உஷ் !.... சத்தம் போடாதீர்கள். கையை கட்டிக்கொண்டு மனதை ஒருமித்து மஹா பெரியவா சொல்வதை கொஞ்சம் கேட்போமா.
''பலவிதமான கர்மாநுஷ்டானங்களை பற்றி தான் நான் சொல்கிறேன். இந்தக் கர்மங்கள், பரமேசுவர பூஜை, பரோபகாரம், எல்லாம் பிறருக்காகச் செய்யப்படுவதா? இல்லை. அவரவர் தங்களுக்கே செய்து கொள்வதுதான். பிறருக்கு உபகாரம் செய்வதால், சேவை செய்வதால், அல்லது ஸ்வாமிக்குப் பூஜை செய்வதால் அவனவனுக்கும் உள்ளுக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படுகிறது. நாம் செய்கிற சேவையில் மற்றவர்களுக்கு உண்மையான லாபமோ நஷ்டமோ, அவர்களுக்கு அது தேவையோ, இல்லையோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அதைச் செய்யும் போது நமக்கே திருப்தியும், சந்துஷ்டியும், அமைதியும் கிடைக்கிறதே. 'பரோபகாரம்' என்று சொன்னாலும்கூட, அது பர (பிறருக்கு) உபகாரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனக்கே உபகாரமாக இருக்கிறது.
பிறருக்குச் சேவை செய்வதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்கள், தியாகங்கள், சரீர சிரமம் எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக அதியேயே ஒரு நிறைவை, சந்துஷ்டியை நமக்குள் ஏதோ ஒன்று அநுபவித்துக் கொண்டிருக்கிறது.
இப்படியேதான் நாம் பூஜை பண்ணுவதால் ஸ்வாமிக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும் பூஜை, பாராயணம், க்ஷேத்திராடனம் என்று பல காரியங்களை பலவித கஷ்டங்களைப் பட்டு நாம் செய்வதிலே, நமக்கே ஒரு நிறைவு உண்டாகிறது.
நம்மிடம் நமக்குள்ள பிரியத்தினால்தான், நமது நிறைவை வேண்டியே சேவை செய்கிறோம்; பூஜை செய்கிறோம்.
மனைவியிடமும்ப , பிள்ளையிடமும், மற்றவற்றிடமும் நாம் வைக்கிற பிரியத்துக்கெல்லாம் உண்மையில் நம்மிடமே உள்ள பிரியம்தான் காரணம்; ''நம் உள்ள நிறைவுக்காகத்தான் மற்றவரிடம் பிரியம் காட்டுகிறோம்'' என்கிறது யாக்ஞவல்கிய உபநிஷத உபதேசம்! பகவானிடம் பிரியம் வைத்து நாம் பூஜை செய்தாலும் சரி, உலகத்திடம் பிரியம் வைத்து சமூக சேவை செய்தாலும் சரி, அதெல்லாம்கூடத் தனக்கு ஒரு நிறைவை உண்டாக்கிக் கொள்வதற்காக, நம்மிடமே நமக்குள்ள பிரியத்தால் செய்வதுதான். இந்த நிறைவை அடைவதற்காக, வெளியிலே எத்தனை கஷ்டம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும் நாம் பொருட்படுத்துவதில்லை.
நேரடியாக நமக்கே நல்லது செய்துகொள்ள வேண்டும் என்று பணத்தையும், இந்திரிய சுகங்களையும் தேடிப்போனால், இந்த உள் நிறைவு உண்டாக மாட்டேன் என்கிறது. மாறாக சுய காரியங்கள் நிம்மதியின்மை லும் துக்கத்திலுமே கொண்டு விடுகின்றன.
கண்ணாடியில் நமது முகத்தைப் பார்க்கிறோம். நெற்றியில் பொட்டில்லையே என கண்ணாடிக்கு சாந்து இட்டால் என்ன ஆகும்? கண்ணாடி கறுப்பாகும். பிம்பத்துக்குப் பொட்டு வைப்பது என்றால் பிம்பத்தின் மூலமான மனிதனுக்குத்தான் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
'எனக்கு' என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் உண்மையில் நம் மனசுக்குக் கரிப்பொட்டு வைப்பதாகவே—நமக்கு நாமே கரியைப் பூசிக்கொள்வதாகவே—முடிகிறது. மனசு என்கிற மாயக் கண்ணாடியில் பிரதிபலிக்கிற பரமாத்ம பிம்பத்தையே 'நான்' என்று நினைக்கிறோம். அந்தப் பிம்பத்துக்கு அழகு செய்வது என்றால் உண்மையில் பரமாத்மாவுக்கு அழகு செய்ய வேண்டும். பரமாத்ம ஸ்வரூபமான லோகத்துக்கெல்லாம் செய்கிற சேவை இதனால்தான் நிறைவைத் தருகிறது. இதே மாதிரி தான் அந்தப் பரமாத்மாவையே பூஜிப்பதும். தனக்கு என்று வைத்துக்கொள்கிற கரிப்பொட்டு, இப்போதுதான் அலங்காரத் திலகமாகிறது. அம்பாளுக்குச் செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. நமக்கே செய்துகொள்கிற அலங்காரம் அகங்காரத்துக்குத்தான் வழி காட்டும். இதை மற்றவர்களும் ரஸிப்பதில்லை. அம்பாளை அலங்கரித்தால் அதைப் பார்த்து எல்லோரும் சந்தோஷிக்கிறார்கள். பிரமாதமாகச் சலவை செய்த துப்பட்டாவை நாமே போட்டுக் கொண்டு பெருமைப் படுகிறோம். மற்றவர்கள் அதைப் பார்த்து சந்தோஷமா படுகிறார்கள்?
' அங்கே பார், கோபாலன் மேலே இஸ்திரி எப்படி ஏறியிருக்கிறது!'' -- மற்றவர் கேலியாகத்தான் பேசுவார்கள்.
நீங்கள் எல்லாரும் எனக்குப் புஷ்ப ஹாரங்களை ஏராளமாகக் கொண்டுவந்து கொடுக்கிறீர்கள். உங்களைவிட நான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு, பக்தியால் இப்படிச் செய்கிறீர்கள். நீங்களே இந்த மாலைகளைப் போட்டுக் கொள்ளாமல் இங்கே கொண்டுவந்து கொடுத்தால்தான் அலங்காரமாகிறது என்று நினைத்துச் செய்கிறீர்கள். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் நானும், 'நாம் ரொம்பப் பெரியவர்தான்' என்று நினைத்துக் கொண்டு, இந்த மாலைகளால் என்னை அலங்கரித்துக்கொண்டால் அது அகங்காரம்தான். ஆனால், நீங்களோ எனக்குச் செய்தால் விசேஷம் என்று பக்தியோடு கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். இவற்றை நான் திரஸ்கரிக்கலாமா? அதனால்தான் நீங்கள் என்னை அலங்கரித்துப் பார்க்க ஆசைப்படுகிற மாதிரி, நானும் இந்த மாலைகளை அம்பாளுக்கு ஸமர்ப்பணம் பண்ணி அலங்காரம் பண்ணுகிறேன். *
நமக்கு நல்லது செய்வதாக நினைத்துப் பணமும், புகழும் இந்திரிய சுகங்களும் தேடிப்போவது மனசில் கரியை அப்பிக்கொள்கிற காரியம்தான். பரமாத்ம ஸ்வரூபமான உலகுக்குச் செய்கிற நல்லதேதான். உண்மையில் நமக்கும் நல்லது; ஆத்ம க்ஷேமம் அதுவே. இதை நம்முடைய உள் மனமே அறிந்திருக்கிறது. அதனால்தான் தனக்கென்று செய்துகொள்கிற சௌகரியங்களில் கூட ஏற்படாத நிறைவு, பிறருக்காக அசௌகரியப்ப டும்போது ஏற்படுகிறது.
உலகம் பரமாத்ம ஸ்வரூபம் என்றால் நாமும் அதே பரமாத்ம ஸ்வரூபம்தான். மனசு என்கிற கண்ணாடியை எடுத்துவிட்டு, அந்த பரமாத்ம ஸ்வரூபமே நாம் என்பதை அநுபவித்துப் பார்க்க வேண்டும். இதுதான் தியானம். நாம் செய்கிற இத்தனை காரியங்களும் கடைசியில் ஒரு காரியமுமில்லாத அந்த ஆத்ம தியானத்தில்தான் நம்மைச் சேர்க்க வேண்டும். நான் எத்தனை எத்தனையோ அநுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றின் முடிவு இதுவே.
காரியங்களில் நமக்குப் பலவிதமான சந்தோஷங்கள் உண்டானாலும் காரியமில்லாத தூக்கத்திலிருக்கிற பெரிய சாந்தி இவற்றில் இல்லை. ஒரு நாள் தூங்காவிட்டால் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? தூக்கத்தில் அப்படிப்பட்ட சௌக்கியம் இருக்கிறது! இதிலிருந்தே காரியம் இல்லாமலிருப்பதுதான் பரம சௌக்கியம் என்று தெரிகிறது. அப்படிக் காரியமே இல்லாமல் தன் உண்மை நிலையான பரமாத்ம ஸ்வரூபத்தில் அமிழ்ந்திருப்பதுதான் தியானம்.
தூக்கத்திலே 'நாம் சௌக்கியமாயிருக்கிறோம்' என்றும் தெரியவில்லை. தூக்கம் கலைந்த பின்தான் ''சுகமான தூக்கம்'' என்கிறோம். இப்படியின்றி, பேரானந்தமாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையுடன் சாந்தமாக இருப்பதுதான் தியான யோகத்தின் முடிவான சமாதிநிலை. உள்ளுக்குள்ளே அப்படிக் காரியமே இல்லாமல் இருக்கப் பழக்கிக் கொண்டு விட்டால், பிறகு வெளியில் எத்தனை காரியம் செய்தாலும் கூட ஆத்மசாந்த அநுபவம் குலையாது.
தக்ஷிணாமூர்த்தியின் சாந்தம், பூரண பிரக்ஞை கொண்ட ஆனந்த நிலை. அது தூங்கும்போது மனம் அடங்குவது போன்றதல்ல. தூக்கத்தில் மனத்தை நாம் ஸ்வாதீனமாக அடக்கவில்லை. அதுவே களைத்துப்போய் அடங்குகிறது. அப்படிப்பட்ட அடக்கத்தை நாம் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டு காக்க முடியாது. தூங்கும்போது நம் ஸ்வாதீனத்தில் இல்லாமலே அடங்குபவை எல்லாம் கனவிலும் மறுபடியும் நாம் விழிக்கும் பொழுதும், நம் ஸ்வாதீனமில்லாமலே திருப்பி வந்து விடும்..
சாவு என்பது ஒருவகைத் தூக்கம்தான். அப்போதும் மனசு அடங்குகிறது. ஆனால், மறு பிறவியில் தேகம் வந்தவுடன் இந்த மனசும் மீண்டும் அதற்குள்ளிருந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. எனவே, ஸ்வாதீனமாக மனஸை அடக்கினாலே அதை அடக்கிய நிலையில் நாம் சாசுவதமாக வைத்திருக்க முடியும். தக்ஷிணாமூர்த்தி காரியம் இல்லாமல் இருந்தாலும், முழு பிரக்ஞையுடன் அப்படி இருக்கிறார். உள்ளுக்குள் காரியம் இல்லாததாலேயே வெளியிலே அவரால் எத்தனையோ காரியம் செய்ய முடிகிறது. வெறுமே உட்கார்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்திதான் ஆனந்தத் தாண்டவக் கூத்தும் ஆடுகிறார். திரிபுர தகனம் செய்கிறார். பிக்ஷாடனம் பண்ணுகிறார். பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு ஊர் ஊராகத் திண்டாடுகிறார். உள்ளே அடக்கமாக இருக்கிறார்; வெளியிலே கூத்தடிக்கிறார். நமக்கும் உள்ளே அடக்கம் வந்துவிட்டால் வெளியிலே எத்தனை காரியமும் செய்யலாம்.
தக்ஷிணாமூர்த்திக்கு நேர் எதிராக நாம் இருக்கிறோம். நம்மை எல்லோரும் பற்றே இல்லாமல் சாந்தியுடன் இருப்பதாக நினைக்க வேண்டும் என்று வெளியிலே வேஷம் போடுகிறோம். உள்ளுக்குள்ளே ஒயாமல் சஞ்சலித்து ஆட்டம் போட்டுக் கொண்டேயிருக்கிறோம்.
முதலில் வெளி அடக்கம் உண்டானால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளடக்கம் சித்திக்கும். இதனால்தான், 'இந்திரிய வியாபாரங்களைக் குறைத்துக் கொள். கூட்டத்தில் சேராதே! 'உலகுக்கு நல்ல செய்வது' என்பது உள்பட சகல காரியங்களையும் விலக்கப் பிரயாசைப்படு; பணத்தைப் பக்கத்தில் சேர்க்காதே; காட்டுக்குப் போ' என்றெல்லாம் சொன்னார்கள். இப்படி இதை விடு, அதைவிடு என்று நமக்கு இஷ்டமானதை எல்லாம் துறக்கச் சொன்னால் நாம் கேட்போமா? நிச்சயம் மாட்டோம். சித்தம் சுத்தமானால்தான் இதைச் செய்யப் பக்குவம் வரும்.
இதனால்தான் முதலில் சித்தம் சுத்தமாவதற்காக 'இதை விடு, அதைவிடு' என்று சொல்வதைவிட முக்கியமாக 'இதைச் செய், அதைச் செய்' என்று பலவிதமான கர்மாக்களை விதித்திருக்கிறது. ஒரு காரியத்தில் ஈடுபடுவதே நமக்கு இயல்பாக, சுபாவமாகக் கைவருகிறது. எனவே இந்த மாதிரி, நமக்குச் சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் சாஸ்திரம் சொல்கிற காரியங்களை ஆரம்பிக்கிறோம். இதிலும் ஆரம்பத்தில் விருப்பு வெறுப்பு தலைத்தூக்கத்தான் செய்யும். இருந்தாலும் எடுத்த எடுப்பில் சிந்தையை அடக்கித் தியானம் செய்வதைவிட, ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சமாவது விருப்பு வெறுப்புகளை, சௌகரி்ய அசௌகரியங்களைப் பாராமல் கர்மாக்களை அநுஷ்டானம் செய்ய முடிகிறது. இப்படி ஒரு பிரயத்தனத்தை ஆரம்பித்துவிட்டால், அப்புறம் பகவத் கிருபையால் விருப்பு வெறுப்புகள், சௌகரிய அசௌகரிய எண்ணங்கள் மேலும் மேலும் குறைந்து ஸத்கர்மாக்களை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆசையும் துவேஷமும் குறைவதால் சித்தம் சுத்தமாகிறது. இப்படிச் சுத்தமான பிறகுதான் அது ஒருமுகப்பட்டு தியானத்தில் அமிழ முடியும். இந்த நிலையில்தான் எல்லாக் காரியங்களையும் விட்டுவிட்டு, காட்டுக்குபோய் மூக்கைப் பிடித்துக் கொள்ள முடியும். இதன் முடிவில் நல்ல தியானம் சித்தித்து விட்டால் அப்புறம் எல்லாமே பரமாத்ம ஸ்வரூபம் என்றாகிவிடும். இந்த நிலையில் எதைவிட்டும் ஓடிப்போய் காட்டில் உட்காரப் வேண்டியதில்லை. நிஷ்டை என்று தனியாக ஒன்றைச் சொல்லி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டியதுமில்லை. நிஷ்டை என்று தனியாக ஒன்றைச் சொல்லி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டியதும் இல்லை. காடு, நாடு, ஏகாந்தம், கூட்டம் எல்லாம் பரமாத்மாதான். காரியம், தியானம் இரண்டும் பரமாத்மாதான். நம் ஆத்ம சாந்தியை எதுவுமே குலைக்காது . தக்ஷிணாமூர்த்தி போல உள்ள மாறாத சாந்தத்தோடு, வெளியே எத்தனை கொட்டமும் அடிக்கலாம்.
கீதையில் பகவான் ''அர்ஜுனா உனக்குண்டான ஸ்வதர்மத்தைப் பண்ணு, அதாவது, யுத்த காரியம் பண்ணு'' என்றார். அவரே எந்தக் காரியத்தையும் பண்ணாத தியான யோகத்தையும் சொன்னார். தியானத்தின் எல்லை நிலத்தில் பிரம்ம நிஷ்டையில் சதாகாலமும் இருந்த ஜனகர் முதலானவர்கள் லோக க்ஷேமத்துக்காக எப்போது பார்த்தாலும் காரியம் செய்ததாகவும், தானும்கூட அப்படியே செய்வதாகவும் சொன்னார். இதென்ன, ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அநுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்ப நிலையில் கர்மாநுஷ்டானம்; அதனால் சித்த சுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம், இத்யாதி; இதில் ஸித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில் லோக க்ஷேமத்திற்காக கர்மா — உள்ளே அடக்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.
'முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான். நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும், எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும்' என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக்கொண்டிருக்கிற நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள் — வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரமம் இதுகளையே — சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாக்ஷாத் நம் பகவத்பாத ஆச்சாரியாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை (பக்தி) , முடிவில் ஞானம்.
இப்படி கிரமப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையோடு பக்தியோடு முன்னேறினால், அதற்குறிய பக்குவம் வருகிறபோது ஆத்ம தியானத்தில் ஈடுபட்டு உள்ளடக்கம் சித்திக்கும். அதன்பின் லோக சங்கிரஹம் (உலகுக்கு நன்மை செய்வது) என்பதற்காக எத்தனை வெளிக் காரியத்திலும் ஈடுபடலாம்.
பராசக்தியாகிய சாந்தியை உள்ளத்தில் வைத்துக் கொண்டு, உள்ளே நிறைந்திருக்கும் சாந்தத்தை வெளியிலும் தன்னுடைய மோன ஸ்வரூபத்தில் காட்டிக்கொண்டு விளங்கும் தக்ஷிணாமூர்த்தியை, நாம் தினந்தோறும் சிறிது ஸ்மரிப்பதே ஆத்ம தியானத்திற்கு அழைத்துச் செல்லும் பெரிய உபாயம்.
கர்மாவை எல்லாம் விட்டுவிட்டு தியானம் செய்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். கர்மாவும்கூட தியானமாக இருக்கிற உச்ச நிலையும் ஒரு பக்கம் இருக்கட்டும். இவை பிற்பாடு நமக்கு வரவேண்டிய நிலைகள். ஆனால் இப்போது, நாம் உடனடியாக கர்மா செய்கிறபோதுகூட இந்த ஆரம்ப திசையிலேயே பிரதி தினமும் கொஞ்ச காலம் காரியமில்லாமல், விச்ராந்தியாக, சாந்தமாக இருப்பதற்காகச் சிறிது தியானம் செய்யப் பழகவேண்டும்.
கர்மா, பக்தி (உபாஸனை) , தியானம் (ஞானம்) எல்லாம் முதலில் சேர்ந்து சேர்ந்து வரவேண்டும். இதெல்லாமே ஒன்றுக்கொன்று விரோதமில்லை. ஒன்றையொன்று இட்டு நிரப்புவது (complementary) தான். கடைசியில் ஒன்றொன்றாக மற்றதெல்லாம் உதிர்ந்து தியான சமாதியில் மட்டும் நிற்கும். அந்த சமாதியின் நினைப்பாவது நமக்கு இப்போது, ஆரம்ப கட்டத்தில் இருக்கவேண்டும். அதுதானே நம் லக்ஷியம்? அதனால் அன்றன்றும் சில க்ஷணமாவது சாந்தமாக, வேலைகளையெல்லாம் விட்டு தியானம் அப்பியசிக்க வேண்டும். ஆனால், இதற்காக, "கர்மாநுஷ்டானமாவது? அதிலென்ன ஸார் இருக்கிறது? வெறும் ஸுபர்ஸ்டிஷன் என்று சொல்லாமல் — 'ரிச்சுவல் (சடங்கு) எல்லாம் மீனிங்லெஸ் (அர்த்தமில்லாதது)" என்று சொல்லாமல், நிறைய அநுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருப்போம். இதனால் நம் சித்தமலம் போகப் போகத்தான் உள்ளேயிருக்கிற ஸ்வயஞ்சோதி அநுபவத்தில் தெரிய ஆரம்பிக்கும்.
(இப்போது புரிகிறதா ஏன் மகா பெரியவா கழுத்தில் மாலை அணியாமல் தலையின் மீது வைத்துக்கொண்டார் எனது. குருவின் பாதுகை, சிரத்தில் இருக்கவேண்டியது. காமாட்சிக்கு அணியவேண்டியது என்ற மாலையை தனது சிரம் அவள் பாதங்களில் இருப்பதாக பாவித்து சிரத்தில் சாற்றிக் கொள்கிறார். அவரே காமாக்ஷி ஸ்வரூபம்.)
No comments:
Post a Comment