Wednesday, July 12, 2017

யாத்ரா விபரம் - J.K. SIVAN

பிள்ளை சோழன் கட்டிய அற்புத கோவில்

போனதடவை சில கோவில்களை சென்று தரிசித்து யாத்ரா விபரம் எழுதும்போது சென்னை திரும்பு முன் ஸ்ரீ ஸ்ரீனிவாசனோடு ஜெயம்கொண்டம் வழியாக வந்தேன். அங்கு காலை வேளையில் வெயிலுக்கு முன்னால் பச்சை பசேல் என்று புல் தரையில் நின்று ஆ வென்று வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்த ஒரு கோபுரத்துக்கு சொந்தமான சிவன் கோவில் பற்றி இன்று தான் எழுத நேர்ந்தது. மனதில் ரொம்பநாளாக இரு உறுத்தியது. வேறு ஒன்றும் கண்ணை உறுத்தியது. அந்த கோவிலின் கொடிமரத்தின் உச்சியில் அதிமுக கொடி போன்ற ஒன்று எதற்காகவோ தொங்கி கொண்டிருந்தது. ஒருவேளை த்ரிஷ்டிக்காக இருக்குமோ?

''தாய் பத்து அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். புலிக்கு பிறந்தது பூனையாகாது. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்தவன் '' இதெல்லாம் சிலர் வாழ்க்கையில் ஏட்டளவில் தான் இருக்கும்.

ஒரு ராஜாவின் பிள்ளை மேலே சொன்னதை நிரூபித்து காட்டினான். உலகம் முழுவதையும் சோழ சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. ‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசரி வர்மன்’ என்று அவரைப் புகழ்கின்றன சோழர் கால கல்வெட்டுகள்.

கர்நாடகத்தின் குடமலை நாடு தொடங்கி வங்காளம் வரை வெற்றிகளைக் குவித்தான் ராஜேந்திர சோழன். கடல் கடந்தும் படை எடுத்து இலங்கையையும் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியாவையும் வென்றவன்.

அப்பா தஞ்சாவூரில் உலகப் புகழ் கொண்ட ''பெரிய கோவில்''(பிரகதீஸ்வரர்)ஆலயத்தை கட்டினான். ஆயிரம் வருஷங்கள் ஆனபோதும் இன்னும் அது எத்தனையோ மக்களை மகிழ்வித்துக்கொண்டு வருகிறது. அப்பாவைப் போல் தானும் ஒரு பெரிய கோவிலை (இங்கும் பிரகதீஸ்வரர் தான்) பெரிய நந்தியோடு கட்டினான். அசாத்தியமாக அந்த கோவில் இன்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமாக உள்ளது.

இந்த கோவிலில் ஒரு சூரியப் பிரபை ஒரே கல்லால் ஆன ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் அற்புத சிற்பம். இது வங்கப் போரின்போது அங்கிருந்து ராஜேந்திரனால் கொண்டுவரப்பட்டது. இன்னொன்று, எட்டுக் கைகளைக் கொண்ட கலிங்க துர்க்கை. இது கலிங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. “இது போல எட்டு சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எஞ்சி இருப்பது இது மட்டும்தான்” என அறிகிறோம்.

கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ''கங்கை கொண்ட சோழன்'' என புகழ் பெற்றவன் ராஜேந்திரன்.

திருவாலங்காட்டுச் செப்பேடு ஒன்று ராஜேந்திர சோழன் புகழ் பாடி “பகீரதன் தனது சகோதரர்களுக்கும் தந்தைக்கும் மோட்சம் கொடுப்பதற்காகப் புனித கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான். அதை ராஜேந்திரன் தனது பராக்கிரமத்தால் இங்கு கொண்டுவந்தான் என்கிறது.

வான் தொட்டு நிற்கும் பெரியகோயில். அதை சில வருஷங்கள் முன்பு சிவராத்திரி அன்று நள்ளிரவில் பார்த்தேன். ஒரே கூட்டம். ஜெகஜோதியாக தீபங்கள். பெருவுடையார் கண்கொள்ளாக் காட்சி தந்தார். அன்னாபிஷேகம் அவருக்கு நடந்தது. இரவில் அந்த ஆலயத்தை சுற்றிபார்த்தபோது நான் சோழன் காலத்திற்கே சென்றுவிட்டேன்.

அப்பா கட்டிய நந்தி கருப்பு. கொள்ளை அழகு. அதற்கு வளராமல் இருக்க ஆணி அடிப்பார்கள் என்று ஒரு கதை. இன்றெல்லாம் பார்க்கும் கம்பீரம் அந்த நந்திகேஸ்வரனுக்கு. மேலே அவனுக்கு மண்டபம். பிள்ளை கட்டியது வெள்ளை நந்தி. மேலே வானம் தான் கூரை. இதுவும் சிவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நம் கண்களோ அவனையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அழகு.

உன் அப்பா தான் மகா பெரிய கோவிலை கட்டி இருக்கிறாரே. நீயும் வேறு எதற்கு இன்னொரு கோவில் அதே போல் கட்ட வேண்டும்? என்று யாரோ கேட்டிருப்பார்கள். அதற்கு சோழனின் பதில்:

“என் தந்தையின் கனவான ராஜராஜேச்சுவரத்தின் பிரதிஷ்டை மீது நம் சமயப் பெரியவர்களுக்கு சிறு மனக்குறை இருந்ததை அறிவீர்கள். அது என் தந்தையின் இறுதிக்காலம் வரை அவரின் இதயத்தை அழுத்திக்கொண்டே இருந்தது. முறைப்படியான ஆகமத்தோடு நிறைவான கற்றளி ஒன்றை புதிதாக எழுப்பி உங்கள் மனக்குறை தீர்ப்பேன் என்று நான் என் தந்தைக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதன்படி நாம் உருவாக்கப்போகும் புதிய தலைநகரில் ராஜராஜேச்சுவரத்திற்கு இணையான கற்றளி ஒன்றை எழுப்ப வேண்டும்..."

ராஜேந்திரன் வார்த்தை கல்லால் உருவானது தான் கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம்.

கங்கை கொண்ட சோழபுர ராஜேந்திரனின் அரண்மனைக்கு மேற்கில், 16 மைல் நீளத்துக்கு பிரமாண்டமான ஒரு ஏரி... அது தான் இன்றும் நமக்கு நீர் வார்க்கிற வீர நாராயண ஏரி எனும் வீராணம் ஏரி.

கங்கைகொண்ட சோழபுரம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் முதலாம் ராஜேந்திர சோழனின் தலைநகரம் . பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரம் இது. இதற்கு கங்காபுரம் ,கங்காபுரி, வன்னியபுரம், வன்னியபுரி என்றெல்லாம் கூட பேர் இருந்திருக்கிறது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடித்தபின் இருபது ஆண்டுகளில் கட்டப்பட்டது இந்த கோவில். தஞ்சைக் கோயில் ஒரு தினுசு. இது வேறு ஒரு தினுசு. அது கம்பீரமும் வீரமு என்றால் இது அழகும் நளினமும் கொண்டு உள்ளம் கவருகிறது. இதற்கு என்று ஒரு தனி கவர்ச்சி மனதை சுண்டி இழுக்கிறது.

விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள். தஞ்சாவூரை பெரிய கோவிலை விட ஒருபங்கு தூக்கலாக இருக்க முயற்சி. ஒரு காலத்தில் இது கோயில் மட்டுமல்ல பலமான பெரிய கோட்டையாகவும் இருந்தது. தென்மேற்கு மூலையில் பெரிய ஒரு அரண், ,மேற்கே ஒன்று. 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்கள் . பெரிய படிக்கட்டுகள் .பெரிசுகள் ஏற கொஞ்சம் கஷ்டம்.

அற்புத கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்திருக்கிறான் சோழன்.

அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை. நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை. மண்டபம் உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை.. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் இருக்க இடைவெளி. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமானத்திற்கும் நடுவில் இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்த













த் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு ஒரு தனி அழகு. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம். ப்ரஹதீஸ்வரரை தாராளமாக பார்க்கலாம்.
விமானத்தின் உயரம் 160 அடி. இது தஞ்சாவூர் அளவு உயரம் இல்லை. ஆனால் பார்க்கும் எவர் மனத்திலும் பதியும். கர்ப்பக்கிரக சுவர்கள் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் இரண்டு மாடிகளாக காண்கிறது. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள். விமானத்தில் எட்டு நிலைகள். தஞ்சாவூரில் 13 நிலைகள்.

அப்பா கட்டின தஞ்சாவூர் கோவில் போலவே மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி.

அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் . சிவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டவை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...