Tuesday, July 25, 2017

பாம்பாட்டிச் சித்தர்

                                                      பாம்பாட்டிச் சித்தர்
       
பாம்பாட்டி சித்தர்  ராஜாவின் உடலில் இருந்தாலும்  ஞானியாக வாழ்ந்த மஹான்.  ராஜாவின் மனைவிக்கு முதலில்  இதென்ன  இறந்து போன என் கணவன் இவ்வளவு ஞானத்தோடு பேசுகிறான் என்று ஆச்சர்யப்பட்டாலும் நிச்சயம்  இது அவன் இல்லை என்று  புரிந்து கொண்டாள்.

''சாமி,  நீங்க  யாரு?  எப்படி இவரு உடம்புக்குள்ளே  இருந்து பேசறீங்க. அவருக்கு   இதெல்லாம் தெரியாதே. சாப்பிட மட்டும்  தானே  வாயைத் தொரப்பாரு?  கையெடுத்துக் கும்பிட்டாள்.  சித்தரும்  அவளுக்கு  நடந்த  உண்மைகளைக்  கூறி சில காலம் இவ்வுடலில்   வசிக்க   வேண்டிய   கட்டாயத்தையும்   கூறி   அவளுடன்
இல்வாழ்க்கையைத் தாமரை இலைத் தண்ணீர் போலத் தொடர்ந்தார்.

   
‘ஊத்தைக் குழிதனிலே மண்ணையெடுத்தே
உதிரப் புனலிலே யுண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
அரை யோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே’

இந்த உடம்பு  ஊத்தை குழி மண்.  மண்ணைப் பிசைந்து உருவம் ஆக்க தண்ணீர் வேண்டுமே. அது தான் ரத்தம். அதை உருட்டி உருட்டி அந்த மாயாவி பிரமன் செய்யும் சட்டி பானைகள் தான்  நாம்.  இது தம்படிக்கு கூட பிரயோசனம் இல்லாதது.    எப்படி இருக்கிறது கற்பனை?

''இருவர் மண்சேர்த்திட வொருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்தச்சூளை
அரைக்காசுக் காகா தென் றாடாய்ப் பாம்பே''


அப்பன் ஆத்தாள் இரண்டு பேருமே  மண் பாண்டம் செய்யும்  குயவர்களாக கொண்டோமானால் அவர்கள்  மண் சேர்த்துப் பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில்  வைத்துப் பக்குவமாய்  இறக்கி வைக்கிறார்.  இது தான் கர்ப்பவாசம்.  பிரசவம் ஆகி வெளியே வந்தாயிற்று.  இதை தான் பாம்பாட்டி சித்தர்  அந்தப் பானையானது  இவ்வளவு கஷ்டப்பட்டு செய்தபோதிலும்  கடைசியில்  அரைக்காசுக்குக்கூட  உதவாது என்கிறார்.

இன்னும் ஒன்று இரண்டு பாடல்கள் சொல்லி முடிக்கிறேன்.

ஒரு அற்புத உதாரணம் காட்டுகிறார் நமது உடலைப் பற்றி பாம்பாட்டி சித்தர். அது இந்த பாடல்.

“நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளுங் கழுவினு மத னாற்றம் போமோ
ஊறுமுடல் பலநதி பாடிக் கொண்டதால்
கொண்டமல நீங்கா தென்றா டாய் பாம்பே”

எவ்வளவோ விலை உயர்ந்த சென்ட்  எல்லாம் வாங்கி மேலே பூசிக்கொண்டாலும் உடலின் நாற்றம் போய்விடுகிறதா?  மீனை எவ்வளவு தான் நல்ல தண்ணீரால் கழுவினாலும் அதன் நாற்றம் போய்விடுமா? எத்தனை கோவில் குளங்களில் ஸ்நானம் செய்தாலும்  செய்த கர்ம பலன் நீங்கிவிடுமா. அனுபவித்து தானே தீரவேண்டும் என்கிறார்.

பொம்மலாட்டம் பார்த்திருக்கிறீர்களா?  நான் பார்த்திருக்கிறேன். ஒருவன் ஒரு படுதா பின்னால் உட்கார்ந்து கொண்டு  கை விரல்கள் அத்தனையிலும் நூல் வைத்துக்கொண்டு  அந்த நூல்கள் முனையில் பல பொம்மைகளை கட்டிவைத்திருப்பானே அதை விரலை அசைத்து ஆட்டும்போது  அந்த பொம்மைகள் ஆடும். அதை திரையில் காட்டுவான். அவை ஆடுவது போலவும், பாடுபவது போலவும். சண்டை போடுவது, சிரிப்பது, நடப்பது போல நமக்கு தெரியும். சந்தோஷப்படுவோம்.

 அப்பனே, நமது உலக வாழ்க்கையும் அவ்வாறே.  ஆட்டுவிட்டதால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்று அந்த இறைவன் தான் சூத்ரதாரி. நாம் பொம்மைகள்.  நூலை விட்டால் பொம்மை விழும். நமது தேகத்தை எப்போது விழவைக்கவேண்டும் என முடிவெடுப்பவன் அவனே. 

“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித்
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”

இன்னும் பாம்பாட்டி சித்தர் பற்றி சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...