Friday, July 7, 2017

யாத்ரா விபரம் - J.K. SIVAN
மறந்து போன ஒரு அவதாரம்.

காரில் எங்காவது கோயில் செல்லவேண்டுமென்றால் ஒரு அருமையான உபாயம் தோன்றி விட்டது. அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனை முதலில் கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். எழுபது வயத்திலும் பொறுமையாக பொறுப்பாக கோவில்களை தேடிச்சென்று கண்டுபிடித்து காட்டும் அதீத சக்தி கொண்டவர். கிருஷ்ணனால் எனக்கு கிடைத்தவர். நாராயணன் எடுத்த அவதாரங்களில் அதிகம் பேசப்படாத அவதாரங்கள் மத்ஸ்யாவதாரம், வராகவதாரம் வாமனாவதாரம் கூர்மாவதாரம். ஏனெனில் அதிகம் பேர் பேசுவது ராமன், கிருஷ்ணன், நரசிம்மன் பற்றி தானே.நிறைய ஆலயங்களும் இல்லை அது பற்றி. எனவே நாகலாபுரம் மத்ஸ்யாவதார ஆலயம் கண்டிப்பாக சென்று தரிசிக்க வேண்டிய ஒன்று.

சோமகன் என்ற ராக்ஷஸன் வேதங்களை ஒரு நாள் காலை வாரிச்சுருட்டிக்கொண்டு ஆழமான கடலுக்குள் சென்று மறைந்து விட்டான். வழக்கம் போல் பிரமன் தேவர்கள் எல்லோரும் அதை மீட்க நாராயணனிடம் சென்று வேண்ட, அவர் ஒரு பெரிய மீனாக அவதரித்து நீருக்குள் மூழ்கி சோமகனை வென்று கொன்று வேதங்களை மீட்டது இந்த அவதாரத்தில் அதை பிரதிபலிக்கும் இந்த நாகலாபுர ஆலயத்தில் பெருமாளின் பெயர் ஸ்ரீ வேத நாராயண பெருமாள். பாதி பெருமாள் பாதி மீன் உருவமாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நிற்கிறார்.

இந்த கோவிலில் பெருமாள் மேற்கே பார்த்து நிற்கிறார். தினமும் அஸ்தமன காலத்தில் சூரியன் ஒளி அவர் மேல், அவர் பாதத்தில் பட்டு சூரியன் வணங்கி விடைபெறுவது ஒரு அற்புதம். இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். சமீபத்தில் இந்த கோவில் புஷ்கரணியை சுத்தம் செய்தபோது ஒரு நூதன வண்ணம் கொண்ட மீன் ஒன்று அதில் இருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்களாம். மீன் அவதார பெருமாள் கோவில் அல்லவா?.

இதுவும் ஒரு கிருஷ்ணதேவராயர் கட்டிய கோவில். அவர் அம்மா பெயர் நாகாம்பா எனவே அவள் நினைவாக இந்த ஊருக்கு நாகலாபுரம் என்று பெயர் என்கிறார்கள். இந்த பேர் நிலைக்கும் முன்பு அதன் பெயர் ஹரிகண்டபுரம்.

நாராயணவனம் தரிசனம் செய்தபிறகு, சென்னை நோக்கி பயணம் செய்யும்போது அடுத்ததாக கார் நின்றது நாகலாபுரம் என்ற ஊரில். மிகவும் அமைதியான ஒரு ஊர். சென்னையிலிருந்து அருகில் தான் இருக்க்கிறது. எத்தனை பேருக்கு அங்கு சென்று ஸ்ரீமன் நாராயணன் மத்ஸ்யாவதார உருவில் இருப்பதை தரிசிக்கும் பாக்யம் கிடைத்திருக்கிறது. எனக்கே இப்போது தான் முதலில் ஸ்ரீனிவாசனால் கிடைத்தது.

நாகலாபுரம் ஒரு கல் விட்டெரியும் தூரத்தில் தான் இருக்கிறது எனலாமா? ஆந்திராவில் அழகாக TTD பராமரிக்கும் சிறிய கோவில். ஜருகண்டி எல்லாம் கிடையாது.திருப்பதியிலிருந்து 70 கி.மீ. சென்னையிலிருந்து 90 கி.மீ. வடக்கே. தமிழ்நாடு முடியும் ஊத்துக்கோட்டையிலிருந்து 15 கி.மீ. தூரம் தான். அதனால் தான் தற்போதைய வாகன வசதிகளை கருதி கல் வீசும் தூரம் என்றேன்.சுருட்டப்பள்ளிக்கு அருகே. புத்தூர் போகும் வழியில் ரோட்டுமேலே இருக்கும் கோவில்

கோவில் பிரகாரம் அருகே அற்புத நந்தவனம். அதில் நாமம் போன்று உருவம் அளிக்கும் வகையில் செடிகளை வளர்த்திருக்கிறார்கள்.
பெருமாள் கோவிலாக இருந்தும் இதில் தக்ஷிணாமூர்த்தி விக்னேஸ்வரர்கள் உண்டு.
பங்குனி மாத சுக்ல துவாதசி,திரயோதசி
,சதுர்த்தசி நாட்களில் பிரம்மோத்சவம் போது , சூர்ய பூஜை விசேஷம். முதல்நாள் பாதத்தில், ரெண்டாவது மூன்றாவது நாளில் முறையே நாபி நெற்றியில் சூரிய கதிர்கள் வாசலிலிருந்து 600 மீட்டர் தூரம் உள்ளே வந்து சூரிய வழிபாடு

அருகே நாகலாபுரம் நீர் வீழ்ச்சி இருக்கிறது என்கிறார்கள். தண்ணீரே கண்ணில் படவில்லை. கண்ணில் தான் தண்ணீர் வரும் நிலை என்பதால் தேடிப்போகவில்லை.

அடுத்தது சுருட்டப்பள்ளி தரிசனம்.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...