கணீர் குரல் கண்டசாலா - நங்கநல்லூர் J K SIVAN
1953-54ல் நான் சூளைமேட்டிலிருந்து கோடம்பாக்கம் ரயில் பாதை கேட்டைக் கடந்து இப்போதைய வடக்கு தியாகராயநகரை தாண்டி வேங்கட நாராயணா தெருவில் இருந்த தியாகராயநகர் உயர் நிலைப் பள்ளிக்கு நடந்து போன ஒன்பதாவது வகுப்பு மாணவன். வழியில் உஸ்மான் ரோடு வரும். அதில் ஒரு வெள்ளை மாளிகை. அதன் மாடியில் ஒருநாள் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவர் பெயர் மட்டும் எனக்கு தெரிந்ததே தவிர நேரில் பார்த்ததில்லை, சினிமாவுக்கும் போவதில்லை.
பால்கனியிலிருந்து தெருவை நோக்கி கீழே வீட்டில் நின்றுகொண்டிருந்த யாரோ சிலருடன் தெலுங்கில் உரக்க பேசிக்கொண்டிருந்தார். என்னுடன் சிலர் தெருவில் இருந்து ''அதோ கண்டசாலா'' என்று சொல்ல கும்பல் சேர்ந்து விட்டது. அவரை வேடிக்கை பார்த்தோம். அவர் குரல் எனக்கு பரிச்சயமானது. முதல் முதலில் கேட்டபோது என்னை சிலிர்க்க வைத்தது எப்போதென்றால் திருப்பதி மலையில் விடிகாலையில் '' ஏடு கொண்டல வாடா'' என்று அவர் பாட்டுகள் எங்கும் எதிரொலிக்கும்போது. உடல் சிலிர்க்கும். அவ்வளவு கம்பீரமான குரல். அப்புறம் ராஜு என்ற 10 வகுப்பு பையன் எங்கள் பள்ளிக்கூடத்தில் உலகே மாயம் பாடியபோது. அந்த பாட்டை பலமுறை பொது இடங்களில் ஒலிபெருக்கியில், கேசவன் நாயர் டீ கடையில் சாயந்திரங்களில் ரேடியோ சிலோனில் கேட்ட போது அசந்து போயிருக்கிறேன்.அதுமுதல் சங்கீதம் தெரியாமலேயே கண்டசாலாவின் ரசிகன் நான்.
பல வருஷங்கள் கழித்து கண்டசாலா பாடல்களை நிறைய டேப் களில் தேடித் கண்டுபிடித்து சேர்த்து வைத்திருந்தேன். அவை எல்லாம் எங்கோ காணாமல் போய்விட்டன.
யூ ட்யூப் வந்தவுடன் இப்போதெல்லாம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கண்டசாலா எனக்காக பாடுகிறார். அவர் பாடல் ஒன்று நானும் சமீபத்தில் பாடிப் பார்த்தேன். எனக்கு 83. அவ்வளவு வயது கண்டசாலா வாழவில்லை. எண்ணற்ற பாடல்களை தமிழில் தெலுங்கில் எல்லாம் பாடிவிட்டு 52வயதில் மறைந்த இசை அமைப்பாளர், பாடகர், சங்கீத வித்வான். அவர் இருந்த வீடு இப்போதும் உஸ்மான் ரோட்டில் உருமாறி பெயர் மாறி இருந்தாலும் பழைய நினைவை அழிக்கவில்லை
https://s4beKaFLUncyoutu.be/
No comments:
Post a Comment