#பேசும்_தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
125 ஒரிஸ்ஸா கிராமங்களுக்கு விஜயம்..
1936ல் மே மாதம் 3ம் தேதி ஒரிஸ்ஸாவில் தாஸ்பூரில் முகாம் போட்டிருந்த மஹா பெரியவா சங்கர வித்யா பீடத்துக்கு விஜயம் செய்தார்.பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மஹா திருப்தி. எல்லோருடனும் பேசி ஆசிர்வதித்தார். எண்ணற்ற பக்தர்கள் வேறு கூடி விட்டார்கள். பாத பூஜைகள் பிக்ஷா வந்தனம் எல்லாம் தாஸ்பூர் மகாராஜாவின் தலைமையில் அவர் அரண்மனை
யிலேயே ஜோராக நடந்தது.
8ம் தேதி ஒரு வித்வத் சபையை வழக்கம்போல் மஹா பெரியவா கூட்டியபோது பல பண்டிதர்கள் சாஸ்திரிகள் எல்லோரும் பங்கேற்றார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மஹா பெரியவா
அற்புதமாக வியாக்யானம் , விளக்கம் எல்லாம் அளித்தார். வித்வான்களை கௌரவித்து காஷ்மீர் சால்வைகள், பணமுடிப்பு எல்லாம் காஞ்சி மட சார்பில் பரிசாக அளித்தார்.
பேசிய பண்டிதர்களின் சிலர் இதற்கு முன் தாஸ்பூர் மற்றும் பல இடங்களுக்கு ஒரிஸ்ஸாவில் 1886ம் வருஷம் வந்த 65வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மஹாதேவேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி சிலாக்யமாக புகழ்ந்து பேசினார்கள்.ஐம்பது வருஷங்களுக்கு பிறகு 68 வது பீடாதிபதிகள் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.
10ம் தேதி அன்று சாக்ஷி கோபால் ஊரிலிருந்து கிளம்பி திலங் என்கிற ஊருக்கு புறப்பட்டு 18ம் தேதி மஹா பெரியவா பரிவாரத்தோடு குர்தா என்கிற ஊர் வந்து சேர்ந்தார். அது பூரி ஜில்லாவிலிருந்து 35 மைல் தூரத்தில் உள்ளது. அன்றிரவே அங்கிருந்து சத்ரபூருக்கு சென்றார். அது திலங்கிலிருந்து தெற்கே 75 மைல் தூரம். வழியெல்லாம் இரு மருங்கும் பெரிய மலைகள். காடுகள் வனங்கள் என்பதால் காட்டு மிருகங்கள் மலிந்த இடம். ''ஜயஜய சங்கர ஹரஹர சங்கர'' கோஷத்துடன் மஹா பெரியவாவும் அவருடன் வந்தவர்களும் அந்த காட்டுப் பாதையில் நடந்தார்
கள். தங்க இடமோ குடிக்க நீரோ இல்லாத பகுதி. விரைவில் அதை விட்டுச் செல்லவேண்டும். சில மைல் தூரம் நடந்தபின் மணல் வெளி ஒன்று மேடும் பள்ளமுமாக குறுக்கிட்டது. மக்கள் நடமாட்டமே இல்லாத இடம். நடப்பது சிரமமாக இருந்தாலும் ஒருவழியாக சத்ரபூர் சென்றடைந்தார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 25 மைல் தூரமாவது நடந்தார்கள். சத்ரபூர் போகும் வழியில் தங்கி என்று ஒரு இடம். அங்கே 14ம் தேதி இரவு தங்கினார். பலுகோனி என்ற ஊரை 15ம் தேதி அடைந்து அங்கே தங்கினார் . 16ம் தேதி ரம்பா என்ற ஊர். 17ம் தேதி சத்ரபூர் வந்தாயிற்று. அது கஞ்சம் ஜில்லாவின் தலைநகர். சில்கா எனும் பெரிய ஏரியின் தெற்கு முனையில் உள்ளது. அங்கே சமுத்திரம் ஏரியோடு கலக்கிறது. அங்கே ஒரு பழைய ஆதி சங்கரர் ஆலயம் உள்ளது. மஹா பெரியவா விடுவாரா? ஏழு நாள் அங்கே வாசம்.
17ம் தேதி முதல் 23ம் தேதி மே மாதம் வரை அங்கே கேம்ப் . மஹா பெரியவா வருகை பற்றி முன் கூட்டியே அறிந்த பக்தர்கள் ஒன்று திரண்டு வரவேற்பு அளித்தார்கள்.
24ம் தேதி அங்கிருந்து கிளம்பி பெர்ஹாம்பூர் சென்றார் மஹா பெரியவா. சத்ரபூரிலிருந்து தென் மேற்கே 5 மைல் தூரத்தில் பெர்ஹாம்பூர் என்கிற பெரிய நகரம் அமைந்துள்ளது. 23 நாட்கள் அங்கே மஹா பெரியவா தங்கி இருந்தார். 15ம் தேதி ஜூன் மாதம் கிளம்பி இச்சாபூர் என்ற ஊரை அடைந்தார். அங்கே மூன்று நாள் கேம்ப் . எல்லோரையும் சந்தித்து ஆசிர்வதித்தார். 23ம் தேதி அங்கிருந்து நவபாஸம் எனும் ஊருக்குள் பிரவேசித்தார். 25ம் தேதி பத்மநாப பூர். நம்மால் இப்படி புயல் வேகத்தில் பல க்
ஷேத்ரங்களுக்கு சொல்லமுடியுமா. மஹா பெரியவா கால் பட்ட ஊர்களையெல்லாம் நான் க்ஷேத்ரமாக தான் கருதுகிறேன். அங்கெல்லாம் அவரை தரிசித்தவர்கள் புண்யசாலிகள்.
1936 மே மாதம் 26ம் தேதி பத்மநாப பூரிலிருந்து கிளம்பி திகபண்டி என்கிற ஊருக்கு விஜயம் செய்தார். 28ம் தேதி அன்று செருகடா, அடுத்து மூன்று நாட்கள் தாமோதர் பள்ளி, அதற்குப்பிறகு ஹிங்கிலி காட் சென்ற போது தேதி ஜூலை 2. எப்படி நாட்கள் நகருகிறது. எப்படி மின்னல் வேகத்தில் மஹா பெரியவா திக்விஜயம் தொடர்கிறது...
No comments:
Post a Comment