கருட புராணம் - J.K. SIVAN
மரணத்துக்கு பின்னால்......
நீங்கள் யாரையாவது பயப்பட செய்யவேண்டுமானால் பேசாமல் கீழே நான் எழுதியிருப்பதை ஒரு காபி எடுத்து அவருக்கு அனுப்புங்கள். போதும். அவர் அப்புறம் உங்கள் அருகே இல்ல உங்கள் ஊர் பக்கமே வரமாட்டார். காரணம் இது கருட புராணம். ஒருவன் வாழ்வில் செய்ததற்கு அவனுக்கு கிடைக்கப்போகும் தண்டனைகள் பற்றிய ஜாபிதா.
கருட புராணம் நமது இந்து சமய புராணங்களில் பிரபலமானது. விஷ்ணுவும் கருடனும் பேசுவது போல் அமைந்துள்ளது. மனிதன் மரணத்திற்குப் பிறகு அவனது நிலை, அவனுக்கு செய்யும் ஈமச்சடங்குகள் , அவனது மறுபிறவி எல்லாமே இதில் சொல்லப்படுகிறது
கருடபுராணத்தில் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் இருக்கிறது.
நைமிசாரண்யம் ஒரு அமைதி கொஞ்சும், புண்ணிய க்ஷேத்ரம். அங்கே தான் எத்தனையோ ரிஷிகள் தவமிருப்பது வழக்கம்.
ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் இவ்வாறு பல ரிஷிகள் தவம் இருந்தபோது அங்கிருக்கும் சவனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூத மாமுனிவர் வந்தார். மிகவும் தவ வலிமை கொண்ட அந்த ரிஷியை எல்லா ரிஷிகளும் வரவேற்று உபசரித்து ஆசனமளித்து வணங்கினர்
அப்போது அந்த ரிஷிகள் சூதரிடம் புண்ய புருஷார்த்தங்களை பற்றி விவரம் கேட்டு அறிந்தனர். விஷ்ணு சம்பந்தப்பட்ட புராணங்களை கேட்டனர். சூதர் கருட புராணத்தை அப்போது மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார்.
ஒரு நாள் விஷ்ணு ''கருடா புறப்படு'' என்றார்.
கருடன் தயாராக வந்து நின்றான். எங்கே? என்பது போல் அவன் புருவம் கேள்விக்குறியாக வளைந்தது. புரிந்து கொண்ட விஷ்ணு. ''வா நாம் பூமியை ஒரு சுற்று சுற்றி பார்த்து விட்டு வருவோம் . ரொம்ப நாளாகி விட்டதே'' என்கிறார்.
கருடன் பேசாமலா பறந்தான். பறந்து கொண்டே கேள்விகள் கேட்டான்.
''ப்ரபோ இந்த பூலோகத்தில் வசிக்கும் மனிதர்கள் இறந்தவுடன் என்ன நடக்கும்? இவர்களது உயிர் எங்கு செல்லும், இறந்த பின்னர் நடப்பது என்ன?”
இதற்கு விஷ்ணு சொன்ன பதில் தான் கருட புராணம்.
உலகில் மனிதன் தன்னிச்சையோடு மனம் போன படி வாழ்கிறான்.
உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா வேறு உலகத்திற்குச் செல்கின்றது. அவ்வாறு செல்ல முடியாத ஆன்மாக்களே சாந்தியடைய முடியாமலும், இறைவனை அடைய முடியாமலும் சபிக்கப்பட்டதைப் போன்று ஆவியாகின்றன.
இந்த ஆன்மாக்கள் இறைவனை அடைவதற்குள் அது படும் எத்தனையோ துன்பங்களை சொல்கிறது. மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அவனது மறு பிறப்பு அமைகின்றது
உடலை விட்டுப்பிரிந்த ஆன்மா அடுத்த பிறப்பில் எந்த பிறவி எடுக்கின்றான், எங்கே என்று மறு பிறப்பை நிர்ணயிப்பவன் எமதர்மன். படித்தோர் இதை அறிவர்.
நமது பூலோகத்துக்கும் எமனின் லோகத்திற்கும் இடையில் உள்ள தூரம் 86000 காதம் (ஒரு எண்பத்தாறாயிரம் காதம். 1காதம் =7km . ஆகவே 86000 X 7 கி.மீ = 602000 கி.மீ தான் தூரமாம் .
அன்றன்று காலை தன்னிடம் உள்ள லிஸ்ட் பிரகாரம் யார் யாரையெல்லாம் பிடித்துக் கொண்டுவரவேண்டும் என்று முதல் நாளே யமன் தனது உதவியாளன் சித்ரா குப்தன் மூலம் அவனது ஆபீசர்களிடம் சொல்லி விடுவான்.
நம் உயிரைப் பிடிக்க வரும் அவனது ஆட்கள் அழகானவர்கள் என்று ஏமாற வேண்டாம். விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். நிர்ணயித்த பூலோக காலம் முடிந்தவனை பாசக்கயிற்றால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான ஒரு ஆவி தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்வார்கள். ஆவி உருவ ஜீவன் யமன் முன்னால் போய் நிற்பான்.
''ஏ கிங்கரர்களே! இந்த பயலை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்பான் யமன். ஒரு நொடி நேரத்திற்குள் அந்த ஜீவன் ஆவி உருவில் அவன் வீட்டுக்கே வந்துவிடுவான்.
இதற்குள் அந்த ஜீவன் இருந்த உடல் பல வித அலங்காரமோடு, மரியாதையோடு எல்லோரும் அழ இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிதையில் வைத்து எரிக்கப்படும் . சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, அந்த ஜீவன் ''ஐயோ ஐயையோ! என்று ஓலமிட்டு அழும். தீயில் உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது கூட அந்த ஜீவனுக்கு தன் உறவு, சொத்து, சுகம், தான் சேர்த்து வைத்த பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. ஜீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக பிண்ட உருவாகும்..
அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ஆ..ஆ... என்று கதறி பதறி நிற்பான். பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான்.
பிண்ட சரீரம் பெற்ற ஜீவன் யம கிங்கரர்களால் பிணைத்துக் கட்டப்பட்டு இழுத்துச் செல்லும் நிலையில் நாள் ஒன்றுக்கு 247 காத வழி இரவுபகலுமாக அவன் நடந்து செல்ல வேண்டும். போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்டமாகிய ஜீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.
வைவஸ்வத பட்டணம் என்று ஒரு பட்டணம். அங்கே அதி பயங்கரமான கோரமான பிராணிகள் இருக்கும். மிகக் கொடூரமானவை. துன்பம் தருபவை. பாபம் செய்தவர்கள் எப்போதும் ஆ, ஆ, ஊ, ஊ என்று ஓலமிடுவார்கள். எங்கே பார்த்தாலும் 50 டிகிரி வெயில் போல சூடு. கொதிக்கும் கொதிநீர்தான் . எப்படி குடிப்பது? குடிக்க ஒரு துளித் தண்ணீர் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக நாற்றத்தோடு வேறு இருக்கும். ஐயோ நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! ஐயோ, உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேனே'' இப்படி குரல்கள் எல்லா பக்கமும் நிறைய கேட்கும்.
ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் மேலும் மேலும் துன்புறுத்த அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்!
No comments:
Post a Comment