ஒரு தெய்வீக புருஷர் - நங்கநல்லூர் J K SIVAN
இந்த ஷீர்டி வேறு. பாபா மஹாராஷ்டிராவில் அப்போது 16 வயதில் பார்த்த ஷீர்டி வேறு. இடையே நூறு வருஷத்தில் எத்தனை மாறுதல்கள்.!
வெயில் தலைக்கு மேல் சுள்ளென்று எரிந்தது. பாபா வெப்பத்திலிருந்து தப்பிக்க வேப்ப மரம் ஒன்றின் அடியில் உட்கார்ந்தார். கண்கள் மூடின. தூக்கமில்லை. தியானத்தில் ஆழ்ந்தார். அன்ன ஆகாரம் இல்லாமல் பல நாள் தியானம் தொடரும். இது விளம்பரம் இல்லாமலேயே பலர் கவனத்தைத் தொடாது. போதாதா? யார் இந்த வாலிபன்? எங்கிருந்து வந்தவன்? என்ன பெயர்? , எப்படி இந்த சின்ன வயதிலேயே தவம் இருக்க முடிகிறது? அவருக்கு நிலைத்த பெயர் உலகமறிந்த ''ஸாய் பாபா'' . பாரசீக மொழியில் சாய் என்றால் என்றால் ''யோகி, முனிவர்'' மாதிரி ஒரு அர்த்தம். பாபா என்றால் ''அப்பா''. எண்பது வயது வாழ்ந்தாரோ? முஸ்லீம் பக்கீர் ஒருவரால் வளர்க்கப் பட்ட ஹிந்து ப்ராமண பையன் என்கிறார்களே.
பாய்ஜாபாய் ஷீர்டி கிராம அதிகாரி ஒருவன் மனைவிக்கு இந்த பால யோகியை பிடித்துவிட்டது. ஆகாரம் கொண்டு தருவாள். ''அம்மா ''என்று தான் அவளை பாபா அழைப்பார். மஹல்சாபதி என்று ஒரு கிராம அதிகாரிக்கு கண்டோபா சுவாமி ப்ரத்யக்ஷ தெய்வம். அந்த தெய்வத்தின் ஒரு குட்டி கோயிலுக்கு அவர் அர்ச்சகர். அவருக்கு சுவாமி வரும் அப்போது அருள்வாக்கு சொல்வார். மஹால்சாபதி தான் பாபாவை சுட்டிக்காட்டி ''இது காண்டோபாவின் சக்தி உருவம்'' என்று சொன்னவர். கிராமத்தில் சாய்பாபா வழிபடப்பட்டார்.
தான் அடிக்கடி அமரும் வேப்ப மரத்தைக் காட்டி ''இதன் அடியே தோண்டுங்கள் '' என்கிறார். தோண்டினார்கள். என்ன ஆச்சர்யம், ஆழமாக தோண்டிய இடத்தில் குகை மாதிரி ஒரு போந்து, அதில் ஒரு கல் பாறை பலகை. காற்றோ, என்ணை எதுவுமில்லாமல் ஒரு தீபம் எரிகிறதே. விஞ்ஞானத்துக்கு பொருந்தாத உண்மையல்லவா இது? பசுவின் வாய் பாகம் போல் ஒரு பாத்திரம் ஒரு மரத்தாலான மேசை மீது வைக்கப்பட்டிருக்கிறதே. என்ன இதெல்லாம்? நம்பமுடியாத ஆச்சர்யமாக இருக்கிறதே. எப்படி பாபாவுக்கு இந்த ரஹஸ்ய குகை தெரிந்தது? ''இது என் குருநாதர் தியானம் செய்த, தவமிருந்த, இடம்'' என்கிறார் பாபா.
'என்னைத் தொழாதீர்கள், இந்த வேப்ப மரம் புனிதமானது, தொடாமல் வழிபடுங்கள்'' என்கிறார் பாபா. இன்றும் உள்ளது அந்த வேப்ப மரம்.
ஆரம்பத்தில் மூன்று வருஷங்கள் அங்கே இருந்தார் பாபா. அவர் யாரையும் அணுகவில்லை, யாரிடமும் அச்சமும் இல்லை. பைத்தியக்காரன் என்று பெயர் எடுத்தவர். சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கும் அப்படித்தானே பட்டம் சூட்டினார்கள். கல்லால் அடித்தவர்களும் அநேகர். அப்புறம் ஒரு வருஷம் பாபா எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது. எத்தனையோ ஞானிகளையும் மஹான்களையும் சந்தித்திருக்கிறார். நெசவாளியாகவும் இருந்தார் என்கிறார்கள்.
1858ல் பாபா திரும்பவும் ஷீர்டி வந்து சேர்ந்தார். அப்புறம் 60 வருஷம் எங்கும் நகரவில்லை. அங்கேயே சமாதி அடைந்தார்.சூக்ஷ்ம சரீரத்தில் அவர் போகாத இடமே இல்லை என்று பக்தர்கள் அறிவார்கள்.
முதலில் ஐந்து வருஷம் வேப்ப மரத்தடியே வாசஸ்தலம். அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் செல்வார். எவருடனும் பேசாமல் தியானம், தவம். அப்புறம் அருகே இருந்த ஒரு மசூதிக்கு சென்று வசித்தார். இதற்கிடையில் எண்ணற்றோர் பாபாவைப் பற்றி அறிந்து அவரைத் தரிசிக்க அலை மோதினார்கள்.
அந்த மசூதியில் பாபா ஒரு நெருப்பு குண்டத்தை வளர்த்தார். அதற்கு ''துனி '' என்று பெயர். இன்றளவும் அது எரிகிறது. வருவோர்க்கெல்லாம் அதன் சாம்பலை பிரசாதமாக கொடுப்பார், அது தான் ''உதி''. நான் சில பாக்கெட்கள் குட்டி குட்டியாக உதி சம்பாதித்துக் கொண்டு வந்து, சில அன்பர்களுக்கும் உறவினருக்கும் கொடுத்தேன். உதி ஒரு வரப்ரசாத ஒளஷதம். சர்வ வியாதி நிவாரணி, சர்வ ரோக நிவாரணி. நம்பிக்கை இருந்தால். நம்பிக்கை அனுபவத்தால் வளர்வது.
எத்தனையோ பக்தர்களுக்கு இன்றும் தெய்வமாக இருப்பவர் சாய் பாபா. பாபா தானாகவே சமைப்பார், எல்லோருக்கும் ''பிரசாதமாக '' விநியோகம் செய்வார். அவருக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு பாடுவது ஆடுவது.
பாபா எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. இயல்பான சாதாரண வாழ்க்கையை வாழுங்கள் என்று போதித்தவர். பகவான் ஒருவன் இருக்கிறான். அவன் நாமத்தை உங்களுக்கு பிடித்த படி சொல்லுங்கள் என்பார். உங்கள் மத புத்தகங்களை
படியுங்கள் என்பார். ஹிந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பார். நமாஸ் செய்யுங்கள், குரான் படியுங்கள் என்று இஸ்லாமியர்களிடம் சொல்வார். அவருக்கு பிடித்த வார்த்தை . ஒன்றே தெய்வம். சப் கா மாலிக் ஏக். ஒருவனே எஜமான்.
எல்லோரும் தான தர்மம் செய்யவேண்டும் என்று போதிப்பார். இருப்பதை பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்பர். உதவி கேட்டு வந்தால் விரட்ட வேண்டாம். அன்போடு வரவேற்று ஆதரியுங்கள். தாகத்திற்கு நீர் கொடுங்கள். பசிக்கு உணவளியுங்கள். இடம் இல்லாதவர்க்கு தங்க இடமளியுங்கள். பணம் கொடுக்க மனமில்லையென்றால் பரவாயில்லை, யாசிப்பவர்களிடம் குலைக்கவேண்டாம் என்பார். எல்லா ஜீவன்களையும் நேசிக்கவேண்டும் என்பார்.
யார் மனதில் என்ன நினைத்தாலும் பாபாவுக்கு தெரியும். குறைகளை நிவர்த்திப்பார். இது உலகமுழுதும் பக்தர்கள் அறிந்த அதிசயம்.
திடீரென்று சிலரிடம் ''தக்ஷிணை கொடு''என்று குறிப்பிட்ட பணம் கேட்பார். அதை உடனே வேறு யாருக்காவது கூப்பிட்டு கொடுப்பார். அது அவர்களுக்கு அவசரமாக தேவையாக இருந்திருக்கும். என்ன செய்வது என்று கவலையோடு இருந்திருப்பார்கள் எப்படியோ அது பாபாவுக்கு சொல்லாமலேயே தெரிந்துவிடும்.
காண்டோபா கோவில் அர்ச்சகர் மஹல்சாபதி தான் பாபாவின் முதல் சீடர். ஷீர்டி கிராமத்தில் முதலில் அவரை அறிந்த பக்தர்கள் இன்றைக்கு உலகம் முழுதும் பரவி இருக்கிறார்கள்.
பாபாவின் முக்கிய பக்தர்கள் சிலர் பெயரை சொல்கிறேன்:
சகோரி ஊரை சேர்ந்த உபாஸன் மஹராஜ், நானா சாஹேப் சாந்தோர்கர், கணபத் ராவ் ஸஹஸ்ரபுத்தே, தாதியா பாட்டில், பாயிஜா மாய் கோட்டே பாட்டில், ஹாஜி அப்துல் பாபா, மாதவ் ராவ் தேஷ்பாண்டே, கோவிந்தராவ், ரகுநாத் தபோல்கர், இவர் தான் சாய் சத் சரிதம் எழுதியவர், அவர் வீடு அந்தேரி மேற்கில் இருக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேனே படித்தீர்களா?
பாபா நிகழ்த்திய அதிசயங்கள் எண்ணற்றவை. சிலவற்றை அவ்வப்போது எழுதுகிறேன். சாய் சத் சரித்திரம் படித்தாலே வியாதி குணமாகும். என்னிடம் இருந்த சில பிரதிகளை நிறைய பேருக்கு இலவசமாகவே தந்தேன். இன்னும் ஐந்தாறு இருக்கலாம். தேவைப் பட்டால் நேரில் வந்து பெறலாம். எத்தனையோ பேருக்கு ராமனாக, கிருஷ்ணனாக தரிசனம் கொடுத்தவர் பாபா. எத்தனையோ பேர் கனவில் வந்தவர். மற்றவர் மூலம் உதவியவர். இல்லாவிட்டால் முள்ளும் கல்லுமாக இருந்த ஒரு குக் கிராமம் ஷீர்டி இன்று உலகப்புகழ் பெற்ற மா நகரமாகி இருக்குமா? ஆகாயவிமானத்தில் பறந்து கூட இங்கே வருகிறார்களே.
No comments:
Post a Comment