Saturday, July 8, 2017

''கலெக்டரின் வயிற்று வலி ''
J.K. SIVAN

ஹிந்துக்களுக்கு எத்தனையோ தெய்வங்கள். முக்கியமாக திருப்பதி பாலாஜி அநேகரின் குலா தெய்வம். இஷ்ட தெய்வம். கலியுக வரதன். கண்கண்ட தெய்வம். நினைத்ததை நடத்தி வைக்கும் பகவான் என்று நம்பிக்கை.

ஒரு சம்பவம் உங்களுக்கு தெரியுமா? வெள்ளைக் காரன் காலத்தில் நம்மை ஆண்டவர்களில் பிரபலமான ஒரு பெயர் ஸர் தாமஸ் மன்றோ. சென்னையில் தீவுத் திடலில் குதிரை மீது வெகு காலமாக லாகவமாக அமர்ந்திருப்பவர். அவரைத் தெரியாத மெட்ராஸ் ஆசாமி கிடையாது.

இப்போது திருமலை திருப்பதி ஆந்திரர் வசம் இருந்தாலும் அப்போது சென்னை மாகாணத்தில் அது ஒரு பகுதி. சித்தூர் மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு கலெக்டர் மன்றோ. அப்போது எல்லாம் மந்திரிகள் கிடையாது. கலெக்டர்கள் வைத்தது தான் சட்டம். வேலை விஷயமாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி மன்றோ போகவேண்டி இருந்தது. திருப்பதி பாலாஜி பெருமை மஹிமை பற்றி யாரெல்லாமோ சொல்லி கேட்டிருந்தாலும் மன்றோ அதைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர் நம்பிக்கையும் வேறு மதமும் வேறு.

‘திருப்பதியில் தினமும் எவ்வளவு வசூல் தேறும்? அதை எப்படி தனது அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டும் ’ என்பது மட்டுமே மன்றோவின் கவலை.

வெங்கடாசலபதி கோவிலுக்கு போனாலும் அவனைப் பார்ப்பதில்லை. இந்தியாவின் மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தங்கள் பணம் நகைகள் எல்லாவற்றையும் கணக்கின்றி திருப்பதி உண்டியலில் ல் போடுவதால் அந்த உண்டில் கலெக்ஷன் மேல் தான் கவனம்.

‘கோயில் அதிகாரிகள் இந்தப் பணத்தைச் சுருட்டாமல் இருக்க கண்குத்தி பாம்பாக அதிலே தான் குறி மன்றோவுக்கு. கோயில் வேலையாட்களை, அதிகாரிகளை, அர்ச்சகர்களை சரமாரியாக திட்டுவார். தண்டனை கொடுப்பார் . அதால் அவர்களுக்கு மன்றோ என்ற பெயர் சொன்னாலே சிம்ம சொப்பனம்.

''ஸ்ரீநிவாஸா, நீ தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்று பாலாஜி முன் முறையிடுவார்கள். மொட்டையடிக்க வருபவர்களை கேலி செயது வேறு இடம் கிடைக்கவில்லையா மொட்டைபோட என்றும், இரு மொட்டைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் மன்றோவுக்கு பிடிக்கும். ''அபசாரம்’ என்று மனதிற்குள் சபிப்பார்கள் அர்ச்சகர்கள். யாரேனும் வாயைத் திறந்தால் அவன் பிணம் தான் மிஞ்சும் .

வேங்கடாசலபதிக்கு தெரியாதா எப்போது என்ன செய்யவேண்டும் என்று?

வழக்கம்போல் ஒரு நாள் வசூல் செய்ய மன்றோ தனது படையுடன் வந்தான். வசூல் விவரம், கோவில் வழிபாடுகளில் கிடைத்த பணம். காணிக்கையாக வந்த பொருள், பணம், கையிருப்பு எல்லா கணக்கும் தயாராக வைத்திருந்தார்கள் கோவில் அதிகாரிகள்.

ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வையிடுவதற்கு முன்னதாக, தன்னிச்சையாக ஆலயத்தை அதிகார மிடுக்குடன் வலம் வந்தான். புனிதமான க்ஷேத்ரத்தில் ஒரு வெள்ளையன் மரியாதை இன்றி சுற்றி வருவது அர்ச்சகர்களும் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வது? பெரிய அதிகாரி ஆயிற்றே.

கோவிலின் ஒரு மூலையில் சில பக்தர்கள் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண்பொங்கலை, இலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மன்றோ முகம் சுளித்தான். அருவறுப்படைந்தான்.

''சே இதைப் போய் தின்கிறார்களே, என்னென்ன வியாதிகள் பரவுமோ ?

''எல்லாரும் முதல்ல அதைத் துப்பி விட்டு தூர எறியுங்கள்'' என்று அருவருப்போடு கண்டிப்பான குரலில்கத்தினான்.

பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு

பக்தர்களை விரட்டிவிட்டு மன்றோ பிராகாரத்தில் ஒரு சில அடிகள் எடுத்து வைத்தவன் தாங்கமுடியாத வயிற்று வலியால் துடித்தான். ''ஐயோ அப்பா என்று வலி தாங்காமல் அலறினான் மன்றோ. சுருண்டு விழுந்தவனை அலுவலக அதிகாரிகளும், கோயில் ஊழியர்களும் தூக்கிவிட்டு பிடித்துக்கொண்டு கலெக்டர் பங்களாவுக்கு கொண்டு சென்றார்கள். படுத்த மன்றோவுக்கு மீண்டும் வயிற்றில் சுருக்கென்று வலி. ஆங்கிலேய மருத்துவர்கள் வந்து வைத்தியம் செய்தனர். வயிற்று வலிக்கான காரணம் புரியவில்லை.

மருந்துகள், மாத்திரைகள், உறக்கம் வருவதற்கான ஊசிகள் – எதுவும் நிவாரணம் தரவில்லை. தொடர்ந்த வலியும் குத்தலுமாக பல நாட்கள் கிழிந்த துணி ஆனான் மன்றோ.

ஒருநாள் திருப்பதியில் இருந்து, கோவில் நிர்வாக விஷயமாக மன்றோவைச் சந்திக்க ஓர் அர்ச்சகர் வந்தபோது அவரிடம் புலம்பினான் மன்றோ.

''துரை அவர்களே, நான் சொன்னால் கோவிக்கமாட்டீர்களே? ” என்று தயங்கினார் அர்ச்சகர்.

'' சொல்லுங்கள்… எனக்கு வயிற்று வலி தீர வேண்டும். அன்றைக்குக் கோயிலில் தொடங்கிய வலி இன்னமும் நீங்கிய பாடில்லை. சீக்கிரம் ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்” -- மன்றோ.

''சுவாமி பிரசாதத்தை நீங்க மரியாதைக்குறைவாய் பேசினதால தான், ஒங்களுக்கு இப்படி ஒரு நிலைமை உண்டாகி இருக்கும்னு தோண்றது. இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு”

''உடனே சொல்லுங்க . அது என்ன பரிகாரம்? நான் ரெடி. இப்பவே செய்றேன்'' கெஞ்சினான் மன்றோ.

'' பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை சாப்டுங்கோ. வந்த வலி தானா போயிடும்” என்றார் அர்ச்சகர்.

மறுவார்த்தை பேசாமல், மாலவனின் பிரசாதமான வெண்பொங்கலை வாங்கி, கண்களை மூடி பெருமாளை தியானித்து, அதை உண்ணத் தொடங்கினான் மன்றோ.

ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை சாப்பிட்ட மன்றோவின் வயிற்று வலியும், குத்தல் வலியும் ஆச்சர்யமாக இருந்த இடம் தெரியவில்லை. காணாமல் போனது. ஆச்சரியப்பட்டான் மன்றோ.

''எங்கள் தேசத்து மருத்துவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, பொங்கல் பிரசாதத்தால் தீர்ந்தது என்றால், அது உண்மையில் உங்கள் கடவுள் வெங்கடாசலபதி அருளாசிதான்”.

நெகிழ்ந்து போய் தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத்துக்கும் பெருமாளுக்கு நடக்க வேண்டும் என்று, வயல்பாடு தாலுகாவில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார் கலெக்டர் மன்றோ .

அத்துடன், ஒரு பக்தனாகப் திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார். கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறதாம். அந்தக் கட்டளை ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்றே அழைக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...