நமஸ்காரம் சிவ வாக்கியரே - 6 - J.K. SIVAN
இப்போது ஆகாரம் ஒரு கட்டுப்பாட்டில் இல்லை. சிலர் ஆகாரத்தை மருந்தாக உண்கிறோம்.
சார் முருங்கை கீரை எனக்கு அவசியம். ரிபோபிளவின் (RIBOFLAVIN) இருக்கு. எனக்கு டாக்டர் ராமதுரை MUST என்று சொல்லிவிட்டார். வாழைத்தண்டு கூட்டு, ஜூஸ், கறி இல்லாம பதினைந்து வருஷமா சாப்பாடே இல்லை. உருளை, வாழை, கிழங்குகள் மூச், கிட்டேயே சேக்கறதில்லே. கீரை வாரம் மூணு நாள். இது ஒருரகம். ''தயிர் யூஸ் பண்றதில்லயே. வெறும் மோர் தான். உப்பு இல்லாமல். ஊறுகாய் பாட்டிலை வெளியே குப்பை தொட்டியில் போட்டுவிட்டேன் ' எங்க குடும்பத்தில் வெங்காயமோ, பூண்டோ சமையல் அறைக்கு வந்ததே இல்லை. கத்திரிக்கா டொமட்டோ அலர்ஜி சார் '' இப்படி சிலர்
யார் எதை தின்பது என்று இல்லாமல் இளைய தலைமுறைகள் வெளிநாடு சென்று அடையாளம் இழந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். இங்கு வந்தும் அது தொடர்கிறது தான் அநியாயம்.
''உங்கப்பா வெளியே ஒரு இடத்திலும் சாப்பிடமாட்டானே. தண்ணி கூட குடிக்கமாட்டான். நீ கண்டதெல்லாம் விழுங்குகிறாயே. அனாச்சாரம் '' என்று சிலர் வசை பாடுகிறார்கள். எனவே யார் எதை சாப்பிடவேண்டும் என்ற விஷயம் இனி பேச வழியில்லை. காலம் மாறிவிட்டது.
கோமாதா குலமாதா என்ற குரல் ஒருபக்கம் ஒலித்தாலும், மாடு சாப்பாட்டு தட்டில் சிறு துண்டங்களாக வயிற்றில் போய்க்கொண்டு தானே இருக்கிறது. யார் எதை உண்கிறார்கள் என்ற பேதம் இல்லாமல் போய் வருகிறதே. சிவ வாக்கியர் கடுமையாக புலால் மறுத்தலை சாடுகிறார்.
அதை ஆதரித்தோ எதிர்த்தோ நமது கருத்து தேவை இல்லை என்று மேலே செல்கிறோம். அந்த பாடல்களை தொடவில்லை.
சிவவாக்கியர் ஒரு புரட்சி சித்தர். சாதியை பேதத்தை எதிர்ப்பவர். எல்லா ஜலமும் ஒன்று சேர்ந்து தானே கடலாகிறது. கடலில் எது வித்யாசமான ஜலம் ? ஐம்பூதங்களில் நீரை பிரித்து சொல்லமுடியுமா? எல்லாம் ஒன்றல்லவா?
அந்த கால பெண்கள் அணியும் நகை பெயர்கள் சொல்கிறார். வாளி , காரை, கம்பி, பாடகம், இதெல்லாம் அணிந்திருக்கிறார்கள் பெண்கள். அந்த நகைகள் என்ன? எல்லாம் தங்கம் தானே. அது தானே வேறு வேறு பெயர்களில், உருவத்தில் உள்ளது. அதுபோல் தானே சாதிகள் பேதங்கள் எல்லாமே. இறைவன் படைப்பில் அனைத்து ஜீவன்களும் ஒன்றுதானே என்கிறார்.
“சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே”
பெண்ணை கல்யாணம் பண்ணிக்க கொள்ள முதலில் குணத்தை (அவள் குணம் மட்டுமல்ல, அவள் பெற்றோர் உற்றோர்கழுடையதும் இப்போது அவசியமாகிவிட்டது) பணத்தால் முடிவு செய்யப்பட மணங்கள் மனம் இழந்து முறிந்து விடுகிற அவதி குறைந்தா போய்விட்டது. கோர்ட்கள் இதற்காகவே உள்ளனவே.
குலத்தை காட்டிலும் முக்கியம் குணம் தான் என்று அக்கால இளைஞர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறாரே. சிலராவது இக்காலத்திலும் சிவவாக்கியர் வார்த்தையை கேட்கட்டுமே.
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)
கீழ் குலத்தைச் சேர்ந்த பெண்ணும் மேல் குலத்தைச் சேர்ந்தவளும் இல்லறத்தில் ஒரே சுகத்தைத்தான் அளிக்கிறார்கள். இதில் அவள் என்ன இவள் என்ன ? இரண்டும் ஒன்றுதான். ஆகவே சாதிபேதம் பார்க்காமல் இல்லறத்திற்கேற்ற பெண்ணை கண்டுபிடித்து தேடி, அடைந்து சுகமாக இரு என்கிறார். கருப்பு கோட்டு அது உலவும் கோர்ட்டோ நெருங்காதே என்கிறார். தாமே இல்லறத்திற்கேற்ற குலப்பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்து காட்டினார் சிவ வாக்கியர் என்கிறார்கள். அவரைப் பற்றியே சரியாக தெரியாதபோது அவர் ஜோடியைப் பற்றி என்ன அறியமுடியும். யாரோ சொல்வது.
சிவவாக்கியருக்கு ராமனைப் பிடித்திருக்கிறது. ராம! ராம! என்று செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப, தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா நன்மைகளும், கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களுமீ ராம நாம பாராயணத்தில் கிடைத்துவிடும் என்று நிச்சயமாக கூறுகிற ஒரு அருமையான பாடல்.
ஏதோ புண்யம் கிடைக்கவேண்டும் என்று எதற்காக அப்பா, ஊர் ஊராக சென்று குளத்தில் மூழ்குகிறாய். காலை மத்தியானம் சாயந்திரம் என்று மூன்று வேலை ஸந்த்யாவந்தனம், பித்ரு தர்ப்பணம் என்று அலைகிறாய். தினமும் நீ மனம் கனிந்து உவந்து ஸ்ரீ ராம ராம ராம என்று சொல்வதன் மூலம் அத்தனை புண்யங்களும் பலனும் உன்னை வந்தடையுமே என்கிறார் இந்த பாடலில்: எளிமையாக புரியும்.
“அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”
கம்பரின் செய்யுள் ராமாயணத்தில் இதை வலியுறுத்துகிறது.
நன்மையும் செல்வமும் நாலும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால்
சிவ வாக்கியர் சைவரா வைணவரா என்ற யோசனை வேண்டாம். ராமநாமத்தை, அதன் மஹிமையை உணர்த்தியவர் ஐந்தெழுத்தான ஓம் நமசிவாய பற்றியும் அருமையாக எழுதியிருப்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
No comments:
Post a Comment