J.K. SIVAN
மக்கள் எதை விரும்புகிறார்கள்? எதில் ஆர்வம் அதிகம்? தெரிந்த பிரபலமான மனிதராக இருந்தால் அவரைப்பற்றி இதுவரை தெரியாத தகவல்கள். அப்படித்தானே மகா பெரியவா சம்பவ கட்டுரைகள் கடல் மடை திறந்தால் போல் நம்மிடையே உலவுகிறது. மகிழ்ச்சியும் தருகிறதே.
மற்றொன்று, ஒருவரைப்பற்றி தெரியாமல் இது வரை இருந்தால் அவரைபற்றிய தகவல் ருசிக்கிறதே. அப்படித்தானே வேமனாவை பத்ரகிரி ராஜாவை, சிவவாக்கியரை, பல சித்தர்களை முக நூலில் உலவவிட்டோம். இன்னும் வேமனா நிறைய வரப்போகிறார் நமது கட்டுரைகளில். தயார் செய்துகொண்டுதான் வருகிறேன். அப்படித்தானே சிவ வாக்கியர், திரிலிங்க சுவாமி ஆகியோர் வந்தார்கள் ர். இன்னும் வருவார்கள் .
இன்று யார் பற்றி?
ஒவ்வொருநாளும் எண்ணற்ற வாட்சாப் ஈமெயில் sms களில் விமானம் ரெடி,, கார் செல்கிறது. நீங்கள் ஷீர்டி பாபா தரிசனத்துக்கு ரெடியா என்று கேட்டு பல செய்திகள்.
பாபா வாழ்ந்த காலம் ஏறக்குறைய நான்கு தலைமுறைக்கு முன்னால் .உண்மைப் பெயர் தெரியாது. எங்கே பிறந்தார், என்று பிறந்தார். ஹும்ஹும் ஒன்றுமே தகவல் இல்லை. ஆச்சர்யமானவர். இந்து முஸ்லிம் என்று மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் போற்றப்பட்டவர். அவர் இருந்த ஊராலேயே அவர் பெயர் ஷீர்டி பாபா என்று. ஒவ்வொரு வீட்டிலும் போற்றி வணங்கப்படும் மகான்.
16 வயது அவருக்கு அந்த ஊருக்கு வந்த போது . வாசம் செய்தது ஒரு இடிந்த மசூதியில் 83 வயதுவரை . தகனம் ஒரு கோவிலில்-- இதுவரை அங்கேயே தானே தவிர எங்கும் பயணம் இல்லை. ஆனால் உலகப்ப்ரசித்தம். பல கோடி மக்கள் இன்றும் வழிபடும் ப்ரத்யக்ஷ பகவான் . பள்ளிக்கூடம் பார்த்ததில்லை.
படித்ததில்லை. பரம ஏழை. நீண்ட கிழிசல் அழுக்கு தொள தொள அங்கி . அதிகம் பேச்சு கிடையாது. அன்றன்று கப்பரையில் விழுவது தான் ஆகாரம். சொல்லும் சில வார்த்தைகள் '' ஸ்ரத்தை ''( கலப்பட மில்லாத நம்பிக்கை) ''சபூரி'' (கருணை) இருந்தால் போதும் கடவுள் உன்னிடம்"
சாய் என்று மராத்தியில் மகான் என்ற பொருள் பட அழைத்து அதுவே உலகளாவிய பெயராக காரணமானவர் ஷீர்டி சாய் பாபா. பாபாவை வணங்கி பணிவிடை செய்தவர் ஷீரடியில் காண்டோபா கோவிலில் தங்க வசதி செய்து கொடுத்தவர மஹல்ஸாபதி என்கிற பக்தர். அந்த கோவிலில் கட்டாந்தரையில் தான் பாபா படுப்பார். தலையணை ஒரு செங்கல்.
பாபா என்று ஷிர்டி வந்தாரோ அன்றிலிருந்து அவர் மகத்வம் புரிபட்டது. பக்தர்கள் காந்தம் போல் கவரப்பட்டனர். அமானுஷ்யமான செயல்கள் நடந்தன. அற்புதங்கள் அதிசயங்கள் அளக்கா வொண்ணாது நிகழ்ந்தன. நிகழ்கின்றன இன்றும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக உணர்வு அவரிடம் தோண்டியதால் மக்கள் கடலாக திரண்டனர். அவரது ஆசிக்கு காத்திருந்தனர். இன்றும் கூட வினோத அதிசய செயதிகள் பக்தர்களின் கண்கூடான அனுபவமாக பல பக்கங்களிலிருந்தும் நம்மை வெள்ளமாக வந்து அடைகின்றதே.
பாபாவால் இந்த தேசத்துக்கே ஒரு பெருமையும் புகழும் உண்டு. ஒன்று சேரமுடியாத ரெண்டு மதத்தினர் சேர்ந்து அவரை வழிபட வைத்தவர் ஷிர்டி பாபா. இரு மதத்தினரும் பக்தர்கள் என்ற அணைப்பில் இணைந்தனர். ஒன்றாயினர். அவர் இருமதத்தையும் இணைத்த ஒரு பாலம். அவரே ஹிந்து முஸ்லிம் மத தெய்வீக் பாடல்களை பாடுவது வழக்கம்.
அவரை தத்தாத்ரேயர் அவதாரமாகவும் சிவனின் உருவாகவும் கண்டனர் பக்தர்கள்.
அவர் எந்த உபதேசமும் பிரசங்கமும் என்றுமே நிகழ்த்தவில்லை. ஓரிரண்டு வார்த்தைகள். நறுக்குத் தெரித்தாற்போல். அதுவே காட்டுத்தீயாக பரவி மனதை ஆக்ரமித்தது. எல்லோருக்கும் புரியும்படியான ஒரு எளிய மொழியில் '' ஏதோ ஒரு சக்தியின் உந்துதலால் தான் ஒருவர் ஒரு இடம் போகிறார், ஒருவரைச் சந்திக்கிறார்'. அது தான் தெய்வ சங்கல்பம். எனவே யாரையும் எந்த உயிரையும் இகழாதீர். விரட்டாதீர். மாறாக அன்புடன் வரவேற்று மரியாதை செய் '' என்பார்.
ஷிர்டி சாய் பாபாவின் முக்யத்த்வம், அவரது வாழ்க்கையே ஒரு வழிகாட்டி, உதாரணம், உபதேசம்.
சில அற்புதமான பழைய ஒரிஜினல் படங்கள் கீழே காணலாம். முதல் தொப்பிக்காரர் தான் மஹல்ஸாபதி -- நேசம். துவாரகமாய் - கண்டோபா கோவிலில் பாபா ----- வாசம். நாயுடன் - பாசம்