கொஞ்சம் சங்கீத விஷயம். நங்கநல்லூர் J K SIVAN
என் நண்பர்களில் சிலர் சிவன் நல்லா '' பாட்டு படிப்பார்'' என்று சொல்லும்போது என் இதயம் வெடிக்கும். ஆஹா, நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு சங்கீதம் தெரியாமலேயே சில அருமையான பாட்டுக்களை கேட்டு கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணி பாட முயற்சிக்கிறோம். கூசாமல் ''படித்ததாக'' சொல்கிறார்களே என்று தோன்றும். படிப்பது என்றால் பாடுவது என்று அப்புறம் தான் புரிந்தது. உண்மையில் நான் பாடுவது படிப்பது போல் தான் இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை தான்.
மனிதனுக்கு பகவான் கொடுத்த மிகப்பெரிய வரம் பேசுவதும் பாடுவதும். இதில் பேச்சு எல்லோருக்கும் முடிந்தது. பாடுவது சில பேருக்கு மட்டும் கிடைத்த போனஸ். பாடுவது என்றால் ''கேட்கும் படியாக'' என்று புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு இசையும் உடல் அசைவும் இணை பிரியாத ஒரு வரப்பிரசாதம். ரசிகன் கேட்டு சிரத்தையும் கரத்தையும் சரீரத்தை ஆட்டியும் ரசிக்கிறான். பாடுபவனும் தன்னை மறந்து இசையில் மூழ்கி அப்படியே செய்கிறான். வித்யாசம் என்னவென்றால் பாடுபவன் ஏதோ ஒரு கணக்கு, தாளம், கால பிரமாணம் அதற்கு கற்பித்து விடாமல் பயிற்சி செய்தவன். நாதத்திலேயே முழுநேரமும் தனைமறந்த ஒரே சிந்தனையாக ஈடுபடுவது தான் நாதோபாஸனை.
பரத நாட்டிய சாஸ்திரம் கந்தர்வ வேதம். ஆயுர்வேதம் இன்னொரு பிரிவு. அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம் மற்றொரு பிரிவு. கந்தர்வ வேதத்திற்குள் செல்ல மூக்கை நீட்டவேண்டாம். பெரிய கடல் அது. 32 முக்கிய வித்தைகள் சேர்ந்தது. நாட்யம் என்பதே நிருத்தம், நிருத்யம், கீதம், வாத்தியம் போல எண்ணற்ற விஷயங்கள் கொண்டது.கீதம் சாம வேதத்திலிருந்து பிறந்தது.
சப்த ஸ்வரங்களான சரிகமபதநி , தொன்று தொட்ட உபநிஷதமான ''நாரத பரிவ்ராஜக உபநிஷத் தில் இருக்கிறது. சீனாக்காரன் இதே போல் ஒரு செட் வைத்திருந்திருக்கிறான். அதை நம்மால் உச்சரிக்கக் கூட முடியாது. கௌங் , சாங், கியோ, பியான் சே, து, பியான்கோவுங் என்றெல்லாம் வரும். மூக்கில் வரும் சப்தத்தால் மூக்கு அறுந்து விழுந்துவிடும்.
பரத ரிஷியின் நாட்ய சாஸ்திரம் 2 கிரமங்களை உடையது. நாதத்தின் அளவு அது. 84 ஜதி கொண்டது. இந்த ஜதி தான் பின்னால் ராகம் ஆகியது.
மேளம் என்றால் 'டம டம'' என்று சப்தம் செய்யும் வாத்யம் என்று நாம் நினைத்துக்கொண்டால் நமது சங்கீத ஞானம் பூஜ்யம். மேளம் வேறு ராகம் வேறு. ஸ்வரங்களின் மேல், கீழ் ராக ஸ்தாயிகளை சொல்வது. ஆரோஹணம், அவரோஹணம். கீர்த்தனைகளை இயற்றுபவர்கள் மேளங்களை அனுசரித்து சாஹித்யத்தில் புகுத்தி அதை வித்வான் புரிந்துகொண்டு அற்புதமாக நமது செவிகளை நிறைப்பார்.
தமிழிசையில் ராகம் என்பதற்கு பதில் பண் என்று இருந்தது. 13ம் நூற்றாண்டு சாரங்க தேவர் சங்கீத ரத்னாகரம் என்ற நூலில் தேவார திருப்பதிகங்களில் பண்ணிசை உபயோகத்தை பற்றி கூறுகிறார்.
இதெல்லாம் அனுசரித்து மஹான்கள் ப்ரத்யக்ஷமாக பகவானை இசை, நாதம் மூலம் க்ருதிகளை இயற்றி தரிசித்தவர்கள், அல்லது தரிசித்து இயற்றியவர்கள். அதை அப்பியாசப்படுத்தி பாடாந் தரங்களை சம்பிரதாய முறைப்படி பாடிய வித்வான்களும் எண்ணற்றவர்கள்.
பக்தி ரசம் ததும்பும் பாரதியார், ஆண்டாள், அருணகிரி நாதர், ஊத்துக்காடு, சைவசமய குரவர்கள் ஜெயதேவர் புரந்தர தாசர், தியாகராஜர் போன்றவர்கள் பாடல்களை இசை மெருகூட்டி செவிக்கு விருந்தாக நமக்கு அளித்தவர்கள் , இன்றும் அளிப்பவர்கள் குரல் வளம் கொண்ட சில பாக்யசாலி கர்நாடக, ஹிந்துஸ்தானி பாடகர்கள். கஜல்கள் கேட்கும்போது என்னையே மறந்துவிடுகிறேன்.
14ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 'அபிநவ ராகமஞ்சரி' என்று ஒரு புத்தகம். அது கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றி கிரந்தத்தில் விவரிக்கிறது.
ஒவ்வொரு மஹான் வாக்கேயக்காரர்களை பற்றியும் சொல்லவேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை. ஹனுமார் வால் மாதிரி கட்டுரைகள் நீண்டு விடுமே . யார் படிப்பார்கள்? அவ்வப்போது துக்கடா செய்திகளாக தந்தால் படிக்க எளிதாக இருக்கும். நாம் என்ன பரிக்ஷைக்காகவா படிக்கிறோம்? பொழுது போவதற்காக, அதுவும் நல்லபடியாக போகவேண்டும் என்பதற்காக நான் மெனக்கெடுபவன்.
புரந்தரதாசரை நாரதர் அவதாரம் என்பார்கள். அவர் காலம் 1484-1564. அவர் தான் சங்கீத பிதாமகன். ஆயிரக்கணக்கான கிருதிகள் இயற்றியவர். அவை அத்தனையும் நம்மிடம் இல்லாதது துரதிர்ஷ்டம். 15ம் நூற்றாண்டில் தள்ளப்பாக்கம் சின்னய்யா என்பவர் ஒவ்வொரு க்ரித்தியையும் பல்லவி, அனுபவல்லவி, சரணம் என்று மூன்றாக பிரிக்கும் வழக்கத்தை கொண்டுவந்தார். ''கப்'' பென்று அது இன்றளவும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
முகலாயர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது அவர்களது இசையும் வாத்தியங்களும் கூட நமக்கு பரிச்சயமாகியது. இன்றும் நாம் வாசிக்கும் வாத்தியங்கள், சந்தூர், சித்தார் ,சரோட் ,ஷெனாய், தபலா, பக்வாஜ் எல்லாம் முகலாய இசைக்கருவிகள். இதெல்லாம் கேட்காத விரும்பாத ஒரே முஸல்மான் ஒளரங்கசீப் தான்.
1635'ல் வேங்கடமஹி எழுதிய ''சதுர்தண்டி பிரகாசிகை''யில் ஐந்தாம் நூற்றாண்டில் வித்யாரங்கர் அறிவித்த மேளம் எனும் வழிமுறை மீண்டும் 72 மேளகர்த்தா ராக முறை கவனத்தில் கொண்டுவரப்பட்டது. நூறு வருஷங்களுக்குப் பிறகு தஞ்சாவூர் மராத்திய துளஜா மஹாராஜா கடபயாதி முறையை மேளகர்த்தா ராகங்களுக்கு அறிமுகப்படுத்தினார். 18ம் நூற்றாண்டு தான் அற்புதமான சங்கீத மும்மூர்த்திகள் ஸாமா ஸா ஸாஸ்த்ரிகள், தியாகையா, முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆகியோரை பரிசளித்தது. இவர்களே நாதஉபாஸனையை பெருக்கியவர்கள். இசையில் இறைவனை அனுபவிக்க காரணமானவர்கள். இன்றும் எண்ணற்ற சங்கீத வித்வான்கள் இவர்களது கிருதிகளையும் , மற்றும், புரந்தர தாசர், ஜெயதேவர், நாமதேவர், துக்காராம், அபங்கங்களையம், ஸ்வாதி திருநாள், நாராயண தீர்த்தர், அருணாச்சல கவிராயர், கோபாலக்ரிஷ்ண பாரதி, பாபநாசம் சிவன் போன்றோர் பாடல்களையும் சுவையாக பாடி பக்தியை வளர்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
தியாகராஜ ஸ்வாமிகள் இருபத்திநாலாயிரம் கிருதிகளை 211 ரங்களில் (47 மேள கர்த்தா ராகங்கள் உட்பட) இயற்றியவர். ஆனால் இருப்பதில் அதில் ஐந்நூறு ஆவது பிரபலமா என்பது சந்தேகம்.
No comments:
Post a Comment