கருட புராணம் 2 J.K. SIVAN
மரணத்துக்கு பின்னால்......
கருடனுக்கு ஏண்டா நாம் விஷ்ணுவிடம் இந்த மனிதர்களுக்கு மரணத்திற்கு பின் நடக்கப்போவதை பற்றி கேட்டோம் என்று ஆகியிருக்கும். அந்த அளவுக்கு விஷ்ணு விவரங்கள் கொடுக்கிறார்.
இப்படியாக கருட புராணத்தை பற்றி சூத பௌராணிகர் எடுத்து சொல்லும்போது மற்ற ரிஷிகள் மௌனமாக அதை கேட்டு வருகிறார்கள்.
சௌனகர் '' மகரிஷி, மேலும் விஷ்ணு கருடனிடம் கூறியதை எடுத்து சொல்லவேண்டும். கேட்க ஆவலாக இருக்கிறோம்'' என்கிறார்.
விஷ்ணு கருடனிடம் சொன்னதை சூதர் தொடர்ந்து சொல்கிறார்:
''யமதூதர்களால் பாசக் கயிற்றால் இறுக்க கட்டப்பட்டு, அவர்களிடம் அடி பட்டு, உதை பட்டு, துன்புறுத்தப் பட்டு நடக்கும் ஜீவன் ''ஐயோ எனக்கு இந்த கதி நேர்ந்து விட்டதே. எப்படியெல்லாம் என் மனைவி மக்களோடு வீட்டில் சுகமாக வாழ்ந்திருந்தவன் நான். எவ்வளவு இன்பங்களை எல்லாம் அடைந்தவன். அதில் திளைத்தவன். எனக்கு இப்படி ஒரு துன்பமா இப்போது'' என்று எண்ணுகிறான். அவன் அளவு கடந்த பசியோடும், தாகத்தோடும் சோர்ந்து களைத்து, இளைத்துப்போய், பேசக்கூட முடியாமல் வாடுகிறான்.
''அடாடா, இப்போது நம்மோடு சேர்ந்து வாழ்ந்தவர்கள் இல்லையே. அவர்களை பிரிந்து நான் இந்த பொல்லாத எம தூதர்கள் வசம் வகையாக மாட்டிக்கொண்டு விட்டேனே. எதற்காக என்னை இப்படி வாட்டி வதைக்கிறார்கள் . எங்கே என் பணப்பெட்டி. ஒரு கொத்து சாவி வைத்திருப்பேன் எப்போதும். அதைக் காணோமே. என் சாமர்த்தியத்தால், பண பலத்தால் பார்த்ததை எல்லாம் என் பதவி அதிகாரத்தை உபயோகித்து அராஜகமான எண்ணற்ற சொத்து சேர்த்து குவித்தேனே எங்கே அதெல்லாம் மறைந்தது? என்னை கண்டு பயந்தவர்கள் எங்கே காணோம்?
''கருடா! தீமை செய்து பிறர்க்கு துன்பம் விளைவித்து உலகத்தில் வாழ்ந்தவர்கள் கடைசியில் இங்கே அனுபவிக்கும் கதியை உணர்ந்தாயா?''
கருடன் பார்க்கிறான்... கழுகுபார்வை அல்லவா? எங்கோ தூரத்தில் நடப்பதை தெளிவாக பார்க்கிறான்.
எமதூதர்கள் அந்த ஜீவனை நடக்க விட்டிருக்கிறார்கள். தன்னந்தனியனாக நாதி யற்று, காட்டு வழியில் நடக்கிறான். எங்கும் சுற்றி அநேக புலிகள் நடமாட்டம். பயந்து சாகிறான். ஆயிற்று அவன் பூமியில் இறந்து 27 நாட்கள் ஆகிவிட்டதே.
ஓரிடத்தில் தங்கி, அவன் இறந்த 28ம் நாள் பூமியில் என்ன நடக்கிறது?
அவன் புதல்வன் சில பிராமணர்கள் சொல்லியபடி ஊனம் எனும் சடங்கை செயது கொண்டிருக்கிறான். அதில் அவன் இடும் ஸ்ராத்த பிண்டத்தை இங்கே அவன் அப்பன் பசியோடு உண்கிறான்.
ஆயிற்று இதோ முப்பதாம் நாள். ஜீவன் நடந்து சென்று யாமியம் என பேர் கொண்ட பட்டணத்தை அடைகிறான். பார்க்கிறான். அடே அப்பா! ஏராளமாக பிரேதங்கள் கும்பல் கும்பலாக இருக்கிறதே.
ஒரு நதி தெரிகிறது. அதன் பேர் புண்ணிய பத்திரை. அதன் அருகே ஒரு ஆலமரம் (வட விருக்ஷம் ) இருக்கிறது. சில காலம் தங்குகிறான் அங்கே.
அப்பா இறந்த ரெண்டாவது மாசம் ஆகியதால் அவன் பிள்ளை சாத்திரப்படி பிண்டம் இடுகிறான். இங்கே ஜீவன் அதை உண்கிறான். அவன் பயணம் தொடர்கிறது.
எம தூதர்கள் அவனை அங்கே இங்கே நகர விடாமல் இழுத்துக் கொண்டு அல்லவோ செல்கிறார்கள். எதிரே ஒரு பயங்கரமான காடு. அதில் நடக்கிறான். ஓவென்று அழுகிறான். வேதனை தாங்க முடியவில்லை அந்த ஜீவனுக்கு . எப்படியோ சங்கமன் எனும் ராஜ ஆளும் சௌரி என்ற பட்டணம் வந்து சேர்ந்தான்.
இதற்குள் மூன்று மாதம் ஆகிவிட்டதால் அங்கே பூமியில் அவன் இருந்த வீட்டில் அவன் பிள்ளை அவனுக்கு மூன்றாம் மாத பிண்டம் (திரைபக்ஷிக மாசிக பிண்டம்) இடுகிறான். அப்பாடா. ஜீவன் அதை உண்டு நடக்கிறான். இந்த இடத்தில் பொறுக்க முடியாத குளிர். நடுங்குகிறான்.
"குருரபுரம்" என்ற நகரம் வந்து விட்டதே. இதற்குள் அவன் பூமியில் இறந்து ஐந்து மாதம் ஆகிவிட்டதால், பிள்ளை இட்ட ஐந்தாவது மாசிக பிண்டத்தை சாப்பிடுகிறான்.
நடை தொடர்கிறது ஜீவனுக்கு.
எதிரே இன்னொரு பட்டணம் தென்படுகிறது. "கிரௌஞ்சம்" என்ற பெயர் கொண்டது. அங்கே தான் அவன் தனது மகன் பூமியில் இடும் ஆறாவது மாசிக பிண்டம் பெறுகிறான்.
அவனுக்கு பூலோக வாழ்க்கையை இழந்தது தாங்க முடியாத வருத்தத்தை தருகிறது. யமதூதர்கள் இருக்கிறார்களே என்று கூட லக்ஷியம் பண்ணாமல் கதறி அழுகிறான் ஜீவன். ''நிறுத்து உன் ஓலத்தை'' என்று எம தூதர்கள் அந்த ஜீவனை வெளுத்து வாங்குகிறார்கள். யாரோ எதிரே வருகிறார்களே! வழியில் பயங்கர கோர உருவம் கொண்ட ஆஜானுபாகுவான படகோட்டிகள் . இதென்ன பத்தாயிரம் பேர் இருக்கிறார்களே. அவர்கள் அவனை நிறுத்தி பேசுகிறார்கள்: கண்களில் தீ பொறி பறக்கிறது எல்லோருக்குமே.
''அடே ஜீவா ! நீ எப்போதாவது வைதரணி கோ தானம் என்ற தானம் செய்ததுண்டா? ஒருவேளை நீ அதை செயதிருந்தாயானால் இதோ தெரிகிறது பார் வைதரணி எனும் ஆறு அதில் நீ படகில் செல்ல முடியும். இல்லையென்று சொன்னாயானால் உன்னை அதில் பிடித்து தள்ளிவிடுவோம். பாதாளம் வரை உன்னை அழுத்தி முழுக வைப்போம். என்ன பார்க்கிறாய். அதில் தண்ணீர் கிடையாது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்களும் . உங்கள் ஊர் கூவம் எவ்வளவோ மேல். மேலும் வைதரணியில் கொடிய துஷ்ட ஜந்துக்கள் வாழ்கின்றன. . பசு தானத்தை நீ செய்திராவிட்டால், நீ உண்டு இந்த வைதரணி வாசம் உண்டு . மூழ்கி தவி. '' ஓடக்கார்கள் அவன் மூர்ச்சை அடைந்து விழுவதை பார்க்கிறார்கள்.
இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒருவன் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் மகனாவது அவனுக்காக அந்த தானத்தை செய்யலாம் என்கிறது கருட புராணம். அவன் அப்படி செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து செல்ல இயலும்.
அப்புறம் அடுத்த சேருமிடம் யமனுக்கு தம்பி ஒருவன் இருக்கிறானே விசித்திரன் அவன் வாழும் ஊருக்கு செல்ல வேண்டும். அங்கே சேரும்போது தான் பூமியில் அவன் பிள்ளை அவனுக்கு ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை இடுகிறான். ஜீவன் அதை உண்ணும் போது, தான் எத்தனை இடையூறுகள்.
கோரமான கொடூர உருவம் கொண்ட சில பிசாசுகள் அவன் எதிரே தோன்றுகின்றன. ஜீவன் அவற்றை பார்த்தவுடன் நடுங்கி பயத்தோடு சிலையாக நிற்கிறான்.
''ஹே முட்டாளே ! நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அந்த அன்னத்தை, நாங்கள் பேய் பிசாசுகள் உன்னிடமிருந்து அபகரித்து பிடுங்கிக்கொண்டு சென்று விடுவோம்.'' எனும்போது தான் ஜீவன் தான் ஒரு தானமும் செய்யாததை உணர்கிறான்.
மேற்கொண்டு பயமுறுத்துகிறேன். இப்போதைக்கு இது போதும்.
No comments:
Post a Comment