Wednesday, July 12, 2017

எந்தையே நந்தலாலா:

நல்ல குரு நாத நெனக்கு......

திடீரென்று கரெண்ட் போய்விட்டது. முன்பு மாதிரி அடிக்கடி இல்லை. ஒரு பழைய பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன். அது பாதியில் நின்று விட்டது..  ''கே. பி. சுந்தராம்பாள் பாடிய அருமையான ஒரு பாட்டு. ''நல்ல குரு நாதனெனக்கு என்னவிதம் ''......... என்ற இடத்தில் பாட்டு  நின்றது''


மனது அதிலேயே இருந்து ஒரு ஆசை தோன்றியது.  ஞானம்  பெறவேண்டும்.   எப்படி?  ஒரு   நல்ல குரு கிடைக்கவேண்டுமே?  இப்போது  யார்  நல்ல குரு  என்று கண்டுபிடிப்பதற்கே  ஞானம் வேண்டுமே?

 எதற்கும் சில  சாஸ்திரங்களை அலசுவோம் என்று  ஆரம்பித்தால், அங்கும்  சில குழப்பம்.  ஏதேதோ சொல்லியிருக்கிறது. எப்படி  அதை நம்புவது. ? கூடை  நிறைய  பொய்யை   நிரப்பி அதில்  உண்மையை எங்கே எப்படி தேடுவது  என்கிற  போது  பிரச்னை பெரிதாகிறதே.

ஆனாலும்  முயற்சியைக் கைவிடவில்லை.   நெஞ்சில்  எப்பாடுபட்டாவது நல்லவற்றை அறிய   நாட்டம் இருந்து வருகிறதே.  இதற்கிடையே  ஆயிரமாயிரம்  அன்றாட  தொல்லைகள் வேறு.     இருந்து விட்டுப் போகட்டுமே. கருமமே கண்ணாயினார்  வகை அல்லவோ  நாம்.

எங்கெல்லாமோ  சுற்றி கடைசியில் ஒரு  நாள் யமுனை நதிக்கரையை அடைந்தேன். ஒரு  தள்ளாத  வயது குடுகுடு கிழவர்.    தடியை ஊன்றியவாறு  முதுகு வளைந்து  தாடி தடியின் அடியைத் தொட்டது. அவரைப் பார்த்தவுடனேயே  எனக்குள் ஒரு பக்தி.  ஏனென்றால்  அவர்  முகத்தில் தெளிவு,  அறிவுக் கூர்மை   பிரகாசித்தது. ஒளி  மயம்.  அவரை வணங்கி,  அவரோடு பேச்சுக் கொடுத்தேன்.

என்  பேச்சிலிருந்தே கிழவர்  என் மனக்குறையை  நன்றாக அறிந்து கொண்டார்.

 ''தம்பி,  நான்  புரிந்துகொண்டவரையில்   நீ மனத்தில் எதிர்பார்த்த குரு   ஒருவர்  இருக்கிறார்.  ஞானமும்  நித்ய மோனமும் கூடிய  ஞானி.  வட  மதுரையில் உள்ளார்.  கண்ணன் என்று  பேர்.   ராஜ வம்சம், அவரைத் தேடி  சரண் அடைந்து பார்.   உனக்கு வேண்டியது எப்போதும்  கிடைக்கும்.  சத்திய ஸ்வரூபன் அவர்''  என்றார்  கிழவர்.

 வட  மதுரை நடந்தேன்.   வழியெல்லாம்  '' கண்ணா.  என் தெய்வமே,  ஞான குருவே, என்னை ஆட்கொண்டு எனக்கு  ஞானம் கற்பித்து  அருளவேண்டும்''  என்று  வேண்டிக்கொண்டே  சென்றேன்.

கண்ணனைக் கண்டேன்.  இவனா அது?  இது என்ன?   இவன்  ஒரு இளவட்டம்.  வாலிபனாக இருக்கிறானே,   அழகு,  சௌந்தர்யம்,காம்பீர்யம். சுற்றி ஆடல் பாடல்.  நண்பர்கள்.   கெடுதல்  நிறைந்த  இந்த லோக சம்ரக்ஷண த்திலேயே  சதா  சர்வ சிந்தை உடையவன்.  ஒரு சிறு துவாரகை எனும் தேசத்துக்கு மட்டும் அரசன். அந்த  தேசத்தின் கவலைகளே  அவனுக்குப்  போதும்  போதும்  என்ற அளவுக்கு இருக்குமோ என்னவோ?   இவனா  பல யுகம்  தவம் புரிந்த  ரிஷிகளுக்கும் எட்டாத  நான்மறை தத்துவங்கள், உபநிஷத்துகள்   வேதங்கள் மறை நூல்களில்  எல்லாம் புலப்படாத அதி உன்னத  நுண்ணிய வேதாந்த உண்மைகளை எனக்கு  கற்பிக்கும் குருவாகிடுவான்?.

 இந்த மனிதனிடம் என்னை அனுப்பிய  அந்த யமுனா நதிக் கரையில் பார்த்த  குடு குடு கிழவனைக்கண்டு பிடித்து   ஒரே போடு போட்டுக் கொல்ல வேண்டும். இவரிடமா என்னை  அனுப்புவது?

 வந்தாகி விட்டதே.  பார்க்கலாம்.  நேரே  கண்ணன் எதிரே  கை கட்டி நின்றேன்.  ஒன்றுமே கேட்கவில்லை. என்னைக் கவனித்த  கண்ணன் என்னைத் தனியே கூட்டிச் சென்றான்.

'' நீ  எதற்கு இங்கு வந்தாய்  என்று  நீ  சொல்லும் முன்பே எனக்கு காரணம்  தெரியும்.   ஞானத்தை உனக்கு புகட்டுகிறேன். கேட்பாயா?

நான் திகைத்து நின்றேன்.

 ''முதலில் மனதில் ஒரு   சிந்தனை யுமின்றி  ஊன்றி, கவலையின்றி,  ஆழ்ந்து, தான்  என்பதை மறந்து,  ''தன்னை'' அழித்து,   அதனால் அங்கு ஏற்கனவே காணும்  ஆனந்தத்தை அனுபவித்து  விண்ணை அளக்கும் அறிவு பெறுவதே  ஞானம்.  அதை அடைபவன் தான்  ஞானி.  இந்த  ஞானம்  நிலவொளியை விட  குளிர்ந்தது. சூரியனை விட  ஒளி  மிகுந்தது. அருள் தருவது.   உலகையே  ஒரு  மந்திரத்தால்  கட்டியது போல்   மாயக் கட்டிலிருந்து  விடுவிப்பது.  இதை பொய்யென்று சொல்லும்  சாத்திரங்களை  தூர  எறிந்துவிடு.

 ஆதி தனிப் பொருள் அந்த  பேரருள்.  கடலின்  குமிழி.   மற்ற  உயிரெல்லாம்.சூரியனைச் சுற்றி எப்படி கதிர்களோ அப்படி அந்த  பேரருளைச்சுற்றி தான்  மற்றெல்லா  உயிர்களும்   உழலும். சுழலும்..  காணும்  யாவுமே  அந்த பேரொளியின் வண்ண வண்ண  வெளிப்பாடுகள் தான்.  இந்த  நீதி அறிந்து,  தானும்  துய்த்து,எல்லா உயிரும் இன்புற்றிருக்க வாழ்வோர், சித்தத்தில்  சிவனை வைத்தவர் ஆவார்கள்.   எதிலும்  பேரின்பம் காண்பவர். அஞ்சாமல்  நீதி வழி நின்று இன்பம் புகட்டுபவர்கள். அவனன்றி ஓர்  அணுவும் அசையா தென்பது உணர்ந்தவர். கவலை அணுகாதவர். சதா  சர்வமும்  ஆடல், பாடல், சித்திரம், கவி  ஆகிய அனைத்து கலைகளிலும்  களித்து  அங்கு ஏற்கனவே காணும்  ஆனந்தத்தில்  ஆழ்ந்த  பேரின்பம்  காண்பவர்.  நாடும் பொருள் யாவும்  பெறுபவர். இத்தகைய  ஞானிகள் காடு, புதர், குகை, பொந்து எதில்  வாழ்ந்தாலும்  பிருந்தாவனத்தில் வாழ்பவர்கள்   என்று  போற்றப்படுவார்கள்.

 நண்பா,  உனக்கு   ஞானி, ஞானம், அதை அடைவதெப்படி  என்றெல்லாம் கூறினேன். விரைவினில் அதை அடைவாயாக'' என்று  தேனினும் இனிய  குரலில் கண்ணன் கூறினான்.  அவனடி பணிந்து கண்ணீர் உகுத்தேன்.

கண்ணா  நீயே  ஞான  சற்குரு என  போற்றினேன். அவனில் ஒரு  கனிவான  அறிவான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் ஆட லுலகென நான் கண்டேன்!

 மேற்கண்ட தெல்லாம்  மகாகவி சுப்ரமணிய பாரதியார்  கண்ணன் எனது சற்குரு என்றெழுதிய  பாடல் தொகுப்பு. பாடலின் முழு வடிவும்  கீழே  காணலாம்.



                                  கண்ணன் - எனது சற்குரு


புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி

சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. . ... 1

நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
நாட்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி
கூடு முகமும், தெளிவுதான் - குடி
கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
சங்கதி பேசி வருகையில், ... 2

என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
இன்புற் றுரைத்திட லாயினர் -''தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர்
நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட
மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையில் - அவன்
சத்தியங் கூறுவன்'' என்றனர். ... 3

மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
நன்மை தருகென வேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், ... 4

ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைத் - கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - 'சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; - தவப்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா - உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?' ... 5

என்று கருதி யிருந்திட்டேன்; - பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், - ''நினை
நன்று மருவூக! மைந்தனே! - பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ; - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்! ... 6

சந்திரன் சோதி யுடையதாம்; - அது
சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும் -; அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
மாயக் களிப்பொருங் கூத்துக்காண் -'இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா! ... 7

''ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; - கடல்
ஆருங் குமிழி உயிர்களாம்; - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;- வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
நேர்மைத் தொழிலில் இயங்குவார்; ... 8

''சித்தத்தி லேசிவம் நாடுவார், - இங்கு
சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - 'இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம்' - எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே, ... 9

'சோதி அறிவில் விளங்கவும் - உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற
நீதி முறைவழு வாமலே - எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து - கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், ... 10

''ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம். ... 11

''ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய்'' - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
ஆட லுலகென நான் கண்டேன்! ... 12

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...