ராதா + கிருஷ்ணன் = சைதன்யர்
J.K. SIVAN
ராதாவையும் கிருஷ்ணனையும் அறிய அவசியம் தேடவேண்டிய நூல்கள் சிலவற்றை சொல்கிறேன்
ஆரம்பத்தில் எல்லாமே பாடல்களாக, கவிதைகளாக தான் கிடைத்தன. 12ம் நூற்றாண்டு ஜெயதேவர் தான் முதலில் கண்ணில் படுகிறார். அவரது கீத கோவிந்தம் போன்ற இசை, நாடக, நாட்டிய, கற்பனை வளமும் பக்தியும் கலந்த திறம்பட வடித்த ஸம்ஸ்க்ரித காவியத்தை வேறெங்கும் காண முடியாது.
ஒரு ரெண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு 14வது நூற்றாண்டில் ஒருவர் தோன்றினார். சண்டி தாஸ். வங்காளர். ஸ்ரீ கிருஷ்ண கீர்த்தன் என்ற அவரது படைப்பு வங்காள மொழியில் முதல் காவியமாகும். ராதா கிருஷ்ணாவை 418 பாடல்களில் வர்ணித்திருக்கிறார். இன்றைக்கும் அதற்கு இணை மற்றொன்றில்லை. அடுத்த நூற்றாண்டான 15ம் நூன்றாண்டில் வித்யாபதி என்ற கவிராயர் மிதிலையில் கிருஷ்ணன் ராதா பற்றி ப்ரஜாபுலி என்ற மொழியில் எழுதினார் என்கிறார்கள். மொழியின் பெயரே தெரியாதபோது அதைப்பற்றி என்ன சொல்லமுடியும். ஆனால் அவரது படைப்பு ஒரு புயலை கிளப்பி விட்டிருக்கிறது. அந்த மொழியில் நிறைய கவிஞர்கள் பிற்பாடு வைஷ்ணவ மதம் பற்றி பாடியிருக்கிறார்கள். தாகூர் கூட இந்த மொழியில் பானுசிங்கா தாகுர் பாடாவளி என்று ஒரு கவிதை இயற்றியுள்ளார்.
பர்த்வான் என்கிற ஊரில் மாலாதர் பாசு என்று ஒருவர். ஸ்ரீ கிருஷ்ண விஜயம் என்று வங்காளத்தில் பாகவதத்தின் 10- 11 காண்டங்களில் வரும் கிருஷ்ணனை பற்றி அழகாகவே எழுதியிருக்கிறார். இதில் கிருஷ்ணன் தெய்வ புருஷனாகவே காண்கிறான். மனித கிருஷ்ணன் கம்மி. வைஷ்ணவர்களுக்கு பிரதானமானது வியாசரின் பாகவத புராணம் அவருக்குப் பிடித்துப் போன தால் தான் ஒரு முஸ்லிம் கவி, அப்சல் என்பவர் ராதா கிருஷ்ணா காதலைப் பற்றி பாடல்கள் எழுதிஇருப்பது.
சைதன்யர் 16ம் நூற்றாண்டில் கிருஷ்ணனைப் பாட தூண்டுகோலாக இருந்தது ஜெயதேவர், சண்டி தாஸ், வித்யாபதி ஆகியோர் எழுத்துகள் தான். இதில் ஒரு வேடிக்கை இந்த மூவருமே வைஷ்ணவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளாதவர்கள். ராதா கிருஷ்ணன் காதலை பிரேமையை மனித காதலாக வர்ணித்தவர்கள் என்று மட்டும் தான் அறியப்படுகிறார்கள் . சைதன்ய மகா பிரபுவின் ராதா க்ரிஷ்ண உபாசனைக்கு பின் வந்தவர்களின் கவித்வம் இதனாலேயே அதிகமாக பேசப்படவில்லை.
பிராமணராக பிறந்த சைதன்யர் இளவயதிலேயே கேசவ பாரதியால் வைஷ்ணவ மார்கத்தில் ஊக்குவிக்கப் பட்டவர். துறவியாக வாழ்ந்தவர். கிருஷ்ண பக்தி அவர் வாழ்க்கையை முழுதுமாக ஆட்கொண்டது. ஏராளமானவர்கள் அவரை அடைந்து சிஷ்யர்களாயினர். வைஷ்ணவ சம்பிரதாயமாக இது வளர்ந்தது. ராதா கிருஷ்ணன் பிரேமை உலகளவில் ஜீவாத்மா பரமாத்மா உறவாக அறியப்பட்டது சைதன்யர் மூலமாக என்று கூறினால் அது மிகையாகாது. சமஸ்க்ரிதத்தில் பல நூல்கள் இதை விவரித்தன. இதைத் தெரிந்துகொள்ள நாம் படிக்கவேண்டியது சைதன்ய சரிதாம்ரிதம் .சைதன்ய சந்திரோதயம் போன்ற நூல்கள். வங்காளத்தில் நிறையவே உள்ளன.
பாடாவளி என்று சொன்னேனே அது முன்னூறு ஆண்டுகளாக வளர்ந்து 18ம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. இது இசையை ஆதாரமாக கொண்டதால் இதில் ராகம் தாளம் எல்லாமே உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் அதை இயற்றியவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த பாடல் அவ்வாறே பாடும்படியாக அமைக்கப் பட்டது. உதாரணமாக தியாகராஜ கீர்த்தனைகள்.
தீட்சிதர் பொல்லாதவர். பாட்டுக்குள்ளேயே அந்தந்த ராகம் பெயரையும் காட்டியிருப்பார். சாமா சாஸ்த்ரிகள் கீர்த்தனைகள் இவ்வாறே எந்த ராகம் எந்த தாளத்தில் பாடப் பட்டது என்று போட்டிருக்கும். ஸ்வரங்களும் இருக்கும். பாரதியாரும் தனது கவிகளில் சிலவற்றை இவ்வாறு புனைந்திருப்பதை பார்த்து அதை மட்டும் விட்டு விட்டு அவர் கவிதையை ரசித்திருக்கிறேன். எல்லோராலும் சங்கீதம் தெரியாமல் பாட முடியாது.
சைதன்யர் மறைந்ததற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் அவரைப் பற்றி ஒருவர் வங்காள மொழியில் எழுதினார் . சைதன்ய பாகவதம் என்று இதற்கு பெயர். எழுதியவர் பிரிந்தாவன் தாஸ். 25,000 ரெண்டு வரி பாடல்கள். நமது திருக்குறள் மாதிரி. எழுதத்தூண்டியவர் ஒரு நித்யானந்தா. நம்மவர் இல்லை. சைதன்யரோடு இருந்தவர். முராரி குப்தா என்பவர் சைதன்யர் வேறு யாரோ அல்ல. ராதாவும் கிருஷ்ணனும் தான். பிரேமையில் ஒன்று பட்ட அந்த இருவரின் ஒரு உருவம் என்று அழுத்தி சொன்னவர்.
1576ல் லோசன் தாஸ் என்று ஒரு கவிஞர் சைதன்ய மங்கள் என்று ஒரு சரித்ரம் எழுதினர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணதாச கவிராஜ் சைதன்ய சரிதாம்ரிதா எழுதினார் . இது பிரபலமாகியது. இதிலும் சைதன்யர் ராதா கிருஷ்ணா ப்ரேமையின் வடிவமாக காட்டப்பட்டார்.
ராதா கிருஷ்ணா காதல் பாகவதத்திலிருந்து எடுத்தாளப்பட்டு நாட்டுப்புற பாடல்களாகவும் வடிவம் பெற்றது. புராணங்களாகவும் உருவடைந்தது . 16வது நூற்றாண்டில் மாதவாசார்யார் ஸ்ரீ க்ரிஷ்ணமங்கள் என்று ஒரு காவியம் படைத்தது இப்படித்தான். 17ம் நூற்றாண்டில் அபிராம தாஸ் என்பவர் வங்காளத்தில் கோவிந்த விஜயம் எழுதினார்.
இன்னும் இரண்டே இரண்டு புத்தகங்கள் பெயரை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.
கன் ஷ்யாம் தாஸ் ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் (ஏதோ ஒரு ஹோட்டல் பெயர் அல்ல) என்று ஒருபுத்தகமும் ரகுநாத் ஸ்ரீ கிருஷ்ணா பிரேமா தரங்கிணி என்று ஒரு காவியமும் இயற்றினார்கள். கிருஷ்ணனின் தெய்வீகச செயல்களும் பிருந்தாவனத்தில் நந்தகுமாரனின் வாழ்க்கையைப் பற்றியும் ரொம்ப ரொம்ப ருசியாக இப்புத்தகங்களில் காணலாம்.
கிருஷ்ணனைப் பற்றியும், ராதையைப் பற்றியும் பல பேர் எழுதியவைகளிலிருந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை.
நினைத்தாலே இனிக்கும் அவர்கள் பிரேமையை கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தேடினால் நிறையவே தெரிவார்கள். அவரவர் விருப்பப்படி தோன்றுவார்கள். இதை விளக்குவதற்கு புத்தகத்தால் முடியாது. எழுத்தும் போதாது.
No comments:
Post a Comment