ஆஷாட ஏகாதசி புண்யம் J.K. SIVAN
கிருஷ்ணனுக்கு பிடித்த இருவர்
கிருஷ்ணனுக்கு பிடித்த இருவர்
இன்றைக்கு 4. 7.2017 ஆஷாட ஏகாதசி. பாண்டுரங்கன் நாள். அன்று யார் வேண்டுமானாலும் பாண்டுரங்கனை இருகக் கட்டி அணைத்துக் கொள்ளலாம். நான் ஆதம்பாக்கம் பாண்டுரங்கன் கோவிலில் இன்று அவனை மனதார வணங்கினேன். அவன் பொற்பாதங்கள் இரண்டையும் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவன் கைகளை என் கைகளோடு இணைத்துக் கொண்டேன். வேண்டும் என்று வந்த ஒரு சிலருக்கு இன்று எனக்குப் பிடித்து நான் எழுதிய ''தெவிட்டாத விட்டலா'' வும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ''VITOBA THE NECTAR'' புத்தகங்களையும் கொடுத்தேன். இந்த ஆதம்பாக்கம் பாண்டுரங்கன் கோவிலில் தான் என்னுடைய மேற்சொன்ன இரு புத்தகங்களும்வெளியிடப்பட்டது இன்றுபோல் நினைவிருக்கிறது.
ஹிந்தியில் ஒரு வாக்கியம் உண்டே ஞாபகம் இருக்கிறதா? '' ஏகாதசி கோ மாரே , சீதா ஸ்வர்க் மே ஜாதே'' அதாவது ஏகாதசி அன்று மரணமடைந்தவன் நேராக சுவர்க்கத்தை அடைகிறான்.
உலகத்தில் அத்தனை அக்ரமங்களையும் செய்தவன் கூட எனக்கு மரணாந்த காலம் சுகமாக எந்த வித நோய்வாய் படாமலும் கஷ்டம் எனக்கோ மற்றவர்க்கோ இன்றி அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
அதுவும் ஏகாதசி அன்று குழந்தைகளோடும் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பற்றியும் பேசிக்கொண்டே ஒருவர் உயிர் துறந்தால் அவரை என்ன வென்று சொல்வது.
''ஒரு வார்த்தையில் நீ செய்ததை சொல்வதானால் பாண்டுரங்கா உனக்கென்று பிடித்த ஒருவரை உன்னுடைய நாளில் எடுத்துக்கொண்டு உன்னருகே வைத்துக்கொண்டுவிட்டாய்''.
இதற்கு முன் இப்படி ஒருவர் உண்டா?.
இருந்தாராம். பீஷ்மர். அவரும் பிரம்மச்சாரி. எல்லோருக்கும் பிதாமகர். அவரை எவரும் வெல்ல முடியாதாம். மரணம் எப்போது வேண்டும் என்று கேட்டுப் பெற்றவராம். அவர் விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு அளித்தவர். இது தான் அவரைப் பற்றி தெரியும்.
ஆனால் முதலில் சொன்ன ''ஏகாதசி மரணம்'' அடைந்த மனிதர் எப்படிப் பட்டவர்? . அவரும் ஒரு பீஷ்மர் தான் . பிரம்மச்சாரி. பிதாமகர் என்று அல்ல,. கோடானுகோடி இந்தியருக்கு பிதாவாக, குழந்தைகளின் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். பீஷ்மர் அஸ்த்ர சாஸ்திரம் தெரிந்தவர். இவர் அணு சாஸ்திரம் தெரிந்தவர். அவர் குருக்ஷேத்ரக்காரர். இவர் ராம க்ஷேத்ரத்தார் . அவர் அக்னி அஸ்தரம் விடுபவர். இவர் அக்னி ஏவுகணை அனுப்பினவர். அவர் லோக சம்ரக்ஷணத்துக்காக விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி தந்தார். இவர் உலகத்துக்கே குழந்தைகள் எதிர்காலத்திற்கு வழி சொல்லித்தந்தவர். அவர் ''கௌரவ ''வம்சத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர். இவர் பாரத வம்சத்துக்கே ''கௌரவம்'' வாங்கி கொடுத்தவர். அவர் வேத ஞானம் தெரிந்தவர் இவர் நாத ஞானம், விஞ்ஞானம் தெரிந்தவர். இருவரும் அரசியல் ஆன்மிகம் சம்பந்தப் பட்டவர்கள் தான். பீஷ்மர் க்ஷத்ரியர், இவர் முகமதியர்.
பீஷ்மர் ராஜ்ய பதவி வேண்டாம் என்றவர். நம்மவரோ ராஷ்ட்ரபதி பதவி இரண்டாம் முறை வேண்டாம் என்றவர். அவர் மகாபாரத ரத்னம். இவர் மா பெரும் பாரத ரத்னா. அவர் கங்கைக் கரையில் தோன்றியவர். இவர் ராமேஸ்வரம் கடற்கரையில் தோன்றியவர். ஒரு வித்யாசம். அவருக்கு வாரிசு இல்லை. பாண்டவரைப் பிடித்தது. இவருக்கு நாட்டினை இனி ஆளப்போகும் எதிர்கால ''ஆண்டவர்கள் '' இளைஞர்கள், மாணவர்கள் எல்லோருமே வாரிசு. அவரை அந்த கால 56 தேச ராஜாக்களுமே மதித்தார்கள். இவரை சர்வ தேசமே மதிக்கிறது.
அவர் தேவனாக இருந்து மனிதனானவர். இவர் மனிதனாக இருந்து தெய்வமானவர். கடைசி வரை தனது கடமையை செய் பலன் எதிர்பார்க்காதே என்று உபதேசித்த கிருஷ்ணனுக்கு உயிர் பிரியும் வரை கடமையில் கண்ணாயிருந்த இருவரையுமே பிடிக்குமே.
பாவம் தொலைய ராமேஸ்வரம் போகிறோம். இனி புண்ணியத்தையும் புதைத்திருக்கிற அந்த க்ஷேத்ரம் நமக்கு அதி முக்கியம். நான் சொன்ன இருவரில் ஒருவர் பீஷ்மர் ரெண்டாமவர் அவுல் பக்கிரி அப்துல் கலாம்.
No comments:
Post a Comment