Thursday, July 13, 2017

பத்திரகிரியார் புலம்பல்:- j.k. sivan
ராஜாவின் ஏக்கம் தொடர்கிறது

தூரியின் மீன்போற் சுழன்றுமனம் வாடாமல்
ஆரியனைத் தேடி யடிபணிவ தெக்காலம்.

என் வசம் இல்லாதது ஒன்று என்னுடையது என்றால் அது என் மனம் ஒன்றே தான். அது மீன் பிடிப்பவன் வைத்த வலையிற் சிக்கிய மீனைப்போல ஓடி ஆடி அலைந்து தப்ப வழியில்லாமல் வருந்தாமல் குருநாதனைத் தேடி அவனுடைய திருவடியை வணங்குவது எந்தக்காலம்?.

எண்ணூ றுகமிருந்து மெய்தாத வீடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவது மெக்காலம்.

போகாத ஊருக்கு பதினோரு வழி சொல்வார்கள். நான் கிட்டத்தட்ட எண்ணூறு யுகம் உலகத்தில் வாழ்ந்தாலும் அடையமுடியாத மோட்சத்தை ஒரு கணத்தில் அடைய வெண்மையான விபூதி யணிந்து ஒளிர்வது எந்தக்காலம்?

(மந்திரமாவது நீறு, "பராவண மாவது நீறு" என்றார் ஞானசம்பந்தர். நீரில்லா நெற்றி பாழ் என்பார்கள். நீறு மாசில்லா மனத்தைக் காட்டும்.

அவவேடம் பூண்டிங் கலைந்து திரியாமற்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்ப தெக்காலம்.

உலக வாழ்வில் காலையிலிருந்து இரவு படுக்கும் வரை நாம் போடும் வேதங்கள் எத்தனை எத்தனை யோ, அதுவும் அனுதினமும். அதற்கு டயலாக் பொய் , நடிப்பு பித்தலாட்டம். இப்படிப்பட்ட போலி வேடங்களைத் தரித்து இங்கு அலைந்து உழலாமல், சிவவேடங்களைத் தரித்துப் பெருமை பெற்றிருப்பது எந்தக்காலம்?

அண்டருக்கா நஞ்சருந்தி அம்பலத்தி லாடுசிவன்
தொண்டருக்குத் தொண்டனெனத் தொண்டுசெய்வ தெக்காலம்.

தேவர்கள் பொருட்டு விஷத்தைப் பானஞ் செய்து சிற்சபையில் நடம்புரியுஞ் சிவபெருமானுடைய அடியவர்க்கு அடியவனென்று அவர்கட்குத் தொண்டுசெய்வது எந்தக்காலம்?
"அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் - இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே" எனத் தாயுமானார் சொல்லி இருக்கிறாரே.

பன்றி வடிவெடுத்துப் பாரிடத்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவது மெக்கலாம்.

தங்களில் யார் உயர்ந்தவர் பெரியவர் என்ற ப்ரம்மா விஷ்ணுவின் சந்தேகத்துக்கு பதிலாக ஒரு அடி முடியற்ற ஒளி ஸ்தம்பமாக தாணுவாக சிவன் உருவெடுத்து தமது சர்ச்சையை அந்த இருவரும் கைவிட்டார்கள் என ஒரு புராணம் சொல்லும். அப்படி அடியைத்தேடி நாராயண மூர்த்தி வராக உருக்கொண்டு பூமியை அகழ்ந்து சென்றுங் காணாத மலைமேலுள்ள விளக் கொளிபோன்ற சிவபெருமானைத் தோத்திரஞ் செய்வது எந்தக்காலம் என ஏங்குகிறார் பத்திரகிரியார்.
மேலே உள்ள பாடலில் ஒரு இடத்தில் குன்றில் விளக்கு என்பது திருவண்ணாமலையை, அண்ணாமலை தீபத்தை உணர்த்துகிறது.

தித்திக்குந் தெள்ளமிர்தைச் சித்தாந்தத் துட்பொருளை
முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம்.

என் மனது என்னென்னவோ குப்பையின் பின்னால் அலைந்து பாழாகிறதே. அமிர்தமென சுவையாக இனிக்கும் சிவநாமத்தில், சித்தாந்தத்தின் இரகசியப் பொருளும், மோட்சத்துக்கு வித்து மாகிய சிவபரஞ்சுடரை நாம் முதலில் தியானம் செய்ததாக வேண்டுமே. அது எந்தக் காலம்?
சிவத்தில் உள்ளம் நுழைந்து விட்டால் அதைவிட அமிர்தம் எது?
மணி வாசகர் ஒரு இடத்தில் ''நினைக்க மனத் தமுதாகும் சங்கரனை" என்கிறார்.

"சித்தாந்தத்தே சீவன்முத்தி சித்தித்தலாற் -
சித்தாந்தத்தே நிற்பர். முத்தி சித்தித்தவர் -
சித்தாந்த வேதாந்தஞ் செம்பொ ருளாதலால் -
சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே" - திருமூலர்.



திருமூலர் சொல்லும் அழகே தனி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...