Friday, May 6, 2022

BAJA GOVINDAM

 


ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN
பஜகோவிந்தம்

கும்பிடு,  கூப்பிடு  கோவிந்தனை.-4


11  . मा कुरु धन जन यौवन गर्वं  हरति निमेषात्कालः सर्वम् ।
मायामयमिदमखिलं हित्वा var बुध्वा ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥ ११॥

Maa kuru dhana jana yowana garwam, Harathi nimishoth kaala sarvam,
Maamaya midhamakilam hithwa, Brahmapadam twam pravisa vidhitwa.

11.மா குரு தனஜன யவ்வன கர்வம்  ஹரதி நிமேஷாத் கால சர்வம்
மாயா மயமித மகிலம் ஹித்வா பிரம்மபதம் த்வம் ப்ரவிஷ விதித்வா

''ஆறறிவு இருக்கிறது என்று மார் தட்டும் மூடா, கவனமாகக் கேள்!  ஹே  முட்டாளே, உன் அறிவின் யோக்கியதை, திறமை இதெல்லாம்   நீ சேர்க்கும்  செல்வம்,   உன் இளமை,   உன்  படிப்பு,  பணம், பதவி, அந்தஸ்து  தரும்  கர்வம், பெருமை, பட்டம் பதவி, உறவு  இதிலெல்லாம் இல்லவே இல்லை. 
நீ பீற்றிக்கொள்ளும்  இது எல்லாமே கால வெள்ளத்தில் ஒரு நிமிஷ நேரத்தில் அடித்து செல்லப்படும் நிலையில்லா வஸ்துக்கள் என்று புரிந்துகொள். சுனாமியில் கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் இழந்தவை என்னென்ன,   பொருள் சொத்து,   உறவு நட்பு, இதெல்லாம்  கண்மூடி திறப்பதற்குள் இழந்தவர் எத்தனை பேர்  ஞாபகம் இருக்கிறதா?   யோசித்துப்பார். எல்லாமே  மாயை. இருப்பது போல் தோன்றும் இல்லாதவை அவை. நிழலை நிஜம் என்று நம்பி ஏமாறாதே. கானல் நீர் தாகத்துக்கு உதவுமா? பிரம்மபதம் ஓன்றே என்றும் சாஸ்வதம் என்று திரும்ப திரும்ப நினைவில் கொள்வாய். கோவிந்தனை மறவாதே. அவன் தான் எல்லோருக்கும்  எப்போதும்  உண்மையிலேயே  உற்ற நண்பன். அன்புக்கு, உன் அழைப்புக்கு  ஓடி வந்து உதவ கை கொடுப்பான். நிரந்தர வஸ்து.  என்றும் உன் அருகே இருப்பவனை மறந்துவிட்டு எங்கோ எவன் பின்னோ ஓடாதே.
சில விஷயங்களை கேள்விப்படும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. அது உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கு நமக்கு நேரமில்லை, எண்ணமுமில்லை.. தேவையுமில்லை. அதற்கென்றே தான் சிலர் இருக்கிறார்களே .

முக்கால்வாசி மழை இரவில் தான் பெய்கிறது என்று ஒருவர் சொன்னால், ''இல்லவே இல்லை, அதெப்படி, காலையில் தான் மழையே பெய்ய வாய்ப்பு'' என்று வாதாட, அதற்கென இரவெல்லாம் தூங்காமல் விழித்து நிறைய மழையில் நனைந்து மறுப்பதெற்கென்றே சிலர் உலகில் படைக்கப் பட்டவர்கள். அவர்கள் வாதாடி ஓய்வதற்குள் இன்னொரு கூட்டம் தயாராகும். 

'' யாரய்யா சொன்னது இதை? மழைக்கு என்று தனியாக நேரம் எதுவுமே கிடையாது. எப்ப வேணுமா னாலும் பெய்யும்'' என்று இதற்கு ஆதரவாக ஆப்பிரிக்காவில் கண்ட நேரத்தில் ஆறுமாசமாக மழை பெய்த விவரங்கள் எல்லாம் தேடி எடுத்துக்கொண்டு வந்து கொட்டுவார்கள்.!.

ஒன்று நிச்சயம். தனி மனிதனின் அபிப்பிராயம் எப்போதும் அவனைப்போலவே மாறுபடும் தன்மை வாய்ந்தது. ஆதிசங்கரர் விஷயத்தில் ஒரு சில சம்பவங்கள் படிப்பதற்கு ருசிகரமாக இருக்கின் றதால் தான் இந்த பீடிகை போடும் விஷயத்துக்கு வருகிறேன். ஏனென்றால் அதையே சிலர் ''அது தப்பான விஷயம்'' என்று கூறவும் வாய்ப்புண்டே .

ஆதிசங்கரர் ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்தில் ஒரு யந்திரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதற்கு ஜனாகர்ஷன யந்த்ரம் என்று பெயர். அந்த புண்ய க்ஷேத்ரத்துக்கு அனேக பக்தர்களை வரவழைக்க வைக்கப்பட்ட யந்திரம். அதனால் தான் அங்கு நாம் ரூபாய் நிறைய கொடுத்தும் தரிசனம் செய்ய அப்போதும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தர்ம தரிசன வரிசை வாயில் வரை அனுமார் வாலாக நீளுகிறது. உலகிலேயே அதிகம் பேரால் தரிசிக்கப்படும் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்.

திருப்பதியிலும் ஒரு யந்திரம் பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார் சங்கரர். அது தனாகர்ஷண யந்த்ரம். பணம் கொட்டோ கொட்டு என்று கொட்ட ஏற்படுத்தப்பட்ட யந்த்ரம். ''போ வெளியே'' என்று பிடித்து தள்ளினாலும் ''கோவிந்தா கோவிந்தா'' என்று உரக்க உச்சரித்துக்கொண்டே மற்றவர் காலை மிதித்துகே கொண்டாவது  கால் கடுக்க பல மணி நேரம் வரிசையில் நின்று  ஜெருகண்டியில் பிடித்துத்  தள்ளப்பட்டு, ஒரு வினாடி பார்க்க செய்யும் அற்புத தெய்வம் வெங்கடாசலபதி. உலகில் பணம் அதிகம் திரளும் கோவில் திருப்பதி திருமலா வெங்கடேச பெருமாள் கோவில்தான்.

12. दिनयामिन्यौ सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायुः तदपि न मुञ्चत्याशावायुः ॥ १२॥

Dinayaaminyau saayaM praataH shishiravasantau punaraayaataH .
kaalaH kriiDati gachchhatyaayuH tadapi na muJNcatyaashaavaayuH

12.  தினயாமின்யூ சாயம் ப்ராதா ஷிஷிர வசந்தவ் புனரா யாதா
காலா க்ரீடதி கச்சத் யாயு ததபி ந முஞ்சாத் யாஷா வாயு

ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.   எவருடைய விருப்பு வெறுப்பையும் லக்ஷியம் பண்ணாமல் இரவும் பகலும், காலையும் மாலையும், வசந்தமும் குளிர் காலமும்,  மாறி மாறி  வந்து போய்க்  கொண்டே இருக்கிறது. இது காலத்தின் நியதி. மனிதனுக்கு மனதில் ஆசை வந்துவிட்டால் அது அவனை விட்டு  போவதே இல்லை. புயல் வந்தால் வீசிவிட்டு போய்விடும். ஆனால் தானே உண்டாக்கிக் கொள்கிற ''ஆசைப் புயல், பொறாமைத் தீ, காமப் பசி'' இதெல்லாம்   அவனை விட்டு நீங்குவதே இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?  
 கோவிந்தா உன் நாமம் தானே இதற்கு மருந்து.   வாருங்கள்  சேர்ந்து ஒன்றாக  சொல்வோம் ' ஹரே கோவிந்தா''   என்று. சொல்லச்  சொல்ல மெல்ல மெல்ல மேலே சொன்னதெல்லாம் காணாமல் போய்விடும்.   எனவே இருக்கும் நேரத்தை அது ஓடுவதற்குள் கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும்.

தமிழுக்கு சிறந்த தொண்டு செய்தவர்களில் ஆழ்வார்கள் முக்யமானவர்கள். அழகு கொஞ்சும் தமிழ் வளம், எளிமை, ஆழ்ந்த கருத்து, அளவிட முடியாத பக்தி, இவற்றின் ஒருங்கிணைப்பு தான் ஆழ்வார்கள் பாசுரம். ஒரு ஆழ்வார் மற்ற ஆழ்வார்களை விட பெரிய்ய்ய ஆழ்வார். வயதாலோ, அதிகாரத்தாலோ அல்ல. பக்தியினால், நிறைய பாசுரங்களை இயற்றியதால். இன்னொரு ஆழ்வாரை வளர்த்து தமிழுக்கும் திருமாலுக்கும் தந்ததால்.

''எய்ப்பென்னை வந்து நலியும்போது
அங்கேது நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணை பள்ளியானே''

நிறைய நல்ல விஷயங்களை ரிட்டையர் ஆனப்புறம் படிக்க என்றே அலமாரி நிறைய சேர்த்து வைத்து ரிடையர் ஆனபிறகு டாக்டர் வீடே கதி என்று கிடக்கிறவர்கள், பிள்ளை பெண்கள் வீட்டுக்கு பங்கு போட்டு வாடிக்கையாக   அனுப்பப் படுபவர்கள்  லைப்ரரியில் எப்போது  புத்தங்களை  படிப்பது, என்று படிப்பது?

எனவே தான் வருமுன் காப்போனாக  ஒரு  கெட்டிக்கார  ஆழ்வார் ''அப்போதைக்கு இப்போதே சொல்லி  வைத்தேன் நாராயணா உன் நாமத்தை'' என்கிறார். இது எதைக்குறிக்கிறது.? வாழ்வின் அநித்யத்தை. நேற்றிருந்தார் இன்றில்லை, அல்லது அதிக பட்சம் நாளை இல்லை. வாழ்வும் சாவும் எத்தகையது. இருளும் பகலும் போல், காலையும் மாலையும் போல், வசந்தமும் மாரி  காலமும் போல். காலத்தின் விளையாட்டு என்றும் வாழ்க்கையின் மீது தான். நீட்டிப்பதும் சுருக்குவதும் தான் விளையாட்டே. எது எப்படியிருந்தாலும் அத்தனை நேரத்திலும் ஆசை என்னும் சூறாவளியின் ஆதிக்கத்தில் தான் எல்லாமே. ஆகவே கெட்டியாக பிடித்துக்கொள் அந்த கோவிந்தனை. அவனைப்  பிடிக்க சுருக்கு வழி அவன் நாமத்தை உச்சரிப்பதே.

13. काते कान्ता धन गतचिन्ता  वातुल किं तव नास्ति नियन्ता ।
त्रिजगति सज्जनसं गतिरैका  भवति भवार्णवतरणे नौका ॥ १३॥

kathe kanthaa, thana gatha chinthaa, vaathula kim thava naasthi niyanthaa
thrijagathi sajjana sangathi reikaa  bavathi bavaarnava tharane nowkaa

காதே  காந்தா,  தன கத சிந்தா,  வாதூல கிம் தவ நாஸ்தி நியந்தா 
த்ரிஜகதி  ஸஜ்ஜன  சங்கதி ரெய்கா பார்வதி பாவார்னவ தரனே நௌகா 

இந்த ஸ்லோகம் ஆதி சங்கரரின் சிஷ்யர் பத்ம பாதரால் எழுதப்பட்டது. பத்ம பாதர் பற்றிய ஒரு வரி கதை சொல்கிறேன்.

சனந்தனன் என்கிற  கொஞ்சம்  மந்தமான  ஆனால்  குரு பக்தி அளவற்று கொண்ட சிஷ்யன் ஆதிசங்கரரின் அபிமானத்தைப் பெற்றதை மற்ற சிஷ்யர்கள் சகிக்கவில்லை என்பதால் அவரது விசேஷ குணத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்ட சங்கரர் ஒருநாள் கங்கையின் அக்கரையில் துணை துவைத்துக் கொண்டிருந்த  சநந்தனை  இக்கரையிலிருந்தபடி   '' ஹே,  சனந்தனா, உடனே வா என்னிடம் '' என்றழைக்க, கரைபுரண்டோடும் கங்கையைக் கடக்க   ஓட மில்லாவிட்டாலும் அடுத்த கணமே ஓ வென்ற பேரிரைச்சலுடன் ஓடிய ப்ரவாஹ நீரில் இறங்கி குருவை அடைய  சநந்தனன் டக்க ஆரம்பிக்க,  அவனது குரு பக்தியை மெச்சி கங்கா தேவி  சநந்தனன்  அடியெடுத்து  வைத்த ஒவ்வொரு  பாதத்தின் கீழேயும்  ஒரு பெரிய தாமரையை வைத்து  அவன் கங்கையை கடக்க வைத்ததால்,  உயிரைத் திரணமாக மதித்த சனந்தனன் அன்று முதல் பத்ம பாதர்  (தாமரை
 மேல்
 பாதம் வைத்தவர்) என்ற பெயர் பெற்றார்.

மேலே  சொன்ன  ஸ்லோகத்தின் அர்த்தம்:    ''அடே , மூட மனிதா, செல்வத்தின் மீது இத்தனை பாசமா, மோகமா, ஆசையா? அதனால் தான் அதைப்பற்றியே சதா எண்ணமா? இதன் தீமை பற்றி சொல்ல உனக்கு  யாரும் கிடைக்கவில்லையா ?  புரிந்து கொள், இந்த சம்சாரம் என்கிற கடலைக் கடக்க உனக்கு எது தெரியுமா தோணி?, நல்லவர்கள் சேர்க்கை, சத் சங்கம் ஒன்றே தான். ஓடு, ''கோவிந்தா கோவிந்தா''   என்று அவன் நாமத்தை பஜித்துக்கொண்டு அவர்களைத் தேடு சேர்ந்து கொள் . போகிற வழிக்கு புண்ணியத்தை தேடு. அது தான் கோவிந்தனின் திவ்ய நாமம்.
    
14. जटिलो मुण्डी लुञ्छितकेशः काषायाम्बरबहुकृतवेषः ।
पश्यन्नपि चन पश्यति मूढः उदरनिमित्तं बहुकृतवेषः ॥ १४॥

Jatilo mundee lunchhitakesah kaashaayaambara bahukritavesha
pasyannapi cha na pasyati moodho udaranimittam bahukritaveshah...

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச: காஷாயாம்பர பஹுக்ரித வேஷ:
பச்யன்னபி ச ந பச்யதி மூடோ  உதர நிமித்தம் பஹுக்ரித வேஷா

இந்த ஸ்லோகம் தோடகாசார்யர் எழுதியது.
சரளமாக நாக்கில் புரளும் இந்த ஸ்லோகத்தில் அவர் அறை கூவுவது இது தான்:
சில  சாமியார்களை பற்றி அந்த காலத்திலே கூட கொஞ்சம் நல்ல சர்டிபிகேட் இல்லை. (சிலரை பற்றி மட்டும் தான். ) ஆனால் பொதுப்படையாக, முழுக்க முழுக்க தாடி மீசை, சடையோடோ, அல்லது மழுங்க மொட்டையோ, இப்படியும் இன்றி,  அப்படியும் இன்றி, அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் ரெண்டுங்  கெட்டானாகவோ, காவி தலையிலிருந்து கால் வரை சுற்றிக்  கொண்டோ இருப்பது எல்லாமே வெறும் வேஷம் தான். நமது வள்ளுவரும் கூட இதே கருத்து கொண்டவர் தானே.

 ''மழித்தலும் நீட்டலும் வேண்டாவாம் யாக்கைக்கு உலகம் பழித்ததை ஒழுத்துவிட்டால் '' என்று. கண்ணும் மனதும் எதைக் காண வேண்டுமோ அதைப்  பார்க்க தவறிவிட்டால், பிறகு இப்படி ஒரு வேஷத்தால் அவர்கள் எதிர்பார்ப்பது அந்த ஒரு சாண் வயிற்றை விடாமல் நிரப்பவே. ஒரு தரமாவது அந்த கோவிந்தனைப் பாடி உண்மையைப் புரிந்து   கொள்வோம். இந்த வேஷம் வேண்டாமே!

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...