யாத்ரா விபரம் J.K. SIVAN
சில புராண கதைகள் நம்ப முடியாமல் இருந்தாலும் அவற்றின் சுவாரசியமான கற்பனை, கதை ஜோடனை, விறுவிறுப்பு ஆகியவை மேலே படிக்க தூண்டும். அப்படி ஒன்று தான் விடங்க க்ஷேத்ரங்கள் பற்றிய வரலாறு.
எந்த சிற்பத்தையும் கல்லில் வடிக்க உளி தேவை. உளியே தேவை இல்லாமல் தோன்றியது விடங்கம். ஏழு சிவலிங்கங்கள் இப்படி தோன்றியவை. அவை சப்த விடங்கர்கள் என பெயர் பெற்றவை. இந்த ஏழு விடங்க லிங்கங்களுக்கு தனித்தனி பெயர் உண்டு. மொத்தமாக 'தியாகராஜா, தியாகேசன்' என பெயரும் பெற்றவை.
இந்த ஏழு விடங்க க்ஷேத்ரங்களையும் தான் நான் சப்த விடங்க க்ஷேத்ர யாத்ரை சென்று தரிசித்தேன்.
எத்தனையோ காலங்களுக்கு முன்பு ஒரு சோழ ராஜா முசுகுந்தன் என்னும் பெயருடன் ஆண்டுவந்தான். அவனுடைய முகம் வானரம் முகமாக இருந்ததாம். அதனால் தான் அவனுக்கு அந்த பெயராம். நிஜப்பெயர் தெரியாது. அசாத்திய வீரன். அறிவிலும் வலிமையிலும் சிறந்த சிவ பக்தன். அவனை எதிர்க்க மற்ற அரசர்கள் அஞ்சினார்கள். இப்படி பூலோகத்தில் பெருமையோடு ஆண்டது தேவ லோகத்திலும் செயதியாக பரவியது.
தேவலோகத்தில் ஒரு சமயம் அசுரர்கள் எல்லாம் ஒன்றுகூடி இந்திரனைத் தாக்கின போது இந்திரனால் அசுரர் சைன்யத்தை ஜெயிக்க முடியவில்லை. ஆளை அனுப்பி ''உடனே ஓடுங்கள், பூமியில் சோழ ராஜா முசுகுந்தனிடம் சென்று நான் அவன் பெரும் சேனையுடன் வருமாறு கேட்டதாக சொல்லுங்கள் '' என்றான்.
சேதி கேட்ட முசுகுந்தன் பெரும்படையுடன் தேவலோகம் சென்று அசுரர்களோடு யுத்தம் புரிந்து அவர்களை ஜெயித்தான். முசுகுந்தனின் தக்க சமய உதவிக்கு மிகவும் மெச்சினான் இந்திரன்.
''நண்பா, நீ சமய சஞ்சீவியாக வந்து உதவினாய் . உனக்கு என்னிடம் என்ன வேண்டும் சொல்லேன்?''
முசுகுந்தன் சுற்றிலும் பார்த்தபோது அவன் கண்ணில் இந்திரன் வைத்திருந்த விஷ்ணுவே பூஜித்த சிவலிங்கம் தென்பட்டது.
''இந்திரா நான் சிவபக்தன் என உனக்கு தெரியும். எனக்கு உன்னிடம் எதுவும் வேண்டாம். அதோ அந்த லிங்கத்தை கொடு அது போதும் '' என்றான்
இந்திரன் திடுக்கிட்டான். ''அடடா, மகாவிஷ்ணு பூஜித்து இந்தா இனி இதை விடாமல் நீ பூஜை செய் என்று சொல்லி நம்மிடம் கொடுத்த சிவலிங்கத்தை அல்லவோ முசுகுந்தன் கேட்கிறான். வாக்களித்து விட்டேனே என்ன செய்வது. எப்படி இந்த இக்கட்டிலிருந்து மீள்வது? என யோசித்த இந்திரனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
''ஒன்றிரண்டு நாள் அவகாசம் கொடு முசுகுந்தா, அதற்குள் உனக்கு இந்த சிவலிங்கத்தை தருகிறேன். என் மாளிகையில் தங்கியிரு'' என்று சொல்லிய இந்திரன் மயனிடம் சென்றான்.
''மயா, உனக்கு ஒரு அவசர வேலை தருகிறேன். உடனே செய். அதிக நேரம் இல்லை. இதோ பார் நான் வழிபடும் மரகத சிவலிங்கம். இதைப் போல் ஆறு உடனே தயார் செய்'' என்று கட்டளையிட்டான் இந்திரன்.
மயனுக்கு இது ஒரு சின்ன வேலைதானே. அடுத்த நாள் காலையில் ஒரிஜினல் மற்றும் ஆறு நகல்கள் ஆகா மொத்தம் ஏழு மரகத லிங்கங்களுடன் இந்திரன் முசுகுந்தனை சந்தித்தான்.
''நண்பா முசுகுந்தா உனக்கு விருப்பமான சிவலிங்கத்தை எடுத்துக் கொள்'' என்றான் இந்திரன்.
''இதென்ன எல்லாம் ஒரே மாதிரியாக அல்லவோ இருக்கிறது. சிவ பெருமானே நான் எதை எடுத்துக் கொள்வது ''என்று மனதில் வேண்டினான் முசுகுந்தன்.
முசுகுந்தன் முதலில் பார்த்த அந்த விக்ரகத்தில் சிவன் குடிகொண்டு ஒரு சிறு நடன அசைவை முசுகுந்தனுக்கு காட்டினார். அந்த அசைவின் அர்த்தத்தை புரிந்து கொண்ட முசுகுந்தன் அந்த விக்ரகத்தை எடுத்துக் கொண்டான்.ஈசனை இதயத்தில் நிறுத்தி மனதிற்குள்ளாகவே ஜப மந்திரங்களைச் சொன்னது தான் அஜபா எனப்படும்.
''நீ பரம உன்னத சிவபக்தன் எனவே உன்னிடமே இந்த ஏழும் இருக்கட்டும் என்று இந்திரன் அனைத்து மரகத லிங்கங்களையும் முசுகுந்தனுக்கு கொடுக்க, முசுகுந்தன் அந்த ஏழையும் வெவ்வேறு க்ஷேத்ரங்களில் பிரதிஷ்டை செய்தான்.
இதற்கிடையே சிவனை ஏன் விஷ்ணு வழிபட்டு வேண்டினார் என்று ஒரு கதை இருக்கிறதே. அதை சுருக்கி சொல்லவேண்டாமா?
மஹாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டி ஈசனைப் பிரார்த்திக்கிறார். உமையை நினைக்காமல் சிவனை மட்டுமே வேண்டியதால் பார்வதி தேவி மஹாவிஷ்ணுவைக் கோபிக்க விஷ்ணு சிவன் உமை சுப்பிரமணியன் ஆகிய மூவரையுமே மனதில் தியானித்து வேண்டியதால் ஸ +உமா+ஸ்கந்தனாக சிவன் காட்சி தந்தார். மனதில் சிவனை இவ்வாறு ஆவிர்ப்பவித்து அதுவே ஜெபமாக, அதாவது தனியே ஜபம் வேறு எதுவும் இன்றி வேண்டியதால் சிவனின் தாண்டவம் மூச்சுக்காற்றை போல் முன்னும் பின்னும் அசைந்தது தான் அஜபா நடனம். இப்படி வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளாகச் சொன்னதே அ+ஜபா எனப்படும்.
திருவாரூரில் மூல மூர்த்தி தியாகராஜா என பெயர் பெற்று இன்றும் நமக்கு காட்சி தருகிறார்.மீதி ஆறு மூர்த்திகளும் முசுகுந்தனால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட க்ஷேத்ரங்கள்இதோடு சேர்த்து சொல்கிறேன் :
திருவாரூர் வீதி விடங்கர்
அஜபா நடனம்
வேதாரண்யம் புவனி விடங்கர் ஹம்சபாதா நடனம்
நாகப்பட்டினம் சுந்தர விடங்கர்
விசி நடனம்
திருநள்ளாறு நகர விடங்கர் உன்மத்த நடனம்
திருக்காரயல் ஆதி விடங்கர்
குக்குட நடனம்
திருக்குவளை அவனி விடங்கர்
ப்ருங்க நடனம்
திருவாய்மூர் நிலா விடங்கர்
கமலா நடனம்
எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருக்கிறது. இனி ஒவ்வொரு க்ஷேத்ரமாக சென்று பார்த்ததை சொல்கிறேன்.
No comments:
Post a Comment