ஞானம் -- J.K. SIVAN
உபநிஷத் என்பது வேதாந்த சாரம். ஒரு மா பெரும் கடலை ஒரு சிறு லோட்டாவில் மேசையில் எதிரே கொண்டு வைப்பது. அகண்டத்தின் சுருங்கிய வடிவம். பொருளின் கரு. நம்மை பொருத்தவரையில் பொதுவாக உபநிஷத் என்றால் ஏதோ நமக்கு புரியாத ஒன்று. கொஞ்சம் தூரமாகவே நின்று கைகட்டி பார்த்துவிட்டு தலையாட்டிவிட்டு திரும்ப மறந்து போக வேண்டிய விஷயம் என்பது தானே. அப்படி இல்லவே இல்லை. கொஞ்சம் யோசித்து ஆர்வமுடன் பார்த்தால் அடடா இத்தனைநாள் இதை கவனிக்காமல் போனோமே என்று தோன்றும். எல்லாவற்றுக்கும் நமது மனசே காரணம்.
பல உபநிஷதங்கள் உள்ளன. இஷோ பநிஷத் என்று ஒன்று. அதில் ஒரு விள்ளல்.
மொத்தம் 4 வேதம். (சாம , யஜுர், ரிக், அதர்வ)
ரிக் = தெய்வம், தேவதைகள் சம்பந்தப்பட்டது.
யஜுர் = நாம் செய்ய வேண்டிய கர்மா, பற்றியெல்லாம் சொல்வது
சாம = கடவுளோடு சம்பந்தபடுத்துவது, உபாசனை, கானம் .
அதர்வ = உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் , வாழ்க்கை, குடும்பம் போன்றதில் ஈடுபட.
இஷோபநிஷத் என்ன சொல்கிறது;
முழு உலகுமே பகவானின் ஸ்ருஷ்டி . அவன் எங்குமிருப்பவன் சர்வ வியாபி.
பிரபஞ்சமே ஏதோ ஒரு வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒருநாள் எல்லாவற்றையும் நாம் உதறிவிட்டு உலகில் அனுபவித்தது போதுமடா சாமி என்று கிளம்ப போகிறோம். எதுவும் நம் சொந்தம் அல்ல.
இந்த பகவான் என்பவர் அணுவிலும் அணுவானவர், குட்டியிலும் குட்டியாக இந்த பிரபஞ்சத்தில் எதிலும் இருப்பவர்.
நாம் எதை நினைத்தாலும், செய்தாலும் அதெல்லாமும் அவருக்கு தெரிகிறது. பார்த்துக்கொண்டே தான் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறார். (ஜாக்ரதை!!)
எதற்காக நம்மை உருவாக்கியிருக்கிறார் ?
உலகில் சொந்த பந்தம், வாழ்வு சாவு, எல்லாம் புரிந்துகொள். கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு, விடுபட்டு ஆனந்தமாக இரு. எதுவுமே எல்லாமே (கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து கடைசியில் தான் இந்த எல்லாமே), நம்மை விட்டு போனால் தான் ஆனந்தம். அவைகள் நம்மை சுற்றிலும் சூழ்ந்து கொண்டு இருக்கும்போது அல்ல. இதை தான் அற்புதமாக ஒரு சின்ன பாட்டில் திரு மூலர் சொல்லியிருக்கிறார். அடிக்கடி சொல்வேன். எல்லோருக்கும் தெரிந்தது தான்.
(திருமந்திரத்தில் ஒரு அருமையான பாடல் ;
''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்,
ஆசை படப்பட ஆய் வரும் துன்பம்,
ஆசை விட விட ஆனந்தம் ஆமே.''
No comments:
Post a Comment