நடராஜ பத்து 8 - J.K. SIVAN
நான் செய்யாதது இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?
ஒரு மரம் வளர்ந்து அதில் முதன் முதலாக பூக்கள் தோன்றி பிஞ்சு தோன்றியது. சும்மா இருந்தேனா? வெடுக்கென்று அந்த பிஞ்சை பறித்தேன். முகர்ந்து தூக்கி எறிந்தேன்? செய்யலாமா? எதிரே கண்ட பெண்களை பற்றி இல்லாததும் பொல்லாததும் குறை சொன்னேன். கொஞ்சமா நஞ்சமா?
இதோ தந்துவிடுகிறேன் என்று கடன் வாங்கி வருஷக்கணக்கில் திருப்பி தராமல் நிறைய பேர் நடக்கவிட்டேன். வெறும் காலில் நிறைய பேர் நடக்கும் வழியில் கருவேல முள்ளை கொண்டு போட்டு அவர்கள் கால் பஞ்சர் ஆகி அவதிப்படுவதை பார்த்து ரசித்தேன். ராக்ஷஸன். என் அம்மாவுக்கு இப்படி ஒரு பிள்ளை பெற அவள் என்ன பாவம் செயதாளோ? கடன் வாங்கியதை இரவல் வாங்கியதை ''நான் வாங்கவே இல்லையே'' என்று எத்தனை சத்தியம்? எதிலும் எவற்றிலும் நானே சிற்ந்தவன், முதல் என்ற ஒரு கர்வம் என்னை விட்டு நீங்கவே இல்லையே.
ஒருவேளை எனக்கே தெரியாமல் கொலை கொள்ளை கூட செயதிருப்பேன் போல் இருக்கிறது. சாதுக்கள், ஞானிகள் எவரைப் பார்த்தாலும் கேலி செய்வேன். போலிகள் என்பேன். என் சாமர்த்தியமே மற்றவரிடம் எப்படியாவது நைசாக பேசி பொருள்களை ஓசியில் வாங்கிவிடுவது. ஏமாற்றுவது. தேவர்கள் கடவுள்கள் என்னைப்பொறுத்தவரை எனக்கு அப்புறம் தான். அவனா ஒரு பைசா தரமாட்டானே என்று பேர் எடுத்தவன் அல்லவா? எதற்கு என்னை பற்றி இந்த நீள லிஸ்ட். நான் எல்லாமே தவறாக செய்த பாவி.
அதெல்லாம் தப்பு என உணர்ந்துவிட்டேன். உன்னை நாடி வந்துவிட்டேன் ஈஸா. சிதம்பரேசா. எனக்கு நீ ஒருவனே கதி. என் தவறுகளை பொறுத்து என்னை நல்வழிப்படுத்த. உன்னைவிட்டால் வேறு யாரிடம் இதை முறையிடுவேன். என்னை தடுத்தாட்கொள்.
இது தான் பக்தர் நடராஜனை நோக்கி அருமையாக செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் அற்புத பாடல். எளிதில் புரியும். அர்த்தமே தேவை இல்லை. நடராஜ பத்தில் இது எட்டாவது பதிகம். இன்னும் ரெண்டே தான் இருக்கிறது. என் தொந்தரவு நின்றுவிடும்.
பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
No comments:
Post a Comment