Monday, May 16, 2022

MANICKA VACHAKAR

 மாணிக்க வாசகர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''பேசாமடந்தை பேசினாள்''

சிவபெருமான் நிகழ்த்திய  லீலைகளை  திருவிளையாடல் என்று படித்து மகிழ்கிறோம்.  எத்தனையோ  நாயன்மார்  சிபக்தர்கள் வாழ்வில் நடந்த அத்தனை லீலைகளையும், அதிசயங்களையும் பட்டியல் போட்டு  மாளாது.  எண்ணற்ற நிகழ்வுகள்  வெளியே தெரியாமல் மறைந்தும் போய்விட்டன.  அப்படி ஒரு அதிசயம்  மாணிக்க வாசகர் வாழ்வில் நடந்தது.  எத்தனையோவில்  இதுவும்  ஒன்று.

சிதம்பரத்தில்  பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது.  செய்தி  காற்றில் பரவி எங்கிருந்தெல்லாமோ  சிவபக்தர்கள்  சிதம்பரத்துக்கு ஓடி வந்துவிட்டார்கள்.    விஷயமரியாதவர்  ஒருவர் கேட்டார்:

''எதற்கு இத்தனை ஜனங்கள்  கூட்டமாக  இன்று சிதம்பரம் வந்திருக்கிறார்கள்.  எல்லோரும்  ஆலய சபா மண்டபம் நோக்கி ஓடுகிறார்கள்  என்ன விசேஷம் அங்கே?

''ஓஹோ  நீர்  விஷயமறியாத  பேர் வழியோ. சொல்கிறேன் கேளும்.  லங்கையிலிருந்து  ஒரு பெரிய  பௌத்தர் இங்கே வந்து  வாதம் செய்ய வந்திருக்கிறாராம்.  அவரை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாதாம்.  வாதத்தில் வென்றவர்களை எல்லாம் பௌத்தராக மாற்றிவிடுவாராம்.  சிங்கள ராஜா பிரத்யேகமாக அவரை வாதம் செய்ய இங்கே  சோழநாட்டுக்கு அனுப்பி யிருக்கிறானாம்.

''அப்படியா? அடேடே,   அவரோடு இங்கே யார்  வாதம் செய்யப்போகிறவர்?''
ஒரு சிவபக்தர், சாதாரண  துறவி,  வாதவூரர் என்று பெயராம்.  பாடல்கள் எல்லாம்  எழுதுவாராம், பாடுவாராம். '

'பாவம்  அந்த அப்பாவி சைவ துறவி,  பௌத்தராக போகிறார் போலிருக்கிறது. நடராஜா காப்பாற்றட்டும்''

சோழ ராஜா  ஏற்பாடு செய்த  சிதம்பர  ஆலய  சபா  மண்டபத்தில்  எள் விழுந்தால் எண்ணை ஆகியிருக்கும். அவ்வளவு கூட்டம். மிகப்   பிரபலமான கற்றறிந்த புத்த பிக்ஷு ஈழத்திலிருந்து வாதாட வந்திருக்கிறார். அவரை எதிர்த்து சைவ மதத்தைப் பற்றி எடுத்துச்  சொல்ல  வாதிட  பாண்டியனின் மந்திரியாக இருந்த வாதவூரர் அழைக்கப்பட்டிருக்கிறார்.  வாதவூரர்  தோற்றால் இந்த சிதம்பரம் ஒரு புத்த விஹாரமாகப்போகிறது. நடராஜா, நீ எங்களுக்கு வேண்டுமே''. எண்ணற்ற இதயங்கள்  கண்ணீர் வடித்தன.  வேண்டின. 

ஓம் நமசிவாய என்ற  ஒலி கேட்டது.  ஆஹா  இதோ  வாதவூரர் வந்துவிட்டார்.  ஒல்லியான ஒல்லியான தேஹம் .  நெற்றி,  கழுத்து மார்பு, கைகளில் வெண்ணிற  பால் வெண்ணீறு.  கழுத்தில்  தலையைச்சுற்றி  ருத்ராக்ஷம். இடுப்பில்  காஷாய துண்டு,  கண்களில் கருணை வெள்ளம்.  எல்லோரையும்  அன்பே சிவமாக  பார்த்தார்.  சோழ ராஜா வணங்கினான்.  அவனுக்கு இடுப்பிலிருந்து திருநீறு எடுத்து பூசினார். கொடுத்து வைத்த ராஜா அவன். 
நடராஜனை சுற்றி தரிசனம் செய்தார்.  சிலையாக வெகுநேரம் கண்மூடி நின்றார்.     நடராஜாவும் மணிவாசகரும் என்ன பேசினார்களோ அவர்களுக்கு தான் தெரியும்.

இதோ மண்டபம் இங்கு தான்  சைவ மதத்துக்கும்  பௌத்தமதத்துக்குமான  வாதம்  நடப்போகிறது. வாருங்கள்  அமருங்கள் என்று  ராஜா வாதவூரரை அழைத்து மண்டபத்துக்கு சென்றான்.

'' திருச்சிற்றம்பலம்'' என்று எல்லோரையும் கைகூப்பி  வணங்கினார் வாதவூரர்.
'  சோழ மன்னா,  என் நடராஜனை எதிர்த்து பேசும் இந்த பௌத்தரின்  முகத்தைக்கூட நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு திரையை எங்கள் இருவருக்கும்  இடையில் போடுங்கள். அவரும்  அவரைச்சார்ந்தவர்களும்  பேசுவது எனக்கு கேட்டாலே போதும்'' /

''சுவாமி உங்களோடு  வேறு யாராவது சேர்ந்து கொள்ளப்போகிறார்களா?''
ஆம்  என்னுள்ளே  இருக்கும்  நடராஜ பெருமானும் நானும் தான் போட்டியில், வாதத்தில் கலந்து கொள்ளப்போகிறவர்கள்'' என்கிறார் மணிவாசகர்.

 இடையில் திரை போடப்பட்டது.

பௌத்த பிக்ஷு எடுத்துரைத்தவற்றை நிராகரித்து சைவ ஆச்சார ஆகம நூல்கள் என்ன சொல்கிறது என்பதை புட்டு புட்டு  வைத்தார் மணிவாசகர்.  அவரது சைவ கோட்பாடுகளின்  மஹத்வத்தை, தத்துவத்தை,  புத்த பிக்ஷுவால் எதிர்த்து தங்களது வாதத்தை நிரூபிக்க முடியவில்லை. சொன்னதையே  திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு தான் சமாளித்தார்கள். சபையோர் கவனம் முழுதும் முற்றிலுமாக  மணிவாசகரின் சொல் திறமை மிளிர்ந்தது.  சிவபெருமானாலேயே  '' உன் வாசகங்கள்  மணி மணியானவை. நீ  மணி வாசகன் ''  என்று விருது பெற்றவரல்லவா?

மணிவாசகர் ''நடராஜா, ஈஸா, நீயே எனக்கு மேலும் சக்தியை, திறனைக்கொடு. வேரோடு இந்த வினையை அழிக்க வேண்டும்.  நடராஜனின் அருளால் வாக்  தேவியான சரஸ்வதி  பௌத்தர்களை பேசமுடியாமல் செய்து  விட்டாள்,பேசும் சக்தி இழந்து பௌத்த பிக்ஷுவும் அவரோடு வாதத்தில்  பங்கேற்றவர்களும்   தடுமாறினார்கள் . திக்குமுக்காடினார்கள்.  பிக்ஷு தங்களது தோல்வியை  சோழ ராஜாவின் முன்னே, மற்றும்   சபையோர்கள் முன்னே ஒப்புக்கொண்டார்.

சோழன் மணிவாசகரின் அருமை பெருமையை அறிந்துகொண்டான். விருந்தினனாக வந்த ஈழ அரசனும் மணிவாசகரின் அறிவாற்றலில் அடிமையானான் .

''ஐயா மணிவாசகரே , உங்கள் பக்தி, ஞானத்தால்  எனது ஆசான், குருவான, புத்த பிக்ஷுவையும் அவருடன் வந்திருந்த பண்டிதர்களையும்  வாதத்தில் வென்று ஊமையாக்கினீர்கள். எனக்கு ஒரு குறை.  பேசியவர்களை பேச  முடியாமல் ஊமையாக்கினீர்களே. ஊமையாகவே பிறந்த என் மகளை பேசவைத்து அருள்வீர்களா?  என்று கண்ணீர் மல்க ஈழ அரசன் கெஞ்சினான். அதற்கு பிரதியுபகாரமாக நானும், என் ஈழநாட்டு மக்கள் அனைவரும் சைவமதத்தை பின்பற்றி சிவனின் பக்தர்களாவோம்.''  என்றான் அந்த அரசன்.

''சிதம்பரேசா, சர்வேசா, இன்னுமொரு திருவிளையாடலை  இப்போது நிகழ்த்து. நாங்கள் கண்டு களிக்கிறோம். பேசா மடந்தையை பேசும் கிளியாக்கு''  என்று  மணிவாசகர் நடராஜனை வேண்டினார்.

''ஈழ  மன்னா  உன்  ஊமைப்  பெண்ணை இங்கே அழைத்து வரச்சொல்''
அந்த பெண் நாணிக் கோணி அச்சத்தோடு தலைகுனிந்து மணிவாசகரை வணங்கி எதிரே அமர்ந்தது.

''பெண்ணே, நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்கிறாயா?''
''............''
 ஊமைப் பெண் எப்படி பதில் சொல்லும்?  மிரள மிரள அவரைப் பார்த்து விழித்தது.

''நீ  பதில் சொல்லவேண்டியது  என் கேள்விகளுக்கு அல்ல  பெண்ணே,  உன் தந்தையின் குரு,  பௌத்த பிக்ஷு  என்னிடம் கேட்ட  கேள்விகளை  உன்னிடம்  மீண்டும் கேட்கட்டும்.  நீயே  அதற்கு பதில் சொல்வாய்''
எல்லோருக்கும் அதிர்ச்சி. என்ன  ஊமைப்பெண்  பௌத்த பிக்ஷுவின்  கஷ்டமான கேள்விகளுக்கு பதில் சொல்ல பேசப்போகிறாளா?  ஆஹா என்ன ஆச்சர்யம்.

பிக்ஷு கேள்விகளை மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்டார் மணிவாசகர். மணிவாசகர்   உரைத்த பதிலையே அந்த ஊமைப்  பெண் கணீரென்ற குரலில் உரைத்தது. சபையோர், சோழ ராஜா, ஈழ ராஜா அனைவரும்   ஆஹா  ஓஹோ என்று கரக்கம்பமும் சிரக்கம்பமும் (கைதட்டி, தலை அசைத்து)  வியந்தனர்.  ஈழ அரசன்  தனது ஊமைப்பெண் பேசியதில் ஆகாசத்தில் பறந்தான்.

ஒட்டு மொத்தமாக  ஈழ அரசனும் அனைவரும் சைவ மதம் தழுவினார்கள். சைவ சித்தாந்தம், கோட்பாடுகளை மனமார ஏற்றுக் கொண்டார்கள். சிவ பக்தர்கள் ஆனார்கள்.  ஈழத்தில் தமிழும் சைவமும் காலூன்ற மணிவாசகரின் பங்கும் தில்லை நடராஜன் அருளும் அதிகம்.


அன்பர்களே,  ஈழ ராஜாவின்  பிறவி ஊமைப்பெண்   மணிவாசகர் அருளால்  பேசினது  பௌத்த பிக்ஷுவின் கேள்விகளுக்கு பதில் சொன்னது தான்  மணிவாசகரின்  திருச்சாழல் பாடல்கள். மொத்தம் 20  பாடல்கள் இருக்கிறது. அதை அடுத்து உங்களுக்கு பகிரட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...