Monday, May 30, 2022

SURDAS

 #ஸூர்_தாஸ்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


பூர்வோத்தரம் 


டில்லி பக்கத்தில் சிஹி  என்கிற கிராமத்தில் 1478ல்  பிறந்த  ஒரு ஏழை பிராமணர் ஸூர்தாஸ்.  பிறவிக்குருடு.  ப்ரஜ் பாஷையில் கிருஷ்ணனை  நேரில் பார்த்தது போல் வர்ணித்து ஆயிரக்கணக்கான பாடல்களை அளித்தவர். அவை எல்லாமே இல்லை. கிடைத்த வரை அவை  நமக்கு  ஒரு சிறந்த பொக்கிஷம்.  ''ஸூர்''  என்றால்  குருடு என்று அர்த்தமாம். அவரது இயற்கையான பேர் என்ன என்று எவருக்குமே தெரியாது.  உறவினரால் கை விடப்பட்ட  மூன்று வயது பையன் ஸூர்தாஸ். உணவளிக்க  வளர்க்க  எவரும் இல்லை. தெருவில் ஒருநாள் ஒரு பஜனை குழு பாடிக்கொண்டே  சென்றது.  அந்த இசை ஸூர்தாஸுக்கு  ரொம்ப பிடித்தது.  ஒருநாள் நானும் பாட தெரிந்து கொள்ள வேண்டும் என  ஆசைப்பட்டான். 
ஒருதடவை  இன்னொரு பஜனை கோஷ்டி  தெருவில் வந்தபோது  மெதுவாக  அவர்களோடு போய்  சேர்ந்து கொண்டான் . கண் தெரியாத பையன் கூட வருவதை பார்த்த ஒருவர்  '' ஏண்டா எங்களோடு வருகிறாய்? என்று கேட்டார்.''எனக்கும் உங்களோடு சேர்ந்து பாட ஆசை''அன்று இரவு சாப்பாடு போட்டார்கள்.  பஜனைக்  குழு இந்த குருட்டுப்பையனை எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போவது நமக்கு ஒரு சுமை  என்று  முடிவெடுத்து  மறுநாள்  ஸூர்தாஸை  அங்கேயே  விட்டுவிட்டு மறுநாள் காலை அவர்கள் போய்விட்டார்கள்.அவன் எங்கே போவான்?  ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தான் கேட்ட பாடல்களை பாடி பார்த்தான். அருமையான குரல் வளம். பாவம்  குருட்டுப்பையன் நன்றாக கிருஷ்ணன் மேல் பாடுகிறான் என்று  வருவோர் போவோர்  சிலர்  உணவளித்தார்கள். அது  மதுராநகருக்கு போகும் வழி.  அந்த மரத்தடியில், அருகில் ஏரியில்  குளித்துவிட்டு  யாத்ரீகர்கள்  ஓய்வெடுப்பார்கள்.  அவர்கள்  பேசுவதையெல்லாம் கேட்டு வெளி உலகம் பற்றி,  கிருஷ்ணனைப்  பற்றி  எல்லாம்  ஸூர் தாஸ் அறிந்து கொண்டான்.  பதினாலு வயதானது. கிருஷ்ணன் ஞாபகமாகவே இருந்த ஸூர்தாஸுக்கு  அருள் வாக்கு சக்தி தானாகவே  உண்டானது.  சிலருக்கு அவன் சொன்னது பலித்தது. அவ்வளவு தான். காட்டுத்தீயாக  செய்தி பரவி  ''அதிசய பையன்'' என்று போற்றப்பட்டான். ''என் மாடு காணோம், என்று கிராமத்தான் ஒருவன் அழுதபோது   ''அங்கே போய் பார் இருக்கும்'' என்று ஸூர் தாஸ் சொன்ன இடத்தில் பசு மேய்ந்து கொண்டிருந்தது.   ''நல்ல நாள் நேரம்  எது?'' என்று கேட்பவர்களுக்கு   அதைச் சொல்லி அவர்கள்  லாபம் அடைந்தார்கள். காணாமல் போன ஒரு பணக்காரன் குழந்தை எங்கே இருக்கிறது என்று ஞான திருஷ்டியில் ஸூர் தாஸ் சொன்ன இடத்தில்  பையன் கிடைத்தான்.  நன்றி உணர்வோடு   அந்த பணக்கார அப்பா மரத்தடியில் ஒரு சிறு ஆஸ்ரமம் மாதிரி கட்டிக்   கொடுத்ததால்  ஸூர்தாஸ் அங்கேயே வாசம். யாரோ ஒருவர்  ஒரு  ஒற்றைக்  கம்பி  சுரைக்காய் தந்தி வாத்தியம் கொடுக்க அதை மீட்டிக்கொண்டு ஸூர்தாஸ் பாட ஆரம்பித்தார்.சிஷ்யர்கள் அவர் பாடப்பாட அதெல்லாம் எழுதிவைத்தார்கள். 
ஒரு நாள் கனவில்  கிருஷ்ணன் ஊர் மக்களோடு தனது பஜனையை  புகழ்வது போல், கேட்க விரும்புவது போல்  ஒரு   காட்சி. ''ஆஹா கிருஷ்ணன் என்னை கூப்பிடுகிறான் பாட''  என்று மனதில் பட்டு  மறுநாள்  காலையிலேயே  பிரிந்தாவனம்  போக தனியாக  நடந்தார்.   
''குருவே, எங்களை விட்டு எங்கே கிளம்புகிறீர்கள். நாங்கள் ஏதாவது தப்பு செய்தோமா? கோபமா? என்று சில சீடர்கள் கேட்டார்கள்.''இல்லை இல்லை. எனக்கு பிருந்தாவனம் போகவேண்டும் என்று காட்டுப்பாதையில் தனியாக நடந்தார். வழியில்  ஆங்காங்கே சிலர்  அவர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்து உணவளித்தார்கள்  அவர்களோடு  தங்கும்படி கேட்டாலும் மறுத்துவிட்டு  ஸூர்தாஸ் பயணம் தொடர்ந்தது. ''நான் ஒரு  பிச்சாண்டி. எனக்கு என்று ஒரு வீடு வாசல்  ஊர் எதுவும்  இல்லை '' என்பார் .
காட்டுப்பாதையில் ஒருநாள் ஒரு பெரிய  தரைக்  கிணற்றில்  விழுந்து விட்டார்.  காயங்கள். கண் பார்வை இல்லை.  எவரும் இல்லை உதவ.  எப்படி வெளியே வருவது?  ஏழு நாள் கிணற்றிலேயே கிடந்து   க்ரிஷ்ணனையே பாடிக்கொண்டிருந்தார்.  ஒரு நாள் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் குரல் கேட்டது. ''''தாத்தா  கிணத்துல விழுந்திட்டியா?' கண் தெரியாதா?   என்  கையை நீற்றேன். பிடிச்சுக்கோ நான் வெளியே தூக்கிவிடறேன்''அந்த சிறுவனின் கரங்கள்  அவரை மேலே தூக்கிவிட்டன.   தடவிப்பார்த்து பையனைப்  பற்றி விசாரிக்க  அவனைத் தேடினார். அவனைக் காணோம்.  ''ஓஹோ என்   கோபால  கிருஷ்ணன் தான் என்னை காப்பாற்றினானா?  என்று மகிழ்ந்தார். எப்படியோ பிருந்தாவனம் வந்து சேர்ந்தார்.   பிரிந்தா வனத்துக்கு  க்ரிஷ்ணபக்தர்  ஸ்வாமி வல்லபாச்சார்யார்  வருகிறார் என்று அறிந்தபோது எப்படியாவது அவரை சநதிக்க  விரும்பினார்.  ஆற்றைக் கடந்து அக்கரை போய்  வரை சந்திக்கவேண்டும்.  அதற்குள்  வல்லபாச்சார்யர் ஸூர் தாஸ் பற்றி கேள்விப்பட்டு இக்கரைக்கு வந்துவிட்டார்.  வல்லபாச்சாரியார் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.  
''ஸூர் தாஸ்,  நீங்கள் கிருஷ்ணன் மேல் அருமையாக பாடுவீர்களாமே, எங்கே பாடுங்கள்'' என்றதும் ஸூர் தாஸ் பாட  ''ஆஹா  வாழ்க்கை பூரா  அவரைப் பாடுங்கள் '' என்று கேட்டுக் கொண்டு    அவரோடு சில நாட்கள் சுவாமி தங்கினார். க்ரிஷ்ணனைப் பற்றி தான் அறிந்ததெல்லாம் போதித்தார்.  கோவர்தன ஸ்ரீநாத் (கிருஷ்ணன் பெயர்) ஆலய  பிரதம ஆஸ்தான பாடகராக ஸூர் தாஸ் நியமனமானார். 

அக்பர் அப்போது டில்லியில் முகலாய சக்கரவர்த்தி. தான்ஸேன்   அவருடைய  நண்பன், சிறந்த பாடகன்.  ஒருநாள் அற்புதமாக ஒரு பாடலை பாடிக்  காட்டுகிறான்.  அக்பர் அதைக்கேட்டு மனம் உருகினார்.  
''தான்ஸேன், ரொம்ப அருமையாக இருக்கிறதே   இது.   இந்த பாட்டை நீ எழுதினாயா, வேறு  யாராவதா?  யார் அது?''
''மஹாராஜா, இது  ஒரு  சாதாரண  ஹிந்து மதத்தை சேர்ந்த   சாது, கண்ணில்லாத  கிருஷ்ண பக்தர்,  தானாகவே  இறைவன் மேல் இயற்றி பாடியது. அதை ஒரு  நாள் கேட்டேன், என் மனத்தைக் கவர்ந்த அந்த பாடலை தான் உங்களுக்கு பாடி காட்டினேன்''
''யார் அது?''
''நமது ராஜ்யத்தில் ஒரு ஊரான  குங்கட்  எனும் கிராமத்தில் வசிப்பவர். ஸூர்தாஸ் என்று பெயர்.''  
அக்பருக்கு  ஸூர்தாஸை  பார்த்து அவர் குரலைக் கேட்க ஆவல் மேலிட்டது.  தான்சேனோடு  ஸூர்தாசரைப் பார்க்க கிளம்பிவிட்டார்.
கிராமத்துக்கு சென்று அக்பர்  ஸூர்தாஸை சந்தித்து ''நீங்கள் யார் யார் மேலோ  பாடல்கள் இயற்றி பாடுவீராமே, எனக்காக ஒரு பாட்டு பாடும் ''  என்கிறார். அக்பருக்கு ரொம்ப பிடித்தது.''என் அரண்மனைக்கு வாரும். அங்கே பாடும். உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன்''
அக்பர் குரலிலிருந்து  பாதுஷா  தன்மீது தான் ஒரு பாடல் பாடச் சொல்கிறார் என்பது  ஸூர்தாசுக்கு புரிந்துவிட்டது.
 ''மஹாராஜா, நான் கிருஷ்ணன் அரண்மனையில் ஓரத்தில் நின்று பாடுபவன். என்  இதயத்தில் வேறு இடமில்லை.அதில் பூராவுமே  நிறைந்திருப்பவன்  நந்தகோபன் மகன். நான் எப்படி டில்லி வரமுடியும், எப்படி என் மனதில் வேறு ஒருவருக்கு இடம் கிடைக்கும்?  இரவும் பகலும்  புன்முறுவலோடு கருமை  நிற கண்ணனே நிறைந்திருக்கிறான் அதில்.  அது ஒன்றே போதும் எனக்கு.உலகத்தில் என்னன்னவோ ஆசைகளை எனக்கு பலர்  காட்டுகிறார்கள். என் மனமாகிய  சின்ன மண் குடுவையில் சமுத்ரத்துக்கு எல்லாம் இடம் ஏது ? எனக்கு ஏதாவது வரம் கொடுப்பதாக இருந்தால் தயவு செயது என்னை எங்கும் கூப்பிடாதீர்கள். ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...