Sunday, May 29, 2022

RAMAKRISHNA PARAMAHAMSA

அருட்புனல் -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ராமகிருஷ்ண  பரமஹம்ஸர் 

''ராதா காந்தன்''. 

எத்தனை பேருக்கு  இப்படி தாராள மனம் இருக்கும்?  270 வருஷங்கள் முன்பு  ராணி ராசமணி  பணத்தை கங்கைநீராக வாரி செலவழித்தாள் .  தக்ஷிணேஸ்வரம்  பவதாரிணியின்   கோயிலில்  சலவைக்கல்  தரை.  சிறந்த  நிபுணர்களை வைத்து  ஒரு அற்புத கோயில் உருவாக்கினாள் . இன்றும் நாம் கண்டு  களித்து   கருப்பு  காளியை   தங்க ஆபரணத்தில் தரிசிக்கிறோம். ஒரு பக்கம்  வெள்ளை சலவைக்  கல் சிவன் படுத்துகொண்டு இருக்க, அவர் மேல் நிற்கும் காளி. சிவனின் சக்தியே பராசக்தி இல்லையா?  காளியின் கால்களில் தங்க கொலுசு, தண்டை. கைகளில் தங்க  ஆபரணங்கள். கழுத்தில் நவ ரத்ன மாலை. இது தவிர மனித  தலைகள்  கோர்த்த மாலை, தங்க கிரீடம், தங்க காதணிகள். தங்க மூக்குத்தி, தங்க ஒட்டியாணம். முத்து புல்லாக்கு . தோடு. நான்கு கரங்கள். இடது கரம்  ஒன்றில்   பலியிடப்பட்ட  ரத்தம் சொட்டும்  மனித  தலை. உயர்த்திய வலது கரம் ஒன்றில் வெட்டிய ரத்தம் சொட்டும் கூர் வாள் . ஒரு வலக்கரம் அபய ஹஸ்தம்.  இன்னொன்று  வரத ஹஸ்தம். தொங்கும் நீண்ட நாக்கு. பராசக்தியை வர்ணிக்க இயலாது.  அம்பாள்  கெட்டவளா? கொடியவளா ? 

டாக்டரிடம் போகிறோம்.  காசு  நிறைய  கை  நிறைய வாங்கிக் கொண்டு  நீட்டிய  நமது ஒரு  கையை வெட்டி  கட்டுப் போட்டு  அனுப்பும் டாக்டர்  கெட்டவரா?  வெட்டுப்பட்ட  கையோடு  '' டாக்டர் நீங்கள் தான் என் கடவுள்'' என்று  வாழ்த்தி விட்டு  வீடு திரும்புகிறோம்.  உபயோகமற்ற  விஷ சக்தி கொண்ட  நோயுற்ற கையை வெட்டி உயிரை காப்பாற்றியவர் டாக்டர். அது போல தான் அம்பாள் கொடியவர்களை  ஒழிப்பவள். தீய சக்தியை அழிப்பவள். தீனர்களை, நிர்க்கதியாக அண்டியவர்களை ஆதரித்து அணைப்பவள். அந்த சர்வ சக்தியை சாதாரண எழுத்தில் எப்படி கொண்டு வருவது. அதற்குண்டான சக்தி  எனக்கில்லை. காளியிடம் உண்மையிலேயே ''பய'' பக்தி உண்டாகிறது.பவதாரிணி ஆக்க அழிவு சக்தி இரண்டும் நிறைந்தவள். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலினி.

தக்ஷிணேஸ்வரம்  ஆலயத்தில். ஒரு பக்கம் அருளும் தாய். காளி தேவி. இன்னொரு பக்கம் சர்வ வியாபி சிவன். இன்னொரு இடத்தில் அன்பே உருவான ராதா கிருஷ்ணன்.   இது  விண்ணும் மண்ணும் ஒன்றாக கலந்து காட்சி  தரும் சர்வ சக்திகளும்  ஒன்றாக பரிமளிக்கும் ஸ்தலம்.

''என் அம்மா'' என்று வாய் மணக்க எப்போதும் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  பாவதாரிணியை  வேண்டினார். 

ராமகிருஷ்ணர்  தனது அண்ணா ராம்குமாருடன் இந்த ஆலயத்துக்கு வந்தார். அண்ணா காளி கோவில் அர்ச்சகர்.தம்பி  ராதாகிருஷ் ணனுக்கு அர்ச்சகர்.

கோவிலை ஒட்டி  ஜிலு ஜிலு  என்று கோயிலை தொட்டுக்கொண்டு   ஓடும்  புனித கங்கை. சுற்றிலும் அடர்ந்த மரங்கள். நிசப்தம். எண்ணற்ற பறவைகளின் சப்த ஜாலம் .பச்சை பசேலென்று  பரந்த சோலை வனம் , அன்பும் ஆதரவும் தந்த ராணி ராஸ மணி, அவள் மருமகன் மதுர்பாபு.-- ஆஹா எல்லாமே ராமகிருஷ்ணருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இடமும் பிடித்தது . அவர் மனத்தில்  பாவதாரிணியும் இடம் பிடித்துவிட்டாள் . இதைத்தான் இத்தனை வருஷமாக  மனது தேடியதா?

மதுர் பாபுவுக்கு ராமகிருஷ்ணரைப்  பிடித்து விட்டது. அவரது பரிசுத்தமான பக்தி  பாபுவை கவர்ந்தது.   ஒருநாள்  ''ராமக்ரிஷ்ணா    நீயே  இனிமேல்  பாவதாரிணிக்கும்  பூஜை பண்ணு ''  என்று கட்டளையிட்டார். 

ஆரம்பத்தில்  ராமக்ரிஷ்ணருக்கு    பணக்காரி  ராசமணிக்கு  வேலை செய்ய வேண்டாமே என்று தோன்றியது. மேலும் இந்த காளி பாவதாரிணியின்   விலை உயர்ந்த நகைகளுக்கு நாம்  எதற்கு  பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்  எனவும் தோன்றியது. ஆகவே  மதுர பாபுவுக்கு   சரி  என்று  பிடி கொடுத்து ஒப்புக் கொள்ளவில்லை.  மதுர பாபுவும் விடவில்லை.  தக்க தருணத்துக்கு காத்திருந்தார். அது ஹ்ரிதய் ரூபத்தில் வந்தது.

ஹ்ரிதய் கமார்புகூரில்  ராமகிருஷ்ணரின் பால்ய சிநேகிதன்.  உறவினனும் கூட.   அவரது நிழல்.   ரொம்ப கெட்டிக் காரன்.கமார்புகூருக்கு அடுத்த சிஹோர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தக்ஷிணேஸ்வரத்திற்கு வேலை தேடி வந்தான்.
மதுர பாபுவிடம் அவனை அழைத்து சென்றார். 
 'மதுர் பாபுஜி,  இவன்  என் நண்பன் ஹ்ரிதய்.  எங்க பக்கத்து ஊர் காரன்.  எனக்கு உதவியாக  இவன்  இருந்தால் நான் காளி கோவில் பூஜை  ஏற்றுக் கொள்ள  சௌகர்யமாக இருக்கும் ' என்கிறார்.  
ஆஹா  அப்படியே  என்றார் மதுரபாபு. 
காளியை அலங்கரித்து ஆபரணங்களை சூட்டும் வேலை ராமகிருஷ்ணருக்கு  கிடைத்தது.

ஒருநாள் ராதாகிருஷ்ணன் விக்ரஹம்  அலங்கரிக்கும்போது  உதவியாளர்  கை  தவறி  கீழே போட்டு விட்டதால் விக்ரஹத்தின் கால் பின்னமாகி விட்டது. ராணியிடம் வேறு புது விிக்ரஹம் வேண்டும், சிதிலமான விக்ரஹ வழிபாடு கூடாது என்று மதுர  பாபு  கேட்டார்.  ராசமணி   ராமகிருஷ்ணரை அபிப்ராயம் கேட்டாள். அவள் ஆசையாக தேர்ந்தெடுத்து நிர்மாணித்த விக்ரஹம் ராதா காந்தன். யோசிக்கவே இல்லை ராமகிருஷ்ணர்.

''அம்மா, நீங்களே சொல்லுங்கள், உங்கள் மருமகன் மதுர பாபுவுக்கு கால் உடைந்தால் அவரை தூர எறிந்து விடுவீர்களா? காலை குணப்படுத்த முயல மாட்டீர்களா?''

இதிலே எல்லா பதிலும் உள்ளது. சிற்பிகளை வரவழைத்து எப்படியோ ராதா காந்தனின் கால் சரி செய்யப் பட்டு மீண்டும் பூஜை தொடர்ந்தது. கவனக்குறைவோடு பணியாற்றிய அர்ச்சகர் விலக்கப் பட்டு ராதா காந்தனின் பூஜை வழிபாடும் ராமக்ரிஷ்ணரிடமே சேர்ந்தது. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...