Sunday, July 9, 2017


''மார்க்'' கம் - J.K. SIVAN

''தாத்தா ஒ தாத்தா இன்னிக்கு என்ன நிறைய பேர் உன்னைச் சுத்தி??''

''என்ன கோபு உனக்குத் தெரியாததா? இன்னிக்கு +2 ரிசல்ட் வந்திருக்காமே''

''அதுக்கு எதுக்காக உங்களை இத்தனை பேர் தேடிண்டு வரணும்?

என்னவோப்பா. அவங்களுக்கு மனசு கொஞ்சம் தெளிவாகிறதாம் இங்கே வந்தா. எங்கிட்டே பேசினா நிம்மதியா இருக்காம்''

''எதைப்பத்தி தாத்தா?''

''நான் எதைப் பத்தி பேச முடியும். எல்லாம் அந்த கிருஷ்ணன், ராமன், பெரியவா-- இது ஒண்ணு தான் என்கிட்டே இருக்கிற சரக்கு. நான் அதைத் தானே பேசறேன், எழுதறேன். இதுக்கும் பிளஸ் 2 ரிசல்டுக்கும் கூட சம்பந்தம் உண்டு.

எப்படி தாத்தா?

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களுக்குத் தெரிந்ததைவிட 2 விஷயம் கூட தெரிந்திருக்கணும். ஒண்ணு தங்கள் குழந்தைகள் படிக்கறது மார்க்கு வாங்கி படிச்சு முடிச்சு வேலைக்கு போய் பணம் நிறைய சம்பாதிக்கமட்டுமில்லை. நல்ல குணம் கூடவே வளரணும் என்று ஒன்று. மற்றொன்று தாய் மொழியை எந்தக் காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. வீட்டிலே இங்க்லீஷ்லேயே பேசுன்னு திட்டற, அடிக்கிற பெற்றோர் சிலரை எனக்கு தெரியும். தாய் மொழியை கத்துக்க விடாதது தாயையே பணத்துக்காக கைவிடறதுக்கு, விக்கறதுக்கு சமானம். பின்னாலே வட்டியும் முதலுமா இதை உணரும்போது காலம் கடந்து போனதாக இருக்கும்.

பள்ளிக்கூடம் நடத்துகிறவாளுக்கு பிளஸ் 2 என்ன தெரியுமா? ரெண்டு விஷயம் அதிகமாகவே ஞாபகம் இருக்கட்டும்.

''நீங்க உங்க பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேர் வாங்க ஆசைப்படறதைவிட உங்க பள்ளிக்கூட குழந்தைகளில் எத்தனை பேரு நிற்கதியா கை விடப்பட்டார்கள் என்று ஒரு கணம் யோசனை பண்ணவேண்டும்? நீங்கள் எதிர்பார்த்த மார்க் வாங்காத குழந்தைகளை வெளியே வேறே பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீர்களா? அதிக மார்க் வாங்காததாலே ஒரு வருஷம் அவர்கள் வாழ்க்கையில் வீணாக காரணமாக இருந்தீர்களா?. தவறு உங்களுடையுது தான் அதிகம்.

எல்லா குழந்தைகளும் LKG லேருந்து இப்போ எல்லாம் ஒரே பள்ளிக்கூடத்திலே தான் +2 வரை படிக்கிறார்கள். அவர்களில் சிலர் சரியான மார்க் வாங்கி 11வது, 12வது வகுப்போ போகவில்லை என்றால் அதற்கு யார் காரணம்? குழந்தைகளா ? பெற்றோரா? அந்த இருவர் மட்டுமேயா? உங்களுக்கோ உங்கள் ஆசிரியர்க ளுக்கோ இதில் எந்த பங்கும் இல்லையா?

எங்கள் காலத்தில் ஆசிரியர்களிடம் மட்டற்ற மரியாதையும், அன்பும் பாசமும் நாங்களும் கொண்டிருந்தோம் அவர்களும் எங்களிடம் பெற்ற குழந்தைகளாக பழகினார்கள். தெரியாததை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்து எங்களுக்குத் தெரிய வைத்தார்கள். படிப்பு இப்போது ஒரு வியாபாரமாகிவிட்டது. வியாபாரிகள் நல்ல பொருள் விற்றால் தான் மதிப்பு என்பதற்காக குழந்தைகளில் நல்ல மார்க்க வாங்கும் குழந்தைகளையே 11வது, 12வதுக்கு அனுப்பி மற்றவர்களை தெருவில் விடுவது வியாபாரமேயாகும்.

அதில் எத்தனை குழந்தைகள் வீட்டில் பெற்றோரிடமும் சித்ரவதை படுகிறார்கள் தெரியுமா? எத்தனைபேர் தங்களது வாழ்க்கையையே கயிற்றில் தொங்கச்செயது, கிணற்றில் விழுந்து, ரயில் தண்டவாளத்தில் தலை கொடுத்து முடிந்து போகிறார்கள்.

இது தான் படிப்பா? இதற்குத்தான் இத்தனை வருஷங்களும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை சில பெற்றோர்கள் பள்ளிகளில் கட்டினார்களா? எல்லோருக்கும் ஈர்ப்பு சக்தி, கிரஹிக்கும் சக்தி சமமாக இருப்பதில்லை. இதற்குக் காரணம் வீட்டு, பொருளாதார, உடல் நிலை போன்ற சூழ்நிலையும் ஒரு முக்ய காரணம். ஆசிரிய சமூகம், பள்ளி நிர்வாகம் இத்தகைய குழந்தைகளை தெரிந்தெடுத்து அதிக கவனம் அன்பாக, பாசமாக அறிவை வளர்த்து ஊட்டி அவர்களை மற்ற குழந்தைகளுக்கு ஈடாக கொண்டுவரவேண்டும்.

குழந்தைகளுக்கும் ஒரு பிளஸ் 2 சமாசாரம் இருக்கிறது.

நீங்கள் அனைவரும் போட்டுக்கொள்ளும் சீருடை (UNIFORM ) வேண்டுமானால் ஒரே மாதிரியாக இருக்கலாம். உங்கள் குடும்ப சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியானது. சிலரால் வீட்டில் கவனம் செலுத்தி படிக்க முடியாமல் போவதற்கும் எத்தனையோ காரணங்கள். வசதி கொடுத்தாலும் படிக்காத, அதிகம் கவனம் செலுத்தாத குறையும் இருக்கலாம். வாழ்க்கை பள்ளிக்கூடத்தில் பரிக்ஷையில் வாங்கும் மார்க்கில் இருப்பது ஒருவிதத்தில் இன்றியமை யாததாகிவிட்டது. ஆனால் மார்க் மட்டுமே வாழ்க்கை அல்ல. தன்னம்பிக்கை, ஆர்வம், தனித் திறமை இவையும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இதை உணர ஆசிரியர், பெற்றோர் உதவ வேண்டும். அதைக் கொஞ்சம் அதிகமாகவே கவனித்து, ஊக்குவித்து அந்தந்த துறையில் ஈடுபட வைக்கவேண்டும். வெற்றி எதிலும் பெறலாம். ஒன்றையே குறி வைத்து நிழலைத்தேடி ஓடுவது நின்று போகவேண்டும்.

எதையோ பெற எதையோ படித்து அதில் பதக்கம் பெற்றும், பட்டம் பெற்றும் கடைசியில் சோப்புக் கம்பனியில் விற்பனை செய்வதற்கோ,, எங்கோ ஒரு வங்கியில் அதிகாரியாகவோ, , எண்ணைக் கம்பனியில் ஏதோ ஒரு வேலையோ , பேப்பரை அரைக்கும் ஒரு தொழிற்சாலையில் எத்தனையோ பேரில் ஒன்றாகவோ,, மருந்து கம்பனியில் முக்யஸ்தன் என்றோ, இப்படிப் பட்ட உத்தியோகம் கிடைத்து கிடைத்த பணத்தில், பதவியில், உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, இருந்து திருப்தி பெற்ற, பெறாத அநேகர் எனக்குத் தெரியும்.


திரும்பிப் பார்த்தால் பணம் தான் கடைசியில்.....! அதை இங்கேயே சம்பாதிக்க தெரிந்த தொழிலில் ஈடுபடலாமே. தெரிந்த வித்தையை தொழிலாக்கலாமே, தன்னம்பிக்கை அல்லவோ அவசியம். வசதிகளை வருமானத்துக்குள் வைத்துக்கொள்வது தான் விவேகம்.

கடைசி ப்ளஸ் 2 எல்லாருக்குமே உரித்தானது. நீங்கள் அனைவருமே புத்திசாலிகள், புண்யாத்மாக்கள். இதற்கும் மேல் வேண்டிய ப்ளஸ் 2 இந்த ரெண்டு தான் - திருப்தியும் பக்தியும்.

திருப்தி என்பது எதிலும் உண்டாக அத்தியாவசியமாக வேண்டியது அமைதியான மனம். எதையும் போதும் என்று ஏற்றுக்கொள்ளும் திட மனது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

பக்தியால் ஒருவருக்கு கிடைப்பது பக்குவம். அன்பு, பணிவு, அகம்பாவமற்ற அனைவரும் சமமே என அறியும் பார்வை.

''கிருஷ்ணா நீ தான் இதைத் தருவதற்கு காத்துக்கொண்டிருக்கிறாயே, நாங்கள் தானே உன்னை அணுகவில்லை.''

''ஆமாம்'' என்று ஒருமனதாக ஒப்புக்கொண்டு வந்திருந்த நண்பர் கூட்டம் என்னை விட்டு வீடு திரும்பியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...