.be/P4hpfLioC64 கேட்டால் மட்டும் போதுமா. எப்படி இருந்தது என்று எனக்கு தெரிவிக்க வேண்டாமா? கஷ்டப்பட்டு தேடி பிடித்து எழுதி பாட்டையும் அனுப்பியிருக்கிறேனே.
14. கண்ணன் - என் காதலன் - 5
(பிரிவாற்றாமை)
ராகம் - பிலஹரி
ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் செல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ? ... 1
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். ... 2
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும். ... 3
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ ? ... 4
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி! . ... 5
கண்ணன் முகம்மறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்து பயனுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி? ... 6
No comments:
Post a Comment