நமஸ்காரம் சிவ வாக்கியரே - 7 - j.k. sivan
விஷ்ணுவின் அவதாரமான வைணவர் போற்றும் தெய்வமான இராமனின் பெருமையை சைவர்களும் போற்றி தொழுவது வழக்கமானது தான். சிவ வாக்கியர் சைவர்களின் வர்களின் தெய்வமான சிவபிரானின் பெருமை பேசும் ஐந்தெழுத்து சிவமந்திரமும் பஞ்சாக்ஷரம் (ஓம் நமசிவாய:) பெருமைக் குரியது என்று சிவநாமப் பெருமையையும் தம் பாடலில் பேசுகின்றார்.
''அடேய் பேதை மனிதா. நமசிவாய என்ற எழுத்து என்னவென்று நினைக்கிறாய்? அது சிவனின் வாசஸ்தலமடா. சிவன் இருப்பதடா. இதுவே எனக்கு வாழ்வின் உபாயம், இதை விட வேறு எதுவுமில்லை என்று நம்புவனுக்கு, நம்புவதற்கு ஏற்ற நம்பகமான அக்ஷரம் தெரியுமா உனக்கு? ஒன்பது வாசல் கொண்ட நமது உடலில் இருந்து வெளியேறாத உள்ளிருக்கும் பிராணன் எனும் வாயு தீடீரென ஒருநாள் ஏதாவது வாசலில் இருந்து வெளியேறி திரும்பாது. அந்த வாயுவையே உளியிருக்கும்போதே அடக்கி சிவனை நினைக்கவைத்து நல்வழி படுத்தும் ஒரு உபாயம் தான் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.
''சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே ''
அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
''ஹே மனிதா, இதை அறிவாயா? ஐந்து கோடி மந்திரங்களும் சொல்லுவதால் கிடைக்கும் பலனை எல்லாம் ஒரே ஒரு சிறிய மந்திரத்தில், அதுவும் ஐந்தே எழுத்தில் ‘ஓம் நம சிவாய என்று சொன்னால் உடனே கிடைத்து நன்மை பெறலாமே. இதைத்தானே இன்னொரு அற்புத சித்தர் திருமூலர் கூறுகிறார். ஞாபகம் இருக்குமே! இந்த தசை சதை நரம்பு ரத்தம் எலும்பு போர்த்த தோல் கொண்ட உடம்பு ஒரு ஆலயம். உண்மையில் அதனுள் இருக்கும் தெய்வம் தான் ஆத்மா எனும் பொருள் பட ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்கிறார்.
நீ யாரோ ஒருவனிடத்தில் மட்டும் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன. எல்லோரிடமும் பேசினால் என்ன. பேசாமல் இருந்து, மௌனியாக இருந்தால் என்ன. ஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம், ஞானியாகவும் இருக்கலாம், யோகியாக எங்கோ காட்டில் கூட உற்கார்ந்து கொண்டு இரேன். விரதங்கள் உபவாசங்கள் இரேன். என்ன பயன்? முதலில் உன் உள்ளத்தில் தூய்மை இருக்கிறதா? இருந்தால் அவன் தானே அதில் வந்து வசிப்பானே ! உள்ளத்திலே கூடை கூடையாக நிறைய அழுக்காறு, அகம்பாவம், பொறாமை, உலக ஆசைகள், தவறுகள், குற்றங்கள் நிரப்பிக் கொண்டு எப்படியடா அதில் இறைவனை இருக்க வேண்டுகிறாய்? நீ குப்பை தொட்டியில் போய் வசிப்பாயா ? தூங்குவாயா? .
இறைவனை எவரும் அடையலாம். தரிசிக்கலாம். அதற்கு அவனைப் புரிந்து கொள்ளும் அறிவு மட்டும் இருந்தால் போதும். அன்பினால் அவனை காணலாம். அவன் தான் எங்கும் நிறைந்திருக்கிறானே.
அவனைத்தேடி கோயிலும் வேண்டாம், பள்ளிகூட வாசலும் வேண்டாம். தனியாக குறி ஒன்றும், குறித்த பெயரும் வேண்டாம், தனியாக இதற்கென்று ஒரு மந்திரமும் தேவையில்லை. ஒரே பள்ளிக்கூடம் ஞானம், (அறிவு) ஒன்றுதான். அதை உணர்ந்து அவனை வணங்கினால் போதும். சகல நன்மைகளும் பெறலாம். பள்ளிக்கூடம் கோயில் என்று வேண்டுமென நினைத்தால் அது நமது தேகம் ஒன்றே. அதனுள் தானே அவன் இருக்கிறான். அவன் இருக்கும் இடம் தானே கோயில்!
கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”
இந்த அஞ்செழுத்து (நமசிவாய) பற்றி ஒரு அருமையான வார்த்தை அமைந்த பாடல் சிவ வாக்கியர் பாடியிருப்பதை ரசிக்காமல் எந்த தமிழனும் இருக்க முடியாது. இந்த அஞ்செழுத்தில் தான் இருக்கிறது இந்த அண்டமும் அகண்டமுமே. ப்ரம்மா விஷ்ணு சிவன் எனும் திருமூர்த்திகளும் இந்த ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் தான் அடக்கம். அ உ ம எனும் ஓம் எனும் பிரணவ மந்திரமும் கூட நமசிவாய அக்ஷரத்தில் தான் உள்ளது.
ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
இந்த ஐந்தெழுத்து மந்திர நாயகனை உள்ளிருப்பதை உணராமல் ஆடி ஓடி உலகமெல்லாம் தேடி தனது வாழ்நாள் பூரா பயனற்று கழிந்து போக வாடியே மடிந்து போன மக்கள் ஒருவரா இருவரா? கணக்கற்ற பல ஜென்மங்கள் பயனற்றுப் போன கோடானு கோடி மக்கள் ஐயா. இப்போதாவது தெரிந்துகொள். உணர்ந்து கோல் பயன் பெறு . ஓம் நமசிவாய
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
சிவ வாக்கியரை மீண்டும் படிக்கும் போது உங்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment