Monday, July 17, 2017

அப்பா... ஓ அப்பா ..!!::

அப்பா... ஓ அப்பா ..!!:: J.K. SIVAN

உலகத்தில் அப்பா என்ற பதவி ஒவ்வொரு ஆணுக்கும் உரித்தானது. பிள்ளையே அப்பாவாகும்போது தான் தனது அப்பாவைப் புரிந்து கொள்கிறான். ஒவ்வொரு அப்பாவும் தனது மகன் எப்படி இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறான். கனவு எல்லா அப்பாக்களுக்கும் நிறைவேறுவதில்லை. சிலர் கனவே காணாத பொறுப்பற்ற அப்பாக்களாகவே வாழ்ந்து மறைபவர்கள் .
அப்பா தனது மகனை, தான் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறானோ, அவ்வாறெல்லாம் இருக்காமல் வளர படாத பாடு படுவான். முக்கால் வாசி சாதாரண அப்பாக்கள் நினைப்பது தன்னை மாதிரி தன் பிள்ளை இருக்கக் கூடாது.

தன்னைக்காட்டிலும் உயர்ந்தவனாகவே அவன் வளர வேண்டும் என பிரயத்தன ப்படுவான். படிக்காத அப்பா தனது பிள்ளை நன்றாகப் படித்து முன்னேறவேண்டும். பெரிய பதவி வகிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். சிலர் அதை நிறைவேற்ற என்னவெல்லாம் பாடு படுகிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்கிறோம்.

சக்திக்கு மீறி கடன் வாங்கி, சொத்துக்களை விற்று பிள்ளையின் முன்னேற்றத்துக்குத் தியாகம் செய்த அப்பாக்கள் தெய்வத்துக்கு அடுத்தபடி.

தனது ஆவல், ஆசை, எண்ணம், சுதந்திரம், ஏன், தேவை, இதையெல்லாம் திரஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு தபஸ்வி போல் பிள்ளையின் முன்னேற்றத்துக்க்காக விழாதவன் காலில் எல்லாம் விழுந்து வியர்வை சிந்திய பெற்றோர்களை நான் அறிவேன்.

மகன் என்ன செய்கிறான்?. இளம் வயதில் ஒரு பயத்தோடும், சற்று ஒதுங்கியும் தான் அப்பாவோடு பழகுகிறான். அம்மாவிடம் உள்ள சலுகை, சவுகரியம், சுதந்திரம் எல்லாம் அப்பாவிடம் இல்லை. அம்மா வேண்டுமா அப்பா வேண்டுமா? என்றால் முதலில் அம்மா தான். இப்படி வளர்கிறவன் , கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியவனாகி, உலகம் இவ்வளவு தான்! என்று புரிபடும்போது தான் அப்பாவையும் புரிந்து கொள்கிறான். சிலர் அப்பவும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வேதனை.

தனது வளர்ச்சி, தனது முன்னேற்றம் சகலத்துக்கும் தானே, தனது அறிவே, தனது திறமையே காரணம் என்று கொஞ்சம் ''கனம்'' தலைக்குள் ஏறி அப்பாவை துச்சமாக நினைக்கிற மகன்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டியவர்கள். அவர்கள் அப்பாவாகும்போது, தானே தெரிய வரும். அப்போதும் தெரியாதவர்கள் தான் வாழ்க்கையில் திண்டாடுபவர்கள்.
ஏதோ ஒரு கதை, நிஜமாக எங்கோ நடந்ததோ இல்லையோ, வழக்கில் பலர் கேட்ட ஒன்று இது.

ஒரு அப்பா படிக்காத, தோளில் தண்ணீர் சுமந்து வீடு வீடாக சப்ளை செய்பவர். பையனை உயிரைக்கொடுத்து படிக்க வைத்து, அவன் நன்றாக படித்து, கலெக்டர் ஆகி, ஆபிஸ் பங்களா. பெரிய இடத்தில் கல்யாணமாகி மனைவி. அம்மா இல்லை. கிழ அப்பா பங்களாவின் ஓரத்தில் ஒரு சின்ன அவுட் ஹவுசில் தனியே சிறை வாசம். வேளா வேளைக்கு ஒரு நசுங்கிய எவர் சில்வர் தட்டில் சாப்பாடு பங்களாவிலிருந்து சமையல் காரர் மூலம் அவுட் ஹவுசில் அப்பாவுக்கு கிடைக்கும் .

அப்போதும் கிழவர் ஒரு தவலையில் நீர் மொண்டு தினமும் செடி கொடிகளுக்கு எல்லாம் ஊற்றுவார். ஒருநாள் சில பெரிய இடத்து நண்பர்களுடன் கலெக்டரான பிள்ளை பங்களாவில் ஹாலில் பேசிக்கொ ண்டிருக்கையில் பெரியவர் ஒரு தண்ணீர் தவலையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் எங்கோ நுழைகிறார்.

''யார் அவர்?''--- நண்பர்கள் கேட்க பையன் கூசாமல்

''ஹீ இஸ் அவர் பேமிலி கார்டனர் '' -- எங்கள் குடும்ப தோட்டக்காரர்''

கிழவருக்கு ஆங்கிலம் பேச வராது. ''who is he ? gardener ''வார்த்தை கூடவா புரியாது?.

பிள்ளை சொன்னது மனம் வெந்தது. தோளில் குடத்தில் நீரோடு, கண்களில் கண்ணீரோடு கிழவர் தனது சிறைக்கு திரும்புகிறார்.

இதே போல் இன்னொரு கதை

- ஒரு கிழவர் காலமானவுடன், அந்த பழைய அறையை சுத்தம் செய்த மகன் மருமகள் , அவரது சாமான்களை தூக்கி வெளியே எறியும்போது அவர்கள் பிள்ளை கையில் இறந்த தாத்தா உபயோகித்த நசுங்கிய தட்டு
.
''ஏண்டா அதை பங்களாவில் எடுத்துக்கொண்டு வந்தாய்? மகன் பிள்ளையை அதட்டுகிறான்.

''நீ தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்த மாதிரி நான் பெரியவனானதும் உனக்கு சாப்பாடு கொடுக்க இந்த தட்டு வேண்டாமா அப்பா? தாத்தா எல்லாரும் இதுலே தானே சாப்பிடணும்னு நீ ஒருநாள் எங்கிட்ட சொன்னே அதுக்காக''
.
காலம் மாறிவரும் நிலையில் அப்பாக்களின் காலம் மகன்களின் காலத்தோடு எப்படி ஒத்துப்போகும்? பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் எப்போதும் ஒன்றாகவேயா இருக்கிறது?

நாகரிகம், விஞ்ஞான வளர்ச்சி, இவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிறைய அப்பாக்கள் நிழலுக்கு பழைய மரத்தடியிலேயே ஒதுங்குகிறார்கள். தமக்கு தெரிந்த பழைய முறைகள், பாந்தமாக இருக்கிறது என்று அவர்கள் வாழ்வது வேகத்தின் வளர்ச்சியில் அடித்துச் செல்லப்படும் மகன்களுக்குப் பிடிக்கவில்லையா புரியவில்லையா?

''முட்டாள்கள், பைத்தியங்கள்'' என்ற இலவச டிகிரி பட்டங்கள் அப்பாக்களுக்கு எல்லாம் இப்போது எளிதில் கிடைக்கிறது. பணவசதி, எதிர்பார்ப்பு, நிர்க்கதி, போன்றவைகளால் பீடிக்கப்பட்டு நிறைய அப்பாக்கள் எல்லாவற்றையும் காது நிறைய, மனம் கொதிக்க, இதயம் ஓடிய, மறுவார்த்தை பேசாமல் வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள். சில அப்பாக்கள் இதை சகிக்கமுடியாமல் எதிர்க்கிறார்கள். வீடுகள் பிளவு படுகின்றன. தேவையற்ற தனிமை, சக்தியிழந்த, எல்லாமே இழந்த அவர்களை சில சராணாலயங்கள் தான் அணைக்கிறது. மகன்கள் இல்லாத அப்பாக்கள் அம்மாக்கள் கதியும் இது தான். என் நண்பன் ஒருவன் 86வயதில் மனைவி இழந்து, 5அடிக்கு ஆறு அடி தடுப்புக்குள் பல ஆயிரங்கள் கொடுத்து சரியான சாப்பாடு இன்றி இன்று மாலைவரை வேறு எங்காவது கொஞ்சம் வசதியோடு இடம் கிடைக்காதா என்று தேடுவது எனக்குத்தெரிந்தும் நான் எப்படி உதவ முடியும்?

தவிக்கும் அப்பாக்கள் வேறு யாரும் இல்லை, இன்னும் கொஞ்சம் காலத்திலேயே மகன்களே நீங்கள் தான்.

சில மகன்கள் புத்திசாலிகள். சீர் தூக்கிப் பார்க்கிறார்கள். என் தந்தை எனது சந்தோஷத்துக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்டவர் என்று அடிமனதில் நிரம்ப கவனமாக இருப்பவர்கள். எது அப்பாவுக்கு பிடிக்கும் என்று தனக்குத் தெரிந்ததையோ , அம்மாவிடம் கேட்டோ அப்பாவைத் திருப்தி படுத்துவதை சில குடும்பங்களில் கண்டு மகிழ்ச்சியடை
ந்திருக்கிறேன். நான் அந்த விதத்தில் பாக்கியசாலி.

தாய் தந்தையின் நலனுக்காக விட்டுக்கொடுக்காத பிள்ளைகள் தங்களது வயோதிக காலத்தில் அத்தகைய ''சுகத்தை'' தங்களது பிள்ளைகளிடமிருந்து பெறுவார்கள் என்பது தான் காலம் விதிக்கும் விதி.

இதைத்தான் சுருக்கமாக தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொல்லியிருக்கிறார்களோ?

அப்பா இல்லாத போது தான் அப்பாவின் அருமை புரியும், தெரியும் என்ற நிலை வேண்டாமே. அப்பாவும் அம்மாவும் இருக்கும்போது அவர்களை தெய்வமாக போற்றும் மகனாக இருக்கலாமே. என்ன குறைவு அல்லது குறை இதில்? .நடுக்கடலில் ஒரு படகில் போய்க்கொண்டிருக்கிறோம். படகு பல அலைகளை, வேகமாக எதிர்க்கும் நீரோட்டங்களை எல்லாம் வென்று, காற்று எதிரில் பலமாக தடுத்தபோதும் அதையும் மீறி மேற்கொண்டு செல்கிறது. சுகமாக உட்கார்ந்து இருக்கிறோம். படகைச் செலுத்துபவன் தான் அப்பா.

கரை அடைந்ததும் அவனையோ, அவன் செய்த சாதனைகளோ நினைவில் கொள்வது இல்லை. இது தான் வாழ்க்கை. அவன் இல்லாதபோது நாமே தட்டுத் தடுமாறி கரை சேரும்போது தான் ''அடடா அவர் இல்லையே'' என்ற ஒரு ஆதங்கம் பிறக்கிறது. இது தான் நியதி. இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது இறைவன் வகுத்தது. எனவே எதிர்கொள்வோம். அவன் மீது நம்பிக்கை தொடர்ந்தால் நாமே நல்ல அப்பாவாகக் கூட மாற முடியும். மனசாட்சி தான் ஆத்மா. அது இருப்பதை உணர்வதை இறைவனை உள்ளே காண்பது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...